கனவு நதியும் நிஜ மீன்களும்

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


ஒவ்வொரு பெண்ணிடமும் ஓர் ஆண் கனவின் வாசனையை நுகர்கிறான். கனவு வேண்டியிராதவர் யார் ?… அவர்கள் பொய் சொல்கிறார்கள்.

உயரத்தில் பூத்திருந்தது அந்த மலர். அவளுக்கு எட்டவில்லை. நான் பறித்து அவளிடம் நீட்டுகிறேன். அவள் வாங்கிக்கொண்டு சிரிக்கிறாள். பூவை வாங்கிக் கொண்டு சிரிக்கிறாள். எவ்வளவு அழகாய்ச் சிரிக்கிறாள்… அந்தப் பூவைவிட அவள் அப்போது அழகாய் இருந்தாள்.

வீட்டில் அன்னை படம் இருக்கிறது. சிரித்தபடி அன்னை. அவள் பூவை அன்னைக்கு சமர்ப்பித்தாள். நான் பார்த்தேன். சிரிக்கிற, சிநேகபூர்வமான அன்னை அந்தப்பூவை விட அழகாய் இருந்தாள்.

தினசரி செம்பருத்திப் பூக்களை அன்னைமுன் சமர்ப்பிப்பது இவள் வழக்கம். நான் தெருவில் வாகனத்தில் செல்கிறேன். வழியில் சாலைக்கரையில் செம்பருத்திச் செடி. தன்னியல்பாய் அதில் பூவை கவனிக்கிற மனம். சிவந்த மலர்கள். செடியில் பூ தெரிந்தது. பூவில் அன்னை தெரிந்தாள். பூ அழகாய் இருந்தது.

சிரித்தபடி அன்னையின் படம். அவள் அன்னையை வணங்குகிறாள். நான் அவளைப் பார்க்கிறேன். இவளைச் சிரிக்க வைக்க உந்துகிறது மனம். நான் அழகின் உபாசகன். நான் அவளைக் கேட்டேன்- பாண்டிச்சேரி போய்வருவோமா ?… ஆ அவள் சிரித்தாள். எவ்வளவு அழகு இவள்.

உலகம் ஒருகாலத்தில் அழகாய் இருந்திருக்க வேண்டும்… நான் திரும்பி அன்னையைப் பார்த்தேன். உலகம் அழகாகி விடும், என்று தோணியது.

முதன்முறையாக நான் பாண்டிச்சேரி வருகிறேன். பார்த்தவுடன் பிடித்துப் போனது ஊர். ஒழுங்கான சாலைகள். அதன் அமைதி. சூழல். காற்று. கடல்காற்றின் ஆலாபனை. அழகு அங்கே குடியிருந்தது. அகனமர்ந்து செய்யாள் உறையும், என்று வள்ளுவர் சொன்னாப்போல… அழகமர்ந்து ஆட்சி செய்யும் இடம் அது. அது எப்படி அத்தனை அழகாய்த் தோணியது… அங்கே அன்னை இருந்தாள். அந்த இடம் மணத்துக் கிடந்தது.

வீட்டில், சிரித்தபடி அன்னை. என் வீடு அழகானது. பாண்டிச்சேரி. அன்னை அங்கே குடியிருந்தாள். ஊர் அழகானது. அன்னை என் காதில் சொன்னாள். உலகம் அழகானது. அழகாகி விடும் ஒருநாள். ஜனங்கள் அன்னைமுன் கூடினர். அன்னை சிரிப்பை அவர்களுக்கு வழங்கினாள். அவர்கள் நாடெங்கிலும் கிளைத்து விரிந்து பரந்து பிரிகிறார்கள். ஆரோவில் என்பதென்ன ? உலகக் கோளத்தின் சிறு வடிவம் என்றாள் அன்னை… சிரித்தபடி. ஆரோவில் எத்தனை அழகாய் இருக்கிறது.

உலகம் அழகாகி விடும். எனக்கு நம்பிக்கை வந்தது. நாங்கள் பாண்டிச்சேரி போய் வந்தோம். மனசெல்லாம் மலர்கள் பூத்ததை நாங்கள் உணர்ந்தோம். தினசரி மனசில் பூக்கள் பூக்க ஆரம்பித்திருந்தன. மனம் அழகாகி யிருந்தது.

நான் வாகனத்தில் போகிறேன். அந்த யாரோ என்னைப் பார்க்கிறான். நான் அவனைப் பார்த்தேன். நான் அவனைப் பார்த்துச் சிரிக்கிறேன். அவனும் சிரிக்கிறான். அவன் எவ்வளவு அழகாய் இருந்தான் அப்போது. ஆனால் அவன் கைகுலுக்கியபடி சொன்னான்- நான் அழகாய் இருப்பதாக.

அப்போது நான் சொன்னேன்- மனிதரில் அழகற்றவர் இல்லை.

ஃஃஃ

எப்போது நிகழ்ந்தது இது ? என்னில் இந்த மாற்றங்கள் ? எப்போது என் படுக்கையில் பூக்கள் வந்தன ? எங்கிருந்து வந்தன ?

உலகம் துயரமானது என நினைத்திருந்தேன். இனித்த காபியின் அடிவண்டலாய்… மனசில் தங்குவது அதன் கசப்பே, என நினைத்திருந்தேன். நான் உயரம்தான். ஆனால் என் கூரைகள் தாழ்ந்தவை என நினைத்திருந்தேன். ஒரு விஷயம் நான் கவனிக்கவில்லை என ஒத்துக் கொள்கிறேன்… இதே கூரை என் மகனை இடிக்காது, என நான் உணரவில்லை.

நடந்தது இதுதான். அவன் ஆசிரியை அவன் திருப்திக்கு வாய்க்கவில்லை. அவன் கேள்விகளை அவனது ஆசிரியரால் சமாளிக்க முடியவில்லை. அவன் ஊக்குவிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் முரட்டுத்தனமாய் அந்த ஆசிரியரால் கலவரப் படுத்தப் படுகிறான். இப்படி சில சமயம் நிகழ்ந்து விடுகின்றன. பிரச்னைகள்… முட்டுக் கட்டைகள். இதற்கு என்ன செய்வது ? கதவுகள் அற்ற சுவரில் காயம் பட்டு நின்றான் அவன்.

நம்புங்கள் என்றாள் இவள்!

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, அவள் அன்னையை நம்பியது. அதெப்படி ?- என்றேன் நான். நம்புவதற்குக் கூலி உண்டா என்ன ? செயலுக்கே கூலி… அதுவே பொருள்முதல்வாதம், என்றேன்.

அவள் புன்னகைத்தாள். ஆமாம், சிரிக்கையில் அவள் அழகாய் இருந்தாள்.

முட்டுக்கட்டைகள் பெரியவை என்றால் வந்த வாய்ப்பும் பெரியது என்றல்லவா பொருள். பெறும் வெற்றிகளும் பெரியவை என்பதல்லவா பொருள் ?… அப்படியா என்கிறேன் நான் நெற்றியைத் தேய்த்தபடி. நான் எதிர்பாராதது அது.

அன்னை சொன்னது… என்றாள் அவள். நான் சட்டென்று திரும்பி அன்னையின் படத்தைப் பார்த்தேன். ஹா- அந்தச் சிரிப்பு. எளிய… ஆனால் விலைமதிக்க முடியாத சிரிப்பு அது. அவரவர் சிரிப்பு.

தீயவை… தீய பயத்தலால்… அவை தீயினும் அஞ்சப்படும் – என்பார் வள்ளுவர். நல்லவை நன்மை பயத்தலால் அவை செயலினும் ஓம்பப்படும். அழகான சிந்தனை. உள் வெளிச்சம்…

‘அப்படியா ? ‘ என்றேன் நான்.

அன்னையை நம்புங்கள் என்றாள் மனைவி. வேடிக்கையாய் இருந்தது.

புதுவைக்கு வைகறை இருளில் ஒரு பயணம்.

ஸ்ரீ அரவிந்தரின் சமாதி அலங்கரித்திருந்தது. அழகு கொட்டிக் கிடந்தது. அது என் முதல் பயணம். முதல் அனுபவம். அத்தனை பேர் இருந்தும் வளாகம் அமைதியாய் இருந்தது. வெளியே அமைதி. அது உள்ளமைதியை நிறுவுகிறது. கட்டமைக்கிறது. கைகூப்பியபடி நாங்கள் சமாதியை வளைய வருகிறோம். பூக்களையே இயற்கையையே வலம் வருகிறாப்போல ஒரு பிரமைத் திகட்டல். இயற்கையை இப்படி ஒன்றுகூட்டி வளைய வருதல்… எப்பெரும் கற்பனை! அரவிந்தரின் சந்நிதி. அப்படித்தான் எண்ணியிருந்தேன். எனக்கு அது முதல் அனுபவம். அருகில் இவள். கைகூப்பியபடி வலம் வருகிறாள். நான் தண்டுடைய தாமரை மலரை எடுத்துக்கொண்டு அவளுடன் பின்னே நடக்கிறேன். தாமரை மலர் என்றால் என்ன ? அவளது கூப்பிய கரங்கள் என்றால் என்ன ? பிரித்தறிய முடியவில்லை. நான் அவள் கூப்பிய கரங்களைப் பற்றியபடி வளைய வருகிறேன்…

உலகம் அமைதியாய் இருந்தது.

ஒரு கனவு. கனவல்ல- என்றாலும் அதை வேறெப்படிச் சொல்வது தெரியவில்லை. சரி- ஒரு கனவு.

ஸ்ரீ அரவிந்த வளாகத்தின் நல்வாசனைகளுடன் நான் உறங்கப் போயிருக்கிறேன். அது அரவிந்தர் சமாதியாக என் கவனம். நான் புதியவன். தளிர்வெளிச்சக் குளிர்காலை. எனக்குள்… மனம் ஓர சக்கரம் போல சிறு சலனம் காண்கிறது. என்ன இது ? சேதியொன்று வருகிறது என்கிறதாக சூட்சுமம் தயாராகிறது தன்னைப்போல. கப்பலில் சரக்கு வர கரையில் காத்திருப்பதைப் போல.

அந்த சமாதியின் பீடம் மிதப்பதை நான் கவனிக்கிறேன். பூக்களின் வாசனை என்னை எட்டுகிறது. மேலே பனித்துளிப் படுகையில் என்ன ஓர் ஆனந்த சயனம். ஆ பனித்துளி அல்ல. அது ஓர் உருவம். வெண்ணெய்ப்புகை. பூ. பனி. புகை .உயிரின் உடல் களைந்த – வலி களைந்த ஆனந்த நிலை. அடாடா, எனக்கு அது வாய்க்காதா ?

காட்சியில் ஒரு சலனம். அது ஒரு உருவம் என மனதில் பதிவு கண்டது. எப்படி என -ஐயோ- விளக்கத் தெரியவில்லை. வார்த்தைகள் விக்குகின்றன. அது ஓர் ஆனந்த நெகிழ்ச்சி.

நான் அன்னை…. என என்னைப் பார்த்து அந்த உருவம் சிரிக்கிறது.

அடடா, அந்தச் சிரிப்பு… அது எனக்குத் தெரியும். ஆமாம். நீங்கள் அன்னைதான், என்கிறேன் நான். கைகூப்பி அந்தக் கருணையுருவை வழிபடுகிறேன். அது அன்னையின் பீடம் என எனக்கு அதுவரை தெரியாது. இந்த அனுபவம்… இந்த அறிமுகம்… அது கனவா ? எப்படி அதைக் கனவென்பது ? நிஜத்தின் ஒரு துளித்தெறிப்பு அல்லவா ? கனவென எதனைச் சொல்வீர் ? கனவு என்றால்… உறக்கத்தின் பாற்பட்ட உணர்வுத்திவலை – ஏக்கத்தின் பித்தவெடிப்பு. அஃதல்ல இது. எனது கற்பனையிலும் அல்லாத ஒரு சேதிப் பகிர்வு- இது எப்படிக் கனவெனக் கொள்வது ?

அன்னையை நெஞ்சு சிலிர்க்க வணங்குகிறேன்- கருணைப் பெருங்கடலே, எத்தனை அன்பிருந்தால் நீயேவந்து என் மனசில் அமர்வாய். கண்கள் பனிக்கின்றன.

என்னால் ஆகாதது உன்னால் ஆகக் கடவது… நான் சேவகன். நீ என் சைதன்யம். நான் சாரதி. தேர்ப்பாகன். எனினும் நீ வழிநடத்து. என் வழித்தடை நீ நகர்த்து-. என் ஓட்டத்தை அமைத்துத்தா.

பிறுகு நடந்ததே… அதை விளக்க பகுத்தறிவுக்கேது பலம் ?

ஒரு நிஜம். அது கனவல்ல… நடந்ததால் அது நிஜமாகிறது.

என் மகனின் ஆசிரியருக்கு வந்ததே ஒரு கடிதம்- ஒரு விநாடிவினா நிகழ்ச்சிக்கு மாணவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பக்கோரி. அட அவர் மனதில் சட்டென்று வந்த உருவம் யார் ? வகுப்பில் சட்டுச் சட்டென்று எழுந்து கேள்வி தொடுக்கிற என் மகன் அல்லவா ? ஒரு தடைக்கல், படிக்கல் ஆனதை எப்படி விளக்க ?

அவன் வாழ்க்கையின் முன்னேற்றப் படிக்கல். மற்றவர் அவனை எடைபோடும் படிக்கல்.

விநாடிவினா நிகழ்ச்சியில் அவன் சிறு பரிசு பெற்றான். என்றாலும் புதிய எழுச்சி அவன் பெற்றதை ஊகிப்பது கடினம் அல்ல. பெரும் முட்டுக்கட்டைகள் மீறிய இணக்கச்சூழலை அன்னை உருவாக்கித் தந்தாள். அன்னைக்கு வணக்கம்.

தளராத தன்னம்பிக்கை. வேலையில் அமைதி. நேர்மையான உழைப்பு. மனஒழுங்கு சிதறாமை. அவை போதும். அன்னை துணையிருக்கிறாள். அறிவுக்கு ஆன்மிகம் உறுதுணை. குறுக்குச் சுவர் அல்ல அது. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம். மனம் – அதன் தட்பவெப்பம் சார்ந்த ஆரோக்கியத்தை ஆன்மிகம் கவனங் கொள்கிறது. தளரா நம்பிக்கை. அதன் வழிப்பட்ட உழைப்பு. கவனம் சிதறாமை. கடமை மாத்திரமேயான கண்ணோட்டம்.

ஆக்கம் தேடிவரும்.

நல்வாய்ப்புகள் வருவதை உணர அமைதி வேண்டியிருக்கிறது. காத்திருத்தல் வேண்டியிருக்கிறது. கவனம் சிதறாதபடி சிந்திக்கப் பழக, முடிவுகள் நோக்கி செயல்பட, தெளிவுபெற அமைதி இல்லாமல் எப்படி ?

பொருள்வாதம் ஒரு தத்துவம்.

ஆன்மிகம் ஓர் அனுபவம்.

ஆமாம். பொருள்வாத நாட்டின் தலைசிறந்த எழுத்தாளன்… தாஸ்த்தயேவ்ஸ்கி சொன்னான்- Beauty will save the world.

வாழ்கிறாள் அன்னை.

***

storysankar@rediffmail.com

T

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்