கடமை

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

நவநீ



 
குருவிக்கூடு போல ஒரு சிறிய அழகான வீடு. அருகே உருளைக்கிழங்கு விளையக்கூடிய செழிப்பான ஒரு ஏக்கர் நிலம். பக்கத்தில் ரம்மியமான ஒரு நீரோடை. அங்கு கணவன், மனைவி, மகன் என மூவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து கொண்டிருந்தபொழுது, திடீரென அந்தத் தாய் தூக்கத்திலேயே இறந்து விடுகிறாள். தன் மகனோடு வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் பெரியவர் தாயைச் சின்ன வயிதிலேயே தன் மகன் இழந்துவிட்டதால் அவனை மிகச் செல்லமாக வளர்த்ததன் விளைவு, அவன் செய்த சில தவறுகளுக்குத் தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டான்.  தன் தந்தையோடு இருக்கும்போது அவன் தந்தைக்கு மிகவும் உதவியாகவும், பாசமாகவும் இருந்தான்.  தன் வீட்டுக்கருகாமையில் இருந்த ஒரு உருளைக்கிழங்குத் தோட்டத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தச் சொத்தோ வருமானமோ இல்லை. ஒவ்வொரு பருவத்திலும் செழிப்பாக இருக்கும் அந்தத் தோட்டத்தோடு தன் மனைவியின் ஆத்மாவும் கூட இருப்பதாகவே அந்தப் பெரியவர் நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் இந்த முறை மகன் இல்லாததால் தான் தனியாளாக அந்த நிலத்தைத் தோண்டி, உருளை பயிரிட முடியாத ஒரு நிலை.  இதையெல்லாம் நினைத்து வருந்திய அந்தப் பெரியவர் சிறையில் இருக்கும் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில்,
 
“மகனே!
எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் நம் தோட்டத்தை நான் காயவிட்டதில்லை, ஆனால் உன் அம்மா மறைந்த அன்று நான் எப்படி வெறுமையாக உணர்ந்தேனோ அதைப்போல் இன்றும் உணர்கிறேன்.  நீ இருந்திருந்தால் இந்தத் தோட்டம் இந்நேரம் பூத்துக்குலுங்கியிருக்கும். கடந்த வருடம் வரை நீ எனக்கு அவ்வளவு உதவியாய் இருந்தாய். உன் போதாத காலம் நீ சிறையில் வாடுகிறாய்.  நானும் தனிமையில் யாரும் இல்லாமல் தவிக்கிறேன்.  என் இந்தத் தள்ளாத வயதில் ஒரு ஏக்கர் நிலத்தைத் தோண்டி உருளை பயிரிட எனக்குத் தெம்பு இல்லை.  உன் அம்மா ஆசை ஆசையாய்ப் பராமரித்த இந்த நிலம் இன்று வெறிச்சோடிக்கிடக்கிறது.  அதைக் கண்கொண்டு என்னால் பார்க்க இயலவில்லை. எனவே கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தோண்டிப் பயிரிட முயற்சிக்கிறேன். உன் தண்டனை மிக விரைவில் முடியப் பிரார்த்திக்கிறேன்.
உன் வருகைக்காகக் காத்திருக்கும்
 
உன் அன்புத் தந்தை
 
என்று மிகுந்த வேதனையோடு தன் மகனுக்கு எழுதியிருந்தார்.
கடிதத்தை அனுப்பிய நான்காவது நாள் ஒரு கடிதம் வந்திருந்தது.
 
“அப்பா!
தயவு செய்து அந்த நிலத்தைத் தோண்டாதீர்கள். அதில்தான் நான் எனது அனைத்துத் துப்பாக்கிகளையும், ஆவணங்களையும் புதைத்து வைத்திருக்கிறேன்” என்று அனுப்பப் பட்டிருந்தது. கடிதம் கிடைத்த இரண்டாவது மணிநேரத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு பெரும் கூட்டமே வந்து அந்த நிலத்தை தலைகீழாகத் தோண்டிப் போட்டுவிட்டு எந்தத் துப்பாக்கியும்,  ஆவணமும் கிடைக்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர். பெரியவருக்கு ஒன்றும் புரியாமல் குழம்பிப்போனார். நடந்தவற்றையெல்லாம் மறுபடியும் மகனுக்கு எழுதினார். மகனுடைய அடுத்த பதிலில்,
 
அப்பா!
என்னை மன்னித்து விடுங்கள்! என்னால் இங்கிருந்துகொண்டு இதைத்தான் செய்ய முடிந்தது. இப்போது உருளையைப் பயிரிடுங்கள். அம்மாவின் ஆத்மாவும் சாந்தியடையும்.
 
தண்டனை முடிந்து விரைவில் சந்திக்கிறேன்.
பாசத்துடன் மகன்
 
செய்தி:
“நாம் எங்கிருக்கிறோம் என்பதல்ல, எங்கிருந்தும் சாதிக்க முடியும்”
 


navneethsmart@yahoo.com

Series Navigation

நவநீ

நவநீ