கண்ணகி

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

பசுபதி


சென்னைக் கடற்கரைச் சாலையிலே — எங்குத்
. . தேடியும் உன்சிலை காணலையே !
சென்றதின் காரணம் சொல்லுவையோ — அந்தச்
. . சென்னைக்கு மீண்டும் திரும்புவையோ ? (1)

தண்டமிழ் நாட்டுத் தலைநகரில் — வீண்
. . தமிங்கிலம் பாய்ந்ததோ காதினிலே ?
எந்தையர் நாடெனும் போதினிலே — ஒரு
. . ஏக்கம் பிறந்ததோ மூச்சினிலே ? (2)

‘வார்த்த சிலைஅழ கானதடி ! — அபி
. . மான நடிகையின் சாயலடி ! ‘
பார்த்தவர் வம்பு பரப்புவதைக் — கேட்டுப்
. . பாவையுன் உள்ளம் பதறியதோ ? (3)

கற்பினைக் கற்காலக் கற்பனைதா(ன்) — என்று
. . கற்றவர் பேசல் கசந்ததுவோ ?
தற்கால ராப்பகல் மாதவியர் — பயில்
. . சல்லாப வாணிபம் சுட்டதுவோ ? (4)

குங்குப்பூ கற்றிடும் கோதையர்கள் — கற்புக்
. . கோட்டினைத் தாண்டிடும் கோவலரின்
கன்னத்தில் கைவைக்கும் கண்ணகியர் — தமைக்
. . கண்டஉன் உள்ளம் கலங்கியதோ ? (5)

போட்டே உடைத்திடு பொற்சிலம்பை ! – போய்ப்
. . பொறுக்கவும் சோதிடம் பார்த்திடுவார் !
நாட்டின் அரசியல் நாறுதடி ! –இந்த
. . ஞாலமே பார்த்து நகைக்குதடி ! (6)

சீட்டொன்று தந்தால் விமானத்திலே — என்றன்
. . தேசத்தில் தோன்றித் திகழ்குவையோ ?
தோட்டத்தில் வைத்திங்குத் தூள்கிளப்பி — செல்வத்
. . தோராண்டோ கண்ணகி ஆக்கிடுவேன் ! (7)

****
குங்குப்பூ = Kungfu; தோராண்டோ= Toronto.

Series Navigation

பசுபதி

பசுபதி