கவிஞனின் மனைவி

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

ஆதவா


எனது கணவரின் கவிதைகள்
இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில்
விளைந்தவை
குறியீட்டுக் காய்கள் முளைத்து
செழித்து வளர்ந்தவை

அவரைப் போன்றே
அவைகளும் மூர்க்கமானவை
எனக்குள் ஒவ்வொருமுறையும்
அவர் திணிக்கும்பொழுதெல்லாம்
வாசிப்புத் திணறலில்
என் நுகர்தலின் வாயில்
குதறப்பட்டிருக்கிறது

என் மனநிலையை பங்கப்படுத்தி
காணும் இடமெல்லாம் கவிதையாக்கியது
அவரது கவிதைகள்

என்னைச் சுவைத்த அவைகளின் தாகம்
இன்னும் தீரவில்லை.
அவர் இன்னும் நிறுத்திறார்போலில்லை

அவரது கவிதைக்கான மரணத்தை
ஒவ்வொரு காகிதத்திலும் எதிர்பார்க்கிறேன்
அவைகளோ பல்கிப் பெருகி
என்னை வதம் செய்வதில் உறுதியாக இருக்கின்றன

இன்று அவருக்கு பாராட்டு விழா.

அவரைச் சுற்றி பல்வேறு கவிதைகள்
வட்டமடித்துக் கொண்டிருந்தன.
அவை ஒன்றுக்கொன்று
தான் தின்ற கதைபேசி அலைந்தன

என்னருகே வெறிதெளித்த கவிதையொன்று
என்னைக் காறி உமிழ்ந்து கொண்டிருந்தது.
என்னைப் போன்றே பலரையும்.


aadava@gmail.com

Series Navigation

ஆதவா

ஆதவா