கணக்கு வாத்தியார்

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

வைத்தீஸ்வரன். சிவ


படிப்பு பத்திற்கு மேல் ஏறவில்லை என்ன வழக்கம்போல் கணக்குவாத்தியாரிடத்தில் தர்க்கம்தான். மனிசன் கன்னத்தில் நாலுக்காறு பளார் பளார் என்று போடுறது போதாதென்று கச்சேரி வேற ‘ ‘அப்பனுக்கு உதவியா போகத்தான் உங்களுக்கு லாயக்கு , ஏன் இஞ்சவந்து எங்கட உயிர எடுக்கிறியள்; ‘ ‘ அவர் அடிக்கடி சொல்லும் வசனங்களில் ஒண்று . தனக்கு வேண்டப்பட்ட மாணவர்கள் சிலருக்கு மட்டும் மாலை நேரத்திலும், காலை வகுப்புக்கள் ஆரம்பிக்க முன்னும் விசேட வகுப்புக்கள் நடத்துவார், மாதிரி வினாத்தாள்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்.அவர்தான் அப்படி என்றால் ஆங்கில ஆசிரியை அதற்கு மேல் ஒருபடி சென்று தன் வீட்டிலயே பிரத்தியோக வகுப்புக்கள் நடத்துவா. அதற்கும் எங்களுக்கு வாய்ப்பில்லை.

வீட்டு வேலைகள், வாத்தியார் மொழியில் ‘ அப்பனுக்கு உதவி ‘ என்று எல்லாம் செய்து முடித்துவிட்டு பேருந்து பிடித்து அரைமணி நேரப்பயணத்தின்பின் பள்ளிவந்து சேர அவரின் பிரத்தியோக வகுப்புக்கள் முடியும் தறுவாயில் இருக்கும். உள்ளேபோக நினைத்தால் ‘ ‘ அங்க நில்லுங்கோ நாய்களே ‘ ‘ அதற்கு மேல் ஒர் அடி எடுத்து வைத்தாலும் அவரே எங்களை பாய்ந்து குதறிவிடுவார் . மாலைவகுப்பு என நாம் நிற்க அன்று எதுவுமிராது , நாம் நில்லாது போக அன்று வகுப்பு நடைபெறும். மறுநாள் வரும் பொழுது ‘ ‘உங்களுக் கெல்லாம் படிக்கிற அக்கறை ஏன்,அதுதான் இருக்கெ பரம்பரைத்தொழில் ‘ ‘ அப்படியான ஒரு பள்ளிக்கூடநாளில் காலைப் பேருந்துக்காய் காத்திருந்தோம் எங்களைத்தாண்டிப் பேன ராணுவரக் ஒண்று பாலத்தடியில் வெடித்த குண்டில் சிதறிப்போனது. அதற்கு முன்னர் அப்படி ஒரு சத்தத்திற்கு எங்களின்காதுகள் பளக்கப்பட்டிருக்கவில்லை . கிணறுதோண்டும் போதும் கல்லுடைக்கும் பேதும் ‘டைனமட் ‘ வைச்சு வெடிக்கக் கேட்டிருக்கிறோம் ஆனாலும் இது அண்றுபூராவும் காதுக்குள் ‘கிண் ‘ என்று அதிர்ந்து கொண்டிருந்தது. அந்த பாலத்தடிக் குண்டு கணக்கு வாத்தியாரின் விசேடவகுப்புக்களுக்கு முடிவுகட்டினது மாத்திரம் அன்றி பள்ளிக்கூடத்தையும் அரைநாள் என்கிற வளமையாக்கிவிட்டது . மிகுதி அந்ரநாளில் எங்காவது சுற்றித்திரியலாம் என்று பார்த்தால் அதற்கும் ஆப்பு வைச்சமாதிரி ஊரடங்குச்சட்டம், அதை அமுல் படுத்தும்விதமாக ராணுவ வண்டி ஓடித்திரியும் பிறகென்ன வீட்டுச்சிறைதான்.

ஒரு நாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கையில் பச்சை ‘ஏசியாச் ‘சைக்கிளில்வந்த இருவர் அதிபரின் அலுவலகத்திற்குள் போய்விட்டு எங்கள் வகுப்பறையைக் கடந்து அடுத்த வகுப்பறைக்குள் சென்றனர் , வெள்ளைநிற யூரியா பையில் கேடாலியை சுற்றிவைத்திருப்பது போல் கையில் வைத்திருந்தனர். ஒருவன் கோடுகள் போட்ட சாரமும் அவனைமீறிய சட்டையும் அணிந்திருந்தான். இன்னொருவன் ‘ஜீன்ஸ் ‘சும் இளம்வர்ணச் சட்டையும், காலில் எங்களைப் போல பாட்டா ‘ ‘றபர் ‘ செருப்பும் அணிந்திருந்தனர். அடுத்த வகுப்பாசிரியர் எங்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தவருக்கு ஏதோசொல்ல எல்லா உயர்வகுப்பு மாணவர்களும் ஒண்று சேர்க்கப்பட்டோம்.

சைக்கிளில் வந்தவர்கள் எங்களுக்கு ஏதோ படம் நடத்தப்போவது போல் தோன்றியது. அதுவரை அவர்களை நான் கணித்தது வேறுமாதிரி ‘ பள்ளிக்கூடத்திருத்த வேலை செய்யவந்திருக்கும் கட்டுமானத் தொழிலாளிகள் ‘ என்று . ஆனால் பின்புதான் தெரிந்தது அவர்கள் திருத்தப் போவது பள்ளிக்கூடத்தை அல்ல என்று .

அழகாய் பாடம் நடத்தினார்கள் அரசியல் ஞானம் பொற்ற மாணவர்கள் சிலரின் கேள்விகளுக்கு தர்கபூர்வமாய் பதில் வளங்கினர். பாடப்புத்தகத்தில் அறியாத பல விசயங்களை சொன்னார்கள் . பாலத்தடி குண்டைப் பற்றி மற்றும் ராணுவநடவடிக்கைகள்- கேட்க கேட்க நல்லாக இருந்தது . உணர்வு பூர்வமான அவர்களின் பேச்சில் நாம் எல்லாம் உணர்ச்சிவசப்பட்டோம். இந்த நாட்டையே ரஷியா போல் மாற்றிவிடப்போவதாகச் சொன்னார்கள். எது மாறுதோ இல்லையே முதல்ல கணக்கு வாத்தியாரை மாற்றும் வழி என்னவென்பதே எமக்கு அப்போதுள்ள பிரச்சினை.

இறுதிப் பரிட்சைகள் நடந்து கொண்டிருந்தது. அன்று கணிதபாடம் , கணக்குவாத்தியாரால் கவனம் எடுத்து போதிக்கப்பட்ட மாணவர்கள் சமுகமளிக்கவில்லை என்பதைக்கண்டதும் அவருக்கு எல்லா விசயமும் புரிந்துவிட்டது. அவருக்குள் எரிந்து கெண்டிருந்த கோபாக்கினி எங்களைக்கண்டதும்அவரை உண்மையிலயே ஒரு வீரபத்திரர் ஆக்கிவிட்டது.

‘ ‘நீங்களும் ஏன் நாய்களே வாறியள் அவங்களோட போய் துலயலாமே, இந்தச் சோதினேல என்னத்தக் கிளிக்கப் போறியள் ‘ ‘ என்று பரிட்சை மண்டபம் அதிரும்படி கத்திவிட்டார். இந்தவருடத்தோட எங்களப்பிடிச்ச சனியனின் தொல்லை முடியுதென்று எம் பாட்டில் பரிட்சையெழுதிவிட்டு வந்துவிட்டோம். அந்தப் பரிட்சையோடு எம் பள்ளிக்கூட தொடர்பும் முடிந்துவிட்டது

பலவருடங்களுக்கு பின் ஒரு நள்ளிரவில் வானத்திலும் பூமியிலும் இருந்து நெருப்பைக்கக்கும் எறிகணைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. படையினர் முன்னேறிக் கொண்டிருப்பதாய் செய்திகள் பரவ, கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு வேறு இடம் நோக்கி ஊரெல்லாம் நகர்ந்தது. இந் நெருக்கடியில் பணவசதிப் பட்டவர்களும் படிப்பு வாய்க்கப் பெற்றவர்களும் வேளைக்கே ஊரைக்காலி பண்ணிக் கொண்டு வெள்ளைக்கார தேசத்திலும,; நாட்டின் தலைநகரத்திலும் குடியேறிவிட்டனர். வசதியிருந்தும் வயசான ஒரு சிலர் மனவுளைச்சலாலும் வேறு சில காரணங்களாலும் ‘ ‘.ஊரில் இருக்கும் சுடுகாடுதான் எங்களுக்கு நிரந்தரம ‘ என்னும் ஞானநிலை கெண்டிருந்தனர். இவர்கள் எதிர்பார்த்ததிற்கும் அதிகமாகவே வீட்டின் முற்றத்திலும் தெருவோரத்திலும் சுடுகாடுகள் தோன்றியிருந்தன. வேலிக்கதியாலும் வீட்டுக்கதவுகளும் நெஞ்சாங் கட்டைகளாகிவிட, கொள்ளி போடவும் சாம்பலள்ளிக் கொட்டி அந்தியொட்டி செய்யவும் இனசனசமில்லா நிலையில். குலத்தொழிலை நம்பி ஊரோடிருந்த நாங்கள் அவசரகாலத்தில் இலவசப் பணியென எல்லாக் கடமைகளையும் செய்துகொண்டிருந்தோம. இந்தக்கடமையில் எங்கள் கணக்கு வாத்தியாருக்குமானதை நாம் செய்யத்தவறவில்லை.

இரண்டு புத்திரர்களையும் எங்கள் கண் முன்னாலயே கணிதமேதைகளாக்கி கனடாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் தத்துக் கொடுத்துவிட்டு. தனது ஓய்வூதியப் பணத்தையும் நிலபுலங்களையும் விட்டுப்பிரிய மனமில்லாது ஊரோடு சீவியம் செய்துகொண்டு வந்தவரை வாத்தியார் மனைவி முடிந்தவரை வற்புறுத்தி பார்த்துவிட்டு கடைசியில் ஒரு பிள்ளையுடன் கனடா போய்ச்சேர தனித்துப்போனவருக்கு ஊர்க்கோவில் நிர்வாகப்பணியில் முக்கியமானபதவி. பதவிக்கு வந்த காலத்தில் இருந்து வெளிநாட்டார் நன்கொடைகளைக் கொண்டு திருப்பணிகளை திறம்பட செய்தார். அதேசமயம் ‘ ‘வாத்தியார் நல்லாச்சுருட்டுறார் ‘ ‘ என்கிற பெயரும் வந்தது. கோவிலில் யாராவது அகதிகள் வந்து குடியேறிவிட்டால் பார்த்துத் துரத்துவதில் படுகவனம். அன்றும் அப்படித்தான் பொன்னாலைக் கடலை கடந்து வந்த குடும்பங்கள் சில இருட்டிவிட குழந்தை குட்டிகளுடன் கோவில் மண்டபத்தில் அன்றய இரவைக் கழிக்கலாம் என்று தங்கினர் .மனுசனுக்கு காதுக்குள் எறும்பு நுழைந்தது போல் தெரிந்துவிட்டது அந்த இருட்டையும் பொருட்படுத்தாது ‘ ‘இஞ்ச உதுல தங்கிற எண்ணத்தவிட்டுப் போடுங்கோ. இது கோயில் , புனிதமான இடம் கண்டியளே! நீங்கள் இஞ்சின கிடந்துகூத்தடிக்க நவாலில கொண்டந்து அடிச்சமாதிரி இஞ்சயும் அடிச்சுப்போடுவாங்கள், உங் களால கடசில கோயிலும் அளிஞ்சுபோம்…. ‘ ‘ தங்க நினைத்தவர்களுக்கு வாத்தியாரின் பேச்சு வெறும் நாக்கில் பச்சைமிளகாயைக் கடித்தமாதிரி இருந்திருக்க வேண்டும். ஒரு வார்தையும் பேசாது உடனேயே நடையக்கட்டி விட்டார்கள்.

அவர்களுக்கு நல்லகாலம் நடந்து கொண்டிருந்ததுது போலும், வாத்தியாருக்கு அது இல்லை. அவர்களை அனுப்பிவிட்டு தேங்காய் எண்ணை விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் தெரியும் கோவில் மண்டபத்தை கீழிருந்து மோல் நோக்கி ஒரு பார்வையிட்டார். சுவரின் மேல்தளத்தில் ஒருகாலை தொங்கப் போட்டு மறுகாலை மடித்து வீற்றிருக்கும் பிள்ளையார். அவரின் முன்னால் இருக்கும் பழத்தட்டை ருசிக்கத்துடிக்கும் ஒரு சுண்டெலி , பாசம் அங்குசம் ஒடித்த கொம்பு எனமூன்று கரங்களிலும.; துதிக்கையில் மோதகம், மறுகரத்தால் சகலருக்கும் அபயமளிப்பது போன்ற தோற்றத்தில் தனது பார்வயை குத்தி நிறுத்தினார் வாத்தியார். திடாரென ஏதோ நினைத்தவர் போல் மண்டபத்தை விட்டு வெளியேவந்தார்.; தலைக்கு மேலே தாரகைகள் பூத்திருக்கும் வானம் விரிந்து கிடந்தது அதிலிருக்கும் ஒண்று இறங்கி வருவது போல் ஓரு சுடர் கிட்டவரவர அதுமேலும் பிரகாசித்தது எல்லாம் ஒரு நெடியில் அவர் மூளைக்குத் தெரிந்துவிட்டாலும் அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயற்படமுடியாது அதனிடம் தோற்றுவிழுந்தார்.

vsivasubramaniyaiyer@yahoo.com.au

Series Navigation

வைத்தீஸ்வரன். சிவ

வைத்தீஸ்வரன். சிவ