காட்சி மாற்றங்கள்

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

புதிய மாதவி


====

விடியலில் விலகாத
இருட்டின் நாட்கள்
மேகப்போர்வையில் முகம்மறைத்து
இழுத்துப்போர்த்திக்கொள்ளும்
அதிகாலைச் சூரியனைத்
தட்டி எழுப்பும்
தனிமையின் குரல்.

காதலிப்பதைத் தவிர
வேறுவேலையில்லாத
ஜோடிப்புறாக்கள்
எத்தனைமுறை விரட்டினாலும்
மீண்டும் மீண்டும்
சன்னலே கதியென்று
காத்துக்கிடந்து சல்லாபம்.
பறக்கமுடியாத
சன்னல்கம்பிகளுக்கு நடுவில்
ரசிக்கமுடிவதில்லை
இப்போதெல்லாம்
புறாக்களின் முத்தங்களை.

*

அமைதியான இரவுகள்
தூங்கிவழியும் மாலைநேரங்கள்
நீண்டு கிடக்கிறது
பகலும் இரவும்.
காத்திருக்கிறது
கவிதைகளுக்கான
கருவறை.
நேசித்தப் புத்தகங்கள்
காற்றில் படபடக்க
வாசிக்கப்படாமலேயே
தூசிப்பட்டு
தூசிப்பட்டு
தும்மல் எடுக்கிறது.
இப்போதெல்லாம்
புத்தகவாசனையும்
புகையிலைவாசனையாகி
நினைவுக்குடலை
அரித்து புண்ணாக்கி
நாட்களை நகர்த்துகிறது.

*

புரட்டப்படாத
காலைச் செய்திதாள்கள்
மாற்றப்படாத
தொலைக்காட்சி சேனல்கள்
சண்டைப்போடவும்
சமரசமாகவும்
யாருமில்லாத
இந்த நாட்களில்
அர்த்தமிழந்துப்போனது
வாழ்க்கை ஒப்பந்தங்கள்.

—-

….புதியமாதவி.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை