காத்திரு காத்திரு

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

கவிஞர் புகாரி


உள்ளத்தில் புரண்டோடும்
ஓருகோடிக் கவிநதிகள் – அவை
ஊருக்காய் அல்லாத
உயிரேந்தும் நவமணிகள்

சொல்லுக்குப் பொருளென்று
சிலநூறு விளக்கங்கள் – அது
சொல்லவந்த சேதிமட்டும்
சொன்னவனின் மனத்துக்குள்

பள்ளத்தின் நிலையென்றும்
பரிதவிக்கும் தாகங்கள் – அதன்
பசியுள்ளம் கேட்பதெலாம்
பிரசவிக்கும் மேகங்கள்

வல்லோனும் வாழ்வதில்லை
வசைமொழியே இல்லாமல் – தினம்
வந்தவற்றுள் விசம்நீக்கி
வாழ்வதுதான் சுகவாழ்வு

கொண்டோடும் நதியோடு
கொடியாகச் சென்றாலும் – உன்
கரைதேடும் கண்ணுக்குள்
கொள்வாய் நீ நம்பிக்கை

தண்டோடு தாழம்பூ
தனிவாசம் வீசிவரும் – நீ
தடுத்தாலும் உனையள்ளித்
தாலாட்டுப் பாடிவிடும்

* buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி