தமிழில்: மு.குருமூர்த்தி
அலுவலகத்தில் வேலை தலைக்குமேல் இருந்து.
கோட்டைக் கழற்றி ஹாங்கரில் மாட்டினேன்.
சட்டையின் கைகளை சுருட்டிவிட்டுக்கொண்டு பேனாவைப்பிடித்தேன்.
வேலையில் கவனமாக இருந்தபோதுதான் ஃபோன் அடித்தது.
ரிசப்ஷனில் இருந்த பெண்தான் பேசினாள்.
“உங்களைப்பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்.”
“யாரது டியர்?” என்னுடைய கேள்வி.
“உயரமாக, குண்டாக ஒரு ஆள். நாற்பது வயதுக்குமேல் இருக்கலாம்.”
“பெயர் கேட்கவில்லையா?”
“கேட்டுவிட்டுச்சொல்கிறேன் டியர்.”
அவள் ஃபோனை கீழே வைக்கிற சப்தம் கேட்டது. ஒரு நிமிஷம் கூட ஆகியிருக்காது. மறுபடியும் கூப்பிட்டாள்.
“பெயர் என்ன?”
“லக்ஷ்மண்லால் பியாரிலால் பண்டிட்ஜி.”
அவள் போனில் கலகலவென்று சிரித்தாள்.
யார் இந்த லக்ஷ்மண்லால் பியாரிலால் பண்டிட்ஜி? நான் மீண்டும் என்னுடைய இருக்கையில் வந்து உட்கார்ந்துகொண்டு யோசித்தேன். இப்படியொரு ஆளை நான் சந்தித்ததேயில்லை. எனக்குப் பழக்கமும் இல்லை. பார்க்கலாமா? வேண்டாமா? நான் எனக்குள்ளேயே யோசித்துக்கொண்டிருந்தேன். என்னால் ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை. ஃபோனை எடுத்து அந்தப்பெண்ணையே அழைத்துக்கேட்டேன்.
“லக்ஷ்மண்லால் பியாரிலால் பண்டிட்ஜியை நான் பார்க்கவேண்டுமா?”
“பார்க்கவேண்டும்” அவள் சொன்னாள்.
பார்க்கவேண்டும் என்று அவளே சொன்னதால் பார்க்கலாம் என்று நானும் முடிவு செய்தேன்.
நேற்று ராத்திரி அவளோடு தூங்கினேனில்லையா?
அவளுடைய தலைமுடியின் ஷாம்பூ வாசனை இன்னும் என்னுடைய நினைவில் சுற்றிக்கொண்டிருக்கிறதே!
மறுபடியும் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டேன். தலைமுடியை சீவி, டை சரியாக்கிக் கொண்டேன். பைப்பை எடுத்து தீப்பற்றவைத்துக்கொண்டேன். புகைவிட்டுக்கொண்டே ரிசப்ஷனுக்குப்போனேன்.
ரிசப்ஷனில் சிவப்புக்குஷன் போட்ட பிரம்பு நாற்காலியில் பகவத் கீதை படித்துக்கொண்டு பண்டிட்ஜி உட்கார்ந்திருந்தார். வாசிப்பது கீதை என்று தெரிந்தபோது நான் மொத்தமாக அதிர்ந்துபோனேன்.
“என்னுடைய பெயர்…….”
என்னை நானே அறிமுகப்படுத்திக்கொண்டேன். லக்ஷ்மண்லால் பியாரிலால் பண்டிட்ஜி புத்தகத்தில் இருந்து பார்வையை உயர்த்தி என்னை ஒரு முறை முழுசாகப்பார்த்தார். அவருடைய கண்களில் ஒரு கவர்ச்சி இருந்தது. அந்தக்கண்களை நேருக்கு நேராகப்பார்க்க என்னால் முடியவில்லை. என்னுடைய தலை குனிந்துகொண்டது.
கீதையை மூடிவைத்துவிட்டு பண்டிட்ஜி எழுந்து நின்றார். அப்போதுதான் அவருடைய அபாரமான உயரத்தை நான் உணர முடிந்தது.
“வாருங்கள்” அவர் கூப்பிட்டார்.
“எங்கே?”
பண்டிட்ஜியின் முகபாவம் திடீரென்று மாறியது. கண்களில் கோபம் கொப்புளித்தது.
“வரச்சொன்னேனில்லையா?…”
அவர் வெளியில் நடந்தார். ஒரு நிமிடம் நான் திகைத்து நின்றேன். பைப்பை உறிஞ்சி ஒருமுறை புகைவிட்டேன். வாயில் வைத்த பைப்பை எடுக்காமலேயே நான் அவரை பின் தொடர்ந்தேன்.
எனக்கு அவரிடம் பயமில்லை. அவரிடம் மட்டுமில்லை. யாரிடமும் எனக்கு பயமில்லை.
பண்டிட்ஜி என்னதான் செய்கிறார் என்று பார்த்துவிடுவோமே!
பண்டிட்ஜியின் பின்னால் நடந்து ஆபீசுக்கு வெளியில் வந்தேன்.
ஆபீஸ் கேட்டில் இரண்டு செண்டைக்காரர்களும், ஒரு சவரத்தொழிலாளியும் இருந்தார்கள். ஒரு கழுதைகூட அங்கே நின்றுகொண்டு இருந்தது. வேறு சில ஆட்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பதுபோலத் தோன்றியது.
செண்டைக்காரர்களுக்கு அருகே பெரிய வாத்தியங்கள் இருந்தன.
இளைத்துபோய், எலும்பும் தோலுமாக இருந்தது கழுதை.
பண்டிட்ஜி சவரத்தொழிலாளியை கையை ஆட்டி அழைத்தார். எங்களுக்குப்ப் பக்கத்தில் வந்து நின்றார் சவரத்தொழிலாளி.
“உட்கார்…இங்கே!”
பண்டிட்ஜியின் ஆணை அதிகாரமாக இருந்தது. அப்படியொரு குரலை நான் அதுவரை கேட்டது இல்லை. அந்த தொனியின் கம்பீரத்தில் நான் என்னையும் அறியாமல் உட்கார்ந்து கொண்டேன்.
“அசையாமல் உட்கார்…”
பண்டிட்ஜியின் உத்தரவு.
அப்புறம் என்ன நடந்தது என்பதை இப்போது யோசித்துப்பார்த்தாலும் நினைவுக்கு வரமாட்டேனென்கிறது. நான் என்னுடைய சுயத்தை இழந்துபோனேன். ஒரு மாதிரியான ஹிப்னாடிக் ட்ரான்ஸில் மூழ்கிப்போயிருந்தேன். என்னுடைய மூளை என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் போயிருந்தது. என்னுடைய கண்கள் என்னுடைய கண்களாக இல்லாமல் போயின. என்னுடைய நரம்புகளில் ஓடிய ரத்தம் எனக்கு வெளியே ஓடி வேறு ஏதோ நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்தது.
என்னுடைய சரீரம் என்னுடைய சரீரத்திலிருந்து வெளியேறிப்போனது.
என்னை நானே இழந்து கொண்டிருந்தேன். எனக்கு வெளியே நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். புகைத்துக்கொண்டிருந்த பைப் என்னுடைய வாயிலிருந்து கீழே விழுந்தது.
சவரத்தொழிலாளி எனக்கு முன்னால் குத்துக்காலிட்டு உட்கார்ந்தார். ஒரு தோல் பையிலிருந்து அவருடைய ஆயுதங்களை வெளியில் எடுத்துவைத்தார். நீளமான கூர்மையுள்ள ஒரு கத்தி, சோப், ஒரு துண்டு. ஒரு சிறிய அலுமினியப்பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரும் கொண்டு வந்திருந்தார்.
“கொஞ்சம் முன்னாடி வாங்க…”
சவரத்தொழிலாளியின் கட்டளை.
நான் நகர்ந்து உட்கார்ந்துகொண்டேன்.
அவருடைய கட்டளையை மீறுவதற்குக்கூட என்னால் முடியாமல் போயிற்று. சவரத்தொழிலாளியைக்காட்டிலும் தாழ்ந்துபோனவன் தானே நான்!
சவரத்தொழிலாளி என்னுடைய தலையை அவருடைய கால்முட்டிகளுக்கிடையில் இறுக்கிப்பிடித்தார்.
நேற்று ரிசப்ஷனிஸ்ட் பெண்ணின் மார்பில் சாய்த்துப்படுத்திருந்த என்னுடைய தலை…
எத்தனையோ பெண்கள் தொட்டுப்பார்த்த என்னுடைய தலை…
எத்தனையோ ஓவியங்கள் வரைந்தெடுத்த என்னுடைய தலை…
எத்தனையோ கவிதைகளில் பாடப்பட்ட என்னுடைய தலை…
என்னுடைய தாயின் கருப்பையில் தலைகீழாகக்கிடந்த என்னுடைய தலை…
நாளை டெல்லியின் மின்சார சுடுகாட்டில் கொளுத்தப்பட்டு வெடித்துச்சிதறப்போகிற என்னுடைய தலை…
நான் கண்ணுக்கு கண்ணாக பாதுகாத்த என்னுடைய தலை…
வரப்போகிற பிறவிகளில் பாம்புகளுக்கும், மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், தலைமை வகிக்கப்போகிற என்னுடைய தலையில் ஒரு அலுமினியப்பாத்திரத்தில் இருந்த தண்ணீரை அந்த சவரத்தொழிலாளி தெளித்தார். அதே தலையில்தான் சவரத்தொழிலாளியின் கூர்மையான கத்தியும் விளையாடியது.
ஷாம்பூவும், சில்விஹீமும் தடவி பெண்ணைப்போலக் கையாண்ட என் தலைமுடி…
என்னுடைய கைகள் பின்புறம் கட்டியிருக்க அந்த சவரத்தொழிலாளி என்னை மொட்டையடித்த காட்சியை பண்டிட்ஜி பார்த்துக்கொண்டிருந்தார்.
சவரத்தொழிலாளியின் கத்தி எத்தனையோ முறை அங்குமிங்கும் விளையாடியது. கத்தியின் கூர்முனை அம்மணமாகிப்போன என்னுடைய மண்டையில் முன்னும் பின்னுமாக போய்வந்து கொண்டிருந்தது. வலிதெரியவில்லையென்றாலும், நிச்சயமாக அந்தக்கத்தி என்னுடைய மண்டையை அங்கங்கே கொத்திக்கிளறியிருக்கும்.
சவரத்தொழிலாளியின் கத்தி என்னுடைய மண்டை ஓட்டை மட்டும் சுரண்டவில்லை. என்னுடைய இதயத்தை சுரண்டியது. அவர் சுரண்டியெடுத்தது என்னுடைய தலைமயிரை அல்ல. என்னுடைய ஆத்மாவை.
உண்மையில் அந்தக்கத்தி என்னுடைய எலும்புகளையும் சுரண்டியிருக்கவேண்டும். அது எலும்பு மஜ்ஜை வரை கூட இறங்கிச்சுரண்டியிருக்கலாம். சுரணைக்கு அப்புறமும் சுரண்டியது.
சவரத்தொழிலாளி மொட்டையடித்தது என்னுடைய வாழ்க்கையை. இனிமேல் என்னுடைய வாழ்க்கை மொட்டையடிக்கப்பட்ட வெறும் வாழ்க்கைதான்.
முடியில்லாத நிர்வாணமான காயப்படுத்தப்பட்ட வாழ்க்கை.
சவரத்தொழிலாளி அவருடைய வேலையை முடித்தபிறகு பண்டிட்ஜியின் உத்தரவு,
“எழுந்திரு.”
நான் அவர் சொன்னபடி செய்தேன். எழுந்து நின்ற போது என்னுடைய கால்கள் தள்ளாடிக்கொண்டிருந்தன. தலையிலிருந்தும், கழுத்திலிருந்தும் வியர்வை பெருகி ஓடியது. அது வியர்வை அல்ல. ரத்தம். என்னுடைய மயிர்க்காலில் இருந்து சுரந்து ஓடியது வியர்வை அல்ல. ரத்தம்.
சவரத்தொழிலாளி கத்தியைத் துடைத்து சுத்தமாக்கி தோல் பையில் வைத்தார். அலுமினியப்பாத்திரத்தை காலிசெய்து அதையும் தோல் பைக்குள் வைத்தார்.
பண்டிட்ஜி என்னை மேலிருந்து கீழாக ஒரு தடவை உற்றுப்பார்த்தார். கண்களால் ஏதோ ஜாடை காட்டினார்.
கசங்கிப்போன பேண்ட் அணிந்திருந்த ஒரு இளைஞன் கழுதையை நோக்கிச்சென்றான். அவனுடைய பேண்ட்டில் இருந்து கிளம்பிய நாற்றம் சகிக்க முடியாததாக இருந்தது. அந்த இளைஞன் கழுதையை ஓட்டிவந்து எனக்கு முன்னால் நிறுத்தினான். கழுதை என்னை பரிதாபமாகப் பார்த்தது.
என்னுடைய பார்வையும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும்.
நான் அந்தக்கழுதையாகவே மாறியிருந்தேன்.
“ஏறி உட்கார்.”
பண்டிட்ஜியின் கட்டளை. நான் கழுதையையும் பண்டிடிஜியையும் மாறி மாறிப்பார்த்தேன். கழுதையின் மேல் எப்படி ஏறுவது? எனக்குப்பழக்கமில்லாத ஒன்று. கழுதை மேலும் குதிரை மேலும் நான் அதுவரை ஏறியதில்லை அல்லவா?
“ஏறச்சொன்னேன் இல்லையா?”
பண்டிட்ஜியின் கண்களில் தீப்பொறி பறந்தது. நான் கழுதையின் அருகில் சென்றேன். கழுதையை கட்டிப்பிடித்து எப்படியோ ஏறிக்கொண்டேன். கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காக குனிந்து கழுதையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டேன்.
“போகட்டுமே…கீழே விழுந்துவிட்டால்தான் என்ன?”
நான் நரகக்குழியில் விழுந்து கிடந்தேன். பற்றி எரியும் தீயில் விழுந்துகிடந்தேன். கொழுந்துவிட்டெரியும் நெய்யில் விழுந்துகிடந்தேன். கட்டிப்பிணைந்துகொண்டு விஷத்தை கக்கிக்கொண்டிருந்த பாம்புகளின் நடுவே நான் கிடந்தேன்.
இனிமேல் தப்பிப்போக வழியில்லை. இந்தத்தீயில் வெந்து நீறாகி தீயாகவே போய்விடுவேன். நெய்யில் உருகி நெய்யாகவே போய்விடுவேன். பாம்புக்கூட்டத்தின் தீண்டலினால் விஷமாகிப்போய்விடுவேன்.
கடைசியில் ஒன்றுமே இல்லாதவனாகிப்போய்விடுவேன்.
நான் கழுதையின் மேல் ஏறி உட்கார்ந்ததும், பண்டிட்ஜி செண்டைகாரனிடம் ஜாடை காட்டினார். பெரிய பெரிய செண்டைகளை அவர்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டார்கள். செண்டைக்கோல்களையும் கையில் எடுத்துக்கொண்டார்கள்.
செண்டைகளின் பறையோசை முழங்கியது.
பண்டிட்ஜி எல்லோரிடமும் சொன்னார்.
“ம்…நடங்க”
பண்டிட்ஜி முன்னால நடந்து போய்க்கொண்டிருந்தார். பின்னால் செண்டைக்காரர்கள். அவர்களுக்குப்பின்னால் கழுதை மேல் நான். என்னுடைய பின்புறம் விசிலடித்துக்கொண்டும், குத்துப்பாட்டு பாடிக்கொண்டும் கொஞ்சம் பொறுக்கிகள்.
ஊர்வலம் ஆபீசிஸ் வாசலில் இருந்து புறப்பட்டது.
பட்டப்பகல். அக்கம்பக்கத்தில் எல்லாம் ஆட்கள் கூட்டமாக இருந்தார்கள். கார்களிலும் பஸ்களிலும் ஆட்களின் கூட்டம். அந்தக்கூட்டத்தில் என்னைத்தெரிந்தவர்கள் இல்லாமலா இருப்பார்கள்?
என்னைத்தெரிந்தவர்கள் நிச்சயமாக அந்தக்கூட்டத்தில் இருப்பார்கள்.
என்னுடைய நண்பர்கள்.
என்னுடைய கவிதைகளை வாசிப்பவர்கள்.
என்னுடைய ஓவியங்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வாங்கிப்போய் ரசித்துக்கொண்டிருக்கும் கலை ரசிகர்கள்.
என்கூடப்படுத்துறங்கியப்பெண்கள்.
எல்லோரும் மொட்டையடிக்கப்பட்ட என்னுடைய தலையைப்பார்த்தார்கள். நான் கழுதைமேல் ஏறிப்போவதைப்பார்த்தார்கள். எனக்குப்பரிவாரம் கட்டுகிற அந்த செண்டைக்காரர்களைப் பார்த்தார்கள். என்னைச்சுற்றி விசிலடிக்கும் அந்தப்பொறுக்கிகளையும் பார்த்தார்கள்.
முக்கியமான சந்திப்புகள் வழியாக, நவநாகரிக கடைகளுக்கு முன்பாக, ஆண்கள் பெண்கள் இவர்களுக்கிடையேயும் குழந்தைகளுக்கிடையேயும் ஊர்வலம் முன்னோக்கிப்போனது.
வழியில் ஒரு கிழவி என்னிடம் வந்தாள். வெள்ளை முண்டும் குதப்பிய வெற்றிலையும் பார்க்க பயமாக இருந்தது. அவளுடைய வாய் வெற்றிலைச்சிவப்பேறி இருந்தது. என்னைப்பார்த்துவிட்டு சொன்னாள் “பன்னிப்பயல்.”
இன்னொருத்தன் காலில் கிடந்த செருப்பைக்கழற்றி என்மேல் எறிந்தான். குதிரைச்சாணத்தை மிதித்திருந்த அந்த செருப்பு பிய்ந்து போயிருந்தது. அது என்னுடைய முகத்தில் வந்து விழுந்தது.
ஒரு மணிநேரம் போயிருக்கும். கழுதை நடப்பதற்கு திணறியது. செண்டைக்காரனுக்கு வியர்த்துக்கொட்டியது.
ஊர்வலம் ஒரு டீக்கடைக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தபோது பண்டிட்ஜி திரும்பிநின்று சொன்னார்.
“நிறுத்துங்க…”
செண்டைக்காரன் கொட்டுவதை நிறுத்தினான். விசிலடித்து குத்துப்பாட்டுப்பாடியவர்கள் மவுனமானார்கள்.
“அண்ணே! டீ கொடுங்கண்ணே!”
பண்டிட்ஜி டீக்கடைக்காரனிடம் சொன்னார்.
கடைக்கு முன்னால் போட்டிருந்த நாற்காலிகளில் பண்டிட்ஜியும், சவரத்தொழிலாளியும் மற்றவர்களும் உட்கார்ந்துகொண்டார்கள். என்னையும் இறங்கச்சொல்வார் என்று நான் நினைத்திருந்தேன். அது நடக்கவில்லை. பண்டிட்ஜி ஒன்றும் பேசாமல் கால்மேல் கால்போட்டவாறு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார்.
அவர் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிக்கத்தொடங்கினார்.
அது பைபிள் என்று நான் பார்த்த உடனே தெரிந்துகொண்டேன்.
டீக்கடைக்காரன் கிளாசில் டீ கொண்டுவந்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தான். எனக்கும் கொடுப்பான் என்று நான் ஆசையோடு இருந்தேன். தாகத்தால் என்னுடைய தொண்டை வறண்டு போயிருந்தது.
டீக்கடைக்காரன் எனக்கு முன்னால் டீ கிளாசை நீட்டியபோது பண்டிட்ஜி தடுத்துவிட்டார்.
“கொடுக்காதே…!”
அழுக்குப் பேண்ட் போட்டிருந்த ஒரு வாலிபன் தொட்டியில் தண்ணீரைக்கொண்டுவந்து கழுதையின் முன்னால் வைத்தான். கொஞ்சமாவது தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்கும்… எனக்கு தொண்டை எரிந்தது. ஒரு துளி நீர் இருந்தால் இந்தத்தீயை அணைத்துவிடலாம்.
“தண்ணீர்…”
கழுதைமேல் உட்கார்ந்துகொண்டு நான் கெஞ்சினேன். டீக்கடைக்காரன் என்னையும் கழுதையையும் மாறி மாறிப்பார்த்தான். பண்டிட்ஜி வேண்டாமென்று தலையை ஆட்டினார்.
டீ குடித்ததற்கப்புறம் அவர்கள் கொஞ்சநேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்தனர்.
பண்டிட்ஜி வேறொரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். இப்போது அது குரான் ஆக இருந்தது.
அவருடைய கைகளில் பலப்பல நூல்கள் இருந்தன. எல்லா மதத்திற்குமான புத்தகங்களும் இருந்தன. தத்துவ புத்தகங்கள் இருந்தன. சட்ட புத்தகங்கள் இருந்தன.
தேநீரும் ஓய்வும் முடிவுக்கு வந்தன. பண்டிட்ஜி எழுந்தார்.
“ம்…நடங்க…”
அவருடைய உத்திரவு ஓங்கி ஒலித்தது. செண்டைக்காரர்கள் எழுந்து செண்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டார்கள். பொறுக்கிகள் பீடி குடிப்பதை நிறுத்தினர். விசில் பறந்தது. குத்துப்பாட்டு ஆரம்பமாயிற்று.
ஊர்வலம் மறுபடியும் முன்னோக்கி நகர்ந்தது.
ஒரு முச்சந்தியில் இருந்து இன்னொரு முச்சந்திக்கு.
ஒரு காலனியில் இருந்து இன்னொரு காலனிக்கு.
இதற்கிடையில் பண்டிட்ஜியும், செண்டைக்காரர்களும், மற்றவர்களும் பலகாரம் தின்றார்கள். டீ குடித்தார்கள். பலமுறை சர்பத்துகூட குடித்தார்கள்.
எனக்கு பலகாரம் கொடுக்கவில்லை.
டீ கொடுக்கவில்லை.
சர்பத்தும் தரவில்லை.
குடிக்கத்தண்ணீர்கூட கொடுக்கவில்லை.
இனிமேல் எனக்கு பலகாரம் எதற்கு? டீ எதற்கு? சர்பத் எதற்கு? தண்ணீர் எதற்கு?
சாயுங்காலம் ஆனபோது ஊர்வலம் மறுபடியும் நகரத்திற்கே போய்ச்சேர்ந்தது. இதற்கிடையில் மொட்டையடிக்கப்பட்ட என்னுடைய தலை சூடேறி கொதிக்கத்தொடங்கி இருந்தது. அழுகிய முட்டைகளும், உரித்துப்போட்ட பழத்தோல்களும் என்னுடைய உடலை மூடியிருந்தன.
இருட்டுகிற சமயத்தில் எங்களுடைய ஊர்வலம் முடிவுக்கு வந்தது. செண்டைக்காரர்கள் ஓய்ந்து போனார்கள். செண்டைக்காரர்களும், சவரத்தொழிலாளியும் மற்றவர்களும் அந்த இடத்தை விட்டுப்போனார்கள்.
கழுதையும் போய்விட்டது.
எல்லாம் முடிந்த பிறகு, எல்லோரும் போனபிறகு நானும் லக்ஷ்மண்லால் பியாரிலால் பண்டிட்ஜியும் மட்டுமே அங்கே இருந்தோம். நாங்கள் இருந்த இடம் செங்கோட்டைக்குப் பக்கத்தில் இருந்தது. சற்றுத்தொலைவில் சாந்தின் செளக்கில் விளக்குகள் எரியத்தொடங்கியிருந்தன. செங்கோட்டையின் உச்சியில் மங்கலான நட்சந்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.
அவமானம், பசி, தாகம் எல்லாம் சேர்ந்து நான் இடிந்து போயிருந்தேன். நினைவு தப்பிப்போயிற்று என்றுகூட சொல்லலாம். நாக்கைக்கூட அசைக்க முடியவில்லை.
இருந்தாலும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ரொம்பவும் கஷ்டத்துடன் பண்டிட்ஜியிடம் நான் கேட்க விரும்பியதைக்கேட்டேன்.
“எதற்கு இந்த தண்டனை பண்டிட்ஜி?”
என்னுடைய கேள்வி காதில் விழுந்ததும் பண்டிட்ஜி என்னை முறைத்துப்பார்த்தார். கேள்விகேட்க உரிமையில்லை என்பதைப்போலிருந்தது அந்தப்பார்வை. எனக்கு பேசுவதற்கேகூட உரிமையில்லை என்பதைப்போலிருந்தது அந்தப்பார்வை.
“சொல்லுங்கள் பண்டிட்ஜி…”
கனவுக்கும் நனவுக்கும் இடையே கிடந்து நான் தள்ளாடிக்கொண்டிருந்தேன். என்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி நான் கேள்வியை மீண்டும் கேட்டேன்.
“உனக்குத் தெரியவேண்டுமா?…கேட்டுக்கொள்.” எனக்கு நேராக பண்டிட்ஜி திரும்பி நின்றுகொண்டார். நான் தரையில் குப்புற வீழ்ந்துகிடந்தேன்.
“ஒரு நாள் ஒரு கிழவன், தாகமாக இருக்கிறது…குடிக்கத்தண்ணீர் வேண்டும் என்று கேட்டு உன்னுடைய வீட்டிற்கு வந்தான் இல்லையா? உனக்கு நினைவிருக்கிறதா அது?”
அன்று ஞாயிற்றுக்கிழமை…
நடுப்பகல் நேரம்.
பால்கனியில் பிரம்பு நாற்காலிபோட்டு உட்கார்ந்துகொண்டு ஆட்டோ காஸ்ட்ரெலயாவின் கவிதைகளைப்படித்துக்கொண்டிருந்தேன், நான்.
அப்போதுதான் அந்தக்கிழவன் அங்கே வந்தான். எழுபது அல்லது எண்பது வயது இருக்கலாம்.
எலும்பும் தோலுமான கைகால்கள். தெருவில் சுற்றித்திரிபவன் அவன். வெய்யிலால் அவனுடைய முகம் வியர்த்திருந்தது. கழுத்தில் வியர்வை ஓடி நனைத்திருந்தது.
“தண்ணீர்…”
வாசல் கேட்டை பிடித்துக்கொண்டு மூச்சிறைக்க அவன் கெஞ்சினான்.
“கொஞ்சம் தண்ணீர்…”
கிழவன் சன்னமான குரலில் கெஞ்சிக்கொண்டிருந்தான். அந்தக்குரல் என்னுடைய மனதை என்னவோ செய்தது.
நான் வழக்கமாக பீர் குடிக்க வைத்திருக்கும் கண்ணாடி டம்ளரை எடுத்தேன். பிரிட்ஜைத்திறந்து குளிர்ந்த நீரை அதில் நிரப்பினேன். கிழவனை வராந்தாவிற்கு அழைத்துவந்து உட்காரவைத்தேன். தண்ணீர் கிளாசைப்பிடிக்கக்கூட அந்தக்கிழவனுக்கு சக்தியில்லாமல் இருந்தது. நான் தான் தண்ணீர் கிளாசை அவனுடைய வாய்க்கருகே கொண்டுபோனேன். மிகவும் ஆவலாக கிழவன் தண்ணீர் குடித்தான். மூன்று நான்கு கிளாசுகள்.
கொஞ்சநேரம் ஓய்வெடுத்தபிறகு, இரண்டு கைகளையும் தூக்கி என்னை ஆசீர்வதித்தபிறகு கிழவன் திரும்பிப்போய்விட்டான்.
“நீ எதற்காக அந்தக்கிழவனுக்கு தண்ணீர் கொடுத்தாய்? தாகமெடுத்தவர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுப்பதற்கு நீ யார்?”
பண்டிட்ஜியின் கண்களில் தீப்பொறி பறந்தது.
பண்டிட்ஜி என்னுடைய முகத்தில் காறித்துப்பியபிறகு சாந்தினி செளக்கின் வெளிச்சத்தில் கைவீசி நடந்து மறைந்தார்.
நான் அங்கேயே கிடந்தேன்.
cauverynagarwest@gmail.com
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங் கதை) -1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல் [கட்டுரை: 45]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -1
- மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -13 << தீவிலே அடித்த புயல் ! >>
- தாகூரின் கீதங்கள் – 58 கனல் பொறி எழுப்பட்டும் !
- வேத வனம் விருட்சம் 13
- வாழ்வும் வலியும்
- உருவமற்ற நிழல் பொழுது/ மனம்
- நீ வரப்போவதில்லையென..
- கேமந்த் கர்கரே, அசோக் காம்தே, சந்தீப் உண்ணிகிருஷ்ணன் – ஒரு கலை அஞ்சலி
- கடவுளின் காலடிச் சத்தம் – 6 கவிதை சந்நிதி
- வனத்தின் தனிமரம்
- கொத்தணிக் குண்டுகள்-Cluster bombs
- கவிதைகள்
- ஓர் சந்திப்பு!
- கரித்துண்டால் குறித்துவைத்த தோற்றம் மறைவின் குறிப்புகள்
- தீவிரவாதம்
- மடயர்க்குப் பாடம் சொல்வாய்!
- வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினேழு
- காயம்பட்ட நியாயங்கள்.