கதவாக நான்..

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

புதியமாதவி, மும்பை.


விழிகளின் அசதியில்
கண்மூடித் தூங்குகின்றாய்..
இதோ..
என் அருகாமையில்
இருந்தாலும்
என்னவோ நீ
எட்ட முடியாத தூரத்தில்.

சின்னக் குழந்தையாய்
உன்னுடம் சிரித்து
உன்னுடன் பேசி
உன்னுடன் விளையாண்டு
உன்னுடன் உண்டு
உன்னுடன் கதைப்பேச
காத்திருக்கின்றேன்
கதவருகில் நானும்
கதவாக…

எப்படி முடிகின்றது..
உன்னால் மட்டும்
என்னால் முடியாத
எல்லாமே
உன்னால் முடிகின்றது
இந்த முடிச்சு
அவிழும் வரை
மூச்சுத் திணறலில்
நான்..

எத்தனை காலங்கள்
இந்த நிமிடங்களுக்காக
என் விழிகள்
இமைக்காட்டில்
தவமிருந்தது..
இன்று
நித்திய வாழ்க்கை
கேட்க வந்தவன்
நித்திரை வாழ்க்கையில்
இளைப்பாறுகின்றான்..
இனம் புரியாத
வேதனையில்
என் இமைகள்
விழிகளைப் பிடுங்கி
வீசிவிட்டு
குருட்டுப்பார்வையுடன்
உன் பாதச்சுவடுகளைத்
தடவிக்கொண்டு..

ஏன் சந்தித்தோம் ?
கண்மூடி இளைப்பாறவா ?
ஏன் சந்தித்தோம் ?
இந்த நிமிடங்கள்
ஏன் வந்தது ?
எதுவுமே இல்லாத
சூனியம்
என் உறவு.
உன்னைத் தேடிவந்த
என் புறாக்கள்
உன்னைச் சந்திக்க
முடியாமலெயே
முட்டி மோதி
காயப்படுகின்றன.

பரவாயில்லை…
நீ இளைப்பாறும்
கிளைகளாக
என் வாசல்
உனக்காக
என்றும்
மயில்பீலியின்
விசிறிகளுடன்..

____

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை