கடிதங்கள் மார்ச் 25 2004

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா, நல்ல ராமன்.சூரியா, ஆசாரகீனன்



கோ.ராஜாராம், ஜெயமோகன், பித்தன்….

கோ.ராஜாராமின் ‘தமிழ் எழுத்தாளனின் ஓர் அவலவரலாறு ‘ சமீபத்தில் திண்ணையில் வந்த உருப்படியான கட்டுரைகளில் ஒன்று. தமிழில் தற்போதையச் சூழலில் பெரும்பாலான எழுத்துக்குப் படைப்புத் தகுதி என்பதில்லை. உற்பத்தித் தகுதி மட்டுமே உண்டு. உற்பத்திப்பொருளைச் சந்தைப்படுத்துவதற்கு கையாலாகதவர்கள் முதுகுவளையக் காத்திருப்பதை, வணிக இதழ்கள் புரிந்துள்ளன. சமீபத்தில் காலச்சுவடு இதழில் ஒரு வாசகர், தனக்குப் பரிசாக அறிவித்திருந்த 50ரூபாயை குமுதம் இதழ் இறுதிவரை கொடுக்கவில்லை என்று அறிவித்திருந்தார். திரு. சுஜாதா அவர்கள் அம்பல இணைய இதழ் கட்டுரையில் தான் குமுதத்தைவிட்டு வெளியேறியதற்கான காரணங்களில் ஒன்றாக உதவி ஆசிரியர்களின் ஊதியங்கள், படைப்புக்கான சன்மானங்கள் குறித்து எழுதியிருந்ததாக நினைவு. இவ்வணிக இதழ்களிடம் ஆரம்ப நிலையிலிருக்கும் சாமான்ய எழுத்தாளர்கள் படுகின்ற இன்னல்கள் இன்னுமொரு ராமாயாணம்.

இன்றையச் சூழலில், சிற்றிதழ்களையும் பெரிதாக தலையில் தூக்கிக் கொண்டாடவேண்டாம். கைகாசுபோட்டு நடத்தியவர்கள் காலம் மலையேறிவிட்டது. ஒரு சில பிழைக்கத் தெரியாத இலக்கியவாதிகள் சில சிற்றிதழ்களை அந்த வகையில் நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றுள் சில: ஒரு மூலவரை சுற்றி துதிபாடிகளால் நடத்தப்படும் மண்டலாபிஷேகப் பணிகளைச் செய்கின்றன. இங்கே பணம் நோக்கமல்ல என்பது ஓரளவிற்கே உண்மை. அதுவே முடிவாகாது. தன் இருப்பை, புகழை, எல்லையை பேசுவதற்கான எழுத்து விளம்பரம் இங்கே நடத்தபடுகிறது. இவர்களுக்கு மேலானவானாக எவனொருவன் அங்கீகாரம்பெறுகின்றானோ அவனை பொது எதிரியாக வைத்து, நேற்றுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கைகோர்த்து இலக்கிய விசாரம்கொள்ளுவார்கள்.

வைரமுத்துவின் இதிகாசம்: வழக்கம்போல ஜெயமோகனின் கட்டுரைக்கே உரிய அபத்த குணங்கள். அவரது எதிர்மறைச் சொற்களை உபயோகித்து வைரமுத்துக்கு ஆதரவாக ‘இதிகாசம் பெரிது ‘ என வாதிடமுடியும். எனது வாதத்திற்கு ஆதரவாக நான்கு பிரெஞ்சு எழுத்தாளர்களைத் துணைக்கு அழைக்கமுடியும். என்ன செய்வது ? இங்கே இவர்கள் மட்டுமே இலக்கியங்களாற் புணர்ந்து பெற்றெடுக்கபட்டவர்கள் என்ற நினைப்பிருப்பதை எந்தக் காசியில் முழுகித் தொலைப்பது ? இனி உலகில் எந்த மூலையில் இலக்கியத்திற்கானப் பரிசினை அளிப்பதென்றாலும் ஜெயமோகனிடம் கலந்தாலோசித்துவிட்டு கொடுப்பது நல்லதென இவரது நண்பர்கள் தீர்மானம் போட்டு அனுப்பிவைக்கலாம். திண்ணை வாசக நண்பர்கள் இரண்டுவாரங்களுக்கு முன்னர் ஸ்ரீதரன் என்பவர் எழுதிய கட்டுரையுடன் ஜெயமோகனின் கட்டுரையைய ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். வாதங்களைத் தெளிவாக முன் வைக்கிறது. அக்கட்டுரையை நண்பர்கள் ஜெயமோகனின் எந்தவொரு விமர்சனக் கட்டுரைக்கும் பதிலாகக் கொள்ளலாம் எனச் சிபாரிசு செய்கிறேன்.

பித்தனின் கட்டுரைகளை கவனமுடன் வாசிக்கிறேன். திண்ணைக்கு வருகின்ற இலக்கிய சார்பில்லா இவரது கட்டுரைகளில் நடு நிலமையுள்ளது. எதைச் சொன்னாலும் தெளிவாகச் சொல்கிறார். சில உளறல்களுக்கு, அவரது நேர்மையான பதில்கள் ஆழமானவை, சிந்திக்க வைப்பவை.

நாகரத்தினம் கிருஷ்ணா

Na.Krishna@wanadoo.fr


அன்புடையீர்:

திண்ணை இதழில் கோ.ராஜாராம் அவர்களது கட்டுரை கண்டு மிகவும்

வருந்துகின்றேன். ஓரு நல்ல எழுத்தாளன் வாழ்க்கையில் ஏமாற்றப்படும்போது

வாசகர்கள் துக்கப்படுகிறார்கள். ஆனால், திரு ராஜராம் இதற்க்கு பரிகாரம்

சொல்லியதில் உடன்பாடில்லை. சட்டங்கள் மூலம் இது வரை எந்த நல்ல

காரியமும் நம் நாட்டில் நடப்பதில்லை. லஞ்ச பூஷணங்கள் மலிந்த சட்ட

வல்லுனர்கள்(வல்லூறுகள்) எந்தச் சட்டத்தையும் ஏமாற்ற முயற்ச்சித்து

இப்போ கிடைக்கும் வருமானத்தையும் ஏப்பம் விட்டுவிடுவார்கள். ஆகவே

முதலில் எழுதாளர்கள் ஒன்று சேறவேண்டும். இது ஒரு கனவே. போட்டி,

பொறாமை, மற்றவரைக் கெடுப்பது போன்ற புல்லுருவிகள் ஏறாளம். ஏனவே,

நாணயமான சிறந்த எழுத்தாளர்கள் மட்டும் ஓன்று சேரவேண்டும். இரெண்டாவதாக,

பேராசைப்படாமல், ஒரு கதைக்கு விலையும், லாபத்தில் 10 சதவிகீதமும்

தரப்படவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். இதை லஞ்சம் வாங்காத,

ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியின் உதவியுடன் நடைமுறை செய்யவேண்டும்.

பத்திரிகைகள் எவ்வளவு சம்பாதிக்கின்றன என்பது பற்றிய சிந்தனை

தேவையில்லை. பத்திரிகைகள் நஷ்டப்படும்போது எழுத்தாளர்கள்

நஷ்டத்தை ஈடுசெய்வதில்லை. அப்படி எதிர்பார்க்கவும் முடியாது.

எழுத்தாளர்களூக்கு எப்படி உதவி செய்யவேண்டும் என்பது பற்றியே

சிந்தனை செய்யவேண்டும். முதலில், இந்த மாதிரி ஏற்ப்பாடு செய்து

இரண்டு வருஷம் கழித்து, இந்த முடிவுகளில் தேவையான மாற்றங்கள்

செய்யவேண்டும். சிறிது சிறிதாவே மாற்றங்கள் ஏற்ப்படவேண்டுமே தவிர

தடாலடியாக சட்ட திட்டங்கள் ஏற்ப்படுத்த முயற்ச்சித்தல் நன்மை தராது.

திண்ணையில் கடிதம் எழுதுபவர்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை

மட்டுமே எழுதவேண்டும். பலரது கடிதங்களில் அவரவரது சிந்தனைக்

குறைபாடுகளே வெளியிடப்படுகின்றன. இது மிகவும் வருந்ததக்க வேண்டிய

குறைபாடே.

எழுத்தாளர்களின் நலம் விரும்பும் வாசகன்.

நல்ல ராமன்.

rams@dallas.net


ஜெயமோகன் எழுதிய கடிதம் படித்தேன். அவரது செயலில் அடிப்படையான பிழை ஒன்று உள்ளது என்பேன். அது சரவணன் தன் பெயரையும் அருண்மொழிநங்கை பெயரையும் அச்சில் ஏற்றியதை அவர் அப்படியே விட்டுவிட்டதுதான். சரவணனைத் தக்கவைக்க அவர் செய்துகொண்ட சமரசம் அவரை இன்று சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. இந்த சரவணனைப்பற்றி அவருக்கு நானே எச்சரிக்கை எழுதியிருக்கிரேன். மருதம் சமயத்தில் . [ இதழுக்காக அவர் பொள்ளாச்சி மகாலிங்கத்தை தொடர்பு கொண்ட சமரசம் இதைவிட அவருக்கு சிக்கலை உருவாக்கும் என நான் எண்ணுகிரேன்.னானால் அதை விட சதக்கத்துல்லாவை சேர்த்துக் கொண்ட சமரசம் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். மத ஒர்றுமை எல்லாம் சரிதான். இ ?லாமிய அறிஞர்களின் பின்னணிகள் எப்போதுமே மர்மமானவை.. இதையெல்லாம் நானே அவருக்கு சொல்லியிருக்கிறேன்] வெறுந்தரையில் முக்குளியிடும் அவரது எதிரிகள் இனி இதை சிலகாலம் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். சரி நடக்கட்டும்.

**

பித்தன் என்றபேரில் எழுதுபவரை எவ்வகையில் பொருட்படுத்துவதென தெரியவில்லை . விமரிசனம் என்றசொல் வடமொழி என்பதனால் அதற்குச் சமானமாக உருவாக்கப்பட்ட கலைச்சொல் திறனாய்வு என்றுகூட தெரியாதவரின் இத்தகைய விவாதங்களுக்கு என்ன பயன் ? மனு ?யபுத்திரனையும் எம் யுவனையும் ஏற்பதனால் தன்னால் வைரமுத்துவை ஏற்க இயலாது என்று ெ ?யமோகன் சொல்லும் போது இவர்கள் இருசாராரின் கவிதைகளைப் படிப்பவர்களுக்கு இருவேறு எழுத்துமுறைகளே சொல்கிறார் என்பது விளங்கும். அது விளங்காமல் மனிதர்களை சொல்கிறார் என்று வாதாடும் இவரை எப்படி பொருட்படுத்துவது ? படிப்பின் பலமே திறனாய்வாக அமையவேண்டும். ?தரனின் கட்டுரையும் ஒரு தரப்பை புரிந்துகொள்ளும் முயற்சி இல்லாத வெற்றுச் சொல்லாடலே. இலக்கிய விவாதங்களும் தத்துவ விவாதங்களும் நாகரீக விளிம்புக்குள் நிகழவேண்டுமென்பது நல்ல எதிர்பார்ப்பே. அதை அனைவரும் ஒப்புக் கொள்வர். ெ ?யமோகனின் கட்டுரையிலும் அதுவே சொல்லப்படுகிரது. ஆனால் உலகமெங்கும் ஏன் அப்படி இல்லை என்பதே அக்கட்டுரையில் பேசப்படுகிறது. அதற்கான காரணங்கள்.

பித்தனின் பொறுமையிழப்பு புரிகிறது. ஜெயமோகனின் இலக்கிய நோக்குகளை அப்படியே மறுப்பவர்தான் சோதிப்பிரகாசம் என்பதும் இதே இதழில் அவர் எழுதிய கட்டுரையொன்றையே மறைமுகமாக ஜெயமோகன் மறுக்கிறர் என்பதையும் அதையே சோதிப்பிரகாசம் நக்கல் செய்கிறார் என்பதையும் படிப்பவர்கள் உணரலாம். இலக்கியம் பேசுவதற்கு முன்பாக பித்தன் கொஞ்சம் புத்தகங்களும் படிக்க ஆரம்பிக்கலாம்.

சூரியா


கடிதம்

தமிழ் எழுத்தாளன் உய்வு பெற மேலும் சில யோசனைகள்

தமிழ் எழுத்தாளனின் அவல வரலாறு பற்றிய கோ.ராஜாராமின் கருத்துகளும், தீர்வுகளும் கவனத்துக்குரியவை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எழுத்தை மட்டுமே முழு நேரத் தொழிலாகக் கொள்ள பலரும் முன் வராமல் தடுக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. அப்படி முழு நேர எழுத்தாளர்கள் உருவாகும் வரை தமிழில் நல்ல எழுத்துகள் வெளிவருவது சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

வங்கித் துறை, அரசு அலுவலகங்கள், இந்திய ஆட்சித் துறை, தனியார் துறை நிர்வாகம் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ. தமிழர்கள் என்று பலரும் பகுதி நேரமாக தமிழ் படைப்பிலக்கியத்திற்கு தொண்டு புரிந்து வருவது மகிழ்ச்சி தரும் விஷயம். குறிப்பாக, வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் தமிழில் படைப்பிலக்கியத்துக்கும், சிற்றிதழ்களுக்கும் செய்துள்ள சேவையைப் பற்றி ஒருவர் முனைவர் பட்டம் பெறுமளவுக்கு ஆய்வு செய்ய முடியும்.

அதே சமயத்தில், இவர்களின் இத் தொண்டு முழு நேர எழுத்தாளர்கள் உருவாகாமல் போனதற்கு ஒரு மறைமுகமான காரணமாகவும் அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இவர்களில் சிலர் ‘உடுக்கை இழக்கும் ‘ நிலையிலும், தம் கைக் காசைப் போட்டு பத்திரிகைகளையும், இலக்கியக் கூட்டங்களையும் நடத்துபவர்கள் என்றாலும், எழுத்தாளர்களுக்கு ஊதியம் வழங்குவதைப் பற்றி இவர்களும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. அதைப் பற்றி அவ்வளவு அக்கறை காட்டியதாகவும் தெரியவில்லை.

இனிமேலாவது, சிறுபத்திரிகை நடத்தத் திட்டமிடுபவர்கள் பிற செலவுகளோடு, எழுத்தாளர்களுக்கு ஒரு கண்ணியமான ஊதியத்தையும் வழங்க முன் வரவேண்டும். பதவிகள், இத்தியாதிகளுடன் வசதியாக இருக்கும் எழுத்தாளர்கள், தாங்கள் பத்திரிகைகளில் எழுதும்போது, ஏதோ அறிவு தானம் செய்வதாக நினைத்துக் கொண்டு இறும்பூது எய்திவிடுவதோடு மட்டும் நின்று விடாமல் அதற்கான ஊதியத்தை வற்புறுத்திப் பெற்றுக்கொள்வதும் அவசியம். அதோடு மட்டுமல்லாமல், அந்தப் பணத்தை எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் நலிவடைந்த நிலையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கு, தனிப்பட்ட முறையிலோ அல்லது ஓர் அறக்கட்டளையின் மூலமோ வழங்க முன்வர வேண்டும்.

ஏதேனும் தப்பு செய்யும் போதெல்லாம், தம் இஷ்ட தெய்வத்திற்கு வைத்திருக்கும் உண்டியலில் அபராதமாகப் பணம் போட்டு வருவது சிலரது வழக்கம். ஜீவனோபாயத்துக்காகவோ அல்லது Hyper-graphia காரணமாகவோ அல்லாமல், குடும்பத்தினர் தொல்லை தாங்கமுடியாமலும், பொழுதுபோக்காகவும், பிரபலமடையவும் எழுதும் வசதியான எழுத்தாளர்கள் தாம் ஒரு கதையோ அல்லது கவிதையோ எழுதும் போதெல்லாம், அதைத் தவிர்க்க முடியாத சாமி குத்தமாகக் கருதி ஒரு கணிசமான தொகையை இப்படி வழங்க முன்வரலாம். தப்பித் தவறி அது பிரசுரமாகி விட்டாலோ, இந்தத் தொகை நிச்சயம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். இணைய இதழ்களிலும், மடலாடற் குழுக்களிலும், வலைப் பதிவுகளிலும் (blog) எழுதுபவர்களும் இம் முயற்சிக்குத் தோள் கொடுப்பது அவசியம்.

மற்றொன்று, சில பதிப்பகங்கள் பற்றி. சட்ட விரோதமான முறையில் ஏராளமாகச் சம்பாதிக்கும் சிலர் பதிப்புத் தொழிலில் இறங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ‘கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, வெள்ளைத் தாளைக் கருப்பாக்கும் ‘ இத்தகைய பதிப்பகத்தார், எழுத்தாளர்களது ஊதியம் என்று வரும்போது, தங்கள் கருப்புப் பணத்தைக் கொஞ்சம் தாராளமாகவாவது அள்ளி விடலாம். செய்வார்களா ?

‘காசுகள் ரெண்டு கையிலிருந்தால்

எதையும் எங்கும் நிறுத்தலாம்.

காசு படைத்தவன் தமிழைக் கொண்டுபோய்

எங்கெல்லாமோ நிறுத்தினான்.

நம்

கையிலும் ரெண்டு காசுகளுண்டு;

இனி

தமிழை எங்கே நிறுத்தலாம் ? ‘

– என்று ஞானக்கூத்தன் எழுதிய கவிதை வரிகளால் உத்வேகம் பெற்று பதிப்பகமோ, பத்திரிகையோ தொடங்க முன் வருபவர்கள் எழுத்தாளர்களின் ஊதியம் பற்றியும் சிந்திப்பது மிக மிக அவசியமும், அவசரமுமான ஒன்று.

– ஆசாரகீனன்

aacharakeen@yahoo.com


Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா