காவல்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

சேவியர்.


சந்துகளுக்குப் பின்
ஓர்
சுடலைமாடன்,
ஆளுயர அரிவாளோடு.

அகல விரித்தக் கண்கள்,
உறைந்த நிலை உதடு,
முறுக்கி இறுக்கிய மீசை,
மடித்துக் கட்டிய
மண் நிற வேட்டி.

சோறுண்ண மறுத்த
மழலை ஒன்றுக்கு
பயமுறுத்தும் உருவமாய்,

கண்ணாமூச்சி ஆடிய
மூன்றாம் வகுப்பு
மாலை நேரங்களில்
ஓளிந்து கொள்ளும் ஓரிடமாய்,

நண்பர் சந்திப்புக்களில்
அடையாளம் சொல்லும்
கலுங்காய்,

ஆற்றுத் தண்ணீரை
இடுப்பில் சுமந்துவரும்
தாமரைகளை
விடலைப்பையன்கள்
வெறித்துப் பார்க்கும் இடமாய்,

அந்த ஒரு சிலையை
ஆளாளுக்கு
அர்த்தப் படுத்தினார்கள்,
தேவைக்கேற்ப
மொழிபெயர்த்தார்கள்.

பட்டம்மா பாட்டி மட்டும்
பல கதை சொல்வாள்,
ஊரைக் காத்த
உருக்கு மனிதன் சுடலையின்,
சுண்டாத அரிவாள் முனை பற்றி.

ஒரு,
வெள்ளிக் கிழமையின்
இருள் பொழுதில்,
ஒரு
பாலியல் பலாத்காரம்
சுடலைச் சிலை மறைவில்
மனிதாபிமானத்தைக் கசக்கிப் போட்டது.

காங்கிரீட் கால்களோடு
அறையப்பட்டிருக்கிறான்
சுடலை
கையில் ஆளுயர வாளோடு.
காவலுக்காய்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

காவல்

This entry is part [part not set] of 13 in the series 20010101_Issue

சா. கந்தசாமி


அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு விட்டுக் கொண்டு ஆற்றில் வேகமாக அக்கரையை நோக்கி ஓடினார். ஆனால் முடியவில்லை. மணல் நெருப்பாகத் தகதகத்தது. வரும்போது செருப்பை மாட்டிக் கொண்டு வந்திருக்கலாம் என்று நினைத்தார். அவசரத்திலும் பரபரப்பிலும் மறந்து போய் விட்டது.

முன்னே வைத்த காலைத் தூக்கி கொண்டார். பின் கால் சுட்டது. ‘ஓ ‘ என்று சப்தம் போட்டுக் கொண்டு முன்னங்காலை மணலில் அழுத்தினார். தலையில் அரிசி மூட்டை; இடது கையில் மண்ணெண்ணெய் டின்.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை மாலைப் பொழுதில் தான் அவர் அரிசி அரைத்துக் கொண்டும்– மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டும் மெதுவாக ஆற்றைக் கடந்து வருவார். அது இன்றைக்குத் தப்பிப் போய்விட்டது. ஊரில் இருந்து பெரியம்மா வந்திருந்தாள். அவளை அழைத்துக் கொண்டு போய்ப் பஸ் ஏற்றிவிடப் புறப்பட்ட போதுதான் தங்கம் ‘அப்பா, அப்படியே அரிசி அரச்சிக்கிட்டு மண்ணெண்ணெய்யும் வாங்கிக்கிட்டு வந்துடுங்க– ‘என்றாள்.

பெரியசாமிக்கு அதுவும் சரிதான் என்று பட்டது. இல்லாவிட்டால் இன்னொரு முறை அதற்காகப் போக வேண்டும். நெல் மூட்டையை மில்லில் கொண்டு போய்ப் போட்டுவிட்டால் அரைத்து வைத்திருப்பான். வரும்போது அரிசியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடலாம். பெரியம்மாவிடம் மூட்டை ஒன்றும் இல்லை. இரண்டு பழம் புடவை. ஒரு காக்கிப் பையில் திணித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். பெரியசாமியிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. கொஞ்சம் பணங்கொடுத்தார். அப்புறம் மாங்காய் அடித்து, ஒரு சாக்குப் பையில் போட்டுக் கட்டி நெல் மூட்டைக்கு மேலே வைத்துக் கொண்டார். ஆனால், தோட்டத்தில் மாங்காய் அடிக்கும் போது ஏதோ தப்புப்பண்ணுவது மாதிரிதான் இருந்தது. நாலா பக்கமும் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டார்.

மாந்தோப்புக்குப் பதினைந்து ஆண்டுகளாக அவர்தான் காவல். அதாவது. சபாபதித் தேவர் கைக்கு நிர்வாகம் வந்ததும் மாந்தோப்புக் காவலுக்கு யாரைப் போடலாம்–யார் நம்பிக்கையான ஆள் என்று யோசித்துப் பார்த்தார். யோசிக்க யோசிக்கப் பல பெயர்களும் பல முகங்களும் மனத்தில் தோன்றின. ஆனால் ஒன்றுகூட அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.

மாந்தோப்பு ஊருக்கு அப்பால் ஆற்றின் அக்கரையில் இருந்தது. அவர் போய்த் தினமும் பார்ப்பது என்பது சாத்தியம் இல்லை. எனவே நம்பிக்கைக்கு உரிய ஆளாகப் போடவேண்டும். நம்பிக்கைக்கு உரிய ஆள் யார் ?

சபாபதித் தேவருக்குத் திடாரென்று பெரியசாமி நினைவு வந்தது. அவன்தான் அவருக்கு வண்டி ஓட்டுகின்ற ஆள். ஆனால் போன மாதந்தான் வண்டியை விற்றாகிவிட்டது. கார்தான் ஓடுகிறது. பெரியசாமி தினம் தினம் வந்து சும்மா பார்த்துக் கொண்டு போகிறான். அவனைப் போட்டால், காவலுக்கும் காவல்—அப்புறம் அவனுக்கும் வேலை கொடுத்தது போல் இருக்கும். அவருக்கு அதுதான் சரி என்று பட்டது. பெரியசாமியைப் பிடித்து மாந்தோப்பிற்கு அனுப்பி வைத்தார்.

மாந்தோப்பு பெரிய தோப்பு, அறுநூறு, எழுநூறு மா மரங்கள். பெரும்பாலும் ருமானி, ஒட்டு, நீலம்– கொஞ்சம் பங்கனபள்ளி, ரசாலு, பீத்தர்–அவர் அப்பா வேலுத் தேவர் மாம்பழப் பிரியர். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு போனவர்–அவர் கொஞ்ச காலம் அனந்தப்பூர்ச் சிறையில் இருந்தார். விடுதலையானதும், கந்துகூரு ஆஞ்சிநேயலு ரெட்டி மாந்தோப்பைப் பார்த்தார். இயற்கையாகவே அவர் மாம்பழப் பிரியர். நண்பரின் மிகப் பெரிய தோட்டத்தைப் பார்த்ததும்–மனத்தில் ஒரு தீர்மானம் வந்து விட்டது. ஊருக்கு வந்ததும் பொட்டலாகக் கிடந்த இடத்தில் மாங்கன்று நட்டார். வித விதமான கன்றுகள்; பெரிசாக இரண்டு கிணறு வெட்டித் தண்ணீர் பாய்ச்சினார். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளில், கிட்டத்தட்ட எல்லா மரங்களும் காய்க்க ஆரம்பித்து விட்டன. காய்களைப் பார்த்துவிட்டுத்தான் வேலுத்தேவர் கண்களை மூடினார்.

பெரியசாமி வேகமாக ஓடி வந்து கரையேறினார். ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல அவருக்கு இருந்தது. உம்…. இனிமேல் எல்லாம் இப்படிப் புத்தி கெட்டுப் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார்.

பாதை கீழே இறங்கியது. சப்பாத்தியும் கள்ளியும் வேலியாக இருந்தன. எல்லாம் பெரியசாமி வளர்த்ததுதான். ஏற்கனவே கொஞ்சம் வேலி போட்டு இருந்தார்கள். சரியான கவனிப்பு இல்லாமல் ஆடும் மாடும்–மனிதர்களும் துவைத்து அழித்து இருந்தார்கள். அவற்றையெல்லாம் பெரியசாமி வந்ததும் சீர் செய்தார். இப்போது தோட்டத்தைச் சுற்றி வேலி இருக்கிறது; ஒரு மாடோ ஆடோ உள்ளே நுழைய முடியாது. ஆனால், ஐந்தாறு நாட்களாக மாங்காய் திருட்டுப் போய்க் கொண்டு இருக்கிறது. கொஞ்சம் நிறையவே போவது போல இருக்கிறது. எந்த வருஷமும் இப்படி இல்லை. ஏதோ காவிரிக் கரையோடு போகின்றவர்கள்–கைக்கு எட்டும் இரண்டு மாங்காயைப் பறித்துக் கொண்டு பயந்து பயந்து போவார்கள்.

பெரியசாமி ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒரு குரல் கொடுப்பார். ஆளையே இவர் பார்க்க மாட்டார். வெறும் குரல்தான்.

‘யாருடா அவன் அங்க மாங்கா பறிக்கிறது ? வந்தேன்னா கையை முறிச்சுடுவேன் ‘ ‘

அவர் குரல் கனத்துப் பயமுறுத்துவது போல இருக்கும். மாங்காய் பறிக்கலாமா என்று நினைத்தவர்கள் கூட, ‘அட, அங்க எங்கேயாவது பெரியசாமி நிப்பான்டா ‘ ‘ என்று போய்விடுவார்கள். ஆனால், பெரியசாமியின் காவல் அரணை தகர்த்துக் கொண்டு தொடர்ச்சியாக யாரோ உள்ளே வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். உம்……. பதினைந்து வருட காலம். அப்படி யொன்னும் ரொம்ப நாளைக்கு இந்தப் பெரியசாமியை ஏமாத்திக்கிட்டு இருக்க முடியாது. அடே, பசங்களா ‘ என்ன யாருன்னு நினைச்சுக்கிட்டிங்க…. சீக்கரத்துலேயே அதையும் பார்த்துடப் போறீங்க….

பெரியசாமி இடது கையில் இருந்த மண்ணெண்ணெய் டின்னை வலது கைக்கு மாற்றிக் கொண்டார். மேடு சரிவாகக் கீழே இறங்கியது. சப்பாத்தி வேலி தாண்டித் தோட்டத்திற்குள் நுழைந்தார். ஒற்றையடிப் பாதை. அது கூட அவர் பாதைதான். அவர்கூடப் பெண் தங்கம் வரும், அப்புறம் பெரிய கருப்பு. அவர் நாய். நாய் என்றால் சரியான நாய். அவர் ச்சூ பெரிய கருப்பு என்றால் போதும். ஓடிப் பாய்ந்து பிடித்துக் கொண்டு வரும்.

ஒரு முறை ஐந்து திருடர்கள் ஒன்றாக மாங்காய் பறிக்க வந்தார்கள். பெரிய கருப்பு தனியாகவே அவர்களை விரட்டியடித்துவிட்டு நொண்டி நொண்டிக் கொண்டு வந்தது. யாரோ ஒருவன் பதுங்கியிருந்து கல்லால் அடித்து விட்டான். நேராக அடித்து இருக்க முடியாது. அவனைப் பார்த்திருந்தால் கடித்து உயிரையே வாங்கி இருக்கும்.

தங்கத்திற்குத் துணையாகப் பெரிய கருப்பைத்தான் விட்டு வந்தார். அது இருப்பதும், தான் இருப்பதும் ஒன்று தான் என்பது போலப் பெரியசாமிக்குத் தோன்றும். இப்போது எல்லாம் பெரிய கருப்பு முன் மாதிரி இல்லை. மோப்ப சக்தியும் பார்வையும் மழுங்கிக் கொண்டு வருகிறது. அப்புறம் பழையபடி ரொம்ப வேகமாக ஓட முடியவில்லை. முதுமை அதற்கு வருகிறது போலும் என ஓரோர் சமயம் பெரியசாமிக்குத் தோன்றும். ஆனால் அது எந்தக் காரியத்திலும் பின் தங்குவது இல்லை. முன் மாதிரிதான் காவல் காக்கிறது.

‘பெரிய கருப்பு, நீ நாலு பெரியசாமிக்குச் சமம் ‘ ‘ என்று சொல்லுவார் பெரியசாமி. தனக்கு முன்னே எப்பொழுதும் அதற்குத்தான் சாப்பாடு. வாரத்திற்கு இரண்டு நாட்கள் அல்லாப்பிச்சை கடையில் இருந்து எலும்பு வரும். ஒரோர் சமயம், நாய்க்குச் செய்யும் சீரையெல்லாம் பார்த்துவிட்டுத் தங்கம் சிரிப்பாள். அவர் தலை நிமிர்ந்து பார்ப்பார். அது, அவள் சிரிப்பதை நியாயம் என்று சொலவது போலவே—தன்னுடைய காரியங்களை நியாயப்படுத்துவது போல இருக்கும்.

பெரியசாமி காய்கள் நிறைந்த மா மரங்களின் கிழாக நடந்தார். ஒரு மாங்காய் அவர் முகத்தில் இடித்தது. இரண்டாண்டுகளாக நன்றாகத்தான் காய்க்கிறது. அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஏதோ நல்ல காலம் எல்லா மரமும் ஒன்று போலக் காய்க்கிறது என்று சொல்லிக் கொண்டே நடந்தார்.

சிறிது தூரம் சென்றதும் ஒட்டு மா மரத்தடியில் ஏதோ சலசலப்புக் கேட்டது. பெரியசாமி சற்றே மறைந்தபடி நின்று பார்த்தார்: கிளை ஆடியது. யாரோ மேலே இருப்பது மாதிரி இருந்தது. மண்ணெண்ணெய் டின்னைக் கீழே வைத்தார்; அப்புறம் அரிசி மூட்டை இறங்கியது. பின்னால் நகர்ந்து முன்னே போய் ஒரு மரத்தோடு ஒட்டிச் சாய்ந்தபடி பார்த்தார். இலைகளுக்கும் காய்களுக்கும் கிளைகளுக்கும் மத்தியில் இரண்டு மனிதர்கள். அவசரம் அவசரமாகக் காய்களைப் பறித்து ஒரு சாக்கில் போட்டுக் கொண்டு இருந்தார்கள். கீழே இருந்தவன்—அவன் நாலா பக்கமும் பார்த்துக் கொண்டு இருந்தான். காவல் பார்க்கிறான் போலும். அவன் காவல் பார்க்கும் இலட்சணம் பெரியசாமிக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஆனால் சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒவ்வொரு அடியாகச் சப்தமில்லாமல் எடுத்து வைத்து முன்னே சென்றார்.

ஒரு மூட்டை மாங்காய் கீழே இறங்கியது.

‘பயா மவனுவேலோ, நீங்க இன்னிக்கிச் செத்தீங்க- ‘ குனிந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டார்.

தன் கூடப் பெரிய கருப்பு இல்லை என்பது திடாரென்று அவருக்கு நினைவுக்கு வந்தது.

‘நாய் இல்லாட்டா என்ன ? நான் இல்லே ‘ ‘ என்று சொல்லிக் கொண்டு, ‘எவநா இங்க மாங்கா பறிக்கறது ? ‘ என்று கத்திக்கொண்டு கல்லை வீசினார். கல் ஒரு கிளையில் பட்டுச் சப்தத்தோடு கீழே விழுந்தது.

மாங்காய் பறித்துக் கொண்டு இருந்த இரண்டு பேரும் கீழே குதித்தார்கள். குதித்ததில் ஒருவனுக்குக் கால் சற்றே பிசகி விட்டது. கொஞ்ச தூரம் ஓடி அப்புறம் நொண்ட ஆரம்பித்து விட்டான். பெரியசாமி பாய்ந்து அவனைப் பிடித்து முன்னே இழுத்துக் கொண்டு வந்தார். அவன் ஒரு நோஞ்சான். எலும்பும் தோலுமாக குச்சி குச்சியான கால்களுடன் இருந்தான். அவர் அரிசி மூட்டை மீது உட்கார்ந்து கொண்டு, ‘என்னடா, எங்க வந்த ? ‘ என்றார்.

அவன் குனிந்து தரையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

‘கூட்டாளியெல்லாம் எங்கடா ? ஓடிட்டானுலோலா– ‘

அவன் தலையசைத்தான். கண்களில் நீர் திரண்டு கொண்டு வந்தது.

பெரியசாமி நிமிர்ந்து பார்த்தார். அவனை இவருக்கு அடையாளமே தெரியவில்லை. புதியவன் போலும்.

‘எந்த வூரு ? ‘

‘பாடூரு ‘

‘எங்க வந்த ? ‘

‘மாமா வூட்டுக்கு. ‘

‘திருடவா ? ‘

அவனால் தாள முடியவில்லை. திடாரென்று அழ ஆரம்பித்து விட்டான். பெரியசாமி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவன் விசும்பி விசும்பி அழ அழ— கண்ணீர் கன்னத்தின் வழியே வழிய ஆரம்பித்தது. அது நிற்காதோ என நினைத்தார். அவரால் உட்கார்ந்து இருக்க முடியவில்லை. எழுந்து நின்றார்.

‘எதுக்கு இப்ப அழற ? ‘ ஒரு அதட்டல் போட்டார்.

அவன் இன்னும் பெரிதாக அழ ஆரம்பித்து விட்டான். தலையை அசைத்துக் கொண்டார்.

‘உம்…..போலே ‘ இன்னம இந்தப் பக்கம் வந்த, உயிரு போயிரும். ‘

அவன் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தான்.

‘போடான்னா, திரும்பி என்ன பாக்குற ? ‘

அவன் முன்னே ஓரடி எடுத்து வைத்தான்.

‘என்ன, சும்மா போற ? இங்க வந்து திருட்டு மாங்காய தூக்கிக்கிட்டுப் போடா. ‘

அவன் திரும்பி வந்து சாக்கில் இருந்த மாங்காயைத் தூக்கினான். அவனால் முடியவில்லை. கனத்த மூட்டை, கையில் இருந்து நழுவியது. பெரியசாமி திடாரென்று எழுந்து, ஒரு கை கொடுத்துத் தூக்கி மூட்டையை அவன் தலையில் வைத்தார்.

‘திரும்பி பார்க்காம, போ— ‘ மாங்காய் மூட்டையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவன் போவதைப் பார்த்துக் கொண்டே இருந்தார் பெரியசாமி.

Series Navigation

சா. கந்தசாமி

சா. கந்தசாமி