கல்லூரிக் காலம் – 7 -செங்கல்

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

நம்பி.


———–

மாடுகள் பிடிப்பது சித்தாளுன்னாலும் …. ச்சே…… மாடுகள் படிப்பது சிவில்னாலும் பழக்கம் என்னவோ ஆட்டயப் போடுறதுதான். ‘மாடு-1 ‘ சங்கரும், ‘மாடு-2 ‘ சண்முகமும் ‘வண்டி ‘ சந்திராவ களம் நோட்டவிட (Field survey) இழுத்துகிட்டு போற அழகே தனிதான். ரெண்டு மாடும் வலமும் இடமுமா தளவாட சாமான்லாம் தூக்கிக்குவானுங்க. ‘வண்டி ‘ பென்சில், பேனா எடுத்துகிட்டு நடுவுல போவா. யாரு கண்ணு பட்டுச்சோ அடுத்தடுத்து சோதனையா வந்துட்டுது வண்டி மாடுகளுக்கு.

சாம்பார்ல ஊத்தப்பத்த ஊற வச்சி உள்ள தள்ளிட்டு புதன் கிழமை காலையில வகுப்புல உட்கார்ந்தா தூக்கம் சொக்கும். ‘மாடு-1 ‘ சங்கர் எண்ணிக்கையில்லாம பூந்து விளையாடிட்டு வகுப்புல ஒரு ஓரமா ஒதுங்கி ஆழ்ந்த சிந்தனைக்குப் போயிட்டான். ‘வாமனன் ‘ ராகவன் கொட்டை எழுத்துல ‘FOR HIRE ‘ னு எழுதி மாடு-1 பேண்ட் பின்னால ஒட்டி வச்சிட்டான். தூங்கி முழிச்சி தெம்பா நடந்தவன பார்த்து போர வர்றவன்லாம் கண்ணடிக்கறான். எல்லாம் கிறுக்கு புடிச்சி அலையுறானுவன்னு சாயங்காலமா அறைக்கு வந்து பேண்ட்ட கழட்டும்போதுதான் கண்ணடிச்ச விஷயம் புரிஞ்சது. இத யாரு செஞ்சிருப்பாங்கறதுக்கு ஆராய்ச்சி எல்லாம் தேவையில்ல. வாமனன் ‘வண்டி ‘ சந்திரா முழிப்பா வகுப்புல இருக்குறப்பவே துண்டு பீடிய காதுல சொருகுனான். அந்தப் பயல்தான் இதையும் செஞ்சிருக்கனும்.

இப்படி அவமானப்படுத்திட்டானேன்னு நொந்து போயி மாடு-1, ‘மாடு-2 ‘ சண்முகத்த தேடிப் போனான். மாடு-2க்கும் சோகம். கணக்கு வழக்கு இல்லாம ரெண்டு ஆளு சாப்பாடு சாப்புடுறதா தகவல் போயி மெஸ் பில் எக்குதப்பா வந்திருக்கு. என்ன ஏதுன்னு கேக்க விடுதி கணக்கர் கிட்ட போனா, அவரு

ஒன்ஸ் போட்டா

எவர் போட்டா

நெவர் கேன் பி

ரீ-போட்டா

ன்னு போட்டுத் தாக்கிட்டாரு.

சோகத்துல இருந்த ரெண்டு பேரும் வண்டிகிட்ட கடன் வாங்கிகிட்டு ஜெயபாரதில ஆட்டுக்கறியும் அன்லிமிட்டெட் சாப்பாடும் கொட்டிக்க போனானுவ. வேதனையில வயிறு ரொம்புறதே தெரியாம அள்ளி கொட்டுனானுவ. சிப்பந்தி பக்கத்துல வந்து , ‘அப்பு, அன்லிமிட்டெட்க்கும் ஒரு அளவு உண்டு ‘ன்னு கதறுனதெல்லாம் காதுல ஏறல.

‘சின்ன மாடு, சோத்துல சுன்னாம்பு போட்டு வச்சிருக்காண்டா. அதான் சரியா சாப்புட முடியல ‘ன்னு வயித்த தடவிகிட்டு சொன்னான் மாடு-1.

‘அதவிடு பெரிய மாடு, இந்தப்பய கணக்கனையும், வாமனனையும் ஒரு வழி பண்ணனும். நம்மகிட்டேயே வந்து வால ஆட்டுறானுவ. துண்டு பீடி காதுல இருந்தது தெரியாம வண்டி HOD அறைக்குப் போயி திட்டு வாங்கினது மறக்கறதுக்குள்ள பேண்ட் பின்னால குத்தி வச்சி அசிங்கப் படுத்திட்டான் ‘னான் மாடு-2.

இப்படி பேசிகிட்டே விடுதிக்கு வரும்போது ராத்திரி பதினோரு மணிக்கு மேல ஆச்சு. அமாவசை போல. கும்மிருட்டு. விடுதிய சுத்தி சுவர் எழுப்ப லாரி லாரியா கல்லு இறக்கி அடுக்கி இருக்கு. ஒரு கல்லு குவியல் மேல உக்காந்து கதையளந்தானுவ. பெளர்ணமியா இருந்தா பெத்தாங்களா பேண்டாங்களான்னு தெரியாத வெவகாரமான பசங்க கிச்சு கிச்சு தாம்பாளம் ஆடுவானுங்க. இன்னைக்கு யாரும் நடமாட்டம் இல்லாம நிசப்தமா இருக்கு.

திடார்னு மாடு-2 துள்ளி குதிச்சான். ‘பெரிய மாடு, நம்ம ஒரு லாரி கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கப் போறோம் ‘ அப்படின்னான். மாடும் மாடும் ஒரே மாதிரிதான் நினைக்கும். பெரிய மாடு கேள்வியே கேக்காம, ‘கிளம்பு சின்ன மாடு. மொதல்ல ரெண்டு போர்வைய ஆட்டய போடுவோம் ‘னான்.

அரவம் இல்லாம, திடு திடுன்னு கல்ல அள்ளி போர்வையில போட்டுகிட்டு நாலு மாடி படியிலேயே ஏறி மொட்ட மாடில அடுக்குனானுவ. விடியறதுக்குள்ள ரெண்டு லாரி கல்ல ஏத்தி மட்டமா மொட்ட மாடில அடுக்கிட்டு ஒரு போர்வைய வாமனன் அறைக்கு வெளியவும், இன்னொன்ன கணக்கர் அலுவலகத்துக்கு வெளியவும் தூக்கிப் போட்டுட்டு தூங்கப் போயிட்டானுவ.

விடிஞ்சி பார்த்தா வச்சது வச்சபடி இருக்க ரெண்டு லாரி கல்லு மட்டும் காணல. காவலாளிக்கு உதறல் எடுக்குது. போலீஸுகிட்ட போறதா என்னன்னு புரியல. முதல்வருக்கு விஷயம் போயி ஒரு கமிட்டி போட்டு விசாரிக்கச் சொன்னாரு. கமிட்டி விசாரணைக்கு விடுதிக்கு வந்தது. ஒவ்வொரு தளமா விசாரணய முடிச்சிட்டு நாலாவது தளத்துலருந்து கீழ இறங்குறதுக்கு முன்னால ஒரு எட்டு மேல போகலாம்னு யாருக்கு தோணிச்சோ, கமிட்டி ஆளுங்க மேல ஏறி பார்த்தா கல்லு எல்லாம் அங்க கெடக்கு. விஷயம் சூடாகி மறுபடி அக்கு அக்கா விசாரிச்சா கல்லு தூக்குன ரெண்டு போர்வை கிடைச்சுது.

வாமனனையும், கணக்கரையும் தனியா அழைச்சு விசாரிச்சாங்க. கணக்கர பார்த்தா கத்திரிக்கா தராசுல தூக்கி போட்டு நிறுத்துடலாம்ங்கற மாதிரி இருப்பார். இந்த ஆளு எப்படி இவ்வளவு கல்ல ஏத்த முடியும்னு சந்தேகம். வாமனன கேக்கவே வேண்டாம். செங்கல்லு உயரம்தான்.

ஆனாலும் வேற துப்பு கிடைக்கல. இந்த விஷயத்த வேற முடிக்கனும். கணக்கர், வாமனன், காவலாளி மூனு பேருக்கும் ஆளுக்கு அம்பது ரூபா அபாராதம் போட்டு ஆளு வச்சு கல்ல கீழ இறக்கனும்னு தீர்ப்பு எழுதுனாங்க. அத்தோட ராத்திரி பாராவுக்கு போலிஸுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு.

அப்படி வந்த போலீஸ்கிட்ட மாடுங்க விசில ஆட்டய போட்டது தனிக்கதை.

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி