பாவண்ணன்
எங்கள் பக்கத்து வீட்டில் வாடகைக்குப் புதுசாக ஒரு குடும்பம் குடிவந்தது. அக்குடும்பத்தில் ஒரு சிறுவன் இருந்தான். முதல் நாளே அவன் அவ்வீட்டு வராந்தாவில் தக்கைப் பந்தில் தனிமையில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் கவனிப்பதை அவனும் பார்த்து விட்டான். எனக்கு முதல் பார்வையிலேயே அக்குழந்தையைப் பிடித்து விட்டது. ஏழு அல்லது எட்டு வயதுக்குள்தான் இருக்கும்.
ஒரு வாரப் பழக்கத்துக்குள் அச்சிறுவன் எங்கள் வீட்டுக்கு வரப் போகத் தொடங்கினான். என் மனைவிக்கும் அவனைப் பிடித்து விட்டது. என்ன காரணத்தாலோ எங்கள் மகனுக்கு அவனைப் பிடிக்காமல் போய்விட்டது. தொடக்கத்தில் எனக்கு இது தெரியவே தெரியாது. இரண்டு மூன்றுவார காலத்துக்குப் பிறகுதான் அவன் அசசிறுவனிடம் மெளனத்தைக் கடைபிடிப்பதைப் பார்த்தேன். இத்தனைக்கும் அச்சிறுவன் அண்ணா அண்ணா என்று மூச்சுக்கு முந்நுாறு தரம் இழைந்தான். அப்படியும் ஒரு சிரிப்பைக் கூடப் பதிலுக்கு உதிர்க்கவில்லை இவன். பார்ப்பதற்கு எனக்குச் சிரமமாக இருந்தது.
அன்றைய இரவு நடையின் போது மகனிடம் அவன் வெறுப்புக்குக் காரணம் கேட்டேன். அவன் எதுவும் சொல்லவில்லை. மறுபடியும் வலியுறுத்திக் கேட்டதற்கு ‘எனக்குப் புடிக்கலைப்பா, அவ்வளவுதான், காரணமெல்லாம் சொல்லத் தெரியாது ‘ என்று கைவிரித்து விட்டான். மேற்கொண்டு துருவிக் கேட்க எனக்கு விருப்பமில்லை. காரணமில்லாமல் ஒருவரைப் பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் பல தருணங்களில் என் வாழ்விலும் நடந்ததுண்டு என்பதால் வாளாவிருந்தேன். அசசிறுவன் மீது என் மகனிடம் பிரியத்தைச் சுரக்க வைக்க முடியாததில் எனக்குப் பெரும் தோல்வியென்றே சொல்ல வேண்டும்.
ரயில் பிரயாணம் எப்போதும் படிப்பதற்கு உகந்தது. விருப்பமிருந்தால் சிறிது நேரம் படிக்கலாம். பிறகு சிறிது நேரம் வேடிக்கை பார்க்கலாம். சிறிது நேரம் எழுந்து நடக்கலாம். சிறிது நேரம் கதவருகே நின்று முகத்தில் மோதுகிற காற்றை அனுபவிக்கவும் செய்யலாம். எல்லாவற்றுக்கும் ரயில் பயணம் வசதியானது. ஆனால் பல நேரங்களில் நான் விரும்பியபடியே ஜன்னலோர இருக்கையே கிடைத்தும் கூட சிற்சில பயணங்கள் இம்சையாக மாறியிருக்கிறது. அருகிலோ எதிரிலோ உட்கார்ந்திருப்பவர் ஏதோ ஒரு விதத்தில் மனத்துக்குப் பிடிக்காதவராகப் போய் விடுவார். ஒருவரைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் உருப்படியான காரணங்கள் இருந்தே தீர வேண்டிய அவசியமில்லை. உப்புப் பொறாத காரணம் கூட ஒருவரைப் பிடிக்காமல் போவதற்குக் காரணமாக இருக்கலாம். மீசையின் தோற்றம், உடல்வாகு, சிகிரெட் புகை, சமயங்களில் கையில் வைத்திருக்கும் புத்தகம் என ஏதோ ஒரு அற்பமான காரணமே போதுமானது. பயணம் முடிகிற வரைக்கும் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியாது.
அப்படிப்பட்ட தருணங்களில் மனம் உடனே விழித்தெழுந்து விடும். எதிராளியின் ஒவ்வொரு அசைவையும் நுட்பமாகக் கவனித்துப் பதிய வைத்துக் கொள்ளும். அதே அசைவை மறுபடியும் கேலியோடு மனத்துக்குள் செய்து பார்த்து அவனைத் துாற்றத் தொடங்கும். அவன் நிற்பது, நடப்பது, இருமுவது எல்லாமே நாகரிகமற்ற செயல்களாக மாறி விடும். அவன் டா உறிஞ்சிக் குடிக்கும் விதம் கூட அருவருப்பானதாக மாறி விடும். ஒரு மனிதனை இந்த அளவுக்கு வெறுக்க முடியுமா என்று நினைத்தே பார்க்க முடியாத அளவு வெறுப்புகள் எரிமலையாக வெடிக்கும். சிவப்புச் சேலையைக் கண்ட மாடு போல மனமும் மிரண்டு முரட்டுத்தனம் கொள்ளும்.
பிடிக்காமல் போவதற்கு எப்படி பிரமாதமான காரணம் எதுவும் தேவையில்லையோ அதே போல ஒருவரைப் பிடிப்பதற்கும் காரணம் அவசியம் இல்லை. ஒரு புன்சிரிப்பைப் பார்த்துக் கூடப் பிடித்து விடலாம். கைகுலுக்கும் விதம் மனத்தைக் கவரலாம். இனியமொழியும் உபசரிப்பும் பிடித்துப் போகலாம்.
மனிதர்களுக்கிடையே நிலவும் இந்த மனஒவ்வாமைக்கான காரணம் புரிந்து கொள்ள முடியாத பெரும்புதிர். காலகாலமாக அவிழ்க்க முடியாத புதிர். இருவரை முன்வைத்து மட்டுமே இப்புதிரை எண்ணி நாம் கலங்கவோ வருந்தவோ பச்சாதப்படவோ செய்யலாம். ஆனால் இப்புதிர் இரு தனிநபர்களுக்கு இடையில் உருவாவது மட்டுமல்ல, இரு தேசங்கள், இரு மாநிலங்கள், இரு மொழிக்காரர்கள், இரு வீட்டுக்காரர்கள் எனப் பல முனைகளில் விரிவு கொள்ளும் புதிராகும். புரிந்து கொள்ள முடியாத புதிர்.
இப்புதிரை நினைத்து வியக்கும் போதெல்லாம் இப்புள்ளியின் மீது ஆழ்ந்த கரிசனத்தோடும் ஆய்வு மனப்பான்மையோடும் கவனம் கொண்டு படைப்புகளை உருவாக்கிய ஆதவனுடைய முகமே முதலில் நினைவுக்கு வருகிறது. அடுத்து அவர் எழுதிய ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ கதையும் நினைவுக்கு வருகிறது. ஒரு உறையில் இரண்டு கத்திகள் என்பது போலக் கூர்மையான தலைப்பே இக்கதையின்பால் வாசகர்களை ஈர்த்துக் கொள்ளும் தன்மையை உடையது.
தில்லிப் பின்னணியில் கதை தொடங்குகிறது. கைலாசம் என்பவர் ஏதோ அலுவலகத்தில் வேலை செய்கிறார் . அவ்வப்போது கதைகளும் எழுதிப் பெயர் பெற்றவர். திடுமென அரசின் நடவடிக்கையால் அகர்வால் என்னும் மற்றொரு அதிகாரியோடு அவர் தன் அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. யாரோடும் தன்னால் ஒத்துப் போக முடியும் என்றும் யாரோடும் தன்னால் நட்புப் பாராட்ட முடியும் என்றும் தன்னைப் பற்றி அவர் கொண்டிருந்த பிம்பம் முதல் முறையாக உடைகிறது. அவரால் வட இந்தியனான அகர்வாலுடன் ஒத்துப் போக முடியவில்லை. ஒவ்வாமை என்னும் முள் நெஞ்சில் இடறிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் பிழை தன் பக்கம் இருக்குமோ என்கிற குற்ற உணர்வும் அரிக்கிறது. ஒவ்வாமைக்கும் குற்ற உணர்வுக்கும் நடுவே அவர் அமைதியின்றித் தவிக்கிறார். எல்லா நிமிடங்களிலும் அவனிடமிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிப்பதிலும் தவிர்ப்பது எப்படி என்று ஆலோசிப்பதிலும் நேரத்தைச் செலவிடுகிறார்.
கதையை மேலும் துலக்கம் பெற வைக்கவும் மனத்தின் சிடுக்குகளைக் கூச்சமின்றி முன்வைத்துப் பேசவும் இடையில் ஒரு நண்பனுடைய பாத்திரம் இடம்பெறுகிறது. இந்த நண்பனுடைய வருகையைச் சாக்காக வைத்து வெளியேறும் கைலாசம் தன் பிரச்சனையை அவனிடம் சொல்கிறார். ஒவ்வாமையின் சாத்தியப்பாடுகளையும் ஒவ்வாமையின் தோற்றத்துக்கான காரணங்களையும் பற்பல கோணங்களில் இருந்து அலசுகிறார்கள் இருவரும். அலசல்கள் எந்த முடிவை நோக்கியும் அழைத்துச் செல்லவில்லை. மாறாக, தாம் நினைத்த காரணத்தை ஒட்டிய சாக்குப் போக்குகளை வலுவான விதத்தில் கூட்டியோ கழித்தோ வைத்துக் கொள்ளவே உதவுகின்றன. பல மணிநேரங்கள் நண்பனுடன் விவாதித்த பின்னும் அவரால் தன் முடிவைக் கண்டடைய முடியவில்லை. மாறாக, நண்பனை வழியனுப்பி விட்டு வந்த கையோடு பார்ட்டிஷன் யோசனையுடன் சம்பந்தப்பட்ட அலுவலரைக் காணச் செல்வதோடு கதை முடிகிறது.
*
மனத்தின் நுட்பங்களையும் தத்தளிப்புகளையும் ஓட்டங்களையும் வார்த்தைகளில் சுவாரசியமாக வடிக்க முயன்ற முக்கியமான எழுத்தாளர் ஆதவன். எழுபதுகளில் தோன்றிய முக்கியமான படைப்பாளி. ‘காகித மலர்கள் ‘ அவருடைய முக்கியமான நாவல். ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ என்னும் சிறுகதை 1975 ஆம் ஆண்டில் தீபம் இதழில் வெளிவந்தது. பிற்காலத்தில் 1980ல் இதே தலைப்பில் இவருடைய சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தது.
paavannan@hotmail.com
- நா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்
- மழைக்கால நினைவுகள்
- ஓர் நாள்
- தீக்குள் விரலை வைத்தால்….
- இலக்கணம் மாறுதோ ?
- பூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா
- அறிவியல் துளிகள்-15
- கதிரியக்கச் சூழ்நிலையில் மனிதர் கவனமாய் வாழ முடியுமா ?
- ஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)
- இந்த மனசு
- கசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை
- தப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து
- நாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை
- வாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )
- க்ரிக்கெட் கடவுள்
- காதலர் தினக் கும்மி
- இணைய(ா) நட்பு!
- அணைப்பு
- கனவு நதியும் நிஜ மீன்களும்
- போருக்குப் பின் அமைதி
- பகட்டு
- ஆடம் ஸ்ட்ரீட் அழகி
- தேவதை
- 3-D
- அது ஒரு மழை நேர இரவு..!
- நேர்த்திக்கடன்….
- பூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்
- முரண்பாடு
- சேவியரும் குஜராத்தின் ஆதிவாசிகளும்
- நினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…
- கடிதங்கள்
- சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- மானுடம்
- இதுவும் வேறாக
- ‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘