கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

பொ. கருணாகரமூர்த்தி. பெர்லின்


அந்தக் கதையை நான் முன்னரே காலச்சுவட்டில் படித்திருந்தேன். மல்லிக்குட்டி என்ற பெண் சிறுமியாக இருந்தபோது அவள்மேல் பிரயோகிக்கப்படும் விலங்குத்தனமான அருவருக்கக்கூடிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக அவளால் ஒன்றுமே செய்யமுடியாமல் போகிறது.

லண்டன்மாமா சில சொக்களேற்றுக்களையும் , விளையாட்டுப்பொருட்களையும் , சட்டைகளையும் பரிசாக மல்லிகுட்டிக்குக்கொடுத்துவிட்டு அவள் உடம்பெல்லாம் மேய்வது கடைந்தெடுத்த ஒரு அயோக்கியத்தனம். ஒரு இதயமற்ற காமுகனிடம் ஒரு அப்பாவிப்பேதை பெதும்பைப்பருவத்தில் இருக்கக்கூடிய குழந்தையொன்று அகப்பட நேர்ந்தால் என்னவென்ன இம்சைகளயெல்லாம் தாங்கிகொள்ள நேருமோ அத்தனையையும் இயல்பாகவே வார்த்தை வயப்படுத்தியிருப்பதைக் காண்கையில் கண்கள் நிறைவதைத் தவிர்க்கமுடியவில்லை. அந்தமல்லிக்குட்டியைத் தூக்கிவைத்து அவள்விரும்பாத , மறக்க விரும்பும் அத்தனை துர்நினைவுகளையும் கழுவிச்செல்லவல்ல ஒரு மந்திரத்தைலத்தால் குளிப்பாட்டவேண்டும் போல இருக்கிறது.

அவள் ஒருதரம் கண்ட சூட்டின் தகிப்பு முதலில் அம்மாவையும்; பின்னால் மைத்துனன் நேசன்மேல்கூட சந்தேகத்தை வரவழைக்கிறது. இந்நிகழ்வுகள் எல்லாமே வாஸ்த்தவந்தான். நரகலை மிதித்ததுபோல் மறக்கவுமொண்ணாது, யாருக்கும்கூறவும் முடியாது உள்தகித்துத்துன்பம் தரவல்ல துர்அனுவங்கள், ரணங்கள் சிலருக்கு வாழ்வில் ஏற்படவேசெய்கின்றன.

மனிதர்களின் (வேண்டுமானால் ஆண்களின்) மொத்த உலகமும் கயமையே உருவானதல்ல. கயமை ஒரு பின்னந்தான். ஒரு மைனோரிட்டி வீதம். மீதமுள்ள உலகத்தில் அறம் பற்றிய நோக்கும், தேடலும், விசாரமுமுள்ள நல்ல மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். இன்னும் எங்களை புரிதலை மேலே உயர்த்திக்கொண்டு மேலிருந்து பார்க்கையில் மானுஷனுடைய எல்லா இழிமைகளையும், கயமைகளையும் மன்னிக்கும் மகாபக்குவம் வாய்க்கும்.

மல்லிகுட்டிக்கு வளர்ந்தபின்னாலும் அந்தமாமாவின் செயலையிட்டு அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போனாலும் அவரின் அவலமான திடார் மரணம் அவளைக் கண்கலங்க வைக்கிறது.

லண்டன்மாமாவிடம் காமாந்தரத்தை நீக்கிவிட்டுப்பார்த்தால் நல்ல மனிதன்தான். ராவணனை வீழ்த்தி அழித்த காமம் இந்த மாமாவை ரொம்பச் சின்னமனிதனாக்குகிறது. காமத்தை வெல்லமுடியாத பலஹீீனனாக இருக்கிறார். தனது காமாந்தர கிரியைகளை நியாயப்படுத்த அவரிடம் குருட்டாம்போக்கான ஒரு நியாயம் இருந்திருக்கலாம். மல்லி சின்னப்பெண்தானே அவளுக்கு எதுவும் பாதிப்பில்லை என்று முட்டாள் தனமாக நினைத்திருக்கலாம்.

Jeffrey Archer போன்றவர்கள் தம் நாவல்களில் ஓரளவுக்கு கிறிமினல்களின் உலகத்தை ‘அவர்களின் உளவியலுடன் ‘ விரித்திருப்பார்கள். இங்கே மாமாவின் மறுபக்கம் கொஞ்சமும் காட்டப்படவில்லை. சில படுபாதகங்களைச் செய்தவர்கள்மீதுகூட எமது புரிதல் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் எம் ஆழ்மனதில் அவர்கள்பால் கழிவிரக்கம் காருண்யம் பிறக்கும்.

லண்டன்மாமா வயசாகிக் கிழவராகி தடதடத்துக்கொண்டுபோகையில் மல்லிக்குட்டி அவரைஎதிர்கொள்ள நேர்ந்தால் அவரைப்பார்த்து அவளுக்குச் சிரிப்புக்கூடவரலாம். கவனிப்பார் எவருமற்று ஒரு அநாதையாகிவிடுகிறாரென்றால் அவளாய் அவருக்கு ஒருகை சோறுகூட ஊட்டிவிட நேரலாம்!

காலம் அந்த பக்குவத்தை நிச்சயம் ஒருவருக்கு அளிக்கும்.

லண்டன் மாமா சந்தேகமேயில்லாமல் தண்டனைக்குரியவர்தான். ஆனால் படைப்புள் ஒரு குரூரமான இறப்பை அவருக்கு வழங்குவதிலிருந்து அவர் மரணம் ஒருவகையில் படைப்பாளினியால் நியாயப்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது. இதுவும் மிகக் குறைந்த வீதத்திலாயினும் ஒருவகைக் குரூரந்தான். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்றாவது எம்மை நிச்சயம் கற்காலத்துக்கே இட்டுச்செல்வது. தார்மீகம் , மானுஷீகம் என்ற நாகரீகங்களைக் கேலி செய்வது.

மிகை வார்த்தைகளின்றி செட்டாக அழகாகவே பின்னப்படுள்ள கதையின் அழகியல்; அது அறைந்து சொல்லும் சேதி ; பிள்ளைகள் பற்றி நமக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி; இவற்றோடுகூடவே மாமாவுக்குத்தரப்படும் அதிகபட்ஷத்தண்டனை மென்மனதுள்ள வாசகரைச் சற்றே உறுத்தலாம். ஓடியதடத்தில் ஓடிக்கொண்டிருப்பவரிடயே சுமதி ரூபனின் இந்தப்பாய்ச்சல் உற்சாகப்படுத்தவே வேண்டியது.

பொ. கருணாகரமூர்த்தி. பெர்லின்

Series Navigation

பொ கருணாகர மூர்த்தி

பொ கருணாகர மூர்த்தி