கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

ஆசாரகீனன்


சென்ற வார திண்ணையில் ஆஸ்ரா நொமானி எழுதி, சமீபத்தில் வெளிவந்துள்ள ‘தன்னம் தனியாய் மெக்காவில் ‘ (Standing Alone in Mecca) என்ற புத்தகம் பற்றியும், அதன் தொடர்ச்சியாய் நியூயார்க் நகரில் நடக்க இருக்கும் பெண்கள் தலைமையிலான இஸ்லாமிய தொழுகை பற்றியும் எழுதியிருந்தேன்.

பேராசிரியர் முனைவர் அமினா வதூதின் தலைமையில் நியூயார்க் நகர மசூதி ஒன்றில் இந்த தொழுகையை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பு, பெண்கள் விரோத இடதுசாரி பல-பண்பாட்டிய வாதிகளின் அவதூறு பிரச்சாரம், மசூதிகளின் நிர்வாகக் குழுக்களில் நிலவும் ஆணாதிக்கப் போக்கு போன்ற காரணங்களால் பெண்கள் தலைமையிலான இந்த வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையை நியூயார்க் நகர மசூதி ஒன்றில் நடத்த முடியவில்லை.

(பல-பண்பாட்டு வாதம் அல்லது பன்முகப்-பண்பாட்டு வாதம் என்பது எந்தெந்த விதங்களில் பெண்களுக்கு எதிரானது என்பதை விளக்கும் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. Susan Moller Okin, Joshua Cohen, Matthew Howard, Martha C. Nussbaum – ஆகிய நவீன பெண்ணிய அறிஞர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த ஒரு புத்தகத்தின் தலைப்பு: Is Multiculturalism Bad for Women ? – இது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வெளியீடு. மற்றொரு புத்தகம் Brian Barry எழுதிய Culture and Equality: An Egalitarian Critique of Multiculturalism – இது ஹார்வர்டு பல்கலைக்கழக வெளியீடு.)

எனவே, இந்தத் தொழுகையும் பிற நிகழ்ச்சிகளும் நியூயார்க் மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந்தரம் தாகூர் கலையரங்கத்தில் வரும் மார்ச் 18 அன்று மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சி பற்றிய பிற விவரங்களுக்குப் பார்க்க: முஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பு

நியூயார்க் நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் தமிழர்கள் – மத/கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்கும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி வேண்டுகிறேன்.

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்