நாகரத்தினம் கிருஷ்ணா – சூரியா – பிரபு ராஜதுரை -அபராஜிதன் -அரவிந்தன் நீலகண்டன்- பொ.கருணாகரமூர்த்தி – யமுனா ராஜேந்திரன் – விடுதலைக
வாரப்பலன் எழுதற மத்தளராயனென்கிற நம்ம இரா.மு.வை என்ன சொல்லி கொண்டாடுவதுன்னு புரியலை.
தமிழில் சிலர் எழுத்துக்கு மட்டுமே வாசகனிடம் பேசும் குணமுண்டு. தன்ளி நின்றல்ல, நம்முடைய தோள்மீது கைபோட்டு, தெனாலி வார்த்தைகளில் ஆனால் மனத்திலிருக்கின்ற பாரத்தை அப்படியே இறக்கி வைக்கும் குணம். அந்த வகையில் எனக்கு புதுமைபித்தன், விந்தன் வரிசையில் இரா.முருகனைப் பார்க்கிறேன். வாரபலனில் அவரால் எழுதப்படும், நிகழ்வுகளின் மீதான விமர்சனப்பார்வையும், அவது நாள் அனுபவங்களின் நகல்களும் அருமை அருமை அருமை. அவரது வீட்டம்மா கைக்குத் திருஷ்டி சுத்திப் போடணும். எனக்கவர் எழுத்துமேல நிறைய பொறாமை.
அன்புடன்
நாகரத்தினம் கிருஷ்ணா
அன்புள்ள ஆசிரியருக்கு
சின்ன தகவலுக்கே பத்து மேற்கோள் அளிக்கும் ரவி சீனிவாஸ்ஒரு நாவலை படிக்காமலேயே அதை போட்டு மிதித்திருப்பது கண்டேன். இம்மாதிர்த்தான் இவர் மிகப்பெரும்பாலான நூல்களைப்பற்றி எழுதுகிறார் என்பதே நான் பலகாலமாக சொல்லிவந்தது.
காடு நாவலை வாசகர் படிக்கத்தானே போகிறார்கள். நான் இப்போதுதான் படித்தேன்.
1. கதை நடப்பது கேரளத்தின் மன்ன்ராட்சி இருந்த காலகட்டத்தில் [1948க்குமுன்]
2. அக்கதையில் வருவது மிகப் பிற்பட்ட கிராமம். சாதி நெறி இறுக்கமாக இருக்கிறது. எல்லாருமே சாதியால்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். சாதி இல்லாத பேச்சே இல்லை. ஆனால் எல்லா சாதிக்கும் எல்லா சாதியுடனும் பாலியல் உறவும் உள்ளது. கள்ள உறவுதான். ஆனால் எங்கே என்ன உறவு என எல்லாருக்குமே தெரியும். வெளிப்படையாக இல்லாதவரை சரி என்பதே நிலை. அதாவது சாதி என்பது மேலோட்டநிலையில். உள்ளே உள்ளது காமம் மட்டுமே. காமத்துக்கு தடைகளே இல்லை. சாதி மட்டுமல்ல வயது உறவுமுறை உடலழகு கூட தடையாக இல்லை. இதுதான் அந்நாவல் காட்டுகிற சூழல். வேத சகாயமுமார் சொல்வதுபோல காமத்தின் காடு அது.
3. கதையில் ஒரு கோயில் அர்ச்சகர் [பிராமணர் . போத்தி] வருகிறார்.இவர் ஒரு [ரவி சீனிவாஸ் போல ஒற்றைப்படையாக யோசிப்பவர்களால் உள்வாங்கிக் கொள்ளமுடியாதபடி] சிக்கலான கதாபாத்திரம். இவர் கோயில் பூசாரி. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லை. பழைமை வாதி. ஆனால் மனிதர்களின் பலவீனங்களை சாதாரணமாக பார்க்க கூடியவர். சாதி உணர்வு உள்ளவர் ஆனால் ஏழைகள் முன்னேறுவதை கனிவுடன் பார்ப்பவர்.
இவருக்கு எல்லா சாதிகளிலும் காதலிகள். இதற்கு அவர் பல வேடிக்கையான தத்துவ நியாயங்களும் சொல்கிறார். அதில் ஒன்று நடவு காலங்களில் புலைய பெண்களிடம் போனால் பயிர் செழிக்கும் என்பது
அப்போது நாணப்பன் என்பவர் கேட்கிறார் புலையன் நம் வீட்டில் ‘கேறி எறங்கினாலும் ‘ பயிர் விளையுமே என்று. [ காரணம் போத்தியின் சகோதரிக்கு புலையனுடன் உறவு உள்ள விஷயம் ஊரறிந்த ரகசியம்]
அதற்கு போத்தி ‘ ஆமா வெளையும் . மக்கா நாணு எனக்கு உன்னை தெரியும். உனக்க அப்பன் தீட்டம் நீலாண்டனை தெரியும் . ஆயிரம் வருசமாட்டு வயல்கள் இப்படித்தான் விளைஞ்சிருக்கு .இப்பம் நீ புதிசா சீமையுரம் போடவேண்டாம் ‘ என்கிறார். [ இதிலுள்ள அங்கதம் மிக்க உட்பொருள் வெளிப்படை. ‘உன் அப்பனை தெரியும் ‘]
இதுதான் நூலில் உள்ளது. நாவல் முழுக்க உயர்சாதி என்ற அடையாளம் மீது விழுந்தபடியே இருக்கும் வர்ம அடிகள் பல. ஏளனம், நுட்பமான பகடி. தன் சாதியை இப்படி எழுதவும் ஒரு துணிச்சல் வேண்டும். எனக்கு தெரிந்து தமிழில் எவருமே எழுதியதும் இல்லை. அதற்குக் காரணம்எதையுமே அற்பமாக்கி , சில்லறையாக்கி புரிந்துகொள்ளக் கூடிய ரவி சீனிவாஸ் போன்றவர்கள்தான். இங்கே மிகப்பெரிய தடைகள்இம்மாதிரி அளிக்கப்படும் அபத்தமான வாசிப்புகள்..இதையும் மீறி இங்கே நல்ல இலக்கியம் எழுதுவதும் அதற்கு வாசிப்பு இருப்பதும்தான் ஆச்சரியம். ரவி சீனிவாஸை பயமுறுத்துவது இந்த வாசிப்புதான் போலும்.
உலக இலக்கிய சூழல்கள் எதிலுமே இப்படிப்பட்ட அபத்தமான திரிபுகள்வாசிப்புகளாக முன்வைக்கப்படும் என நான் நினைக்கவில்லை. இதற்கெல்லாம் இங்கே ஓர் இடமிருப்பதே ஒரு வரலாற்று சோகம்தான்நீப்படித்தான் நாம் இலக்கியங்களை வாசிக்க வேண்டுமா ? இப்படி இஷ்டப்படி அர்த்தம் கொண்டு இலக்கியவாதிகளை வசைபாடவும் முத்திரைகுத்தவும் தொடங்கினால் இலக்கியத்துக்கு என்ன பொருள் ? இதற்கு எங்கே எப்படி முடிவு காண்பது என்று சிந்தித்தாக வேண்டும்
சூரியா
திரு நரேந்திரனின் ‘ஒரு புகைப்படமும் சில சிந்தனைகளும் ‘ என்ற கட்டுரை படித்தேன். பல சிந்தனைகளும் என்றிருந்திருக்கலாம். நன்றாக எழுதுகிறார். ஆனல் அநேக விஷயங்களை ஒரு கட்டுரைக்குள் திணித்து கொஞ்சம் அயற்சி ஏற்படுத்துகிறது. படிக்கும் வாசகர்கள் எங்கு தொடங்குகிறார். எங்கு முடிக்கிறார் என்று திகைத்துப் போகலாம்.
அன்புடன்
பிரபு ராஜதுரை
http://manarkeni.blogdrive.com/
திண்ணைக் குழுவினரக்கு,
திரு சோதிப்பிரகாசம் அவர்கள் கட்டுரைக்கு எதிர் வினையாக திரு ரவிசிறீனிவாஸ் எழுதிய கட்டுரை என்னை மிகவும் வேதனைப் படுத்தியது.(புலையர் பெண்களை நாயர் புணர்ந்தாலும்,நாயர் பெண்களை புலையர் புணர்ந்தாலும் பயிர் செழிக்கும் விவரம்) ஜெயமோகனின் நாவலில் வரும் கதாநாயகன் சாதிசமுதாயத்தை இழிவு படுத்தும் நோக்கில் பெண்கள் மீதான வன்முறையை ஆதரிக்கிறான் என்கிறார்.நாவலாசிரியர் கண்ணோட்டமும் இதுதானோ என்று சந்தேகிக்கிறார்.அவர் இந்த நாவலைப் படிக்கவில்லை என்கிறார்.
ஒரு சாதாரண வாசகனாலேயே திரு ரவிசிறினிவாசின் கட்டுரையினால் முரண்பாடும்,எரிச்சலும் அடைய முடியும்.இவர் ஒரு ஆய்வாளர் என்று சொல்லிக் கொள்கிறார்.ஒரே ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரையை இவர் வளர்தெடுக்கும் விதம் எப்படி என தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.மேற்கண்ட கட்டுரை மூலம் இவரது மொத்த மனப்போக்கையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாகிவிட்டது.திரு ராஜபாண்டியன் திரு வேதசகாயகுமார் போன்றவர்கள் இவரைப் பற்றி தெளிவாகவே தீர்மனித்துள்ளார்கள்.ஆனால் இவர் மீண்டும் மீண்டும் எரிச்சலடையச் செய்யும்படியான கட்டுரைகளேயே எழுதி வருகிறார்.ஒன்று ஒன்று இவர் மிகுந்த புலமை கொண்ட ஆய்வாளர் எனில் ஒரு திட்டத்துடனேயே இப்படி நடந்து கொள்கிறார் என்று நம்பலாம்.அல்லது ஒரு அரைகுறையின் ஆணவமாகவே இருக்க முடியும்.முக்கிய எழுத்தாளர்களை வசைவிமர்சனம் செய்யும்போது தானும் முக்கியமாகி விடுவோம் என்ற மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும்.
மேலும் ஜெயமோகன் போன்ற தீவிர எழுத்தாளர்களது பெயரை சராசரியாக்கவும் ஒரு தவறான தோற்றத்தை உருவாக்கவும் மிகவும் பிரயத்தனப்படும் கூட்டத்தில் திரு ரவிசிறினிவாசும் ஒருவர் என்பது புரிகிறது. ஜெயமோகனது எழுத்துக்கள் மிகவும் தேர்ந்த நிலையில் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.அவரை வசைபாடுவதை விடுத்து அவரைச் சரியாக விமர்சிக்க கூடிய ஒரு தமிழனைக் காணவில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம்.(விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டுக்குமே ஒரு தரமான விமரிசனம் இல்லை)அதைவிமர்சிக்கும் அளவு தேர்ந்த படிப்பாளிகள் இல்லையா என்ன ?ஆனால் மேலோட்டமான (இந்து சநாதனத்தைத் தூக்கிப்பிடிக்கிறது,ஏற்கனவே சொன்னதைத்தான் பின்தொடரும் நிழலின் குரலில் சொல்கிறான்.)விமரிசனம் பாமரத்தனமாக முன்வைக்கப்படுகிறது.
இந்தக் அஞ்சலையும் ஒரு வாசகனாகவே எழுதுகிறேன்.தொடர்ந்து யாருக்கும் பதில் வாதம் செய்து கொண்டிருக்க வழியில்லை. உண்மையிலேயே எனக்கு வேறுவேலைகள் உண்டு.
சண்முகசுந்தரம்
stntex@mantraonline.com
திரு வரதன் அவர்கள்ின்தூக்கு தண்டனை பற்றிய கருத்து குறித்து…
கடுமையான குற்றச்செயல்களை செய்பவர்கள் அனைவரையும் சட்டம்
தண்டிப்பதில்லை!அரசியல்..பணபலம்..சாதிச்செல்வாக்கு உள்ளவர்கள் தப்பித்து
விடுகிறார்கள்!சமீபத்தில் சென்னையில்..ஒரு உணவக அதிபரும்…ஒரு
மருத்துவரும்..திரு வரதன் சொன்ன குற்றச்செயல்களுக்காக கைது
செய்யப்பட்டிருக்கிறார்கள்!இவர்களின் செல்வாக்கு சட்டத்திடமிருந்து
காப்பாற்றி விடும்!வசதி படைத்தவர்கள் காவல் நிலையத்திலேயே வழக்கை லஞ்சம் கொடுத்து முடித்து விடுகறார்கள்!காவல்துறை க்கொடுமைக்கு பயந்து கொல்லாத மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்ட கணவனின் கதை,பாண்டியம்மாள் கொலை வ்ழக்கில் மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது!பின்னர் மனைவி உயிரோடு வந்து கணவனைக்காப்பாற்ற…நீதிமன்றம் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்த கதை நாடறியும்!
லஞ்சமும் ஊழலும் நிறைந்த நீதித்துறையை சீர் செய்யாமல் எடுக்கிற எந்த முயற்சியும் குற்றங்களைக் குறைக்கப் போவது இல்லை.குடியரசுத் தலைவரைக் கைது செய்ய பணம் கொடுத்து நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற செய்தியை கடந்த வார ஜுனியர் விகடன் வெளிியிட்டிருக்கிறது.சட்டத்தின் சந்து பொந்துகளை அறிந்திருப்பவர்கள் குற்றம் செய்ய அஞ்சுவதில்லை!நேர்மையான அமைப்பு என்று நம்பப்படுகிற சி.பி.அய் வரை அந்த நிலைதான் என்று சில வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரையில் அதன் முன்னாளியக்குனர் திரு .மாதவன் குறிிப்பிட்டிருந்தார்! தப்பு செய்தவன் கூட தவறு செய்து விட்டோமே என்று வருந்துவதைக்காட்டிலும்,இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் அளவிற்கு பணமும் செல்வாக்குமில்லையே என்று வருந்தும் நிலையில்தான் நாடிருக்கிறது.
அரசியல் தலையீட்டின் அடிப்படையில் நடக்கும் நீதிபதி நியமனங்கள்,லஞ்சத்தின் மூலம் உருவாக்கப்படும் காவல்துறைப்பதவிகள்,அரசியல்
நோக்கங்களுக்காகச்செய்யப்படும் இடமாற்றங்கள்,தனிமனித வழிபாட்டின் மூலம் வரும் பதவி உயர்வு போன்ற ஏராளமான குறைகளுடன் இருக்கும் ஒரு அமைப்பை விமர்சனம் செய்யாமல்,மாற்றி அமைக்காமல் கடுமையான தண்டனைகள் மூலம் குற்றம் குறைந்து விடும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும் என்று புரியவில்லை!
இந்த மாற்றங்களைச் செய்வதற்கும் கூட குற்றவாளிகளான அரசியல்வாதிகளையே நாம் நம்பி இருக்கும்படி செய்திருக்கிறது நமது மக்களாட்சி அமைப்பு!
அபராஜிதன்
abharajithan@yahoo.com
மதிப்பிற்குரிய சிரியருக்கு,
தியாகராஜ சுவாமிகளின் அருட்பாடலை அழகிய தமிழில் மொழிபெயர்த்தவருக்கு மிகுந்த நன்றியும் வணக்கங்களும். கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்களை சமரச மனப்பாங்குடன் நாம் இசைக்கும் முன் அம்மத பீடங்கள் தம் ‘எமக்கே உண்மை சொந்தம் ‘ , ‘எந்நூலே அதிகார பூர்வ உண்மை ‘, ‘எம்மத விசுவாசமற்றோர் ஹீத்தன்கள், இன்பிடல்கள், காஃபீர்கள் ‘, ‘ஹிந்துக்கள் அனைவரும் விக்கிரக ராதனை செய்யும் அஞ்ஞானிகள் ‘ என்பது போன்ற மனோபாவங்களிலிருந்து மாறுவது அவசியம்.
திரு.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரை நன்றாக இருந்தது. அண்மையில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சிறிய நிலநடுக்கம் ஏற்படுவதாக அரசு புவியியலாளர்கள் கூறியிருந்தனர். பொதுவாக அணு உலைகளை அமைக்க எத்தகைய நிலவியல் மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன ? ஒரு அணு உலை நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டால் (ஒரு worst case scenarioவில்) எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் ? பாரதத்தில் உள்ள அணுஉலைகளில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அவர் ஒரு கட்டுரையை தர வேண்டுமென (திண்ணை வாசகன் என்கிற முறையிலும், கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு அருகே வசிப்பவன் என்கிற முறையிலும்) கேட்டுக்கொள்கிறேன்.
அரவிந்தன் நீலகண்டன்
infidel_hindu@rediffmail.com
ஆயுள் சந்தாவென்றால் என்ன ?
அன்பு நண்பர்களே,
ஆயுள் சந்தாவென்றால் என்னவென்று எனக்கு கொஞ்சநாளாக ஒரு சந்தேகம்
குறிப்பாக சிறுபத்திரிகை வட்டத்தில் ‘ஆயுள்சந்தா ‘ என்றால் என்னவென்று புரியுதில்லை. எனது ஆச்சர்யம் என்னவென்றால் இரண்டோ மூன்றோ வருஷங்களுக்கு மட்டும் சந்தா கட்டிக்கொண்டிருந்தபோது ஒழுங்காக வந்துகொண்டிருந்த பத்திரிகைகள் சில நான் (தெரியாத்தனமாக) ஆயுள்சந்தா கட்டியவுடன் தம்வருகையை நிறுத்திக்கொண்டுவிட்டன.
கடந்த 20 ஆண்டுகளாக உலகத்தின் எக்கோடியிலிருந்தேனும் தமிழில் வெளிவரும் தரமான சிறுசஞ்சிகைகளையும், மலர்களையும் சேகரித்துவந்ததால் எனது வ(ா)சிக்கும் அறையின் எல்லா விறாக்கைகளும், அலமாரிகளும் நிரம்பிவழியத் தொடங்கிவிட்டன. அவற்றை லண்டன் அல்லது லைப்சிக் அருங்காட்சியகத்துக்கோ கொடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். 1984 இலிருந்து கணையாழியின் வாசகன். எனது ஆரம்பகாலப்படைப்புகள் சிலவற்ைறைப் பிரசுரித்தும், ஜானகிராமன் நினைவாக நடாத்திய போட்டிகளில் என் கதையை தேர்வுசெய்தும் தமிழ்நாட்டுவாசகர்களுக்கும் என்னை முதலில் அறிமுகப்படுத்திய பத்திரிகை என்ற அபிமானத்தால் 1999 செப்டெம்பரில் சென்னைக்கு சென்றிருந்தபோது கணையாழிக்கும் கூடவே தாமரை அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆயுள் சந்தாவாக தலா (5000Rs) கட்டினேன்.
(சுபமங்களா திரு.வி. விஸ்வநாதன் அப்போது கணையாழியில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.)
அவர் தாம் ஆயுள்சந்தாதொகையை வங்கியில் நிரந்தர வைப்பிலிடுவதாகவும், ஒவ்வோராண்டும் கிடைக்கும் வட்டியிலிருந்தே வாசகருக்குப் பத்திரிகையை அனுப்பி வைக்கிறோம், அதுதான் நடைமுறையென்றும் விளக்கினார்.
கணையாழி தொடர்ந்து 6 மாதங்கள் வந்தது. பின் எதுவித அறிவிப்புமின்றித்திடுப்பெனெ நின்றுபோனது. மாதம் இரண்டு நினைவுறுத்தல் கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பிகொண்டிருந்தேன். எதற்கும் எவ்விதபதிலுமில்லை, பத்திரிகையுமில்லை.
திரு. வி.விஸ்வநாதனுக்கும் தனிப்பட எழுதினேன். பலனளிக்கவில்லை. நண்பர் திலீப்குமாரிடம் முறையிட்டபோது அவர் நேரிலே போய் விசாரித்துவிட்டு ‘கணையாழி தொடர்ந்துவரும் ‘ என்று நம்பிக்கையூட்டும்படி எனக்கு மின்கடிதம் எழுதினார். வேறொரு இலக்கியர், கவிஞர் யுகபாரதி கணையாழியில் பணிபுரிவதாகவும் அவருக்குத் தனிப்பட விபரத்தை எழுதினீர்களாயின் ஏதாவது செய்வார் என்றும் அட்வைஸ் தந்தார். அவருக்கும் எழுதினேன், பலனேதோ இதுவரை சுழியம்தான். எனக்கு வந்த கோபத்தில் ‘ஏன் நான் இறந்துவிட்டதாக யாராவது உங்களுக்குத் தெரிவித்தார்களா ? ‘ என்றுகூட கணையாழிக்கு எழுதினேன். அதற்கும் பதில் இல்லாதிருக்கவே கணையாழிநின்று போய்விட்டதென்றே எண்ணலானேன். அப்போது எனக்குத் தெரிந்து ஜேர்மனியில் Dr.நா.கண்ணன்தான் கணையாழி சந்தாதாரராக இருந்தார். அவருக்கு போன்பண்ணி உங்களுக்கு கணையாழி வருகிறதாவென்று விசாரித்தேன். அவரோ ‘கணையாழி சுத்தமோசம் மூன்று நாலு மாசங்களுக்கு ஒன்றுதான் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அதனால் அதற்குச் சந்தாகட்டுவதை எப்போதோ நிறுத்திகொண்டுவிட்டேன் ‘ என்றார். அண்மையில் லண்டன் சென்றிருந்தபொது அங்கே திரு.பத்மனாப ஐயர் வீட்டு மேசையில் புதிய கணையாழி பிரதிகளைப் பார்த்த எனக்கு அழவேணும் போலிருந்தது.
தாமரையும் இப்போ ஆயுள் சந்தாவைப் புதுப்பிக்கும் ?படி கடிதம் எழுதியுள்ளார்கள். ஆயுள்சந்தா 5000Rs கட்டி இதுவரை மூன்று ஆண்டுகளே முடிந்துள்ளன. இத்தனைக்கும் தாமரையின் ஆண்டுச்சந்தாவே 350Rsதான். பணம் கட்டுவதென்பதல்ல பிரச்சனை, எதற்கென்றேதெரியாமல் கட்டவேண்டியுள்ளதுதான் குழப்பம். எனக்கு இப்போ உண்மையாகவே எந்தப் பத்திரிகைக்கென்றாலும் ஆயுள்சந்தா கட்டப்பயமாகவுள்ளது. யாராவது ஆயுள் சந்தா என்னவென்று கொஞ்சம் விளக்குவீர்களா ?
பொ.கருணாகரமூர்த்தி
04.02.04 Berlin.
karunaharamoorthy@yahoo.ie
குழலினி அவர்களோடு நிரம்பச் சந்தோசத்தடன் கருத்தாடலில் ஈடுபடக் கூடிய விதத்தில்,
கருத்துக்களை மிகுந்த நாரிகத்துடன் முன் வைததிருக்கும் அவரது மனமுதிர்ச்சிக்கு முதலில் எனது
வணக்கம். திண்ணையில் நடைபெறும் பல விவாதங்களில் தொனிக்கும் மட்டுமீறிய ஆணவத்தினையும் ,
சக மனிதனை மிகை எள்ளலுடன் விலக்கும், முற்றிலும் அகச்சார்பான கடிதங்களைப் பாரக்கும்
வேளையில் இதனைச் சொல்லிவிட வேண்டியிருக்கிறது.
கமல்ஹாஸனுக்காகப் பேசுகிற நிலையில் என்னை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. கமல்ஹாஸனின் தெனாலி, அவ்வை சண்முகி, ஹேராம் போன்றவை குறித்த கடுமையான விமர்சனங்ளை நான் பதிவு செய்திருக்கிறேன்.
1. குருதிப்புனல் படம் கோவிந்த நிஹ்லானியின் துரோகால் படத்தின் தமிழ் வடிவம். அர்த்சத்யா
சத்ய ராஜ் நடிக்கத் தமிழில் வெளியானது. ஆகவே அர்த சத்யாவையும் குருதிப்புனலையும் ஒப்பிடுகிற
வாய்ப்பு எனது கட்டுரைக்கு இல்லையென நினைக்கிறேன்.
2. அன்பே சிவம் பற்றி நான் விமர்சனம் எழுதியிருக்கவில்வை. உலகவயமாதல் தொடர்பான
சமகாலப் பிரச்சினையை எம.ஜி.ஆர்.பாணியில் சொல்லிப் பார்த்த படம் அது என்றாலும் (கிரண்
கமல்ஹாஸன் காதலையும்,, குடைச் சண்டைக் காட்சியையும் வேறு வகையில் விளக்க முடியாது,
அதுமட்டுமன்று தோழர் எனத் தமிழல் வழங்கப்படவேண்டிய விழிச் சொல் இந்தப் படத்தில் சகா
ஆனதையும் மறந்துவிட முடியவில்லை) வெகுஜன சினமாவில் அப்படம் முன்னோடிப் படம்தான்
3. ஸதாம் ஹ_சைன் தொடர்பாக இருவேறு நிலைபாட்டை பெரும்பாலுமான யுத்த எதிர்ப்பாளரகள்
எடுக்கிறார்கள். தாரிக் அலியிலிருந்து ஈராக்கியக் கவுிஞர் சா அத் யூசுப் வரை அமெரிக்காவை
வெறுக்கிற அளவு அதே வகையில் சதாமையும் வெறுக்கிறார்கள். ஸதாம் சொந்த மக்களைக் கொன்று குவித்த எதேச்சாதிகாரி என்பதில் சந்தேகமில்லை தாரிக் அலி சா அதி யூசுப் இருவருமே யுத்த எதிரப்புப் பேரணியிலும் பங்கு கொண்டார்கள். சதாமை கண்ணாடிக் கூண்டில் நிறத்த வேண்டும் எனக் கமல்ஹாஸன் சொல்து அதீதநிலைபாடு. அவரது அரசியலில் சர்வதேசியக் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் குறித்து அவர் அறிந்திருக்கவில்லை எனவே நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த விசாரணையை பெரும்பாலுமானொர் கோருகிறார்கள். ஏனெனில் சதாமின் மனித விரோதக்
குற்றங்கள் அனைத்துமே அமெரிக்க மேற்கத்திய் அணுசரனை அவருக்கு இருந்த நாட்களிலேயே செய்யப்பட்டது அவ்விசாரணையின்; மூலம் உலகின் முன் வெளியாகும் என்பதுதான்.
4. தேவர்மகன் பாடல்கள் குறித்த விளைவுகள் பதியப்பட்டும் அதற்கு பொறுப்பள்ள கலைஞன் எனும்
வகையில் கமல்ஹாஸன் பதிலிறுக்கவில்லையெனில அது பாரதூரமான விசயங்களேயாகும். கமல்ஹாஸன் தேவர் மகன் தொடர்பாக முற்றிலுமாக விமர்சனங்களை உதாசீனப்படுத்தியிருக்கிறாரா என்பதிலும் உறுதிபடச்சொல்ல முடியவில்லை. அந்தப் பாடலை அவர் விமர்சனங்களுக்குப் பின்னும்
நியாயப்படுத்தினாரா எனத் தெரியவில்லை. ஏனெனில் பதியப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும்
சண்டியர் படம் தொடர்பான விவாதங்களேயல்லாது குறிப்பான விவரங்களாக இல்லை.
5.ஹேராம் ஆர்.எஸ்.எஸ் ஊழியனின் உளவியலை நியாயப்படுத்திய, கமல்ஹாஸன் கருத்தியல்
ரீதியில் தடுமாறிய படம் என என் விமர்சனம் திண்ணயைிலேயே இருக்கிறது
6.திரைப்படங்களில் பாலுறவைச் சித்திரிப்பது தொடர்பாக திண்ணயைின் இவ்விதழில் விரிவான
கடடுரையொன்றில எனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். இக்கட்டுரை குயிலினி அவர்களது
கட்டுரைக்கு முன்பாகவே தி;டமிடப்பட்ட கட்டுரையாகும்.
7.தமிழச் சூழலில் .தலித் கோட்பாடு மற்றும் தலித்தியம் சார்ந்த சினிமா விமர்சனம் (இது
குறித்த விரிவான கட்டுரையொன்று எனது மாற்றுச் சினிமா இரண்டாம் தொகுதியில் இருக்கிறது)
உதிரியாகத் தவிரவும், இன்றளவிலும் காத்திரமாக உருவாகவில்லை என்பதனைத்தான் நான்
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் முனைப்புப் பெற்றிருக்கவில்லை என்றேன். நீண்ட நெடிய தலித்தியப் போரட்டங்களைப் பற்றி நானும் வாசித்தே வந்திருக்கிறேன். குழலினியோடு அதில் எனக்கு முரண்படஏதுமில்லை.
படைப்பாளியை என்னுடைய நோக்குக்கு இணைய இருக்கிறாரா என மதிப்பிடுவதை விடவும், அவர்
இயங்கும் துறையில் இடர்படும் பல்வேறு; பிரச்சனைகளோடு அவரைப் புரிந்து கொள்ள
முயற்சிக்கிறோம் முரண்படும் அம்சங்களைக் கடுமையாக. விமர்சிக்கிறோம். நடைமுறையில்
இந்துத்துவமும் சாதியமும் புரையோடிய சூழலில் வெளிப்படையாக அவர் எங்கு நிற்கிறார் என
அவதானிக்கிறேன்.; கமல்ஹாஸன் மீதான விமர்சனம் என்பதுவேறு, ஏதிர்மறையான விமர்சனம் என்பது வேறு. சாதிய வன்முறைக்கு எதிராகப ;படம் செய்வதோ, இந்துத்தவத்துக்கு எதிராக படம்
செய்வதோ, உலகவயமாதலுக்கு எதிராகப் படம் செய்வதோ, இன்று இந்திய தமிழ் சினிமாவில்
யாரும் செய்யாத, லாபமில்லாத காரியம். கமல்ஹாஸன் அந்த வகையில் செய்வதனை வரவேற்கவே
வேண்டியிருககிறது.
கமல்ஹாஸனை சரியான அரசியல் கொண்டவராகப் பாரப்பதில் என்னால் உடன்படமுடியவில்லை. இன்று ஒவ்வொரு அறிவுஜீவியுமே பிளவுன்ட மனநிலையில்தான் இருக்கிறான். அதற்;கான காரணங்களாக விடுதலைக் கருத்தியல்களின் சரிவையும் ,பின்புரட்சிகர சமூகங்களின் ஜனநாயகமின்மையையம் எனக் குறிப்பிடலாம்.
தலித் அரசியலைக் கூட சரியான அரசியல் பார்வையில் மட்டுமே அணுகமுடியாது. பிஜேபியும்
ஜெயலலிதாவும் அழைத்தால் மறுக்கமாட்டேன, அதனைப் பிரசீலிப்பேன் எனத் தொல். திருமாவளவன்
சொல்வதை, அவரது பெரியாரிய அம்பேத்காரியக் கண்ணோட்டத்தில் இணைத்துப் பார்க்கவே முடியாது.
ஆனால் அரசியல் சக்தியாக தலித் இயககங்களை அங்கீகரிப்பவர்களிடம் நாங்கள் கூட்டணி
கொள்வோம் என்று சொல்வதையும் எவரும் நிராகரிக்க முடியாது.
கருத்தியலுக்கும் நடைமுறைக்குமான இடைவெளி எனப்து மிகவும் சிக்கலானது. கமல்ஹாஸன் குறித்த பார்வை மட்டுமல்ல, எந்துச் சிந்திக்கிற மனிதன் குறித்தும் எனது அணுகுமுறை இப்படியாகவே இருக்கிறது. இன்றை இந்திய தமிழ்ச் சினிமாவில் கமல்ஹாஸன் நிச்சயமாக உடன்பயணிதான். உடன்பயணிகளை விமர்சிக்கவே வேண்டும், ஆனால் எதிர்மறையாக அல்ல எனத்தான் நான்
நினைக்கிறேன். சினிமாவினால் ஏற்படும் விளைவுகளும் கலைஞனின் பொறுப்பும் சம்பந்தமாக
விரிவாக எழுத வேண்டியிருக்கிறது. அது குறித்துத் தனியே ஒரு கட்டுரை எழதுவேன்.
குழலினிக்கு மறுபடியும் எனது அன்பும் நன்றியும் உரியது.
அன்புடன்
யமுனா ராஜேந்திரன்
திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் அய்ரோப்பிய இனவாதம் பற்றிய
கருத்துக்கு………..
அய்ரோப்பியர்கள் எந்த நாடுகளைக் கைப்பற்றி ஆள நினைத்தாலும் அங்குள்ள
மக்களிடையே உள்ள பிரிவுகளை உணர்ந்து,செல்வாக்கு உள்ள சமூகத்தை
ஆட்சியின் வசதி கருதிஅரவணைத்துக்கொள்வார்கள்!இந்திய உயர்சாதியினர்க்கு
ஏற்பட்டது இந்நிலைதான்!
ஆங்கிலேய அரசியல் அதிகார அமைப்பில் பங்கு வகித்தும்,அதன் பலன்களை
அனுபவித்தும் பின்னர் விடுதலை உணர்வு வளர்ந்த காலத்தல் அதிலும் பங்கு
வகித்து முரண்பாடான இரண்டு வித பாத்திரங்களை ஒரே காலகட்டத்தில்
வெற்றிகரமாகச்செய்தவர்கள் உயர்சாதியினர் குறிப்பாக பார்ப்பனர்கள்!
அய்ரோப்பியர்கள் உருவாக்கிக்கொடுத்த ‘ஆரிய ‘க்கருத்தாக்கம் இவர்களை
வருடிக்கொடுத்தது.இதன் மூலம் உலகின் பலமுடைய இனத்தோடு தாம் ஒரு வகையில்
தொடர்பு உடையவர்கள் என்ற எண்ணம் ஒரு மயக்கத்தையும் கொடுத்தது.இந்த
மயக்கத்தை உறுதிப்படுத்திக்கொண்ட அய்ரோப்பியர்கள் அடித்தட்டு மக்களை மதம்
மாற்றும் முயற்சிகளிில் வெற்றிகரமாக இயங்கினர்.
ஹிந்து மதத்தில் தேவையற்றவர்களாகவும்,மனிதக்கழிவுகளாகவும் கருதப்பட்ட
இவர்கள் மதம் மாறுவது குறித்து உயர்சாதியினர் கவலைப்படாமல்,ஆரியப்பதவிக்கு நன்றி செலுத்தும் முகமாக அய்ரோப்பியர்களுக்கு வேதம் சொல்லிக்கொடுத்து,தமது புராதன ஆன்மீகப்பெருமைக்கு அவர்களின் அங்கீகாரத்திற்கு அலைந்து கொண்டும்,இவர்கள்கிறித்தவர் ஆனால் என்ன….நாம்தான் ஆரியர் ஆகிவிட்டோமே என்று மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டும் இருந்தனர்!
ஹிந்து மதத்தை சில அய்ரோப்பியர்கள் புகழ்ந்து எழுதியது வேறு இவர்களின் மயக்கத்தின் கால அளவை நீடிக்க செய்தது!
வெள்ளைக்காரர்கள் வெளியேறிய பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பின்தங்கிய சாதியினர் அரசியல் அதிகாரத்தில் பெரிய அளவில் பங்கு கேட்கவும்,பங்கு வகிக்கவும் தொடங்கினர்.அதுவரையில் மதம் ஒரு சிலருக்கே என்று வரையறுத்து வைத்திருந்த வசதிகள் அனைவருக்கும் பொது என்ற நிலையை அரசியல் சட்டமும் சமூக நீதியும் ஏற்படுத்திக்கொடுத்தன.ஆரிய மயக்கத்திலிருந்த உயர்சாதியினர் விழிக்கத்தொடங்கினார்கள்.மதம் தந்த அந்தண அடையாளம்,அய்ரோப்பியர் தந்த ஆரிய அடையாளம் இரண்டும் செயலற்றுப்போகும் நிலையை உணரத்தொடங்கினர்.
எல்லா சமூகமும் எல்லாவற்றிலும் உரிமை கேட்கத்தொடங்கியபோது ஏகபோக உரிமையை அனுபவித்தவர்கள் ஆடித்தான் போனார்கள்.
இதர சமூகங்களோடு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நெருக்கடியும் இவர்களுக்கு ஏற்பட்டது.அய்ரோப்பியர் காலத்திலும் அதன் பிறகு கொஞ்ச காலமும் உயர்வான அங்கீகாரம் கொடுத்த ஆரியம் அண்மைக்காலங்களிில் தாழ்வான நிலைக்கு இட்டுச்செல்ல தொடங்கியது!
இந்த நிலையிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ளவும்,தங்களது கொஞ்ச நஞ்ச உயர்நிலையை தக்க வைத்துக்கொள்ளவும்,தமது தலைமைப்பாத்திரத்தை கேள்விக்குட்படுத்தாத புதிய அடையாளத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் கிடைத்ததுதான் ஹிந்து என்னும் சிறப்பான,கவர்ச்சியான சொல்!
கல்வி,பொருளாதார வசதிகளை அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு சலுகைகளின்மூலமும் பெற்ற உயர்சாதி அல்லாதவர்களும் தங்களை உயர்குடியாக்கம் செய்து கொண்டு புதிய ஹிந்துக்களாக மாறி உயர்சாதியினரை மிஞ்சும் வகையில் ஒரு வைதீக உலகை நோக்கிய பயணத்தை சமீபகாலங்களிில் தொடங்கி இருக்கிறார்கள்.இந்நிலை நீண்ட காலம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இதுவரையில் பெருமையாகச்சுமந்த ஆரிய அடையாளத்தை துறக்கவும், அது அய்ரோப்பியர்களுருவாக்கிய கதை என்றும்,இனி இங்கே ஆரியம் -திராவிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை,ஹிந்து என்ற ஒன்று மட்டும்தான் உண்டு என்றும் இனி ஆரியம்-திராவிடம் என்று பேசுபவர்கள் அய்ரோப்பிய இன வாதத்தை உள்வாங்கிக்கொண்டவர்கள் என்றும் தொடங்கிய நாங்களே விட்டு விட்டோம் தொடர்கிற நீங்களும் விட்டு விடவேண்டாமா என்று மிரட்டவும் தொடங்கி இருப்பது காலத்தின் கோலமேயன்றி வேறென்ன!
விடுதலைக்குயில்
viduthalaikuyil@yahoo.com
வரம்பு மீறும் எஸ்ரா சற்குணம்:
திருவாளர் எஸ்ரா சற்குணம், திரு.திருமாவளவன், திரு.கிருஷ்ணசாமி ஆகியோரின் நிலைப்பாட்டினைப் பற்றிக் கூறும் போது, கிளியை வளர்த்து ருத்திராட்ச பூனையிடம் கொடுத்து விடாதீர்கள் எனச் சொல்லியுள்ளார்.
திரு.எஸ்ரா சற்குணம் தொடர்ந்து வரம்பு மீறி இந்து மதத் தலைவர்களை தாக்குவது தான் சமுதாயத்தில் குழப்பத்தைத் தரும் வாய்க்கு வந்த படி பேசிவிட்டு, இந்து மதத்தினர் வாய் மூடி மெளனிப்பார்கள் என நினைத்தால், ஐயோ பாவம் அவர் நிலை எனத்தான் தோன்றுகிறது.
செல்வி.ஜெயலலிதா அனுமதிக்காததால் தான், சோனியா, கம்யுனிஷ்ட் மற்றும் தி.மு.க (!!!) அ.தி.மு.க கூட்டணிப் பக்கம் வராதது.
முஸ்ஸீம் லீக்கிற்கு இட ஒதுக்கீடு செய்யும் கழகத்திற்கு, தலித் அமைப்பு தீண்டத்தகாத ஒரு அங்கமாகத் தெரிகிறது.
தலித்திற்கு தி.மு.கவிலேயே இடம் உண்டு எனும் திரு,கருணாநிதி, ஏன் முஸ்லீமுகளுக்கு தி.மு.க வில் ஸீட் தரப்படுகிறது எனச் சொல்லும் மன நிலை இல்லை… ?
தைரியமாக திரு.திருமாவும் திரு.கிருஷ்ஷும் பா.ஜா.க, அ.தி.மு.க கூட்டணிக்கு வரட்டும்.
அரசியலில் மிகத் தேவை, அதிகாரம். அந்த அதிகாரம் அடைய தி.மு.க-விற்கு தேவை வாக்கு.
திரு.மூப்பனார் பாணியில் தி.மு.கவிற்கு அடி வைத்தால் தான் , தலித் அமைப்புகளிடம் அடுத்த முறை தி.மு.க ஒழுங்கான மொழியில் பேசும்.
தேர்தல் காலங்களில் தலித்துகள் இக்கட்டான நிலையில் மாட்டி திணறுவார்கள் எனும் நிலைப்பாட்டினை மாற்ற முடிவு எடுக்க வேண்டியது அவசியம் தற்போது.
யார் பயணாளி எனப் பார்க்காமல், தங்களுக்கான நீண்ட கால நன்மைக்காக இந்த முறை, பா.ஜா.க – அ.தி.மு.க-வை தலித் கட்சிகள் ஆதரிக்கட்டும்.
பின் பாருங்கள், அடுத்த முறை மரியாதையை.
வரதன்
varathan_rv@yahoo.com
(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)
சமயங்கள் மொழிகள் – பித்தன்
நண்பர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு,
வணக்கம். நான் கேட்டிருந்த பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. மாறாக-வழக்கம்போல-வெற்று வாதங்களையே வைக்கிறீர்கள். உங்கள் விளக்கம் போதுமானதாக இல்லை என்று நான் ஒரு வாதத்தைக் கூறினால் அதுதான் பதில் என்கிறீர்கள். இப்படி மாற்றி மாற்றி அதையே கூறிக் கொண்டிருப்பதில் என்ன இருக்கிறது ? ‘ஒரு பெண் குழந்தை பெறமுடியாதென்பதற்காக அவளுக்கு கற்பு கிடையாது என்று யாரும் சொல்லிவிட முடியாது இல்லையா ? ‘ என்று கேட்கிறீர்கள். குழந்தை பெறமுடியாததையும் கற்பையும் எதற்கு சம்மந்தப்படுத்துகிறீர்கள் என்று புரியவில்லை. கேள்வியை திரிப்பதாகத்தான் தெரிகிறது. குழந்தை பெறமுடியாத துர்பாக்கியசாலிகள் என்று தான் நான் குறிப்பிட்டிருந்தேன். கற்புக் கிடையாது என்று யார் சொல்கிறார்கள் ? ‘பெண்ணுக்கு தாய்மை கூடுதல் பெருமை என்று என்னைத் திருத்தியிருந்தால் மகிழ்ந்திருப்பேன் ‘ என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. தாய்மை பெருமையானது என்று தான் நானும் குறிப்பிட்டிருந்தேன். நபிகளையோ இராமனையோ பெற்றால் மட்டுமல்ல, எல்லா தாய்மையும் பெருமையானது என்றும் குறிப்பிட்டிருந்தேன். இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள் ? கூடுதல் பெருமை, சிறிய பெருமை என்றெல்லாம் ஒன்றுமில்லை. பெருமை அல்லது இல்லை. பெருமை என்றுதான் நானும் குறிப்பிட்டிருந்தேன். குழந்தை பெறாத மூதாட்டி என்ன, சிறு பெண்களைகூட அம்மா என்றோ, ஒளவை என்றோ கூப்பிடுங்கள். அது உங்கள் பண்பைக் காட்டும் அவ்வளவுதான். இதற்கெல்லாம் யாரும் வந்து வாதிட மாட்டார்கள். இப்படியெல்லாம் கேட்பது விதண்டாவாதம். அடிப்படைக் கேள்வியிலிருந்து திசை திருப்பி வாதமிடுகிறீர்கள். அடிப்படைக் கேள்வி, பெண்களில் ஏன் நபிகள் இல்லை ? என்பது. (அதுவும் நீங்களே கேட்டதுதான்.) உங்கள் பதில், அவர்களுக்குதான் தாய்மை என்னும் பெருமையிருக்கிறதே என்பது. அதுமட்டும் சரியான பதிலா. கேள்வியின் கனத்திற்குண்டான போதுமான விளக்கமாக இல்லை என்பது தான் என் வாதம். தாய்மை என்னும் பெருமை இருக்கிறது என்ற காரணத்தினால் மட்டும் பெண்களை அடக்கிவைக்க வேண்டுமா என்பதுதான் வாதம். இதற்கான சரியான விளக்கத்தை கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தால், அதைவிட்டுவிட்டு எதையோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆண்கள் மட்டும்தான் பூசாரிகளாக இருக்கவேண்டும் என்று எந்த இந்துமத புத்தகங்களிலும் சொல்லப்படவில்லை. (குறைந்த பட்சம் நான் படித்த தமிழ் சமய நூல்களில்). பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிலக்கு போன்ற காரணங்களினால் அவர்கள் பூசாரிகளாக இல்லை. (கடவுள் சிலைகளை தொட்டு அபிஷேகம் போன்றவைகளை செய்யவேண்டும் என்பதால்). மேலும் பூசாரிகள் மேல்சட்டை அணியக்கூடாதென்றும் எங்கும் சொல்லப்படவில்லை. காற்றோட்ட வசதிக்காக ஆண் பூசாரிகள் அவ்வாறு இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் சிறு கோவில்களில் பெண் பூசாரிகளை நான் பார்த்திருக்கிறேன். (மிக அரிது). அவர்கள் கண்ணியமான உடையே அணிந்திருப்பார்கள்.
கண்ணியமான உடை அணிவது சமுதாயம் மற்றும் ஒழுக்கம் சம்பந்தமானது. மதம் சம்பந்தமானதல்ல. விதண்டாவாதத்திற்காக கேட்டப்பட்டக் கேள்வி என்றாலும், எனக்குத் தெரிந்த நியாயமான பதிலை சொல்லியிருக்கிறேன். பெண்கள் இறையில்லத்திற்கே செல்லக்கூடாதென்பது போன்ற கருத்துக்கள் இந்து மதத்திலில்லை. (இது போன்ற சிறு சிறு கேள்விகளுக்குண்டான விளக்கங்கள் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற கண்ணதாசன் எழுதிய புத்தகத்தொகுப்பிலிருக்கிறது. வெறுப்பு உங்கள் மனதில் இல்லாமலிருந்தால் வாங்கி படித்துப்பாருங்கள்.) உங்கள் கேள்வி ‘ஏன் ஒரு சில சாதியினர் மட்டும் பூசாரிகளாக இருக்கிறார்கள் ? ‘ என்பதாக இருந்திருந்தால் நியாயமாக இருந்திருக்கும்.
ஆசிட் ஊற்றுபவர்களின் தவறு. பள்ளிவாசலை இடிப்பவர்களின் தவறு. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆசிட்
ஊற்றுபவர்கள் கூறும் காரணம் இஸ்லாத்தில் சொல்லி இருக்கிறது. (முக துணி போட) போடாததால் ஆசிட் ஊற்றுகிறோம் என்பது. அங்குதான் பிரச்சனையே. அவர்கள் அப்படி இஸ்லாத்தை குறிப்பிடாவிட்டால் நீங்கள் இப்போது சொன்னதுபோல எளிதாக ஆசிட் ஊற்றுபவர்கள் மேல் தவறு என்று சொல்லிவிடலாம்! இந்து மதத்தில் சொல்லியிருக்கிறது அதனால் தான் இடிக்கிறோம் என்று அவர்கள் சொன்னால் இந்துமதத்தில் தவறு என்று நீங்கள் கூறலாம். இல்லையாதலால் இடித்தவர்மேல் தான் தவறு என்றுதான் கூறமுடியும். பள்ளிவாசலை இடித்துவிட்டு கோவில் கேட்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். கோவிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டிருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். எனவே அந்த வாதத்தை எடுக்காதீர்கள். அது அரசியல். அந்த வாதத்தை நாம் முடிவுக்கு கொண்டுவரமுடியாது. அங்கு மட்டுமல்ல வேறு எராளமான கோவில்களை மொகலாய மன்னர்கள் இடித்திருப்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எனவே நாம் அந்த வாதத்திற்கு செல்லவேண்டாம் – உங்கள் நல்லதிற்காக! போன வாரம் நண்பர் ரூமியிடம் கேட்டதையே கேட்கிறேன். சரி ஆசிட் ஊற்றுவதாவது தீவிரவாதிகள் செயல் எனலாம், செளதிக்கு செல்லும் வேற்று நாட்டு, வேற்று மத பெண்களும் பர்தா அணியவேண்டுமென ஏன் சொல்கிறார்கள். இதையேன் தவறென்று நீங்கள் யாரும் கேட்பதில்லை ? கண்ணியம் கண்ணியம் என்று கூருகிறீர்களே, வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் வேறுநாட்டுப் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று தெரியாதா ?
மேலும் ‘இந்துத்வா ‘ என்பது அரசியல். அதற்கும் இந்து மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! இந்துமத கடவுள்களின் பெயர்களை அரசியல் லாபத்திற்காக அவர்கள் உபயோகிக்கிறார்கள் என்பதைத்தவிர ‘இந்துத்வா ‘விற்கும் இந்துமதத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. இதை நான் உறுதியாக சொல்வேன். தலிபன்கள் புத்தர் சிலைகளை உடைத்ததற்கும் இந்துத்வா தீவிரவாசிகள் பள்ளிவாசலை உடைத்ததற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டுமே தவறான செயல்கள்தான். தவறான என்பதைவிட தேவையில்லாத செயல் என்பது மிக பொருந்தும். தங்கள் வெறுப்புகளை மதத்தின் பெயரால் வெளியிட்டதன் அடையாளங்கள் அவைகள். இந்துத்வா-வாதிகளுக்கும் இந்து மதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று நான் சொல்வதுபோல, ஆசிட் ஊற்றுபவர்களும், சிலைகளை உடைத்தவர்களும் இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று உங்களால் பகிரங்கமாக கூறமுடியுமா ? ஏன் நீங்கள் யாரும் அவ்வாறு கூறுவதில்லை ?
முகத்தைக்கூட மூடசொல்லி ஏன் வற்புறுத்துகிறீர்கள் என்று கேட்டால், தொப்புள் தெரிய ஆடை அணியசொல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று சொன்னால் என்ன செய்ய ? ‘வைத்தால் குடுமி, சிரச்சா மொட்டை ‘ என்று பேசினால் எப்படி ? முகம் முதல் முழுமையும் மூடாமல், தொப்புள் தெரியாமல், மார்புத்துணி விலகாமல் ஆடையே அணியமுடியாதா ? மற்ற குலப்பெண்கள் கண்ணியமாக ஆடை அணியத்தானே செய்கிறார்கள். நான் முன்பே குறிப்பிட்டது போல ஆடை அணிவது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. சமயம் சார்ந்ததல்ல. நாம் அனைவருமே நல்ல ஒழுக்கத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லி தந்தால் போதும். அவர்களே கண்ணியமாக ஆடை அணிவார்கள். கண்ணியமற்றதை அவர்களே விலக்கிவிடுவார்கள். இதற்கு கட்டாயம் தேவையில்லை. மேலும் பெண்கள், என்ன ஆடை அணிவது என்று நாமே தீர்மானித்தால் எப்படி ? அது எப்படி சுதந்திரம் ஆகும். அவர்களுக்குண்டான ஆடையை அவர்களே எப்போது தேர்ந்தெடுப்பது ? கணவனாக இருந்தாலும்கூட பெண்விரும்பாவிட்டால் தொடக்கூடாது என்று சட்டமே உள்ளது.
தங்கள் உடல், உள்ளத்தைத் தருவதற்கே பெண் விருப்பத்திற்கு மதிப்புக்கொடுக்கும்போது, ஒரு ஆடை அணிவதில்
அவர்களுக்கு விருப்பமிருப்பதை அணியக்கூடாதா ? அதை அவர்கள் தேர்ந்தெடுக்கமாட்டார்களா ?
‘இஸ்லாத்தில் விவாகரத்து செய்யும் முறைதான் எளிமையாக்கப் பட்டிருக்கிறதே தவிர விவாகரத்தை ஊக்குவிக்கவில்லை – தெரியுமா செய்தி ? ‘ என்று எழுதியிருக்கீங்க. இதென்னய்யா அதிசயமான வாதம். ஊக்குவிக்க வேறு செய்யவேண்டுமா ? இரண்டுவிதமாகப் பார்க்கிறேன். ஒன்று, மிக மிக எளிமையாக்கப்பட்டிருப்பது. மோசமான கருத்துவேறுபாடு எனில் சேர்ந்திருக்க சொல்லி யாரும் சொல்லவில்லை. ஆனால் சாதாரண கருத்துவேறுபாட்டிற்கே, வேறு முயற்சி ஏதும் செய்யாமல் விவாகரத்து வாங்கிவிட முடியுமெனில், குடும்ப வாழ்க்கை முறையே கேள்விகுறி ஆகிவிடும். மேலும் மோசமான ஆண்களுக்கு நிறைய பெண்களை அடைய – அதிகாரப்பூர்வமாக அடைய! – மிக எளிதான வசதியாக இருக்கிறது. எந்த தடையுமில்லை. அவன் செய்யவேண்டியதெல்லாம் ‘கருத்து வேறுபாடு, விவாகரத்து அளிக்கிறேன் ‘ என்று சொல்வதுமட்டும்தான். இதை சரியென்று ஒத்துக்கொள்ளமுடியுமா ? வளைகுடா நாடுகளில் பணக்கார ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்காவது பணம் கிடைக்கும். (அதை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்யமுடியும் என்பது வேறு விடயம்). இந்தியா, பாகிஸ்தான்போன்ற ஏழை நாட்டுப் பெண்களின் நிலை என்ன ? எளிதாக விவாகரத்து அளித்துவிட்டால் அவர்கள் நிலை என்ன ? அவர்கள் மனம் என்ன கஷ்டப்படும் ?
இரண்டாவது, சட்டம் சம்பந்தமானது. சட்டம் எல்லோருக்கும் பொது என்னும் போது, சமய பெயரினால் ஒரு வகுப்பினர் மட்டும் எளிதாக விவாகரத்து செய்துகொள்ளலாம் எனில் அது என்ன விதமான நீதி ? அந்த சட்டத்திற்கு என்ன மதிப்பு ?
இதைப்பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போம்.
கருத்து சொல்பவர்களை திருடர்களோடு ஒப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது! ஒரு சிறு பிள்ளை மிட்டாய் திருடிவிட்டால் மரண தண்டனைக் கொடுக்கமுடியுமா ? இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களையத்தான் சட்டங்கள் இருக்கின்றன. என்ன தப்புக்கு என்ன தண்டனை என்றும் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கருத்து சொல்பவனுக்கு மரண தண்டனை என்பது ஒத்துக்கொள்ளக் கூடியதல்ல! உண்மையை திருடுபவனை மன்னிக்ககூடாது என்கிறீரகள். ஆனால் எது உண்மை என்பதே பிரச்சனையாக இருக்கலாமல்லவா ? உங்களுக்கு உண்மையாகத் தெரிவது அவனுக்கு பொய்யாகத்தெரியலாம். சமய உண்மைகள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இதுதான் உண்மை என்று அடித்துக் கூற முடியாது. உங்கள் நம்பிக்கை உங்களுக்கு உண்மை. அவன் நம்பிக்கை அவனுக்கு உண்மை. நம்பிக்கையே இல்லாமலும் மக்கள் இருக்கிறார்கள். இப்படி பலதரப்பட்ட மக்களையும் ஒன்றாக பாவிக்கத்தான் சட்டங்கள். கருத்து சுதந்திர அடிப்படையில் மரண தண்டனை வழங்குவது எல்லாம் கொஞ்சம்-கொஞ்சமென்ன நிறையவே- அதிகம்.
ஒருவன் மன்னித்தால் அது ஒருவனின் பெருந்தன்மையே. ஒரு சமயமே மன்னித்தால் அது அந்த சமயத்திற்கே பெருமைதான். குறைந்தபட்சம், சட்டங்களில் இல்லாத தவறுகளுக்கு. சட்டப்படி தண்டனைப் பெற்றவர்களையே மன்னிக்க ஜனாதிபதி போன்றோர்க்கு அதிகாரம் அளித்திருப்பதும் சமூகமே.
‘பெண்கள் பர்தா அணியவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது ‘ என்று ஒத்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள். பெண்கள் சமமாக நடத்தப்படவில்லையெனில், தீவிரவாதம் இருக்குமெனில் அவற்றைக் களைய பாடுபடுவது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை என்று நீங்களும், ரூமி போன்றவர்களும் சொல்லி வருகிறீர்கள். ஆனால் அதற்கான முயற்சி எதுவும் இல்லை.
முதல் காரணமாக நான் பார்ப்பது. தவறுகளை ஒத்துக்கொள்ள மறுப்பதில்தான். தவறுகள் இருக்கிறதென்று சுட்டிக்காட்டினால் ஒத்துகொள்ளாமல் – அதற்கு பலம் சேர்க்க- வாதாடிக்கொண்டே இருப்பது. தவறுகளையே ஒத்துக்கொள்ளாமலிருக்கும்போது அதை களைவது எப்படி ? தவறுகளை ஒத்துக்கொள்வதினால் ஒரு மதம் மோசமான மதமாகிவிடுவதில்லை. மதங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்ப்ட்டவைகள் தான். எனவே எல்லா மதங்களிலும் தவறுகள் இருப்பது இயல்பே.
அதை ஒத்துக்கொள்வதுதான் அதைக் களைவதற்கான முதல் படி. இந்து மதத்திலுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை பெரியார் சுட்டிக்காட்டிய போது பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். மனிதனை மனிதனாக வாழச் செய்யத்தான்
மதங்கள் ஏற்பட்டிருக்கிற்றன எனில் அம்மதங்களை செம்மைப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை என்று நாம் அனைவரும் உணர்வோமாக.
*******************
அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு,
வணக்கங்களுடன் பித்தன். என் கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்று தான். மிக எளிமையான கேள்வி. ‘மற்ற மொழிகள எதற்குமில்லாத அத்தனை முக்கியத்துவம் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் தரவேண்டும் ? ‘ இந்தியாவில் 200-கும் மேற்பட்ட மொழிகள் இருக்கும்போது இதை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன ?
‘நாம் சமஸ்கிருதம் கற்பதற்கான காரணங்களாக கூறுவது சமூக கலாசார சூழல் சார்ந்தவை ‘ என்று கூறியிருக்கிறீர்கள்.
ஆனால் ஒரு நியாயமான/அவசியமான காரணத்தையும் கூறவில்லை. ‘நாராயண குரு சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்துக்கொண்டார், அம்பேத்கார் ஒரு படி மேலே போய் சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று கூறினார். ‘ என்பதெல்லாம் என்ன ? இவைகளைக்காரணங்களாக ஒத்துக்கொள்ள சொல்கிறீர்களா ? அம்பேத்கார் தமிழை படிக்கவில்லை. படித்திருந்தால் தமிழ்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பார்! சரி, இப்போது அப்துல் கலாம் அவர்கள் தமிழ் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறினால் தமிழை தேசிய மொழியாக ஆக்கிவிடுவீர்களா ? இவற்றிற்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லை. தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் அவ்வளவே. நான் போன கடிதத்தில் குறிப்பிட்டது போல, நல்ல சமய கருத்துக்கள் இருக்கும் ஒரே காரணத்துக்காக அனைவரும் படிக்கத்
தேவையில்லை. யாராவது சிலபேர் மொழி பெயர்த்துவிட்டாலே போதும். நம் நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவது போல ஆகிவிடும் என்பதும் ஏற்புடையதல்ல. எனில் 200-கும் மேற்பட்ட அனைத்து மொழிகளையும் படிக்க வேண்டியதாகும். சாத்தியமும் இல்லை. தேவையும் இல்லை. இதெல்லாம் படிக்காமலேயெ அனைவரும் இந்தியர்கள் என்றுதான் வாழுந்துகொண்டிருக்கிறோம். வேறு எந்த நியாயமான காரணமும் தேவையும் இல்லாமல் ஒரு மொழியை படி படி என்றால் எப்படி ? மொத்த மக்கள் தொகையில் 3 சதவிகிதமே அந்தணர்கள். அதில் ஒரு 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே சமஸ்கிருதம் அறிந்தவர்கள். இப்படி மொத்த மக்கள் தொகையில் 0.0009 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே அறிந்த மொழியை – பேச்சு வழக்கிலும் இல்லாத ஒரு மொழியை – புதிதாக எந்த படைப்புகளும் இல்லாத மொழியை – படிக்கவேண்டும் என்று பிடித்து தொங்குவது எதற்காக ? சமூக கலாசார காரணங்களுக்காக தான்
எனில் கட்டாயமாக அதை படிக்கக் கூடாது என்பது தான் சரியாக இருக்கும்! ஏனெனில் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் சாதி வேறுபாட்டு – கீழ்தரமான கருத்துக்களும் உறைவிடமாக இருப்பது அந்த மொழியிலுள்ள படைப்புக்களே!! (மற்ற நல்ல சமயக் கருத்துக்களும் இருக்கின்றன என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவற்றை மொழி பெயர்த்துவிட்டாலே போதுமே).
நான் சமஸ்கிருதத்தில் எதையும் படித்ததில்லை. கம்பராமாயணம் கூட (இன்னும்) படித்திராத அசடு நான். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட இராமாயணத்தையும் பார்த்ததில்லை. (ஒரு சில காட்சிகளை எப்போதாவது வீட்டிலிருக்கும் போது பார்த்ததோடு சரி). ஆனால் எனக்கு முழு இராமாயணமும் தெரியும். செவிவழி கதைகளாக கேட்டே அறிந்திருக்கிறேன். அதுபோல கம்பர் சமஸ்கிருதம் அறியாமல் இராமாயணம் எழுதியிருந்தாலும் அது சாத்தியமே. (கம்பர் சமஸ்கிருதம் படிக்கவில்லை என்று நான் கூறவில்லை. சாத்தியத்திற்கான வாதத்தையே வைக்கிறேன்). 100 கோடி மக்களில் (100,000,0000) 10 அல்லது 15 பேரை சொல்லிவிட்டு இவர்கள் அனைவரும் விதிவிலக்கா என்று கேட்டால் என்ன சொல்வது! விதிவிலக்கில்லாமல் என்ன ? ‘இந்த விசித்திர விதிவிலக்கு விதிவிலக்கின் இலக்கணத்துக்கே விதிவிலக்காக இருக்கும் போலிருக்கிறது. ‘ என்று நீங்கள் வியப்பந்தான் வியப்பாக இருக்கிறது. விதி விலக்கின் இலக்கணத்தை தான் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறோம்!! நீங்கள் சொல்லியிருக்கும் பட்டியலை ஒரு தடவை நன்றாக பார்த்தாலே விதிவிலக்குகள் என்று தெளிவாக தெரிகிறது. முதலாவது, இவர்கள் அனைவரும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்தவர்கள். வால்மீகியும் விஸ்வாமித்திரரும் எப்போது தோன்றியவர்கள் என்று சரியாக கூற முடியாது. கம்பரும் விவேகானந்தரும் வேவ்வேறு கால கட்டத்தை சேர்ந்தவர்கள். (அதிலும் கம்பர் தமிழ் நாடு , விவேகானந்தர் வங்காளம்)வெவ்வேறு காலகட்டத்தில் – வேறு பகுதிகளில்/வேறு மொழிகள் பேசுபவர்கள் – சிலர் விதி விலக்குகளாக இருந்திருக்கிறார்கள். இதில் என்ன வியப்பதற்கு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. மேலும் நீங்கள் குறிப்பிட்டவர்கள் புலவர்களாகவோ, துறவிகளாகவோ இருக்கிறார்கள். அந்த காலத்தில் புலவர்கள் தான் அரசர்களுக்கு ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். (வரலாற்று சான்றுகள் உண்டு). சாணக்கிய அரசியல் சூழ்ச்சிகளை, பல கலைகளை சொல்லித்தர வேண்டி இருந்திருக்கும். எனவே அவர்கள் படித்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். துறவிகள் தங்கள் சமய கருத்துக்களை பரப்ப பல மொழிகளையும் படித்திருக்க வேண்டியது அவசியம். பல மொழிகளிலும் உள்ள சமய கருத்துக்களை அறிவதும் அவசியம். எனவே அவர்கள் படித்திருப்பதிலும் அதிசயமில்லை. இப்போது இருக்கும் சித்பவானந்தாக்களும், வேதாத்ரி மகரிஷிகளும் ஆங்கிலம் அறிந்திருக்கிறார்கள், மேற்கோள்காட்டுகிறார்கள். எனவே ஆங்கிலத்தையும் நம் கலாசாரத்தையும் பிரித்து பார்க்கக் கூடாது என்பீர்களோ ?!
‘ சமஸ்கிருதமே தமிழருடையது இல்லை எனக் கூறுவது தமிழர் பாரம்பரியத்தையே மறுதலிப்பதாகும் ‘ என்று நீங்கள் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, சிரித்து சிரித்து வயிற்றுவலியே வந்துவிட்டதய்யா. இந்த வருடத்திற்கான சிறந்த நகைச்சுவையாக இதை எடுத்துக்கொள்ளலாம். வருடம் முடியும் வரையில் கூட காத்திருக்க தேவையில்லை! இதை எதுவும் தோற்கடிக்க முடியாது!! சங்கர ‘மட ‘ங்கள் சொல்வதுபோல ‘சமஸ்கிருதம் தான் கடவுளுக்கு உகந்த (தெரிந்த ?!) மொழி ‘ என்பது போல நீங்களும் எதாவது சொன்னால் வேண்டுமானால் இதைத் தோற்கடிக்கலாம். (அது எக்காலத்திற்குமான சிறந்த நகைச்சுவை!). தமிழ் பாரம்பரியத்திற்கும், சமஸ்கிருதத்திற்கும் என்னய்யா சம்பந்தம் ?! சமயகுரவர்கள் வாக்கினை மட்டும் மேற்கோள் காட்டிவிட்டு தமிழ் பாரம்பரியம் என்பது நகைப்புக்குரியது. சமயம் என்பது பாரம்பரிய, கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான்; அது மட்டுமே கலாச்சாரமில்லை. முன்பே குறிப்பிட்டது போல சமய குறவர்கள் பல மொழிகள் படித்திருப்பர். தமிழ், சம்ஸ்கிருதம் மட்டுமல்ல, மராத்தி, பெங்காலி என்று அனைத்து மொழிகளிலும் இந்துமதக் கருத்துக்கள் இருக்கலாம். அவை ஒன்றுக்கொன்று மேற்கோள் காட்டிக்கொள்வதும், பாராட்டிக்கொள்வதும் இயல்பான சமய நிகழ்ச்சிகள். இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அந்த மொழிகள் தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்தது என்று கூறுவது அறிவீனம். வெண்டுமானால் இந்து சமய நெறி (சமஸ்கிருத நெறி இல்லை) தமிழ் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று சொல்லலாம். அது நியாயமாக இருக்கும்.
எத்தனை சதவிகித மக்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் ? அதில் எத்தனை சதவிகித மக்கள் அந்தணரல்லாதோர் ? என்ற புள்ளிவிவரங்களை -போன கடிதத்திலேயே- பெரிய மனது பண்ணி வெளியிட கேட்டிருந்தேன். அப்படி செய்திருந்தால் குட்டு வெளிப்பட்டிருக்கும். விசித்திர விதி விலக்கு இலக்கணங்களையெல்லாம் நாம் ஆராந்துகொண்டிருக்கும் அவசியம் இருந்திருக்காது. இப்போது கூட ‘எல்லோரும் படிக்க வேண்டும். அது தான் சிறந்த மொழி (குறைந்த பட்சம், சமய சாமிகளுக்கு!!) சமஸ்கிருதம் வேண்டும் ‘ என்று கேட்பவர்களில் 99.99 சதவிகிதத்தினர் அந்தணர்களாக இருப்பது ஏன் ?
இதை நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். (சிந்திக்க வேண்டியதில்லை தெரிந்ததுதானே என்கிறீர்களா ?).
நாங்கள் சிந்தித்து தெளிந்துவிட்டோம். அதிலுள்ள சாதி வேறுபாட்டுக் கீழ்தரமான கருத்துக்கள், தங்கள் சாதி வெறிக்கு உதவும் என்பதால் தான் அவர்கள் இன்னும் அதை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். வேறு எந்த நியாயமான காரணங்களையும் சமஸ்கிருதம் வேண்டுவோர் இன்னும் சொல்லவில்லை. (சொல்லவும் முடியாது. இருந்தால் தானே).
இதையொட்டியே இன்னுமொரு சிந்தனை/கேள்வி ? இப்போது காஞ்சியில் கருவரையில் நுழையும் போராட்டத்தை தி.க.வினர் அறிவித்திருக்கிறார்கள். அதை எதிர்த்து ‘இந்துத்வா ‘ தீவிரர்கள் குரல் எழுப்புகிறார்கள். அதற்கான என்ன காரணங்களை கூறுகிறார்கள் ? ஒன்றுமில்லை – சாதிவெறியைத்தவிர. இந்த காலத்திலும், நாடுகளும் அறிவியலும் முன்னேறிவிட்ட நிலையிலும், நாடுகளுக்கான இடைவெளிகள் குறைந்து, சமதர்ம கருத்துக்கள் பரவ வேண்டிய கால கட்டத்திலும், கருவறைக்குள் நுழைய போராட்டம் நடத்த வேண்டிய நிலையிலிருப்பதே இந்தியாவிற்கு கேவலம். அதையும் சாதி காரணங்காட்டி எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களை விட கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள் இருக்கவே முடியாது! வேறு என்ன நியாயமான காரணங்களை கூறமுடியும் ? அந்தணர்கள் மட்டும் தான் கருவறையுள் நுழைய முடியுமென்றா ? அவர்களே நுழைந்துவிட்ட இடத்தில் யார் வேண்டுமானாலும் நுழையலாம்!! சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்ல அந்தணர்களால் மட்டும் முடியுமென்றா ?! தமிழிலுள்ள திருவாசகத்தையோ, பாசுரங்களையோ சொல்லி மற்றவர்கள் வணங்கிக்கொள்ளட்டும். கடவுள் கட்டாயம் ஏற்றூக்கொள்வார். அப்புறம் ஏன் நுழையக்கூடாது ? நியாயமான காரணங்களை யார் வேண்டுமானாலும் சொல்லுங்கள், அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறோம். சக மனிதனை
மதிக்காமல் கீழ் சாதி என்று பிரித்துப்பார்க்கும் கீழான எண்ணங்கொண்டவர்கள் பெரியவாள்களாம் (பெரிய வாலு என்று வேண்டுமானால் சொல்லலாம்!), சக மனிதனை மனிதனாக நடத்து, அனைவரையும் கோவிலுக்குள் விடு என்று பெரியார் சொன்னால் அது மட்ட-மலின பிரச்சாரங்களாம். என்னடா இது நம் நாட்டுக்கு வந்த சோதனை!
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எம்மதமும் சம்மதம். எல்லா மக்களும் சமம். மக்களை நெறிப்படுத்துவதால் மதம் முக்கியம். ஆனால் அதைவிட முக்கியம் மனிதம். மனித நேயத்தை வளர்க்காத மதங்களோ, சமூக ஏற்றத்தாழுவுகளில் மனிதனை அமுக்கி பிரித்துவைக்கும் மதக்கருத்துக்களோ தேவையில்லை. யாரையும் புண்படுத்துவதற்காக எதையும் இங்கே எழுதவில்லை. மனித நேயம் மங்காமல் மலரவே எழுதுகிறேன். பல நேரங்களில் மதத்தைத் தழுவுவோரின் கீழான சிந்தனைகளால் கருத்துக்களை புகுத்திவிடுவதால், பின்பற்றுவதால் அம்மதத்திற்கும் சேர்த்து கெட்ட பெயர் வந்துவிடுகிறது. அது மதத்தின் குற்றமில்லையென்றாலும், அம்மாதிரிக்கருத்துக்கள் அவர்கள் மனதில் தோன்றாமலிருக்க செய்ய முடியாமல் போனதால் (நல்ல கருத்துக்களை சிந்திக்க செய்ய தவறியதால்) அந்த மதமும் தார்மீக அடிப்படையில் தோற்றுவிட்டதாகவே கருதுகிறேன். தவறான கருத்துக்கள், மனித நேயத்தை நிராகரிக்கும் கருத்துக்கள் ஒரு மதத்தில் இருப்பின், அதை யார் சொல்லியிருந்தாலும் – கடவுளர்களே சொன்னதாக சொல்லப்பட்டிருந்தாலும் – அதை நீக்க எல்லோரும் பாடுபட வேண்டும் என்றும், எந்த வித தயக்கமும் காட்டத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க மனிதம். வளர்க மனித நேயம்.
பித்தன்.
piththaa@yahoo.com
திரு பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகளில் சிலதை படித்தேன். ரொம்ப நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது.
அன்புடன்
நாகூர் ரூமி
ruminagore@hotmail.com
- மா ‘வடு ‘
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- எம காதகா.. காதலா!
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- காதலுக்கு என்ன விலை ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- கவிதைகள்
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- நானோ
- நேற்றின் சேகரம்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- உருகி வழிகிறது உயிர்
- மீண்டும் சந்திப்போம்
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- இது என் நிழலே அல்ல!
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- பழையபடி நடந்திடுவேன்..
- விடியும்!- நாவல்- (34)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5