PS நரேந்திரன்
ஒரு வழியாக கலிஃபோர்னிய கவர்னர் re-call election முடிந்து விட்டது. எதிர்பார்த்தது போலவே சினிமா நடிகர் Arnold Schwarzenegger வெற்றி பெற்றிருக்கிறார். சொதப்பல் கவர்னர் என்று பெயரெடுத்த தற்போதைய கவர்னர் Gray Davis-ஐ ஏறக்குறைய கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள் கலிஃபோர்னிய மக்கள். Rebublican யானை, Democrat கழுதையை துவம்சம் செய்திருக்கிறது. யானை மாதிரி இருக்கிற Arnold, ஒல்லியாக இருக்கிற கவர்னர் Davisஐ போட்டுத் துவைத்தார் என்று இதற்கு அர்த்தமில்லை. யானையும், கழுதையும் அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளான Republican மற்றும் Democrat கட்சிகளின் சின்னங்கள் என விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அமெரிக்காவின் 200+ வருட சரித்திரத்தில் கவர்னர்கள் திருப்பி அழைக்கப்படுவது இது இரண்டாவது முறை. சரியாக 82 வருடங்களுக்கு முன்பு, 1921ஆம் ஆண்டு North Dacota மாநில கவர்னராக இருந்த Lynn Frazier என்பவர்தான் முதன் முதலில் திருப்பி அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு இப்போது (முன்னாள்) கவர்னர் Gray Davis. இந்தியாவில் இது சாத்தியமில்லை. நமது அரசியல்வாதிகள் அப்படியெல்லாம் நடக்க விட்டு விடுவார்களா என்ன ?
இரண்டு மாதங்களுக்கு முன் Jay Lenoவின் Late Night Show-வில் யாரும் எதிர்பாரா விதமாக இந்த re-call election-இல் நிற்கப் போவதாக அறிவித்த பின், மிக எளிதாக கவர்னர் பதவியைப் Arnold பிடித்திருப்பது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது அமெரிக்காவில். இந்தச் சாதனையை மிகவும் style-ஆக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். எந்த விதமான நிர்வாகம் மற்றும் அரசியல் அனுபவம் இல்லாத சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. ஆனால் உலகின் நான்காவது பெரிய பொருளாதார மையமான கலிஃபோர்னியாவில் இது நடந்திருப்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியதல்ல.
இருப்பினும், Schwarzenegger-இன் இந்த வெற்றி ஒன்றும் அத்தனை பெரிய சாதனையல்ல என்பவர்களும் இருக்கிறார்கள். அது பற்றிக் அப்புறம் விளக்குகிறேன். முதலில் அவர் எந்த அளவுக்கு வெற்றிகரமான கவர்னராக இருக்கப் போகிறார் என்பதே சந்தேகமாக இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
இந்திய அரசியலமைப்பிற்கும், அமெரிக்க அரசியலமைப்பிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்தால், எந்த கட்சி மிகப் பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கிறதோ, அந்தக் கட்சியிலிருந்துதான் ஒருவர் அம்மாநில முதலமைச்சராக ஆக முடியும். ஏதாவது ஒரு காரணத்தால் அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலமைச்சர் பதவி விலகினால், வேறொருவரை அதே கட்சியிலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். அதற்கென தனியாக தேர்தல் எதுவும் நடவாது. அதுதான் இந்தியாவில் உள்ள நடை முறை.
அமெரிக்காவில் அப்படி அல்ல. ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது போல், கவர்னரும் அந்தந்த மாநில மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். செனட்டில் Democratகள் மெஜாரிட்டியாக உள்ள ஒரு மாநிலத்தில், Republican ஒருவர் கவர்னராக இருப்பதுவும், அதற்கு நேர் எதிராக இன்னொரு மாநிலத்தில் நடப்பதுவும் சர்வ சாதாரணம். அதே சமயம், தன் கட்சியைச் சாராதவர்கள் செனட்டில் மெஜாரிடியாக உள்ள மாநிலத்து கவர்னர்களால் அவர்கள் திட்டங்களை எளிதாக செயல்படுத்த இயலாது. செயல்படுத்தவும் விட மாட்டார்கள். இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அமெரிக்காவானாலும் சரி. ஆஃரிக்காவானாலும் சரி.
Californiaவின் செனட் Democratகள் கையில் இருக்கிறது. நினைவிருக்கட்டும், Arnold Schwarzenegger ஒரு Republican!
நடந்து முடிந்த தேர்தல் புதிய கவர்னரைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே. ஏற்கனவே இருக்கும் Lt. Governor-ஐ நீக்கவோ, அல்லது அந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கவோ நடந்ததல்ல. அந்த விதத்தில் Schwarzenegger-க்கு இன்னொரு தலைவலியும் உண்டு. தற்போதைய கலிஃபோர்னிய Lt. Governor ஒரு Democrat. அவர் பதவியும், அவரும் அப்படியேதான் இருக்கப் போகிறார்கள். Arnold மீது கடுமையான வெறுப்பில் இருக்கும் Democrat-களைத் தாண்டி புதிய கவர்னர் எப்படி வெற்றிகரமாகச் செயல்படப் போகிறார் என்பது கடவுளூக்கும், Schwarzeneggerக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டபிறகு, தற்போதைய Lt. Governor-ஆன Cruz Bustamante இதழோரப் புன்னகையுடன் ‘I ain ‘t go nowhere! ‘ என்றார். அதற்கு ‘அம்பீ…ஆர்னால்டு…செரிய்யா மாட்டினுட்டேடா…! ‘ என்று அர்த்தம்.
கொடிகட்டிப் பறந்த கலிஃபோர்னியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. நினைத்தே பார்க்க முடியாத 38 பில்லியன் டாலர் budget deficit-இல் தடுமாறிக் கொண்டிருக்கிறது அந்த மாநிலம். டாட் காமர்கள் காணாமல் போய்விட்டார்கள். கடுமையான மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, அதை கவர்னர் Davis சரியாகக் கையாளாமல் ஏகப்பட்ட பொருளாதரச் சரிவு. இருக்கும் தொழில்களும், தொழிற்சாலைகளும் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் கலிஃபோர்னியாவில் அதிகமாகி விட்டது. இந்தச் சூழ்நிலையில் கலிஃபோர்னியர்கள், Davisஐ தூக்கி எறிந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் அதைச் சரி செய்ய நிர்வாக அனுபவம் எதுவுமில்லாத ஒரு சினிமா நடிகரைத் தேர்ந்தெடுத்ததுதான் ஆச்சரியம்.
Arnold Schwarzenegger பெற்ற வெற்றி நேர்மையானதல்ல என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள் என்றேன். அதற்குக் காரணம் இருக்கிறது. தேர்தல் அறிவித்த இந்த இரண்டு மாதங்களில், கலிஃபோர்னியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தன்னிடம் என்ன திட்டங்கள் இருக்கின்றன என்பதை கடைசி வரை அவர் விளக்கமாகச் சொல்லவில்லை. சொன்னால் ஓட்டு விழாது என்பது அவருக்குத் தெரியும். தொலைக் காட்சியில் மற்ற போட்டியாளர்களுடனான நேரடி Debateற்கு கடைசிவரை அவர் ஒத்துக் கொள்ளவில்லை. Debateல் தன்னை நாற அடித்துவிடுவார்கள் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவே முடிந்தவரை சிக்கலான கேள்விகளைத் தவிர்த்தே வந்தார்.
இந்த தேர்தலுக்கு அவர் செலவிட்ட பணம் மிக அதிகம். ஏறக்குறைய 23 மில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கிறார். வேறு எந்த போட்டியாளர்களாலும் அவரை நெருங்க முடியவில்லை இந்த விஷயத்தில். Democratகளால் Arnold அளவிற்கு ஒரு வலிமையான வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. தேர்தலில் நின்ற 135 சொச்சம் ஆட்களில் ஒருவர் கூட அவருக்கு சரியான போட்டியாளரில்லை. கடைசி நேரத்தில், பெண்களின் மார்பகங்களைப் பிடித்தார், பின்புறத்தைத் தட்டினார், ஹிட்லரைப் புகழ்ந்தார் (ஆஸ்ட்ரிய நாட்டில் பிறந்தவர் Arnold) என்று Democartகள் அடித்த Cheap stuntகள் மக்களிடம் எடுபடவில்லை. யாரேனும் ஏதாவது செய்து கலிஃபோர்னியாவைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற desperate மனநிலையில் இருந்த மக்களுக்கு Arnold ஒரு தேவனாக தெரிந்தது ஆச்சரியமில்லை.
கவர்னராகும் ஆசையுடன் ஏராளமாக செலவு செய்து, கடைசி நேரத்தில் கட்சித் தலைமையால் கழற்றி விடப்பட்டு, இந்த re-callக்கு முழு முதற் காரணமான Republican congressman Darrell Issaவை எல்லோரும் கடைசியில் மறந்துவிட்டதுதான் பரிதாபம்.
Schwarzeneggerன் மனைவியான Maria Shriver கென்னடி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு உபரிச் செய்தி.
All the best Governor!
********
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு comfortable feeling இருப்பதில்லை. (இதைத்தான் பட்டறிவு என்பார்களோ ?) Schwarzeneggerன் இந்த வெற்றி இன்னும் எத்தனை தமிழ்நாட்டு சினிமா நடிகர்களைக் கொடி பிடிக்க வைக்கப் போகிறதோ என்பதை நினைக்கும் போது, உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது. சினிமா நடிகர்களும் மனிதர்கள்தான். கல்வியும், அறிவுக் கூர்மையும், சமுதாய அக்கறையும் கொண்ட சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கப் பட வேண்டிய ஒன்றே. தமிழ்நாட்டு சினிமா நடிகர்களை இந்த ரகத்தில் சேர்க்க முடியாது. அதே சமயம், அவர்களின் புகழினை வைத்து தங்கள் சார்ந்த சமுதாயத்திற்கு அவர்களால் நிறைய நன்மை செய்ய முடியும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இதுவரை அப்படி நடந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறுவேன்.
ஏன் Ronald Reagan இருந்தாரே ? என்பீர்கள். Reagan ஒரு சினிமா நடிகராக இருந்த பெற்ற புகழை விடவும், அரசியல்வாதியாக இருந்து பெற்ற புகழ்தான் அதிகம். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு அவர் ஒரு சினிமா நடிகராக இருந்தார் என்பதே மறந்து போயிருக்கும். அவர் நடித்ததெல்லாம் 1940 களில். அந்த அளவிற்கு மக்கள் பணியிலும், அரசியலிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அமெரிக்காவின் தற்போதயை அசுர பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதே Reagan வகுத்த பொருளாதாரக் கொள்கைகள்தான் என்பார்கள். பின்னாளில் Reaganomics என்று அழைக்கப் பட்டுப் புகழ் பெற்ற அந்த பொருளாதாரக் கொள்கை.
ஒரு விவாதத்திற்காக Reagan சினிமா நடிகர்தான் என்று எடுத்துக் கொண்டாலும், உலகின் மற்ற பகுதிகளில் அரசியலுக்கு வந்த மற்ற சினிமா நடிகர்களால் அவரைப் போல வெற்றிகரமாக இருக்க முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
தமிழ்நாட்டை பல வருடங்கள் ஆண்ட ஒரு சினிமா நடிகர் செய்த சாதனைகளை விட அவர் நமக்கு விட்டுச் சென்ற வேதனைகளே அதிகம். அந்த வேதனைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை. இன்னொரு சினிமா நடிகர் நமது பக்கத்து மாநிலத்தை ஆண்டார். அவர் செய்த கூத்துக்களுக்கும் குறைவில்லை. கடைசியில் அந்த மாநில மக்கள் விழித்துக் கொண்டார்கள். நாம் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறோம். அல்லது உறங்குவது போல பாவனை செய்து கொண்டிருக்கிறோம்.
பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு சினிமா நடிகரை (பெயர் நினைவுக்கு வரவில்லை), தேர்ந்தெடுத்த அந்த நாட்டு மக்களே ஓட ஓட விரட்டினார்கள். அந்த அளவிற்கு அவர் செயல்பாடு இருந்தது! இலங்கையில் ஏதோ ஒரு மாவட்டத்தை ஆளும் காமினி பொன்சேக எந்த அளவிற்கு வெற்றிகரமாக இருக்கிறார் என்பது புதிராக இருக்கிறது.
Minnesotta மாநில கவர்னரகத் தேர்ந்தெடுக்கப் பட்ட முன்னாள் சினிமா நடிகரும், மல்யுத்த வீரருமான Jesse Ventura செய்த சொதப்பல்களை அமெரிக்கர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். நான்கு வருடங்கள் ஆண்டு Minnesotta மக்களை வெறுப்பேற்றி விட்டுப் போனார் அவர். Terminator படத்தில் Schwarzenegger உடன் நடித்தவர்தான் இந்த Jesse Ventura. உங்களுக்கு நினைவிருக்கலாம். மொட்டைத் தலையுடன், வாயில் புகையிலையை குதப்பிக் கொண்டு, ஒரு பெரிய துப்பாக்கியுடன் வருவாரே அவர்தான் இந்த J. V.
தமிழ்நாட்டிலும் இப்படிப் பட்ட ‘மாச்சோ கமாச்சோ ‘க்களுக்குப் பஞ்சமில்லை. சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டு ‘மாச்சோ ‘ நடிகர், திருவனந்தபுரத்திற்கு ஏதோ விழாவிற்குப் போனதாகவும், அவரின் கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்கள் ‘வருங்கால தமிழக முதல்வரே. வருக! வருக! ‘ என்று ‘கட் அவுட்கள் ‘ வைத்து வரவேற்றதாகவும் தமிழ் தினசரிகளில் செய்தி வந்திருந்தது. நமக்குதான் எத்தனை முறை பட்டாலும் அறிவு வராதே!
கவனியுங்கள். படித்தவர்கள் அதிகம் இருப்பதாக ‘நம்பப்படுகின்ற ‘ கன்னியாகுமரி மாவட்டத்திலே இது நடந்திருக்கிறது. இங்கேயே இப்படியென்றால், மற்ற மாவட்டங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அங்கெல்லாம் சினிமா நடிகர்களை சிகரத்திலே வைத்துக் கொண்டாடுவார்கள் என்றால் மிகையில்லை.
‘You too Brutus ? ‘ என்பது மாதிரி ‘You too Kanyakumari ? ‘ என்று கேட்கத் தோன்றுகிறது.
******
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais
- மதி
- ஒரே ஒரு வழிதான்
- மானுடமாகட்டும் பெண்மை
- வைரமுத்துக்களின் வானம்-6
- கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்
- 2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘
- நகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)
- பிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)
- அன்பின் பஞ்சு
- உயிர்மை அக்டோபர் இதழ்
- ஒரு சேட்டரின் (chatter) புலம்பல்
- அப்படியா ?
- என்னைத்தேடி
- முக வரிகள்
- மீட்சி
- வாலைச் சீண்டும் வானரம்
- நீ இருக்கிறாய்!
- கூட்டுக்கவிதை
- பரி-மலம்
- ஒ லி ச் சி த் தி ர ம்
- விடியும்!நாவல் – (18)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- இதயங்களின் தேவாலயம்
- எ(பெ)ருமை முயற்சிதரும்
- கடிதங்கள்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1
- கவர்னர் Schwarzenegger
- வாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு
- ஜனனம்
- ஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)
- குமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]
- பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்
- பரு
- சந்திப்பு
- உன்னைப்போல் தான் நானும் ?!
- பாடி முடிக்கும் முன்னே…