ஞாநி
சென்ற வாரம் மூன்று நிகழ்ச்சிகள் நடந்தன.
முதலாவதில் சென்னை நகரிலிருந்து ஐந்து பள்ளிச் சிறுவர்கள் காணாமல் போய் மீட்கப்பட்டார்கள். மீட்கப்பட்டபின் சோகமும் அவமானமும் ததும்பும் முகங்களுடன் வளர் இளம்பருவத்தினரான அந்த மூன்று சிறுமிகள், இரண்டு சிறுவர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. ஒரு தனியார் தொலைக்காட்சியும் அவர்களைக் காட்டியது. இவ்வாறு செய்யக்கூடாது என்று பல முறை அறிவுறுத்தியும் கூட ஊடகங்களும் சரி, காவல் துறையும் சரி திருந்துவதாகக் காணோம்.
வாழ்நாள் முழுவதும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் தாங்கள் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்ட வலியைச் சுமந்தபடிதான் இந்தச் சிறுவர்கள் வாழ்ந்தாக வேண்டும். உண்மையில் அவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் காவல் துறை அதிகாரிகளுக்கும் பத்திரிகை தொலைக்காட்சி மேதைகளுக்கும்தான் அறிவுரை அவசரமாகத்தேவைப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறிய இந்த சிறுவகள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தவரே ஆயினும் அவருக்கும் தன் படம் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரக் கூடாது என்று கோரும் அடிப்படை உரிமை உண்டு. இதை ஒருபோதும் நமது காவல், பத்திரிகை உலகம், மதிப்பதில்லை. விபசார வழக்குகளில் கைதாகும் பெண்களின் படங்களை வெளியிடுவதை நிறுத்தும்படி தமிழக மகளிர் ஆணையம் நகர காவல் துறை ஆணையருக்கு எழுதி, அவ்வாறே நடந்து கொள்வதாக அவர் பதிலெழுதி ஓராண்டுக்குப் பிறகும் நிலைமை மாறவில்லை என்பதை இதே பத்தியில் முன்பு சுட்டிக் காட்டியுள்ளேன்.
இந்த சிறுவர்களின் ‘குற்றம்’ என்ன ? துள்ளுவதோ இளமை’ என்ற படத்தைப் பார்த்துவிட்டு சுயமாக உழைத்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையில் சென்றதாக காவல் துறையினரே தெரிவித்திருக்கிறார்கள். ஐந்து சிறுவர்களும் சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் ஆட்டோ டிரைவர், கொத்தனார், வாட்ச்மேன் போன்றோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். படிப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களை தனி டியூஷனுக்கும் அனுப்பி வந்துள்ளனர்.
அந்தப் பெற்றோர்களை மீறி, பள்ளி, டியூஷன் ஆசிரியர்களை மீறி,ஒரு திரைப்படம் அந்த சிறுவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து விடும் சூழ்நிலை இருப்பது நமது சமூகத்தின் கல்வித்தரம், ஆசிரியர் தரம், பெற்றோர் தரம் முதலியவற்றை சுட்டிக்காட்டுகிறது.
எண்பதுகளில் படித்த ஒரு வெகுஜன நாவலில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணிடம் பாலியல் வன்முறை நிகழ்த்திய டான் ஏஜ் சிறுவனைக் காவல் அதிகாரி கண்டுபிடித்துக் கைது செய்துவிடுகிறார். ஆனால் அரசியல் செல்வாக்கினால் அவன் விடுதலையாகிவிடுகிறான். ஆதங்கத்தில் பொருமுகிற அதிகாரி சிறுவனை விடுவிக்கும் முன்பு, அந்தப் பெண்னை அழைத்து சிறுவனிருக்கும் சிறையறைக்குள் சென்று என் ஆசை தீர அவனை செருப்பாலாவது அடியுங்கள் என்கிற ரீதியில் அனுப்புகிறார். உள்ளே சென்ற பெண் சில நிமிடங்களில் எதுவும் செய்யாமல் திரும்புகிறார். ஏன், ஏன் என்று பொருமுகிறார் அதிகாரி. யாரை என்று நான் அடிப்பது என்று கேட்கிறார் அந்தப் பெண். அந்த சிறுவனையா ? அவனை வளர்த்த பெற்றோரையா ? அவன் மனதைக் கலைத்த சினிமாக்களை எடுத்தவர்களையா ? என்று அடுக்கிக் கொண்டே போகிறார். (இந்த நாவலை எழுதியது ‘பாய்ஸ்’ புகழ் சுஜாதாதான்.)
நமது சிறுவர்களுக்குத் தவறான வழி காட்டிகளாக இருக்கும் கல்வியமைப்பை உருவாக்கியவர்கள் , பெற்றோர், ஆசிரியர், திரைப்படப் படைப்பாளிகள் யாருக்கும் தண்டனை கிடையாது. இவர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள் விளம்பரப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
இதே வாரத்தில் நடந்த இரண்டாவது நிகழ்ச்சி தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளையும் நீக்காமல் இரு தமிழ்ப் படங்களைக் காட்டிய குற்றத்துக்காக கொட்டகை ஆபரேட்டர், மேனேஜர் எல்லாம் கைது செய்யப்பட்டதாகும்.
அடிப்படையில் இந்தக் குற்றம் படத்தின் தயாரிப்பாளர்களுடையது. அவர்கள்தான் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை நீக்கிய பிரிண்ட்டுகளை விநியோகஸ்தர்களுக்கும் கொட்டகைகளுக்கும் தரவேண்டியவர்கள்.ஆனால் தயாரிப்பாளர்கள் கிருஷ்ணகாந்த், தியாகராஜன் இருவரும் கைதாவதற்குக் கிடைக்கவில்லை ( !) என்று காவல் துறை தெரிவித்தது. அவர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளுக்கு அளிக்கப்படவில்லை.
இவ்வளவு போலித்தனமான சமூக அதிகார அமைப்பில் , பாதிக்கப்பட்டவர்கள்தான் மீண்டும் மீண்டும் நீதியின் பெயரால் நிவாரணத்தின் பெயரால் மறுபடியும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
மூன்றாவது நிகழ்ச்சி ஸ்ரீீரங்கம் திருமணக்கூடத்தின் கோர விபத்தையடுத்து நடைபெற்ற சம்பவங்கள். அரசு ஊழியர், விவசாயிகள் பிரச்சினைகள் எதிலும் காட்டாத சுறுசுறுப்புடன் ஜெயலலிதா அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் முதல் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 12 ஆயிரம் என்பது வரை கோடிக்கணக்கில் நிவாரணத்தை அறிவித்தது. தா.கிருட்டிணன் கொலைக்கு அனுதாபம் தெரிவிக்க நேரில் செல்லாத கலைஞர் கருணாநிதி முன்பின் அறிமுகமற்ற மணப்பெண் ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் நேரில் கண்டு இரண்டு லட்சம் ரூபாயைக் கழக உதவியாக வழங்கினார். இந்த சுறுசுறுப்பான ‘கஞ்சித்தொட்டி X முட்டை பிரியாணி ’ மனிதாபிமானத்தை அரசியல்வாதிகளிடம் உருவாக்கிய பெருமை தேர்தல் நேரத்துக்கு உரியது.
அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மணப்பெண் ஜெயஸ்ரீயிடம் அவரது இரண்டு சகோதரிகளும், மணமகனும் இறந்த செய்தியைக் கூட இன்னமும் தெரிவிக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறிய இரண்டு தினங்களிலேயே கலைஞர் கருணாநிதி அவரை நேரில் சந்திக்க மருத்துவர்கள் அனுமதி வழங்கியது எப்படி ? உதவி செய்பவர்கள் காசோலையை அனுப்பி வைத்தால் போதாதா ? கைது முதல் நிதி உதவி வரை எதுவானாலும் வீடியோ கேமராவுடன்தான் செய்வோம் என்ற மனநிலையும் சூழ்நிலையும் எவ்வளவு அருவெறுப்பானது.
மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள், பத்திரிகை-தொலைக்காட்சி வியாபாரிகள்,அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என்று பல துறையினரும் போலியான மதிப்பீடுகளை சமூகத்தின் மீது தொடர்ந்து சுமத்திக் கொண்டிருக்கும் சூழலில், எங்கேயாவது ஓடிப்போய்விடலாம் என்று இன்னும் பல சிறுவர்களுக்குத் தோன்றாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.
இந்தியா டுடே பிப்ரவரி 2004
dheemtharikida@hotmail.com
- முரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்
- இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை
- தாமதமான காரணம்
- வட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)
- பேரீச்சம்பழ மிட்டாய்
- கேரட் அல்வா
- கடலைப்பருப்பு அல்வா
- தாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)
- ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்
- நமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –
- கடிதங்கள் மார்ச் 25 2004
- திரு.பித்தன் அவர்களுக்கு கடிதம்
- வேதனையின் நிழல்…
- ஓடாமல் இருப்பதே ஆச்சரியம்
- காதல் பொதுவானது
- தரிசானாலும் தாயெனக்கு!
- தொடர்ந்து வரும் நட்பு..
- கேட்க முடியா ஓசை
- ஞாயிற்றுக்கிழமை மின்விசிறி
- இட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்
- அனிதா கவிதைகள்
- புத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்
- மானுடம்
- தனக்கான நிகழ் காலங்கள்
- மதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்!
- கதை 01 – அலீ தந்த ஒளி
- கொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)
- வடு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17
- புழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12
- சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா
- இருபது/இருபது
- வாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்
- காவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்
- வாழ முற்ப்படுதல்.
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2
- பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்
- மெக்ஸிக்க மணித்துளிகள்
- சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு
- நண்பன்
- நான்
- ஜென் கதை ஒன்று
- இயன்றது
- தொடரட்டும் பயணம்…!!!
- அன்புடன் இதயம் – 12 – நெருப்பு