-கோகுலகண்ணன்
முடிவற்ற பிரயத்தனமாய்
எல்லையில்லா ஓவியத்தை
அழித்தழித்தழித்தழித்தெழுதும்
பாலை மணற்படுகையில்
ஆசுவாச மீன்கள்
திடுக்கிட்டு திசைதொலைய
அலையும் வளையங்களால்
அசைக்கும் விளையாட்டில்
ரகசிய மெளனம் சேகரித்து
நிழலிருட்டில் ஒடுங்கும் மரங்கள்
தோல்வியுற்று கலைகயில்
கோளத்தின் நீளம் மீறும்
காற்றின் ஓயாத விரல்கள்
காண நேர்ந்தது
ஒரு பொழுதில்.
புல்லரித்துபோனேன்
கரம்பற்றி என்னை
அழைத்து சென்றது யார்
என்று அப்புறம் யோசித்தேன்
நெருப்பு
சூரியன் புணர்ந்த பாலை மணலில்
வைத்த பாதம் தீக்கொண்டெரிய
கதறி கடலில் விழுந்தேன்
நெருப்பலைகள் கடலில் புரள
திகிலுடன் திரும்பி
சில்லென்ற பசும்புல்வெளியில் காலிட
பொசுங்கி கருகும் நெருப்புப்புற்கள்
பூமியெங்கும் பரவ
வானோக்கிய எரிகல்லாய்
இருட்டைக் கீறி
எரியும் கால் வீசி
நிலவில் நனைத்தேன்
கரிய மருகொண்டது
தீய்ந்த குளிர்நிலா
வெப்பம் தாளாது நிலை மறந்து
மலை தடுக்கி
இடையில் மொக்கிட்ட
சூரியனில் விழுந்தேன்
குளிர்ந்து போனேன்
அன்று அறிந்து கொண்டேன்
நெருப்பணைக்கும்
நெருப்பென்று.