கஷ்டப்படாமல் வெண்பா செய்யுங்கள்

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

ராஜேஷ்


அறிமுகம்

வெண்பா எழுத ஆசை. என்ன தெரியணும் அப்படின்னு கேட்டா, ஒண்ணும் பெருசா வேண்டாங்க. கொஞ்சமா தமிழ் தெரிஞ்சால் நலம். இதில வார்த்தைகளை எப்படி உபயோகப் படுத்தணும்ன்னு தெரியணும். அவ்வளவுதான். முதலில் அதிகம் உபயோகப்படுத்தற ஜார்கன்கள் என்ன, அதன் பொருள் என்னங்கறதைப் பார்ப்போம்.

அசை, சீர், தளை, அடி, எதுகை, மோனை. இதுதான் பேஸிக் லிஸ்ட். ஆரம்பத்தில் சீர் அப்படின்னா வார்த்தைன்னே வெச்சுப்போம். அசைன்னா ஆங்கிலத்தில் சிலபிள் (syllable)ன்னு சொல்லறா மாதிரி. ஒரு சீரானது பல அசைகள் கொண்டதாக வரும். பல சீர்கள் கொண்டது ஒரு அடி. அதாவது ஒரு வரி. எதுகை, மோனை அப்புறம் பார்க்கலாம்.

மீதி இருக்கறது தளை. தளை அப்படின்னா என்ன? கட்டுதல் அப்படின்னுதானே பொருள். நாம கூட அடிமைத் தளைகளை அறுத்து எறிய வேண்டும் அப்படின்னு இந்த வரலாற்று படங்களில் எல்லாம் வசனம் பேசி கேட்டு இருக்கோமே. வெண்பா இலக்கணத்திலும் அதே பொருள்தாங்க. ஆனா இங்க வார்த்தைகளைக் கட்டுதல் பற்றி பேசறோம். அதுதான் வித்தியாசம். வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் எனச் சொல்கிறோம். இந்த மாதிரி தளை தட்டுதா இல்லையான்னு பார்க்க ஒரு சீரை எடுத்து அதன் அசைகளாப் பிரிக்கத் தெரியணும். இதுதாங்க வெண்பாவில் முக்கியம். அது எப்படி செய்யறது. அதைத்தான் இப்போ சொல்ல போறேன்.

அலகிடுதல்

ஒரு சீரை எப்படி அசை பிரிக்கிறதுன்னு பார்த்தா (இதற்கு அலகிடுதல்ன்னு பெயர்) ரொம்ப ஈசி. ஒரு சீரை எடுத்து அதன் உடம்பில் சில கோடுகள் போட்டு அறுத்தோம்னா ஒவ்வொரு பகுதியும் ஒரு அசை. எப்படி இந்த கோட்டை போடணும்? எப்ப ஒரு மெய்யெழுத்து வந்தாலும் ஒரு கோடு, தனியா ஒரு நெடில் வந்தா ஒரு கோடு, ரெண்டு குறில் சேர்ந்து வந்தா ஒரு கோடு, ஒரு குறிலும் அதன் பின் நெடிலும் வந்தா ஒரு கோடு. இந்த கடைசி மூணு டைப்பிலும் நீங்கள் கோடு போடுமிடத்தில் ஒரு மெய்யெழுத்து வந்தால் அதைத்தாண்டி கோட்டை போடுங்கள். அவ்வளவுதான். இப்போ எடுத்துக்காட்டு.

மன்/னன் – மெய்யெழுத்து வந்தா ஒரு கோடு. ஆகவே மன் – ஒரு அசை, னன் ஒரு அசை.
மா/னம் – ஒரு நெடில் வந்தா ஒரு கோடு. மெய்யெழுத்து வந்தா ஒரு கோடு. ஆகவே மா – ஒரு அசை. னம் – ஒரு அசை.
மரு/து – ரெண்டு குறில் வந்தா ஒரு அசை. ஆகவே மரு – ஒரு அசை. மீதி இருக்கும் து – ஒரு அசை.
வரா/மல் – ஒரு குறிலும் அதன் பின் ஒரு நெடிலும் வந்தா ஒரு அசை. வரா – ஒரு அசை. மல் – ஒரு அசை.
மாற்/று – மெய்யெழுத்துடன் நெடில்.
மருந்/து – இரு குறிலுடன் மெய்.
பராத்/பரன் – குறிலுடன் நெடில். அதன்பின் மெய்.

பிறர்க்கு, யவர்க்கு என்றெல்லாம் வரும் இடங்களில் இந்த கோடானது அந்த இரண்டு மெய்யெழுத்துக்களுக்குப் பின் போடணும், இப்படி – பிறர்க்/கு, யவர்க்/கு

ஒரு சீரில் ரெண்டு அசை இருந்தா அது ஈரசைச்சீர். மூணு இருந்தா அது மூவசைச்சீர். and so on. அலகிடுதல் இவ்வளவுதாங்க. இதுக்கு பேர் வெச்சிருக்காங்க. அதையும் தெரிஞ்சுகிட்டா நல்லது. அசையில் மெய்யெழுத்துகளை சேர்க்காமல் ஒரு எழுத்து இருந்தா அது நேர். இரண்டு எழுத்து இருந்தா நிரை. இந்த பேருங்களே அப்படிதான் இருக்கு பாருங்க. இதுங்க வர காம்பினேஷனுங்களுக்கும் பேரு இருக்கு.

நேர் நேர் – தேமா
நிரை நேர் – புளிமா
நேர் நிரை – கூவிளம்
நிரை நிரை – கருவிளம்

நேர் நேர் நேர் – தேமாங்காய்
நேர் நேர் நிரை – தேமாங்கனி

நிரை நேர் நேர் – புளிமாங்காய்
நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நேர் நிரை நேர் – கூவிளங்காய்
நேர் நிரை நிரை – கூவிளங்கனி

நிரை நிரை நேர் – கருவிளங்காய்
நிரை நிரை நிரை – கருவிளங்கனி

இந்த பேருங்களும் அந்தந்த விதிகளுக்கு உட்பட்டே வருது பாருங்க. இப்போதைக்கு மூன்று அசைகளோட நிறுத்திக்கலாம்.

இப்போ ஒரு வெண்பாவுக்குண்டான விதிகளைப் பத்திப் பார்க்கலாம்.

வெண்பா விதிகள்

இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம்.
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும்.
எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும்.
கனிச்சீர் வரக்கூடாது. அதாவது போன பதிவில் சொன்ன மாதிரி எடுத்துக்காட்டுகளில் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்ற நான்கு வகைகளும் வரக்கூடாது.
கடைசி வரியின் (இதைத்தான் ஈற்றடின்னு சொல்லுவாங்க) கடைசி சீர் “நாள் , மலர் , காசு , பிறப்பு ” என்பது போல வரவேண்டும்.

தளை தட்டுதல்

வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் என்பதைப் போன பதிவில் பார்த்தோம். தளை தட்டாம எழுத மூணு விதிகள்தான் இருக்கு.

காய் முன் நேர்
விளம் முன் நேர்
மா முன் நிரை

இங்க முன் அப்படின்னா followed byன்னு அர்த்தம். ஆக தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் நிரை கொண்டு தொடங்க வேண்டும். மற்ற சமயங்களில் எல்லாம் நேர் கொண்டு தொடங்க வேண்டும். இதுக்காகத்தான் ஒரு சீரில் ஒன்றுக்கு மேல் வார்த்தைகளோ அல்லது ஒரு வார்த்தையை ரெண்டு சீராக பிரித்தோ வருது. இந்த விதிகள் ஒரு அடியில் இருக்கும் சீர்களுக்கு மட்டுமில்லாம ஒரு அடியின் கடைசி சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் கூட ஒத்து வரா மாதிரி பாத்துக்கணும்.

அவ்வளவுதான் ரூல்ஸ். அவ்வளவு கஷ்டம் மாதிரித் தெரியலைதானே. இப்போ ஒரு திருக்குறளை எடுத்து அலகிட்டுப் பார்க்கலாம்.

(ஒரு குறிப்பு : குறள் என்பது இரண்டு அடியில் எழுதப்படும் வெண்பா. இதை நிறையா பேரு ஒண்ணே முக்கால் அடி அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க. ஆனா அது சரி கிடையாது. இது இரண்டு அடிதான். இரண்டாவது அடியின் நீளம் மூன்று சீர்கள். )

சரி விஷயத்துக்கு வருவோம். முதல் குறளையே எடுத்துக்கலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அலகிடுதல்

மேற் சொன்ன விதிகளின் படி இப்பொழுது அசைகளைப் பிரித்துப் பார்க்கலாம்.

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நேர்
புளிமா புளிமா புளிமாங்காய் தேமா

பக/வன் முதற்/றே உல/கு
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்
புளிமா புளிமா புளிமா

தளை விதிகள் எப்படிப் பொருந்துகிறது எனப் பார்க்கலாம்.

அகர முதல – மா முன் நிரை
முதல் எழுத்தெல்லாம் – மா முன் நிரை
எழுத்தெல்லாம் ஆதி – காய் முன் நேர்
ஆதி பகவன் – மா முன் நிரை
பகவன் முதற்றே – மா முன் நிரை
முதற்றே உலகு – மா முன் நிரை

விதிகளுடன் ஒரு ஒப்பீடு

இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம். – இரண்டு அடிகளில் இருக்கிறது
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும். – முதலடியில் நான்கு சீர்கள், இரண்டாவது அடியில் மூன்று சீர்கள்
எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும். – மேலே கோடிட்ட படி பார்த்தீர்களானால் எல்லாச் சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டதாகவே இருக்கிறது.
கனிச்சீர் வரக்கூடாது. – கனிச்சீர்கள் இல்லை.
கடைசி வரியின் கடைசி சீர் ” நாள் , மலர் , காசு , பிறப்பு ” என்பது போல வரவேண்டும். – உலகு என முடியும் சீர் பிறப்பு என்பதை ஒத்து வருகிறது.

இப்படித்தாங்க வெண்பா எழுதணும். இதுக்கு மேல எதுகை, மோனை, ஓசை அப்படின்னு எல்லாமும் விஷயம் இருக்கு. முதலில் தளை தட்டாம எழுதப் பழகின ஒரு குழாம் வந்த உடனே, எதுகை மோனை பற்றிய பதிவு போடலாம்.

இப்போ எல்லாரும் தளை தட்டாம ஒரு வெண்பா எழுதுங்க பார்க்கலாம்

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

ராஜேஷ்

ராஜேஷ்