கருவறை சொர்க்கம்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

சுஜாதா சோமசுந்தரம்


பத்துமாத இருட்டறை உலகம்
பலவித எண்ணங்கள்
எனக்கு அல்ல….
தன் உதிரத்தால்
உருக் கொடுத்து
உயிரையே பணயமாக வைத்து
உயிர் கொடுத்த
உன்னதமான தெய்வத்திற்கு….
பத்துமாதம் உனக்குள்
எந்தன் வளர்ச்சி
இதமான துன்பங்கள்
இருந்தும்….
எந்தன் சுகமான வசிப்பு
உந்தன் கருவறை மட்டுமே…
கண்களிலிருந்தும் குருடாக
வாயிருந்தும் ஊமையாக
காதிருந்தும் செவிடாக
மனமிருந்தும் மிருகமாக
நடிக்கும் பொல்லாத உலகில்
எனக்கு பிடித்தது
உந்தன் கருவறை உலகமே!
கருவறைக்குள் உடலை வளைத்தப்படி
கண்களை மூடிக்கொண்டு
உந்தன் சுவாசத்தில் எந்தன் சுவாசமும்
உந்தன் உயிரில் எந்தன் உயிரும்
உந்தன் எண்ணத்தில் எந்தன் எண்ணமும்
உந்தன் இன்பத்தில் எந்தன் இன்பமும்
உந்தன் துன்பத்தில் எந்தன் துன்பமுமாக
காலம் முழுவதும்
கருவறை சொர்க்கம்
சுகமென எண்ண்னேன்….
நீயோ..உந்தன்
பெண்மையை நிலைநாட்ட
அவசரமாக ஈன்று
அவசர உலகிற்கே
அர்ப்பணித்து விட்டாய்…
பாசத்தின் அருமையை
படைத்தவனே
உன்னிடம்தான்
பிச்சை கேட்க வரவேண்டும்.
உந்தன் கருவறை பாடம்
என்னை செதுக்கி செதுக்கி
சிற்பமாக்கியுள்ளது.
உந்தன் சிந்தனை ஒட்டத்தில்
ஒரு துளி என்னிடம்
இருப்பதால்தான்…
மிருகமாகாமல் இருக்கிறேன்.
நீ என்னை ஈன்றதற்காக
கர்வப்படலாம்…,
நான் உந்தன் கருவறையில்
காலம் முழுவதும்
இருந்திருந்தால் மட்டுமே
கர்வப்பட்டிருப்பேன்.
போதும் தாயே….! போதும்
வாழ்க்கையும் கற்று தந்தாய்,
வாழவும் கற்று தந்தாய்,
இந்த மண்ணில் பிறந்தற்காக….
—-

சுஜாதா சோமசுந்தரம் , சிங்கப்பூர்.

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்