ஓ-ஹிப்

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

வை . ஈ . மணி


காலம் எல்லாம் காத்து இருந்து
…… கனடா செல்ல நின்ற என்னை
பாலை ஊட்டி வளர்த்த அன்னை
…… பாசம் பொங்கி ஆசி கூற
நாலு எழுத்து மேலும் கற்று
…… நாடு அறிய புகழும் பெற்று
சோலை போன்ற சச்க டூனில்
…… செல்வம் ஈட்டி வாழ எண்ணி

கடல்க டந்து கனடா நாட்டில்
…… காலை வைத்த வேளை எனது
உடலில் சற்று சோர்வு கண்டு
…… உற்ற நண்பர் நன்சொல் கேட்டு
உடனே டாக்டர் உதவி நாடி
…… உரிய சிகிச்சை பெறவே நகரின்
‘நடந்து- வாரீர் ‘* க்ளினிக் ஒன்றில்
…… நுழைய வரவு ஏற்கும் ஒருபெண்

உரிமை காட்டும் ‘ஓஹிப் ‘** அட்டை
…… ஒழுங்கு பார்த்த பிறகு டாக்டர்
இருத யத்தின் துடிப்பு பார்த்து
…… ஈரல் இரையும் ஓசை கேட்டு
இருமச் சொல்லி நாக்கை நோக்கி
…… எடையெ டுத்து உயர மளந்து
இரத்தச் சொட்டை ஆய்ந்த பிறகு
…… எழுதித் தந்தார் ‘டைஇல நாஆள் ‘!***

சிரித்த எனது பற்கள் பார்த்து
…… சுத்தம் செய்ய வேண்டும் என்றும்
கரிய விழியில் வெள்ளை கண்டு
…… ‘காற்ற ராக்டை ‘ அகற்ற என்றும்

எழுதித் தந்த சீட்டு பெற்று
…… ஏக்கம் உற்று மனமும் நொந்து
பொழுது சாயும் மாலை வேளை
…… படியில் காலை வைத்து இறங்க
பொழிந்த பனிக்க ருக்கு அங்கு
…… பாறை போன்று உறைந்து இருக்க
வழுக்கி விழவே இடுப்பு உடைந்து
…… வலியில் ‘ஓ-ஹிப் ‘ என்று கதற

உதவி புரிய வந்த நண்பன்
…… ஓஹிப் அட்டை கேட்டு நின்றான்!

* Walk – In Clinic
** Ontario Health Insurance Program(OHIP)
*** Tylenol – A medicine

வை . ஈ . மணி
ntcmama@pathcom.com

Series Navigation

வை ஈ மணி

வை ஈ மணி