கற்பகம் இளங்கோவன்
சில சர்க்கரைத்
துகள்களைத்
தூவி மடித்து அவ்வப்போது
ஒரு காகிதம் வரும் –
அப்போதெல்லாம்.
காதலிக்கப்படுகிறோம்
என்று
தபால்காரரும் தவறாகக்
குதூகலித்திருக்கலாம்.
தெருக் கோடியில் அவர் தலை
பார்த்ததும்
கோவில் தேரைக் கண்டது போல
கற்பூரம் கொளுத்தின கோலக்
கண்கள்.
ஃ
இப்போதெல்லாம்…
சீவனைச் சுமந்து
வந்திருக்குமோ,
வந்திருக்கும் உன் கடிதம்
என்கிற எண்ணம் மட்டும்
வீட்டைக் காட்டுது
தினமும்.
நம் இருவருக்கும்
பரிச்சயமான நட்பிடமாவது
கேட்கின்றாயா ?
அவள் நலமா என்று ?
முகவரி மறந்தாயோ ? அதனால்
எழுதிய கடிதங்களை
அனுப்பாமல் இருந்தாயோ ?
அல்லது படிக்காமலேயே
கிழித்துவிடுவேன்
என்று நினைத்தாயோ ?
நான் பாதுகாக்கின்ற
சொத்துக்கள் அல்லவா,
உன் விரல்கள் கோர்த்த
எழுத்து முத்துக்கள்!
கிறுக்கல்கள் என்றாலும்
பரவாயில்லை
கவிநயம் குறைந்தாலும்
பரவாயில்லை
உன் எழுத்தைக் காணாச்
சாபத்திலிருந்து
மீட்டு எடு, அனுப்பிவிடு
ஒரு காகித தேவதையை.
ஃ
கூரையைப் பார்த்துப்
படுத்துக் கிடக்கிறேன்.
விண்மீன்கள் உன்
கையெழுத்துக்களாய்
விளையாடித் திரிகின்றன
விளக்க உரை தந்திடாமல்.
துண்டுத் துண்டாக
தவணை முறையில்
உயிரின் தேவைகள் –
தூக்கி வந்த காகிதங்கள்
எங்கே.. எங்கே ?
உன் எச்சிலின் ஈர முத்தம்
பட்டு
ஒட்டிக் கொண்ட காகித உறை
என் உயிருக்கு ஈரம்
வார்த்து வந்தது!
புதிய செய்தியா ?
கடலென்ன கடல்
காகிதப் பாலம் போடு
படையேதும் தேவையில்லை
அன்பே – நீ ஸ்ரீராமனாக
மாறிப்போவாய்.
ஃ
தெய்வங்களைக் கனவில்
கண்டு, நல்ல
வார்த்தைகளை வரமாய்க்
கேட்டு
கடிதம் வரைந்த காலம் உண்டு.
அறுபது வரிகள் எழுதி
முடித்து
ஒரு வார்த்தைகூடச்
சரியில்லையென்று
கிழித்துப்போட்டுத்
தேய்ந்தன நகங்கள்.
வெள்ளி நிலவாய் ஒரு
கையொப்பமும்
நட்சத்திரங்களாய்
மின்னிய எழுத்துக்களும்
வானத்தில் விளக்கேற்றிய
காலம் வேறு.
இப்போது –
உன் விரல் எழுதிய என் பெயரை
ஏந்திய காகிதம் வந்தால்
போதும்
எஞ்சிய நாட்களின் கண்ணீர்
ஒற்ற
கிடைத்துவிடும்,
எனக்கொரு நிரந்தர ஆறுதல்
கைக்குட்டை.
– கற்பகம் இளங்கோவன்.
karpagamelangovan@yahoo.com
- பட்டு
- ஓடுகிறேன் ஓடுகிறேன்
- காகிதம்
- தமிழோவியத்தின் தீபாவளி மலர்
- கிருஷ்ணனின் நிலங்களில் கிருத்துவ அறுவடை பற்றி அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்
- மனப்புள்ளிகள் உரசி மீளும் தருணங்கள் – (அனைத்தும் கடந்து-பன்மொழிக் கதைத்தொகுதி அறிமுகம்)
- நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை
- இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும் !
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் – 1 (The Great Pyramids of Egypt)
- உலகின் அதி பழமையான டைனசோர் முளையம்.
- நவ நவமாய்….
- புண்ணாடை
- சேணம் காத்திருக்கிறது
- யாரும் இங்கு மரணிக்கவில்லையே!
- கீதாஞ்சலி (38) என்னிதயம் நாடுவது உன்னை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- /ா/
- கவிதை
- கோடி கோடி ஆண்டுகளில்…
- பெரியபுராணம் – 54 – ( திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி )
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 01 யானைகள் (Elephants)
- கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்
- தமிழ் சினிமாவும் அதில் பெண்கள் நிலையும்
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2005 – உலக ஆயுத விற்பனைச் சந்தை
- ஆறு பள்ளமாகி வாய்க்கால் மேடான கதை
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2, 2005 – தமிழ்நாட்டின் சுயநிதிக் கல்லூரிகள்
- நடை -புத்தூரில் கட்டு – பாகம் 3
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-6)
- பிறழ்வு
- வரையப்படாத கடவுள்