கடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அன்புக்குரிய திரு ஷேக் அஹமது யாசீன் அவர்களுக்கும் அவரைப் பொன்றே என் கட்டுரையைத் தப்பாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஏனைய இஸ்லாமிய அன்பர்களுக்கும் மிருந்த வனக்கத்துடன் எழுதப்படும் இக்கடிதக் கட்டுரை ஒரு தன்னிலை விளக்கமாகும். நினைக்கிற யாவற்றையும் எழுத இயலாத போது சுருக்கமாக எழுதப் படும் கட்டுரைகள் தப்பாகப் புரிந்துகொள்ளப் படுவதற்கான சாத்தியங்கள் உண்டுதான்.

சகோதரரே! திண்ணையில் உங்கள் கடிதம் கண்டு ஆறத் துயரும் வேதனையும் அடைந்தேன். என்னைத் தவறாகப் புரிந்துகொண்டமைக்காக.

1. பாப்ரி மஸ்ஜிதை இந்து வெறியர்கள் இடித்தது தவறு என்று என் கட்டுரையில் கூறியுள்ளேன்.

2. ராமர் பிறந்த இடமாகவே இருந்தாலும், அங்கே மசூதியைக் கட்ட இந்துக்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன். (ராமரைக் கடவுளின் அவதாரம் என்று நம்புகிற – கடவுள் எங்கும் நிறைந்தவர் என்று கூறுகிற – இவர்களது நம்பிக்கை உண்மையாயின் ராமருக்குக் கோவிலை எங்கே கட்டினால் என்ன ? இதுவே எனது கூற்றின் பொருள். இதுவே இந்துத்துவமும் ஆகும்.)

3. பாப்ரி மஸ்ஜிதை இடித்தது தவறு என்று இந்து முதலாளிகளின் பத்திரிகைகளே தலையங்கம் எழுதிய நியாய உணர்வைப் பாராட்டியும் உள்ளேன்.

மதவெறிவெறி பிடித்த ஓர் இந்து இவ்வாறு சொல்லுவாளா ?

இரு தரப்பினரையும் சிந்திக்கச் செய்வதற்காகவே அக்கட்டுரை எழுதப்பட்டது. நான் ஓர் இந்துவாகப் பிறந்து (தொலைத்து)ள்ளதால், என் மீது உங்களுக்குச் சந்தேகம் எழுகிறது. என் கட்டுரையை அன்பு கூர்ந்து மறுபடியும் நிதானமாய்ப் படிக்க வேண்டுகிறேன்.

இந்துக்களில் வெறியர்கள் அண்மைக் காலமாய்த் தலை தூக்கியுள்ளது மிகவும் வருந்தத்தக்கதே. பழைய நாளில் அவர்களும் வெறித்தனத்தால் கொலைகள் செய்துள்ளனர்தான். யார் இல்லை என்றார்கள் ? ஆனால், பிற மதத்தவரின் வெறிச் செயல்களுடன் ஒப்பிடுகையில், இந்துக்கள் பரவாயில்லை என்னும் உண்மையைச் சொல்லாமல் ஒளிந்து ஓடத் தயாராக இல்லை. நீங்களே மறைமுகமாய்ச் சொன்னது போல், இந்துக்கள் கோழைகளே! இரத்தம் சிந்த அஞ்சிப் பின்வாங்குகிறவர்களே. நீங்களே சொன்னது போல், அதனால்தான் சோமநாதர் ஆலையம் அத்தனை முறை தாக்கப்பட்டது. ஆனால், அதே காரணத்தால்தான் இந்தியா இன்று ஓர் அழகான கதம்பமாலையாக – பல்வேறு மதத்தினரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக வாழ ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட – நாடாகத் திகழ்கிறது.

இந்து – முஸ்லிம் ஒற்றுமையின்மை தலைதூக்கத் தொடங்கியது வெள்ளைக்காரன் இங்கு வந்து சேர்ந்த பின்னர் அவனது நரித்தனத்தால் தானே ? அவன் வருவதற்கு முன்னால் இந்தியாவில் மதக் கலவரங்கள் இருந்தனவா ? (முஸ்லிம் மன்னர்கள் ஆண்டபோது இந்தியாவில் பஞ்சம் ஏற்படவே இல்லையே! முஸ்லிம் மன்னர்கள் அன்னியராயினும் இங்கு வந்து மக்களை ஆளத் தொடங்கிய பின்னர் அவர்களை நேசித்தவர்களல்லவா ? இதை எனது “மணிக்கொடி” எனும் வரலாற்று நாவலில் நான் கூறியுள்ளேன்.)

இப்போது அந்தப் பிரிக்கும் “பணி”யை இந்துத்துவத்தைத் தப்பாகப் புரிந்துகொண்டு விளக்கவும் செய்யும் “இந்துத்வா” அரசியல்வாதிகள் செய்யத் தொடங்கியுள்ளனர். நண்பரே! என்னைக் குறுகிய இன, மத, மொழிப் பற்றுகளோடு இணைத்துப் பார்த்துச் சந்தேகப்படாதீர்கள்.

மதங்கள் சொன்னவை ஒன்று; மக்கள் “மதம்” பிடித்துச்செய்வதோ முற்றும் வேறு. எல்லா மதங்களுமே அன்பைத்தானே போதிக்கின்றன ? வலியுறுத்துகின்றன ? இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழும் நாட்டுக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கவேண்டியதில்லை என்று திருக்குரான் கூறுவதாய் ஒரு பெரியவர் சொன்னது சரியாக இருக்காது என்றுதானே நாம் சொன்னோம் ? தீண்டாமையை நியாயப் படுத்த மத நூல்களில் இடைச்செருகல் செய்து வஞ்சித்த பிராமணர்களைப் போல், எல்லா மதங்களிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் போலும்! உண்மை அதுவாக இராது என்று நான் அனுமானித்தது சரிதானே ? (அந்தப் பெரியவர் பெயர் “லெப்பை” என்று முடியும். முழுப்பெயர் ஞாபகமில்லை. பெரியவர் என்று நான் சொன்னது அவரது கையெழுத்தை வைத்து மட்டுமே. அது தவறாகவும் இருக்கலாம்.)

சுவாமி விவேகனந்தர் “இஸ்லாம் ஒரு முழுமையான மதம்” (Islam is a perfect religion) என்று புகழ்ந்துள்ளார். பிற மதச் சிறப்புகளை இவ்வாறு போற்றுகிறவர்கள் இந்துக்களில் உள்ள அளவுக்குப் பிறரிடம் இல்லை என்னும் உண்மையை, என்மீது நீங்கள் சந்தேகப்படுவீர்கள் என்பதற்காக நான் சொல்லாதிருக்க முடியாது. உண்மைகளைச் சொல்லுவது மட்டுமே எனது நோக்கமே யன்றிச் சிண்டு முடிவதன்று. தொலைக்காட்சித் தொடர் மகாபாரதத்துக்குத் திரைக் கதை, வசனம் அமைத்தவர் ஓர் இஸ்லாமியர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் பேழைகளாக்கியவர் ஒரு கிறிஸ்துவர். இப்படி நாம் வாழ்ந்தால் உலகில் நம்மை மிஞ்ச யாராலும் முடியாது.

இரு தரப்பினருக்கும் சிண்டு முடிகிறவர்கள் சுய ஆதாயத்தை நோக்கமாய்க் கொண்ட – மக்கள் நேயமே இல்லாத – அரசியல், மத வெறியர்களே. இத்தகையோர் எல்லா மதங்களிலும் உள்ளனர். (நம்மைப் போன்ற பொதுமக்களில் அன்று. ) இவர்களை இனங்கண்டு இவர்களது தவறான தூண்டுதலுக்கு இரையாகாமல், இவர்களை ஒதுக்குவதில் அனைத்து இனத்தவரும் ஒருங்கிணைந்தால், நாம் எல்லாருமே காப்பாற்றப்படுவோம்.

சிறுபான்மையினர் என்பதால், அவர்கள் மீது பெரும்பான்மையினர் தங்கள் கருத்தைத் திணிக்கத் தாங்கள் உரிமை பெற்றவர்கள் என்று நினைத்தால், அது மாபெருந்தவறாகும். மகாத்மா காந்தி இதை மிகத் தெளிவாய்க் கூறியுள்ளார்.

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஜாதி உணர்வோ, மதப் பற்றோ நமக்கு அறவே கிடையாது என்பது நாம் நமது எழுதுகோலின் மீது ஆணையிட்டுச் சொல்லும் உண்மையாகும். இந்து மதத்தில், அதன் “மேட்டுக்குடி”யில் பிறந்து(தொலைத்து)ள்ளமைக்காகக் கூனிக் குறுகி வெட்கப் பட்டுக்கொண்டிருக்கும் என்னைத் தயவு செய்து குறுகிய இன, சாதி பற்றாளர்களின் பட்டியலில் சேர்த்துவிடாதீர்கள், சகோதரரே!

ஒருகால், இந்துக்களின் தவறுகளை மட்டும் நான் பட்டியலிட்டிருந்தால், நீங்கள் என்மீது சினம் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், இரு தரப்பினரிடமும் உள்ள – இருந்த – கெட்டவைகளில் சிலவற்றை நான் சொன்னது எனது சார்பற்ற (unbiased) நிலையை இரு தரப்பினர்க்கும் உணர்த்தியிருக்க வேண்டும். அவ்வாறு இன்றி, என் மீது அடாத பழி சுமத்துதல் நியாயம்தானா நண்பரே ? இப்போது எனக்கு இரு புறமும் இடி.

இதை விடவும் நீண்ட கடிதம் எழுதிச் உங்களைத் தொல்லைப் படுத்த எனக்கு விருப்பமும் இல்லை, அதற்கு ஏற்ற உடல்நலமும் இல்லை. எனவே, விடுபட்டுப் போன விஷயங்களுக்காக மன்னியுங்கள்.

முடிந்தால் “சங்கமம்” மின் இதழில் மார்ச் மாதம் வெளியான எனது “அடைக்கலம்” எனும் கதையையும், திண்ணையில் வெளியான “இராமன் அவதரித்த நாட்டில்” எனும் கதையையும் (இது பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னர் எழுதியது) படிக்க வேண்டுகிறேன்.

சரவணா ஸ்டோர்ஸ் வார இதழ் என்று சென்னையில் ஒரு பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. அதில் “இந்துத்துவம் என்பது” என்கிற தலைப்பில் நான் ஒரு சிறுகதை எழுதி யிருந்தேன். அக் கதையின் ஓர் உரையாடலில் ஒரு பாத்திரம், “இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள்” என்று கூறுவதாக, அதன் ஆசிரியர் நான் எழுதாத வாக்கியம் ஒன்றை இடைச் செருகல் செய்துவிட்டர். அதைக் கண்டு பதறிப்போன நான் அதற்கு வருந்தித் திருத்தம் வெளியிடக் கோரி ஆசிரியருக்கு உடனே தந்தியும் பதில் அஞ்சலும் அனுப்பினேன். (அந்தத் தந்தியை அனுப்பி எனக்கு உதவியவர் எழுத்தாளர் ஷங்கரநாராயணன்.) ஆனால், அதன் ஆசிரியர் அதைச் சட்டை செய்யவில்லை. எனவே அவர் அனுப்பிய சன்மானக் காசோலையை அவருக்கே திருப்பியனுப்பினேன். அந்த வாக்கியத்தைப் படித்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் எனும் ஆதங்கத்தால், நடந்தது இன்னதென்பதைத் தெரிவித்து என் இலக்கிய உலக நண்பர்கள், இதர பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோருக்கு விரிவான கடிதம் அனுப்பினேன். என் கடிதத்தைச் செம்மலர் (மதுரை) மட்டுமே வெளியிட்டது. கல்கண்டு லேனா தமிழ்வாணன் என்னோடு தொலைபேசி ஆறுதல் கூறினார். (மற்ற எழுத்தாள நண்பர்களும்தான் – சிதம்பரத்திலிருந்து ஆர்னிகா நாசர், கோயம்புத்தூரிலிருந்து ராஜேஷ்குமார், சென்னையில் படுதலம் சுகுமாரன் ஆகியோர் என்னுடன் தொலைபேசி ஆறுதல் கூறினர்.)

உங்களுக்கு இன்னும் ஒன்று சொல்லட்டுமா, நண்பரே ? கிறிஸ்துவர்கள் தங்கள் மதத்தை பரப்புவது பற்றி யாருக்கும் ஆட்சேபணை கிடையாது. தாராளமாய்ச் செய்யட்டும். பிற மதத்தவரைப் பாவிகளே என்று விளிக்காமல் அதைச் செய்யட்டும். இந்த இடத்தில், “இன்னும் வேண்டும் அன்னை தெரசாக்கள்” என்று நான் எழுதி வெளியான சிறு கட்டுரை பற்றிய நினைப்பும் வருகிறது. அது மட்டுமா ? என் கண்களுக்கு ஒரு தேவதை போல் தெரியும் அன்னை தெரசா அவர்களை, “அவர் ஒரு சூனியக்காரியப் போல இருக்கிறார்” என்று இழிந்துரைத்த இந்து வெறியரின் சொற்களும் கூட ஞாபகம் வருகின்றன.

நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ள THE STORY OF JESUS CHRIST (in 918 rhyming couplets) POET எனும் இதழில் வந்துகொண்டிருக்கிறது. அடுத்த மாதம் முடிவடைகிறது.

அடுத்து, வணக்கத்துக்குரிய முகம்மது நபி (சல்) அவர்களின் பொன்மொழிகளில் நான் தேர்ந்துடுத்த 130 பொன்மொழிகள் (in rhymes – in English) மிக விரைவில் அதே இதழில் தொடராக வெளிவர உள்ளன. (இந்துக்களின் ராமகிருஷ்ன மடம் வெளியிட்டுள்ள (Thus spake Prophet Muhammad எனும்) ஆங்கிலக் கையடக்க நூலிலிருந்து எடுத்த பொன்மொழிகள் அவை. )

அதே போல், திருக்குரானையும் ஆங்கிலத்தில் rhyming poems ஆக நான் எழுத எண்ணியுள்ளேன். என் விருப்பம் அறிந்த, சென்னையின் “விடியல் வெள்ளி” (முஸ்லிம்களின் மாத இதழ்) ஆசிரியர் மிகப் பெரிய (authentic edition) திருக்குரான் நூல் ஒன்றை எனக்குச் சில நாள் முன்பு பரிசாய்க் கொடுத்து அனுபினார். இன்னும் நான் அந்தப் பணியைத் தொடங்கவில்லை. இது ஆங்கிலத்தில் உள்ள நூல். எங்கள் குடும்ப நண்பர் அக்பர் பாஷா ஒரு தமிழ் நூல் தந்து உதவியுள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நல்லவை, கெட்டவைகளைச் சொல்லிச் சிந்திக்கச் செய்வதே எமது நோக்கமாகும். சுருக்கமாய்ச் சொன்னால், எண்ணங்களின் பகிர்தல் மட்டுமே நமது நோக்கம். நீங்கள் என்னைத் தப்பாகப் புரிந்துகொண்டதால், தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கொஞ்சம் அதிகப்படியாகவே சுயபுராணம் பாடிவிட்டேனோ என்று அஞ்சுகிறேன். அப்படியாயின், மன்னியுங்கள், சகோதரரே!

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா