காதல் வீடு

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

தேன்சிட்டு


என் கண்மணி, வெள்ளியன்றுதான்
உன் நினைவுகள்,
ஏகமாய் வெளிக்கிளம்பும்,உன்
வெள்ளிக் கொலுசு ஒலி
வித விதமாய் என் வீட்டிலே ….

என் காதலி, முட்கள் உன் பாதங்களை,
மோதக் கூடாதென,என்
முத்தங்களை பதித்திருக்கிறேன்,
நீ வரும் பாதையிலே ….

கற்கள் உன் கால்களை கடிக்கக் கூடாதென,
என் கவிதைகளை இடம் மாற்றியிருக்கிறேன்,
நீ வரும் பாதையிலே ….

இரவு நேர விளக்காய்,என்
இதயத்தை மாற்றி,வீட்டின் படிகள்
ஒவ்வொன்றிலும் இட்டு வைப்பேன்,
நீ தடுமாறி வீழ்ந்திடக் கூடாதென …

என் வீடு,மலை உச்சியில் …
அரசன் போல தனித்து நின்றே
பொலிவு சேர்க்கும் ஒற்றை வீடு,

அன்பு மனிதர்கள், எனைக்காண,
கம்பீரமாய் தலை துாக்கி
வரவேண்டும்,உயரத்தில் நிற்கும்
என் எழில் வீட்டிற்கு …
மனிதர்கள் வந்து பழகிய தடங்கள்
தெளிவான பாதையாகி,வளையாய்
ஒரு கோடு என் வாசலருகே …
ஊசிமரங்கள் ஒவ்வொன்றாய்
இறங்கி நிற்கும் என் வீட்டிலிருந்து..
வீட்டின் முன்புறத்தில்
வண்ண, வண்ண மலர்கள்
மல்லிகை,முல்லை,ரோஜாவென ….

குறுஞ்செடிகள் கொத்தாக வளர
இயற்கையோடு இணைத்து
இயல்பாய் விட்டு விடுவேன்
மறுபுறத்தில்…

சுற்றிச் சுழலும் சூறாவளிமேகங்கள்
சற்றே திரும்பி பார்த்து
திகைத்தே நின்று விடும்
வீட்டின் அழகைக் கண்டு,அம்
மேகத்தை கூட தொட நினைக்கும்
என் துாங்கா வீடு.

முக்கோணங்களை கவிழ்த்தாற் போல்
சின்ன, சின்ன கூரைகள்…
வண்ண கண்ணாடிகள் ஜன்னலெங்கும்…

என் வீட்டு திண்ணையிலே
இளைப்பாறிவிடும் வேளையிலே,
என்னை தழுவி அணைத்தே
விளையாடுகிறாள்..
தென்றல் மகள்,
சிக்குவேனா நான் ?

பளிச் என்ற சிரிப்புடன்,
என்னை மயக்கிடவே புதுவாசம் தந்து,
துாண்டில்கள் செய்தது,
கொத்தாய் பூத்து நிற்கும்
சின்னப் பூக்கள்…
சிக்குவேனா நான் ?

ஆண்மை மிளிரும்,என்
இளம் மீசையில் மயங்கி வீழ்ந்து,
என்னை வட்டமிட்டே,
வலைகள் செய்தது மின்மினிகள்..
சிக்குவேனா நான் ?

உடலில் இருக்கும் புள்ளிகளை சேர்த்து,
நீ என் வாசல் வர எப்பொழுதும்
கோலமிடுகிறேன்,ஏன் தயக்கம் ?
என்றே கேட்டு கன்னம் குழிய
சிரித்து செல்லும் கலைமான்களோ
கதறி அழுகிறது இன்றெல்லாம்
சிக்குவேனா நான் ?

கண்மணிஸ்ரீ உலகத்திற்கெல்லாம்
நான் கொடுத்தேன் ஓராயிரம்
காதல் தோல்விகளை.
இன்னும் ஏனடி தயக்கம் ?
என் வாசல் வந்து சேர்ந்து விட.

திரிந்தலையும் உன் கருவிழிகளுக்கு,
ஆணையிட்டு உரக்க தமிழில் பேசிவிடு
என் முகம் பார்க்க சொல்லி விடு
என் விழிகளும்,உன் விழிகளும்
பேசிக்கொள்ளட்டும்,
இதயங்கள் என்னும் நீதிமன்றத்தில்
சுபமாய் தீர்ப்புகள் பதிவாகட்டும்…

என் காதலி, பாரதியின் கவிதைகள்
நான் பாடிட, பக்கமாய் நீயிருந்து
புதிதாய் காதல் உரைகள் எழுதிட,
கட்டியிருக்கிறேன் காதல் வீட்டை, உனக்காக,
இனியவளே,காத்திருக்கிறேன்,உனக்காக
வந்துவிடு கண்மணி, என் வாசலுக்கு….

***

Series Navigation

தேன்சிட்டு

தேன்சிட்டு