கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

மலர்மன்னன்


அயோத்திதாசருக்கு இணையாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீ கே. ரவி ஸ்ரீ னிவாஸ் எனது காந்திஜி கொலை பற்றி எழுதிய கட்டுரை குறித்து எழுதிய கடிதம் படித்தேன். ஸ்ரீ கற்பக விநாயகம் எனது முந்தைய கட்டுரைக்கு மறுப்புத் தெரிவிக்கும் முகமாக காந்திஜி கொலை பற்றிக் குறிப்பிட்டதால்தான் அதுபற்றி அதிகம் அறியப்படாத மறுபக்கத்தை எழுதவேண்டியதாயிற்றே தவிர, 1948க்குப் பிறகும் காந்திஜி எமக்குத் தொந்தரவாக இருப்பதால் அல்ல (காந்திஜியின் பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாக ஆதரிப்பவன் நான்). இதேபோலத்தான் ராஜாஜியின் ஆதாரக் கல்வித் திட்டம், கம்யூனல்

ஜி ஓ ஆகியவை குறித்தும் விளக்கக் கட்டுரைகள் எழுதவேண்டியதாயிற்று. மற்றபடி முன்கூட்டியே திட்டமிட்டு இக்கட்டுரைகள் எழுதப்படவில்லை. உண்மையில், கோபால் ராஜாராம், வெங்கட் சாமிநாதன் முதலானவர்கள் விரும்பிய பிரகாரம் நான் எழுததிட்டமிட்டிருந்த கட்டமைப்பே வேறு. எனது பத்திரிகைப் பணி, இலக்கிய முயற்சியும் ஈடுபாடும், நான் நெருங்கிப் பழகிய அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் என்ற கோணங்களில்தான் எழுதுவதாக இருந்தேன். ஆனால் எதிர்வினையாக வந்த கருத்துகளுக்கு விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படவே திசைமாறிப் போகவேண்டியதாயிற்று.

எனக்கென்று ஒரு சார்பு இருப்பதை நான் என்றுமே மறுத்ததில்லை. ஏதும் சொந்த லாபம் கருதியும் நான் ஒரு சார்புடையவனாயிருந்ததில்லை. ஆனால் நிகழ்வுகளைப் பதிவு செய்கையில் எனது சார்பு நிலை அதில் செல்வாக்குப்பெற இடமளித்ததில்லை. ஆங்கிலத்தில் ‘எத்திக்ஸ் ‘ என்று சொல்லப்படும் ஒழுக்க விதிகள் டாக்டகள், நீதிபதிகள், சபா நாயகர்கள் ஆகியோருக்கு உள்ளதுபோலவே பத்திரிகையாளருக்கும் உண்டு. அத்தகைய ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதில் நான் மிகவும் கவனமாகவே இருந்துவருகிறேன். இதன் காரணமாகத் தொழிலில் எனக்கு எவ்வளவோ சோதனைகளும், இழப்புகளும் வந்ததுண்டு. எனினும் நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாட்டிலிருந்து மீறியதில்லை. ஆகவே எனது தகவல்களில் உள் நோக்கங்களுக்கு இடமில்லை. அண்ணா, எம்ஜிஆர், காமராஜர் முதலானோர் நான் அவர்களது அரசியலை ஆதரிக்காதவன் என்பது தெரிந்தேதான் என்னை நெருங்க அனுமதித்தார்கள். ஏனெனில் அவர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு திரை தொங்கத்தான் செய்யும், அவர்கள் எவ்வளவுதான் மக்களோடு கலந்துறவாடிய போதிலும். அவர்களுக்கு மக்கள் மனநிலை பற்றி உண்மையான நிலை தெரிய என்னைப் போன்றவர்கள் தேவைப்பட்டார்கள். என் சம காலத்தவர்களான சில பத்திரிகையாளர்களும் இவ்வாறு பயன்பட்டார்கள்.

காந்திஜி கொலை தொடர்பான கட்டுரையைப் படித்த பிறகு, என்ன சொல்வார்கள், தொடக்கத்தில் நான் எழுதுவதை வரவேற்றவர்கள் எனக் கேள்வி எழுகிறது. இது பற்றி கோ.ராஜாராம் பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். திண்ணையின் வாசகர்களுடன் என்னைக் காட்டிலும் அவருக்குத்தான் இன்டர் ஆக்ஷன் எனப்படும் கருத்துப் பரிமாற்றம் அதிகம் இருக்கும். எனினும் எனக்கு இன்றளவும் பெரும்பாலும் இளம் தலைமுறையினரிடமிருந்து வந்து கொண்டுள்ள மெயில்கள், குறிப்பாக காந்திஜி கொலை தொடர்பான மறுபக்கத்தைத் தெரிவித்தமைக்காகப் பாராட்டுவனவாகவே உள்ளன. மேலும் மேலும் எழுதுமாறு அவை வலியுறுத்தகின்றன. இதன் பொருட்டு நான் ஆரோக்கியத்தோடும் தீர்க்க ஆயுளோடும் இருக்கவேண்டுவதாகவும் பல மெயில்கள் வருகின்றன, என்னை காசிக்கு ரயில் ஏற்றிவிடுவதற்கு மாறாக!

அடுத்து அயோத்திதாசர் பற்றிய பிரஸ்தாபம். அயோத்திதாசர் எழுத்துகளிருந்தே எனது கோணத்தில் பார்த்த ஆதாரங்களைத்தான் நான் பதிவு செய்து அவர் ஹிந்து விரோதியல்ல என்பதை நிறுவிவருகிறேன். ஹிந்து சமயசமூக துவேஷிகள் சிவ வாக்கியர், திருமூலரையுங்கூட ஹிந்து சமய விரோதிகளாக நிறுவ முற்படும் விசித்திரமான காலகட்டத்தில் நான் வாழ்ந்துவருகிறேன். ஹிந்து சமயசமூக நடைமுறைகள் பலவற்றையும் கடுமையாக விமர்சிக்க எமது சமயமும் சமூகமும் அனுமதி அளிக்கின்றன. சங்கரரும் ராமானுஜரும் மத்வரும் நான்மறைகளையே அவரவர் கோணத்தில் விளக்கமுடிந்துள்ளது. காலத்திற்கொவ்வாத நடைமுறைகளைத் தூக்கி எறியும் துணிவும் ஹிந்து சமயசமூக அமைப்புகளுக்கு உள்ளது. இத்தகைய அருமையான சகிப்புத்தன்மையை இயல்பாகவே பெற்றுள்ள ஒரு சமயசமூக அமைப்புகளை அழித்துப் போட்டால் ஏற்படக்கூடிய வெற்றிடத்தில் வந்து அமர்வது எத்தன்மையதாக இருக்கும் என்பதைச் சிறிது சிந்தித்தாலே போதுமானது. இவ்வாறான சிந்தனையைத் தோற்றுவிக்கும் முயற்சியைத்தான் மேற்கொண்டிருக்கிறேனேயன்றி எவர் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் ஒரு சிறிதும் இல்லை.

அன்புடன்,

மலர்மன்னன்

malarmannan97@yahoo.co.uk

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்