கானகம்

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

பொன் முத்துக்குமார்


அது ஒரு காடு.
விளங்க முடியா அற்புதங்களும்
வினோதங்களும் மண்டிய காடு.

யிரைதேடும் சிங்கங்கள் நிறைய உண்டு.
கூடவே புலிகளும் சிறுத்தைகளுமாய்.

சிங்கமும் புலியும் சிறுத்தையும்
பொறிவைத்து
காத்திருந்து
வேட்டையாடி
குட்டிகளோடு சேர்ந்துண்ண –
தந்திரமாய் ஏமாற்றி
பறித்துப் பற்றி யிழுத்தோடும்
கழுதைப்புலிகள் அனேகம்.

தொங்கும்நாக்கும்
கண்களில் வெறியும்
மேலுதடு யிளித்து
பல்காட்டின உறுமலுமாய்
ஓநாய்கள் ஏராளம்.

கூட்டமாய் மேய்ந்தும்
வேட்டைத் துரத்தலுக்கு
பதறியோடி –
சிதறிப்போய் –
தமக்குள் ஒன்று பலியாவதை
காப்பான தூரம் சேர்ந்து
கையறுநிலையோடு
விழிவிரிய பார்த்து நிற்கும்
கொம்பென்ற ஓருறுப்பு
யிருப்பதையே மறந்துபோன
மாடுகள்
மந்தை மந்தையாய்.

மேயக்குனிந்த தலை
சட்டென நிமிர்ந்து
உயர்த்தின செவிகளும்
திக்கெங்கும் தலைதிருப்பித் தேடும்
மருண்ட விழிகளுமாய்
புள்ளிமான்கள் கூட்டம்.

காட்டுக்கு வண்ணம் சேர்க்க
அடிக்கடி வந்துபோகும்
வரிக்குதிரைகள்.

சுற்றத்தின் பெருங்கால்களுக்குள்
பதுங்கிவரும் குட்டிகளோடு
கூட்டமாய் யானைகள்
அவ்வப்போது பிளிறிப்போகும்.

கிளிகளும் குருவிகளும்
பெயர்தெரியா பறவைகளும்
மிழற்றுமொலி
கிளைகளிடை ஊடுருவி
காட்டை நிறைக்கும்.

ஆரண்யத் திசைகளின்
யிருண்ட உடம்பில்
ஏற்றின ஒளிப்புள்ளிகளென
வெளிச்சம்சுமந்து
சிமிட்டிப்போகும் மின்மினிகள்.

அது ஒரு காடு.
எப்போதாவது வெளிச்சம்
தலைகாட்டும்
அடர்ந்து யிருள் படர்ந்து
அழகாயிருக்கும் காடு.

Series Navigation

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்