கால மாற்றம்

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

நவஜோதி ஜோகரட்னம்


என்னை வருடுகின்ற
மலர்கள் பூக்கிற காலம்
இளங்குளிர்க்காலையில்
மரங்களின் அடர்த்தியில்
இருள் இன்னும் உறங்கிய படி
குருவிகளின் கூச்சல்கள்
என் தூக்கத்தைப் பறிக்க
வெறும் நினைவுகளால்
வெப்பமாகிறது என் மூச்சு
பூரான்போல்
முகிழ்கிறது என் தளும்புகள்…

புதைந்து கிடக்கும் உன்
தேடல்கள்
எனக்கு ஒரு உத்வேகம் தருகிறது

தெரிந்தும்
தெரியாத விடயங்கள்
கொழுவுப்பட்டபடி
கெம்புகிறது..
நினைவுகள் எழும்போதெல்லாம்
எளிதாக உடைகிற
உன் காதல் போல்

மனது விழுத்தி
முயலும் போது
உனது பரிமானங்கள்
மனது நிறைந்த
தெளிவு தருகிறது..

மரத்தின் மறைவுகளில்
பதுங்கியிருந்து
என்னை வியாபித்த
உன் அணைப்புக்கள்
என்னை சுகப்படுத்தியது
உன் கிசு கிசுத்த பேச்சுக்களால் நான்
யாசித்த பொழுதுகளும்; உண்டு..

இனிமையைத் தேடி
அலைந்து
அடர்ந்த இலைகளுக்குள்
உன்
நளின அசைவுகளும்
சறுக்கல் நடனங்களும்
இலைகளின் மேலுள்ள என்
வைரத் துளிகளை
வழுக்கி விழுத்தியது..

உன்
கல் மனசைக் உருக்க
கையில் கொஞ்ச
பொய் வேண்டும்…

நான்
பெண் ஜென்மம் எடுத்தேன்
வயதுக்கு வந்தேன்
உன்னை நேசித்தேன்
உன்னோடு
படுத்துறங்கினேன்
குழந்தைகளை பெற்றேன்
அவர்களை
கடைசிவரை நேசிக்கிறேன்
சாகும் வரை..
இன்னும் இன்னும்…

உண்மையற்ற புன்னகையில்
காலம் கழிகிறது

சிரிக்கின்ற பூக்களே!
நான் பெண்
இவை எனக்கு மட்டும் தானா?…

காலமே
ஏன் இப்படி
புதிய புதிய துக்கங்களை
தந்துவிடுகிறாய்?…

30-4.2006.

நவஜோதி ஜோகரட்னம், லண்டன்.

Series Navigation

நவஜோதி ஜோகரட்னம்

நவஜோதி ஜோகரட்னம்