கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

தமிழில் : நாகூர் ரூமி


====

இந்த உலகில் உள்ள சூஃபிக் கவிஞர்களில் முடிசூடா மன்னர் ஒருவர் உண்டென்றால் அது மெளலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள்தான். ஏன், முடிசூடிய மன்னர் என்றுகூட சொல்லலாம். அவருடையை தலைப்பாகையுடன் கூடிய உருவப்படத்தைப் — நிழல் படமல்ல. அந்தக்காலத்திலேயே யாரோ ஒரு ஓவியன் அழகாக அவரை வரைந்துள்ளான். அவனுக்கு காலம் நன்றிக்கடன் பட்டுள்ளது — பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. ஒருவகையில் குருவை மிஞ்சிய சிஷ்யர் என்றும் அவரைச் சொல்லலாம். காரணம், அவர் எழுத யார் யாரெல்லாம் தூண்டுகோலாக இருந்தார்களோ அவர்களையெல்லாம்விட மிக அதிக உயரத்தில் புகழின் உச்சியில் இருப்பவர் ரூமிதான். உதாரணமாக, ஃப்ரீதுத்தீன் அத்தார், ஹகீம் ஸனாய் ஆகியோரைச் சொல்லலாம். அவர்களையெல்லாம் ரூமியே தனது கவிதைகளில் புகழ்ந்து பாடியிருந்தாலும் ரூமியை இந்த உலகம் அறிந்த அளவுக்கு ஒரு அத்தாரையோ அல்லது ஸனாயையோ அறியாது என்பதே நிதர்சனமான உண்மை.

இதற்கு என்ன காரணம் என்று நிச்சயமாக வரையறுத்துச் சொல்ல முடியாது. மேற்கில் வியந்து வியந்து, புகழ்ந்து புகழ்ந்து, விழுந்து விழுந்து ரூமியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தள்ளியிருக்கிறார்கள் என்பது மட்டும் காரணமல்ல. ரூமிக்கு முந்திய சூஃபி கவிஞர்கள் ரூமியைவிட விஷயத்தில் ஒன்றும் குறைந்தவர்களல்ல என்றாலும் ரூமி அளவுக்கு அவர்களிடத்தில் கவர்ச்சி இல்லை என்பதும் மறுக்க முடியாதது. ரூமியின் கவிதை அப்படி. யார் படித்தாலும் மயக்கிவிடும். நான் முதல் முறையாக ரூமியின் ஆன்மீக காவியமான ‘மஸ்னவி ‘யிலிருந்து சில கவிதைகளை ஆங்கிலம் வழி தமிழ்ப்படுத்தியபோது, அதைப்படித்தவர்களில் சிலர் என்னிடம் வந்து, அது நேரடியாக பாரசீகத்திலிருந்தே தமிழாக்கம் செய்யப்பட்டதா என்று கேட்டார்கள். அது என் தமிழாக்கத்துக்கு கிடைத்த பரிசு என்று சொல்வதைவிட ரூமியின் ‘டச் ‘ அப்படி என்பதுதான் சரி. சாயங்கால வேளையில் சுட்டு விற்கப்படும் மெதுவடைகளைப்போல ரூமியின் நூல்கள் ஆங்கிலத்தில் விற்றுத்தீர்கின்றன என்றால் அதற்கு முழுக்காரணமும் ரூமியேதான். யார் மொழிபெயர்த்தாலும் சரி. இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்ளலாம். இந்த தமிழாக்கத்தைப் படித்துவிட்டு நீங்களே என்னிடம் சொல்லுங்களேன்.

அப்படி என்னதான் இருக்கிறது அவர் கவிதைகளில் ? இந்த கேள்விக்கு என்னதான் இல்லை என்ற வியப்பைத்தான் சரியான பதிலாக வைக்க முடியும். சுத்தமான கவிதை, அதற்குரிய செறிவு, அழகு, இசை, சப்தங்களில் இயைபு இவை மட்டுமின்றி ரூமியின் கவிதைகளில் வாசகர்களுக்கு கிடைப்பது ஏராளம். அதில் முக்கியமானது உண்மை, உண்மை, உண்மை. ஆம். நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள். எல்லாக் காலத்திலும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தக் கூடியவை. வெறும் ரசனைக்கு மட்டும் உரியதல்ல. வாழ்வில் எடுத்து வைத்துப் பின்பற்றிப் போற்றவல்லது.

ரூமியின் உலகம் அர்த்தங்களால் நிரம்பிய உலகம். அதை அவர் விவரிக்கும் அழகுக்கு ஈடு இணையே கிடையாது. அவரது கவிதைகளைப் போலவே அவற்றை அவர் எழுத நேர்ந்த சூழலும் அதை ஒட்டிய அவரது வாழ்க்கையும்கூட ரொம்ப சுவாரசியமானது.

இஸ்லாமிய உலகம் ரூமிக்குத் தரும் மரியாதை அலாதியானது. (இறைவனின் அருள் உண்டாகட்டும் என்று பொருள்படும் ‘ரஹ்மதுல்லாஹி அலைஹி ‘ என்ற அரபிப் பதத்தின் சுருக்கமான ‘ரஹ் ‘ என்பது இந்த முன்னுரையின் தலையில் இடம்பெற்றிருப்பதைக் கவனித்திருக்கலாம்). ரூமி மற்றவர்களுக்கு ஒரு சூஃபி கவிஞர். ஆனால் இஸ்லாமிய உலகில் அவர் வெறும் ஒரு கவிஞர் மட்டுமல்ல. அவர் ஒரு இறைநேசர். அரபியிலே ‘வலியுல்லாஹ் ‘ என்று சொல்வார்கள். அதுமட்டுமல்ல. இறைவனை அடையும் பாதையைக் காட்டும் சற்குருமார்களில் ரூமியும் ஒருவராக கருதப்படுகிறார். அத்தகையை குருமார்களை பரிபூரணம் எய்திய மனிதன் என்னும் பொருள்படும் ‘இன்ஸானுல் காமில் ‘ என்றும், வழிகாட்டும் சற்குரு என்று பொருள்படும் ‘ஷெய்கு ‘ என்றும் ‘முர்ஷத் ‘ என்றும் குறிப்பிடுவர். இப்படிப்பட்ட ஷெய்குமார்கள் காட்டும் ஆன்மீகப்பாதைக்கு ‘தரீக்கா ‘ என்று பெயர்.

ரூமி தனக்கென ஒரு தரீக்காவைத் துவக்கி அதில் தன் சிஷ்யர்களை வழி நடத்தினார். ரூமியை மெளலானா — உயர்ந்த எங்கள் தலைவர் — என்று மரியாதையாக மக்கள் அழைத்தனர். அவருடைய தரீக்காவும் ‘மெளலவியா தரீக்கா ‘ என்றே வழங்கப்படுகிறது. இன்றைக்கு அந்தப் பாதையில் இருப்பவர்கள் அதிகம்பேர் இல்லை என்றாலும் ரூமியின் காலத்தில் அது மிகவும் பலமானதாகத்தான் இருந்தது. அவருடைய சிஷ்யர்கள் ‘சுழலும் தர்வேஷ்கள் ‘ என்று குறிப்பிடப்படுகின்றனர். இன்றைக்கும் உலகலாவிய இணைய தளங்களில் ரூமி சம்மந்தமாக தேடுவோமானால், the whirling derveshes of Jalaluddin Rumi பற்றிய குறிப்பைக் காணாமல் போகமுடியாது. இன்றைக்கும் மிகுந்த மரியாதையுடன் அவருடைய அடக்கஸ்தலம் பாதுகாக்கப் பட்டு வருகிறது அவருடைய ஊரான கொன்யாவில். (கென்யா அல்ல. இது துருக்கியில் உள்ள ஒரு ஊர்).

ரூமியின் ‘தரீக்கா ‘வில் இசைக்கும் நடனத்திற்கும் இடமுண்டு. இஸ்லாத்தில் இசையும், குறிப்பாக வாத்தியக் கருவிகளின் இசையும் நடனமும் விலக்கப்பட்டது என்று மக்கள் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்பு ரூமி அவருக்கு எதிரான அறிஞர்களுடைய வாதங்களையெல்லாம் குர்ஆனையும் நபிகள் நாயகமவர்களின் பொன்மொழிகளான ஹதீதையும் வைத்து அவர்கள் நிமிரமுடியாதபடி உடைத்தெறிந்துவிட்டார். அவர்களுடைய தர்க்கிக்கும் நாக்குகளுக்கு தன்னுடைய ஆழமான மார்க்க அறிவாலும் ஞானத்தாலும் நித்திய மெளனத்தைக் கொடுத்தார் என்பது வரலாறு.

முஸ்லிம்களுக்கு இன்னொரு முஹம்மது போலவும், கிறிஸ்தவர்களுக்கு இன்னொரு கிறிஸ்துவைப் போலவும், யூதர்களுக்கு இன்னொரு மோஸேயைப் போலவும் ரூமி இருந்தார் என்று கபீர் ஹெல்மின்ஸ்கி என்ற மொழிபெயர்ப்பாளர்-அறிஞர் கூறுகிறார். ரூமி இறந்தபோது இந்த மூன்று மார்க்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பெரும் கும்பலாக ஒன்றுகூடி அவரை அடக்கம் செய்ய அவரது உடலைச் சுமந்தும் அதன் பின்னேயும் சென்றார்கள். தங்கள் தங்கள் மார்க்கத்தையே அதுகாறும் கற்பனைசெய்து பார்த்திராத அளவுக்கு ஆழமாகப் புரிந்துகொள்ள ரூமி உதவியாக அவர்கள் நம்பினர்.

இந்த ஆன்மீக பரிமாணத்தின் காரணமாக, அவருடைய ‘மஸ்னவி ‘ காவியமானது ‘பாரசீக மொழியில் எழுதப்பட்ட ஒரு குர்ஆன் ‘ என்று ஜாமி என்ற கவிஞரால் வர்ணிக்கப்பட்டது. ஆனால் இந்த கருத்தை பாரம்பரிய சிந்ததைத்தளத்தில் இயங்குகின்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இறைவேதமான திருக்குர்ஆனுக்கு இணையாக மனிதர் எழுதிய எந்த நூலையும் ஒப்பிடுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இங்கே நான் எழுதிக்கொண்டிருப்பதைப் படிக்கின்ற வாசகர்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இதைக்கூறவில்லை. ஆனால் எந்த அளவுக்கு ரூமியின் கவிதைகள் பிரபலமாயிருந்தன, எந்த அளவுக்கு அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைப் புரிந்து கொள்ள ஜாமியின் இந்த கருத்து நமக்கு நிச்சயம் உதவும்.

சஅதி என்று ஒரு பாரசீகக் கவிஞர். ‘குலிஸ்தான் ‘ என்ற பிரபலமான காவியத்தை எழுதியவர் அவர். அவரிடம் முகலாய அரசர் ஒருவர் பாரசீக மொழியிலேயே சிறந்த ஒரு கவிதையைச் சொல்லுங்கள் என்று கேட்டபோது, ரூமியின் ஒரு கஸீதாவை — கவிதையை — எடுத்து உதாரணம் காட்டினார் சஅதி !

மேற்கில் ரூமியின் தாக்கத்துக்குள் வராத பெரிய கவிஞர்கள், எழுத்தாளர்கள் யாரும் இல்லையென்றே சொல்லிவிடலாம். ஆங்கிலக் கவிதையின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ச்சாஸரில் (Chaucer) இருந்து, கதே (Goethe), எமர்சன் (Emerson) வரை எல்லோருமே. ஏன், ஆங்கிலத்தின் முதல் அகராதியை வெளியிட்ட மேதை டாக்டர் ஜான்ஸன் (Dr. Johnson) ரூமியைப் பற்றி இப்படிச் சொன்னார் :

‘ஒருமைப் பாதையின் ரகசியங்களை ரூமி புனிதப் பயணிகளுக்கு தெளிவாக்குகிறார். நித்திய உண்மைப் பாதையின் ரகசியத் திரைகளை விலக்கி வைக்கிறார். ‘

ரூமியின் இன்னொரு அற்புதமான பரிமாணம் தத்துவம். வாழ்க்கைக்கு உதவுகின்ற அன்பெனும் தத்துவம். அவருடைய உலகளாவிய பிரபலத்திற்கு இந்த விஷயம் ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்லவேண்டும். ஜாதி மதங்களைக் கடந்த, கால தேச வர்த்தமானங்களைக் கடந்த, நிற இன பேதங்களைக் கடந்த உலகளாவிய அன்பை அவர் தனது கவிதைகளில் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய உலகில் ‘ஷரியத் ‘ என்று சொல்லப்படும் சட்ட திட்டங்கள் சார்ந்த நம்பிக்கைகளுக்குப் புறம்பானவைபோல ரூமியின் சில வார்த்தைகள் அல்லது கருத்து தொனிக்கும். ஆனால் உண்மையில் ஆழத்தில் எந்த முரண்பாடுமில்லை என்பதை ஆழத்துக்கு சென்றவர்களால் மட்டுமே உணரமுடியும். ரூமியைக் கொண்டாடுகின்றவர்களை ஆழத்தை அறிந்தவர்கள் என்று தைரியமாகச் சொல்ல முடியும். பிரபஞ்சம் தழுவும் பிரியத்தை அவர் எடுத்துச் சொன்னதும் சொன்ன விதமும் ஒரு உலகலாவிய கலாச்சார பாதிப்பை ஏற்படுத்தியது.

அராபிய, பாரசீக, கிறிஸ்தவ, யூத மற்றும் இந்திய மூலங்களிலிருந்து இஸ்லாமிய கலாச்சாரம் எவற்றையெல்லாம் தன்வயப்படுத்தி உள்வாங்கிக்கொண்டதோ அவை அனைத்தையும் ஒரு சேர ரூமியிடம் பார்க்கலாம் என்பது ரூமியின் தனிச்சிறப்பு. இஸ்லாமிய, யூத மற்றும் கிறிஸ்தவ தீர்க்கதரிசிகளுக்கு உரிய மரியாதையைக் கொடுத்த அதேசமயத்தில், பாரம்பரியத்திலிருந்தும் புராணிகங்களிலிருந்தும் கிடைத்தவற்றையெல்லாம் அரிதான அழகுடனும் வேறு யாருக்கும் அமையாத தனித்துவம் மிக்க ஆழமான பார்வையுடனும் ரூமி வெளிப்படுத்தினார். இஸ்லாமிய வரையறைகளுக்குள் அவர் விரும்பி தனது வாழ்வை அமைத்துக்கொண்டிருந்தாலும் அவர் கவிதைகள் போதிக்கும் மதம் அல்லது மார்க்கம் ஒன்று உண்டென்றால் அது உலகளாவிய அன்புதான் என்று சொன்னால் அது மிகையல்ல.

என்ன செய்வது முஸ்லிம்களே

எனக்கே தெரியவில்லை என்னை

கிறிஸ்தவனோ யூதனோ

முஸ்லிமோ அல்ல நான்

கிழக்குமல்ல மேற்குமல்ல

தரையுமல்ல கடலுமல்ல

நிலம் நீர் ஆகாயம் காற்று எதுவுமல்ல

அரசனுமல்ல ஆண்டியுமல்ல

இந்தியனோ சீனனோ அல்ல

ஈராக்கியனோ கொராசானியனோ அல்ல

இம்மையைச் சேர்ந்தவனோ

மறுமையைச் சேர்ந்தவனோ அல்ல

எனது இடமோ இடமற்றது

எனது தடமோ தடமற்றது

உடலோ உயிரோ அல்ல

இருமையை விட்டவன் நான்

தேடுவதும் தெரிவதும்

காண்பதும் கூப்பிடுவதும் ஒன்றே

முதலும் முடிவும் அவனே

உள்ளும் புறமும் அவனே

போதையில் இருக்கிறேன் நான்

என்பதைத் தவிர

சொல்வதற்கு ஏதுமில்லை

என்று அவர் எழுதினார். இந்த ஒரு கவிதை போதும். அவர் எப்படிப் பட்ட சிந்தனை கொண்டவர் என்பதை நிரூபிக்க. ஒருமையில் வாழ்ந்த மனிதனின் பேச்சு அது. அவர் போதை என்று சொன்னதை மதுவின் போதை என்று புரிந்து கொள்பவர்களும் உண்டு!

பொதுவாக சூஃபிகளுடைய கவிதைகளின் மையக்கருவே காதலாகத்தான் உள்ளது. குறிப்பாக பாரசீகக் கவிதைகளில், காதல், காதலன், காதலி, போதை, மது, கோப்பை போன்ற படிமங்கள் அடிக்கடியும் ஆழமாகவும் கையாளப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சூஃபிகளின் கவிதைகள் காமத்தைப் பேசுவதாக சிலர் தவறாக நினைத்ததும் உண்டு. காதலின் மொழிதான் ஆன்மீக உண்மைகளைச் சொல்ல தகுதியான மொழி என்பதை இறைநேசரும் கவிஞருமான இப்னுஅரபி அவர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளார்.

ரூமியைப் பொறுத்தவரை, இந்த உலகின் இருப்பிற்குக் காரணமே காதல்தான். காய்களை அல்லது பொம்மலாட்ட பொம்மைகளை நகர்த்தும் அல்லது ஆட்டுவிக்கும் உயர்ந்தோனின் கையானது அன்பால், காதலால் ஆனது. நட்பும் காதலும் ரூமியைப் பொறுத்தவரை மிக அடிப்படையான மதிப்பீடுகள்.

பணிவையும் அன்பையும் ரூமியின் வாழ்வின் எல்லாத் திசைகளிலும் நாம் பார்க்க முடியும். பழம் தராத மரங்கள்தான் நேராகவும், உயரமாகவும், தனது கிளைகளை வானோக்கியும் வளர்க்கின்றன. பழம் தரும் மரங்களோ தலை தாழ்த்தி எப்போதும் பணிவாக உள்ளன. தமது கிளைகளையும் நிலம் நோக்க வைக்கின்றன. அதைப்போல ரூமியும் இருந்தார். சின்னக் குழந்தைகள் சென்றால்கூட, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை ஆசீர்வதிப்பார். அவர்களுக்குத் தலைசாய்த்து மரியாதை செய்வார். சில நேரங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளில் யாராவது ரூமியைப் பார்த்து, ‘இருங்க வர்றேன் ‘ என்று சொல்லிவிட்டால், வரும்வரை ரூமி காத்திருப்பார். வந்தவுடன் தலைதாழ்த்தி ஸலாம் சொல்லிவிட்டுத்தான் செல்வார். இந்த நிகழ்ச்சி பற்றி ரூமியின் பேரனின் சிஷ்யர்களில் ஒருவரான அஹ்மதுல் அஃப்லாகி என்பவர் தனது ‘மனாகிபுல் ஆரிஃபீன் ‘ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

ரூமியின் கவிதைகளின் கருவானது மனித வாழ்வு மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது. அதைவிட கொஞ்சம் அதிகம் என்று சொல்லலாம். பொதுவாக கவிதைகள் நம்மை உணர்ச்சிகளின் வழியாகவும் கருத்துக்களின் வழியாகவும் அழைத்துச் செல்கின்றன என்று சொன்னால், இவை இரண்டிற்கும் மத்தியில் எங்கோ ஓரிடத்தில் இருந்து ஒளிந்து கொண்டு ரூமியின் கவிதைகள் நம்மை இழுக்கின்றன. நமக்கு உள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்ற உள் பாடலின் இசையை இந்த கணமே கேட்கவைக்க அவருடைய கவிதைகள் உதவி புரிகின்றன. அந்த உள்பாடல் இந்த உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொங்கி வழிந்தாலும், அது இந்த உலகம் பற்றியதல்ல.

சப்தங்களாகவும், வார்த்தைகளாகவும், படிமங்களாகவும் பொங்கிப் பிரவஹிக்கின்ற ஒரு பேரானந்த அனுபவம்தான் ரூமி. முழுமையை முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் புரிந்துகொள்ள வைக்கும் அனுபவம். இந்த வெளி உலகம் சம்மந்தப்பட்ட எல்லாவிதமான படிமங்களையும் பயன்படுத்தி அவர் ஒரு உள் உலகத்தை விரிக்கிறார்.

மூலவனின் முகத்தை தரிசித்துவிடும்போது

இந்த பூவுலகம் ஒரு மாயை என்பது புரிந்துவிடும்

என்கிறார். வடிவெடுத்து கண்ணெதிரே காதலி வந்து நின்றாலும் வடிவற்ற அந்த ஆன்மீகக் காதலியையே அவள் பிரதி நிதித்துவப் படுத்துகிறாள். அவர் சிலைகளைப் பற்றிப் பேசினாலும் சரி, போதை பற்றிப் பாடினாலும் சரி, அவை யாவும் கற்சிலைகள் அல்ல உள் சிலைகள், கள் போதையல்ல, உள் போதை. ரூமியின் ஒவ்வொரு வரிக்கும் உலகிற்குள் விரியும் உலகங்களாக குறைந்த பட்சம் ஏழு விதமான அர்த்த தளங்கள் இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

தனது குருவாக கொஞ்சகாலம் இருந்த ஷம்ஸ் தப்ரேஸை முதன்முதலாக அவர் சந்தித்தபோது, ‘நான் இது நாள்வரை வணங்கிக்கொண்டிருந்த உருவமற்ற இறைவன் இன்று உருவம் கொண்டு வந்துவிட்டான் ‘ என்று சொன்னாராம். இஸ்லாத்தில் இறைஅவதாரக் கொள்கை கிடையாது என்பது மார்க்க அறிஞராக இருந்த ரூமிக்கும் தெரியத்தான் செய்யும். ஒரு குருவானவர் மனிதனை இறைவனிடம் கொண்டு சேர்க்கின்ற ஒரு பாதையாக, பாலமாக இருக்கிறார் என்ற கருத்தையே அவர் அப்படி வெளிப்படுத்தினார். ரூமியும் ஷம்ஸ் தப்ரேஸும் ஒருவரில் ஒருவர் இறைவனின் நண்பனை கண்டுகொண்டனர் என்பதுதான் அவர்களுடைய வாழ்க்கையை ஆழமாகப்புரிந்து கொள்ளும்போது தெரியவருவது.

அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது இரண்டு கோளங்கள் சந்தித்துக்கொண்ட மாதிரியானது. இருவரும் மேற்கொண்ட தனிமையோ காவியத்தன்மை கொண்டதாக ஆகிவிட்டது. ஆனால் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருந்ததால் ஏற்பட்ட நிழல் சிலருக்கு சந்தேகத்தையும் ஏன் பொறாமையையும்கூட ஏற்படுத்திவிட்டது. அந்த பொறாமை ஷம்ஸ் தப்ரேஸுக்கு பல அசெளகரியங்களை ஏற்படுத்தியது. ஷம்ஸ் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திடாரென்று வெளியேறினார். பிரிவின் வலியை ரூமியை உணர வைப்பதுதான் அவரை முழுமைப்படுத்தும் என்று ஷம்ஸ் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால் ஷம்ஸ் மறுபடி திரும்பி வந்தார் சில வருடங்கள் கழித்து. இரண்டாம் முறை அவர் சென்றபோது திரும்பி வரவேயில்லை. அவர் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ரூமி அவர் போவதற்குள் முழுமையடைந்துவிட்டார். அல்லது ரூமியை பரிபூரணப்படுத்திவிட்டு அவர் சென்றுவிட்டார். இனி ரூமிக்கு பாலமோ ஏணியோ தேவையில்லை. இந்த பிரிவின் போது ‘தீவானெ ஷம்ஸ் தப்ரேஸ் ‘ என்ற தலைப்பில் அவர் பாடியது 30000 பாடல்கள்!

ஷம்ஸ் சென்ற பிறகு தனது நெருங்கிய சிஷ்யர்கள் பலரில் அல்லது சிலரில் அவரைக் காண முயன்றார் ரூமி. அல்லது கண்டார். உதாரணமாக ஸலாஹுத்தீன் என்று ஒரு சிஷ்யர். பொற்கொல்லராக இருந்து சிட்சை பெற்றுக்கொண்டவர். அவர் இறந்த பிறகு, ஹுஸாமுத்தீன் என்று ஒருவர். தான் சொல்லச் சொல்ல மஸ்னவியை எழுதிய பெருமை ஹுஸாமுத்தீனையே சாரும். மஹாபாரதத்தை வினாயகர் எழுதியதுபோல.

மஸ்னவி

—-

ரூமியின் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படும் மஸ்னவியில் 22,000 பாடல்கள் உள்ளன என்றும் 25,700 பாடல்கள் உள்ளன என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த உலகில் இதுவரை இயற்றப்பட்ட காவியங்களில் அளவிலும் அகத்திலும் பெரியது மஸ்னவி. கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட ஹோமரின் இலியட், ஒடிஸ்ஸி, இத்தாலிய காவியமான தாந்தேயின் தெய்வீக இன்பியல் (டிவினா கமெடியா), ஆங்கில காவியமான ஜான்மில்ட்டனின் பாரடைஸ் லாஸ்ட் (12 பாகங்கள்) மற்றும் கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்கள் — எல்லாவற்றையும்விட பெரியது மஸ்னவி. ஆறு பிரிவுகளாக அது உள்ளது.

மஸ்னவியில் உள்ள விஷயங்கள் அனேகம். முதலில் நம் கவனத்தைக் கவர்வது கதைகள். கதைகள், கதைகள், கதைகள். நமது பாட்டி சொன்ன கதைகள், ஈசாப் கதைகள், விக்ரமாதியன் வேதாளத்துக்கு சொன்ன கதைகளை மிஞ்சும் கதைகள். எப்படித்தான் ரூமிக்கு எதைச்சொல்ல வேண்டுமென்றாலும் ஒரு பொருத்தமான கதை கிடைக்கிறதோ என்று படிப்பவர் மூக்கில் விரலை வைக்க வைக்கும் அளவுக்கு கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கதைகள் என்று சொல்லிவிட்டேனே தவிர அவை யாவும் கவிதைகளாகவே சொல்லப்பட்டுள்ளன!

மேலும் குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் பொன்மொழிகளும், இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகளும், தர்க்கம், தத்துவம் ஆன்மீகம் என்று எல்லாம் இணைந்த ஒரே படைப்பு மஸ்னவி. அறுசுவையல்ல. அறுபதினாயிரம் சுவை என்று சொல்லலாம். மஸ்னவியிலிருந்து பல கவிதைகளும் கதைகளும் என்னால் முடிந்த அளவு இங்கே கொடுக்கிறேன்.

பாரம்பரிய மொழியையும், அதுவரை கையாளப்பட்டு வந்த மொழி நடையையும் புரட்சிக் கவிஞர்களின் கவிதைகள் உடைத்தன என்றால் மரபு சார்ந்த சிந்தனையையும் உணர்ச்சிகளையும் ரூமி உடைக்கிறார். மொரமொரப்பாக அப்பிக்கொண்டு கட்டிதட்டிப் போய்க்கிடந்த கட்டுப்பாடுகளை, எல்லைகளைச் சுரண்டி எடுத்து சுத்தப்படுத்தி பளபளப்பாக்குகிறார். கோளத்தின் வெளி விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி பல கோணங்களிலிருந்தும் அணுகி, ரகசியங்கள் என்று சொல்லத்தக்க உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார். இதற்காகத்தான் அவர் கதைகளையும், படிமங்களையும் இன்னும் மற்ற எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார். இந்த வேலையை முக்கியமாக அவர் மஸ்னவியில் செய்கிறார்.

ரூமி சொல்வதெல்லாம் மேற்கத்திய இலக்கியத்தில் இல்லவே இல்லாதது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ரூமி தரும் அளவுக்கு உணர்ச்சிகளில் வேறு எதுவுமே கலக்காத 24 காரட் தூய்மை மேற்கில் இல்லாதது.

உயர்ந்த இலக்கியம் சமைக்க வேண்டும் என்ற பேராவலில் உருவானதல்ல ரூமியின் படைப்புகள். சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானவை அவை. இதைப்புரிந்துகொள்வது மிகமிக முக்கியமானது. அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை எந்தவித முன்னேற்பாடுகளுமின்றி கேட்டுக்கொண்ட உடனேயே அல்லது சூழ்நிலைத்தேவைக்கேற்ப பாடப்பட்டவை. பொட்டில் ஆள்காட்டி விரலை வைத்தவண்ணம் சிந்தனை செய்து எழுதப்பட்டவை அல்ல. Poetry is the spontaneous outflow of powerful feelings என்று வொர்ட்ஸ்வொர்த் சொல்வாரே அந்த ரகம். சுருக்கமாகச் சொன்னால் ரூமி என்ற மஹாகவியிடமிருந்து மானிட ஆன்மீக உயர்வு வாழ்வுக்கான உண்மைகள் அல்லது ‘ரகசியங்கள் ‘ இதயபூர்வமாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டன என்பதுதான் சரி.

மஸ்னவியின் தொடக்கம்கூட இப்படி ஆச்சரியமானதுதான். பாரசீக மொழியிலே அத்தார் அல்லது ஸனாயின் காவியங்களைப்போல ஒன்று வேண்டும் என்று அதன் அவசியத்தை சிஷ்யர் ஹுஸாமுத்தீன் எடுத்துரைத்து, அப்படி ஒரு காவியம் எழுத வேண்டும் என்று ரூமியை வேண்டிக்கொண்ட அடுத்த கணமே, புன்னகைத்த வண்ணம் ரூமி தனது தலைப்பாகையைக் கழட்டி அதிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்தார். அதில் மஸ்னவியின் முதல் 18 கவிதைகள் எழுதப்பட்டிருந்தன! (அவர் ஒரு தெய்வாம்சம் பொருந்திய இறைநேசர் என்ற உண்மையை இந்த இடத்தில் மறுபடியும் பொருத்திப் பார்க்க வேண்டுகிறேன்).

ரூமியை ஆங்கிலத்தில் இந்த உலகுக்குக் கொடுத்தவர்களில் ஜேம்ஸ் ரெட்ஹவுஸ், பெரியவர் ஆர்.ஏ.நிகல்சன், அவருடைய மாணாக்கர் ஏ.ஜெ.ஆர்பெர்ரி ஆகியோர் முக்கியமானவர்கள்.

ரூமியை மொழிபெயர்ப்பதில் இரண்டுவிதமான பிரச்சனைகளுண்டு. ஒன்று மொழி சார்ந்தது. பாரசீகத்தின் அழகையும் அர்த்தரீதியான சாத்தியக்கூறுகளையும் வேறு மொழியில் கொண்டுவருவது அசாத்தியமானது. இந்த விஷயத்தில் எந்த மொழிபெயர்ப்பும் மூலத்தைவிட ஒருபடி கீழேதான் இருக்கும்.

இரண்டாவது பிரச்சனை முன்னைதைவிட கொஞ்சம் ஆழமானது. இஸ்லாமிய ஆன்மீகப் பாரம்பரியத்தில் ஆர்வமோ, பயிற்சியோ அல்லது குறைந்த பட்சம் பாலபாடமோ இல்லாதவர்கள் எவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்தாலும் அது உயிரற்ற ஆனால் அழகான உடலைப்போல இருக்கும் என்பதுதான் சரி. என் தமிழாக்கத்தைப் பொறுத்து, உயிர் நிச்சயமாக இருக்கும். உடல் மட்டும் ஆங்காங்கு அழகு குறைந்து காணப்படலாம். அதற்கு நான் மட்டுமே பொறுப்பு. என்றாலும் ரூமியை தமிழில் கணிசமான அளவு தந்துவிட வேண்டும் என்ற என் பேரவா என்னை இப்படி எழுத வைக்கிறது. என்ன செய்ய ?

–தொடரும்

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி