கடிதம் ஜனவரி 6,2005 – சுகுமாரனின் சுகமான எழுத்து

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

பி கே சிவகுமார்


நாம் சொல்ல நினைக்கிற விஷயங்கள் பலவற்றைச் சொல்ல முடியாமல் போவது உண்டு. சொல்வதற்கேற்ற சரியான வார்த்தைகள் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணம். எப்படிச் சொல்வது என்று தெரியாமல் இருக்கிற குழப்பம் ஒரு காரணம். எப்படிச் சொன்னாலும், நினைத்தது வார்த்தையில் வராது என்ற அவநம்பிக்கை ஒரு காரணம். சொல்லுவதைப் பிறர்க்குப் புரியும்படியும், பிறர் சட்டென்று ‘அட, ஆமாம் ‘ என்று உணரும்படியும் சொல்லமுடியுமா என்ற கேள்வி ஒரு காரணம். இப்படிப் பல காரணங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். முக்கியமாய், எழுதாமல் வாசிக்கவே மட்டும் செய்கிற வாசகர், பிறர் எழுத்தில் தன்னைத் தேடும் முகமாகவும் வாசிக்கிறார் என்று சொல்லலாம்.

நமக்கு மிகவும் நெருக்கமான அல்லது நம் உணர்வுகளுடனும் எண்ணங்களுடனும் ஒன்றிப்போகிற எழுத்தைப் படிக்க நேர்கிற வாசகர், அந்தக் கணம், மனதிற்குள், ‘ஆஹா, எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறார் ‘ என்று ஒருகணம் வியக்கிறார். அந்தக் கணமே எழுத்தாளரின் வெற்றியாகிறது.

சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி என்ற கட்டுரையில் சுகுமாரன் எழுதியிருந்த ‘அறிவுத்தளத்தில் ஆவேசமாக இயங்குகிற பெரும் மூளைகள் பொதுவாக எனக்குள் ஒருவிதமான ஒவ்வாமையைப் பரவ விடுவதை உணர்ந்திருக்கிறேன். தர்க்கத்தின் அறுவை மேசை மீது வாழ்க்கையைக் கூறுபோட்டு ஆராய்வதில் எனது நுண்ணுணர்வு ஆயாசத்தையே அனுபவித்திருக்கிறது. சார்த்தர் முதல் தெரிதா வரையான சிக்கலான ஆளுமைகளை அறிமுகம் கொண்டதும் மானசீகமாகப் பல காதங்கள் விலகி ஓடியதுமுண்டு. மனசிலிருந்து கரங்களை விரித்து வரவேற்றுத் தழுவிக்கொண்ட சில ஆளுமைகளில் ஒன்றாக சூசன் சாண்டாகை அவரது எழுத்துக்கள் மூலம் ஏற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. கலைப்படைப்பை அலகு பிரித்து விளக்குகிற சிந்தனையாளராக அவர் இருக்கவில்லை என்பது இந்த மன இசைவுக்குக் காரணமாக இருக்கலாம். ‘ஒரு கலைப்படைப்பு என்பது இந்த உலகத்திலுள்ள ஒரு பொருள். அது வெறும் பிரதியோ உலகைப் பற்றிய விளக்கவுரையோ அல்ல ‘ என்ற அவரது நிலைப்பாடு எனது சிந்தனைப் போக்குக்கு சவுகரியமானதாகவே தொடர்ந்து வந்திருக்கிறது. ‘ என்ற வரிகளைப் படித்தபோது, ‘ஆஹா, எவ்வளவு சுருக்கமாகவும் அற்புதமாகவும் சொல்லியிருக்கிறார் ‘ என்று வியந்தேன். சொல்லத் தெரியாமல் நெஞ்சில் அடைத்துக் கொண்டிருந்த ஓர் உணர்வை, இப்படி லகுவாகவும் அனாவசியமாகவும் தன் எழுத்தில் வெளிக்கொணர்ந்த சுகுமாரனின் எழுத்துத் திறமைமீது பொறாமையாக இருக்கிறது.

நல்ல எழுத்துகள் தருகிற அனுபவங்கள் எவ்வளவு சுகமாக இருக்கும் என்பதைச் சுகுமாரனின் கட்டுரையில் உணர்ந்தேன். அவருக்கு நன்றிகள். அவர் எழுத்துகளைச் சமீபகாலமாகவே நான் திண்ணை மூலம் வாசிக்கிறேன். அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்.

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்