காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

திலகபாமா,சிவகாசி



காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தின் அமைப்பாளரும் வெளிச்சம் இதழின் கௌரவ ஆசிரியருமான திரு.வெ.நாராயணன்( வயது 62) அவர்கள் அசாம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது உடல் நிலை சரியில்லாத நிலையில் 19.11.08 புதன் கிழமை பகல் 1.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

இவர் 1988 முதல் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் எனும் அமைப்பை இன்று வரை நடத்தி வந்தார். அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொழிற்சங்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் . “ங்”, “சமவெளி”, “புல்வெளி” , “வெளிச்சம்” போன்ற பல சிறு பத்திரிக்கைகளை வெளியிட்டவர். இலக்கிய வட்ட அமைப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள ராஜம் கிருஷ்ணன், அஸ்வகோஷ், லா.சா.ரா, சுந்தர ராமசாமி,அசோகமித்திரன், எஸ்.வி. ராஜதுரை, சிவகாமி, திலகவதி, தணிகைச் செல்வன்,மணியரசன்,பாமா ,ஜெயமோகன், இன்குலாப்,பழமலய்,குட்டி ரேவதி, போன்ற பல படைப்பாளிகளை அழைத்து முரண்பாடான கருத்துகளையும் பேசுவதற்கான தளமாக நிகழ்ச்சிகளை காஞ்சியில் நடத்தி வந்தார்.

பல பதிப்பகங்களின் புத்தகங்களை தனது சொந்தச் செலவில் வாங்கி மிகக் குறைந்த விலைக்கு வாசகர்களுக்கு வழங்கி படிக்கும் பழக்கத்தை உருவாக்கினார். குறும்படங்கள், ஆவணப் படங்கள் உலகத் திரைப்படங்களைத் திரையிட்டு திரைப்பட ரசனைகளை உருவாக்கினார்.

பல்வேறு இலக்கிய அரசியல் கொள்கைகள் கொண்ட அமைப்புகளைச் சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து இலக்கிய கருத்துக்களை விவாதிக்கும் களமாக இலக்கிய வட்டத்தை நடத்தி வந்தார்.

புதிய படைப்பாளிகள் பலரை ஊக்குவித்து அவர்களின் படைப்புகளை இலக்கிய வட்டத்தின் மூலமாக வெளியிட்டார்.

2001 லிலேயே அவரோடு தி, க சியின் அறிமுகத்தின் வாயிலாக தொலைபேசியில் உரையாடினாலும் அவரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு 2007ல் தான் கிடைத்தது. இலங்கை எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இந்தியா வந்த போது அவரை சந்திக்க சென்னை சென்றிருந்தேன். இருவரும் காஞ்சிபுரம் செல்ல முடிவெடுத்து அங்கே சென்றிருந்த போது , அவரோடு தொலைபேசியில் உரையாடியதும் உடனடியாக 12 இலக்கிய நண்பர்களை அழைத்து நாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே ஒரு சந்திப்பை நிகழ்த்தி விட்டார்.

இந்த வருடம் ஒரு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அவர் அழைத்திருந்த போது எனது புத்தகங்களையும் கொண்டு வரச் சொல்லியிருந்தார். எல்லாவற்றையும் அவரிடம் நான் கொடுத்து விட்டு வர , சரியாக இரண்டு மாதத்தில் அப்புத்தகங்களுக்கான பணத்தை அனுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

பத்மா சோமகாந்தனுடன் சென்றிருந்த போது காஞ்சிபுரத்தில் நாம் வழக்கமாக செல்லும் கோவில்கள் தவிர்த்து சில கோவில்களையும் அதன் முக்கிய தகவல்களோடு அழைத்துச் சென்று காண்பித்தார்.

அன்னாரது மறைவால் வாடும், அவரது குடும்பத்தினர் மற்றும் இலக்கிய அன்பர்களுக்கு ஆழ்ந்த இரங்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

தகவல் உதவி: வெளிச்சம்

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி