கவிக்கட்டு 42

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

சத்தி சக்திதாசன்


என் உடன்பிறப்புக்கள் உயிரிழந்து , உறவிழந்து , உடமைகளிழந்து சோகச்சுமையினுள் அமிழ்ந்திருக்கும் வேளையில் இந்தக் கவிக்கட்டினை அந்த உயரிய உள்ளங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

கடலுக்கென்ன கோபம் ?

கடலோடு பிறந்தீரே
கடலோடு வளர்ந்தீரே
கடல் மீது தவழ்ந்தீரே – இன்றேன்
கடலோடு மறைந்தீரோ ?

காட்சிகளில் வரட்சி
காலமெல்லாம் போராட்டம்
கனவுகள் கானல் நீர்
கலைத்தது ஏன் அவர் வாழ்வை ?

இழந்தனர் தம் உடமைகள்
இருட்டானது உலகம்
இனி எப்போ வசந்தங்கள்
இத்தனை உயிர் ஏன் கொய்தாய் ?

பாலகர் களித்திருக்கையில்
பரவசமாய் மகிழ்ந்திருக்கையில்
பாவம் வாடி விழுந்தனர்
பாய்ந்து வந்த கடலலையால் !

நித்தமும் உழைத்தவர்
நிம்மதிக்காய் அலைந்தவர்
நிலமடந்தையின் அசைவினால்
நிலகுலைந்து போயினரே !

சூரியனும் அப்படியே
சுந்தரமான பொழுதினிலே
சுத்தமாய் வாழ்வை அழித்ததுவே
சுனாமி என்றொரு பேரலை !

காரணமில்லா அனர்த்தம்
கரையோர கிராமங்கள்
கணநேர நிகழ்வினால்
கண்ணிருந்து மறைந்தனவே !

தமிழ் கொண்ட பெருமை
தனை வென்றதென்றதாலோ
தரைமீறி வந்தெமது
தமிழர்களை அளித்தாயோ ?

நானுதித்த தமிழீழம்
நான் மதிக்கும் தமிழகம்
நசுக்கி கசக்கியதேன்
நான் கேட்க , நீ நாண கடலலையே !

தமிழ் ஈழம் , தமிழ் நாடு
தாய்லாந்து , மலேசியா
தரைமட்டம் ஆக்கியும்
தணியவில்லை உன் தாகம் !

மாலைதீவு என்றொரு
மலரை ஏனழித்தாய் ?
மிதித்து நிலைகுலைத்து
மடித்தாய் அந்தமான் , நிக்கோபார்

கடலுக்கென்ன கோபம்
கடைசிவரை நானறியேன்
கண்ணீர் நதியாகப் பாய்ந்து
காய்ந்து விட்ட பொழுதினிலே !

என் உதிரத்த்தின் உறவுகள்
ஏக்கத்தை நாணுணர்வேன்
என் தலை தாழ்ந்து அஞ்சலிக்கும்
என் உறவுகளின் பாதத்தில்.

****
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்