சல்மா
பட வீட்டின் தனிமை
சுவரில் தொங்கும்
வரைபட மர நிழலும்
ஒற்றைக் குடிசையும்
கொஞ்சம் பூக்களும்
ஒரு வானமும்.
கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின்
தனிமையை.
தாம்பத்தியம்
என்னைத் தழுவிச் செல்லும்
தென்றல் அறியும்
எனது மென்மை
என்னைச் சிதைத்து அழிக்கும்
வாழ்க்கை அறியும்
எனது உறுதி
நான் அணைத்து வளர்க்கும்
குழந்தை அறியும்
எனது நேசம்
என்றாவது வரும்
மழை அறியும்
எனக்குள் இருக்கும் கவிதை
பனிபடர்ந்த
புற்கள் அறியும்
எனது காதல்
எனது கவிதைகள் அறியும்
எனது பூகம்பங்கள் அறியும்
என்னை
எப்போதும்
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த
எதையுமே
ஒரு மாலையும்
இன்னொரு மாலையும்
1
தனிமையின் இடுக்கில்
நசிந்து விழும்
இன்னொரு மாலை நேரம்.
சுவர் தாண்ட
திராணியற்ற கால்கள்
வளைய வருகின்றன
உள்ளறைகளின் இருட்டில்.
அறையின்
ஒழுங்குகளது
மூச்சுக் காற்றின் வெப்பத்தில்
எழுகிறது கந்தக நெடி.
உறைந்த கனவுகளை
வெட்டியெடுத்து
உருக்க யத்தனிக்கும்
அர்த்தமின்மையின் மீதில்லை
ஏதொரு மாற்று அபிப்பிராயமும்.
சுமுகமான
தாம்பத்தியங்களுடன்
தன் இரைகளோடு மட்டும்
ஜீவித்து சுகித்திருக்கும்
உயிரினங்கள் இருக்கக் கூடும்
இப் பிரபஞ்சத்தில்.
தொடர்ந்து வரும்
பதற்றமான இரவுகளும்
குழந்தையின் அமைதியற்ற
சிணுங்கல்களும்
பின் உருமாறும்
என்னைப் பற்றி பெரும் வேடிக்கையாக.
2
சமையலறையில்
பதுங்கும் பூனையின்
உலகமெனச் சிக்கலானது
இந்த இருப்பு.
குடிப்பதற்கு இறுத்த டாயின்மீது
படிகிறது அடர்த்தியான ஆடை
தீய்ந்த வாசனை விரட்டுகிறது.
நடமாட்டம் நிறைந்த
வரவேற்பறைகளில்
பரிச்சயம்கொள்ள
யாருமிருப்பதில்லை.
குளியலறையின்
தனிமை ஏற்படுத்துகிறது
நிர்வாணம் பற்றிய
அருவெருப்பின் பயம்.
கூண்டுகளுள் எழும்பிய
வீடுகள் தமது பரப்புகளை
அதிகரிப்பதன் நோக்கம்
என்னை பயமுறுத்துவது மட்டுமே.
சுவர்களுக்குள் உருவாகிவிட்ட
தோட்டத்தில் இல்லை
அமர்வதற்கான நிழல்.
மொட்டை மாடியின்
திறந்த வெளிகள்
அந்தரங்கத்தை உறுதி செய்வதுமில்லை.
காலாட்டி அமரும்படி
செளகர்யமாய் இருப்பில்லை
எந்த இருக்கையும்
என் குழந்தை
தன் தொட்டிலைத்
தரக்கூடுமெனில்
உறங்குதல் சாத்தியமாகலாம்.
மிச்சமிருக்கும் பிரியங்கள்
நீண்ட காத்திருத்தல்களுக்குப்பின்
உன்னைக் காண வந்திருந்தேன்
குழந்தைகளின் உண்டியலில்
நான் சேமித்து வைத்திருந்த என் பிரியங்களோடு
பரஸ்பர வணக்கத்திற்குப்பின்
பெரும் அமைதி சூழத் தொடங்கிற்று
பதற்றமிக்க மெளனம்
பேச முடியாத செய்திகள்
தடுமாறி விழும் ஒற்றை வார்த்தைகளாய்
சந்திப்பின் வழி நெடுக
பிறர் முகங்களின் வழியே
உறுதி செய்கிறோம்
நம் உறவின் மறைவிடங்களை, ரகசியங்களை
நம்மைக் கடந்து செல்லும்
யாரோ ஒருவரது காலடிச்சுவடுகளில்
மெளத்தின் பிரமாண்டம்
உடைந்து சிதற
நாம் பற்றித் தொடர உருவாயிற்று
ஓர் இழை
கூந்தலின் ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய வெளியில்
என் பிரியங்களைப் பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே நிகழ்ந்தது
நம் பிரிவும்
இச்சந்திப்பு ஒரு கனவின் தன்மையோடு
பிறிதொரு நாள் என்னைக் கடந்து செல்கையில்
நீ பெற்றுக்கொள்ளாமல் விட்டுச் சென்ற
எஞ்சிய பிரியங்களினால்
உருவாக்குவேன்
இன்னும் சில கவிதைகளை
இரண்டாம் ஜாமத்துக் கதை
குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்
உண்மைதான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமைகொள்ளலாம்
நான் என்ன செய்ய ?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை
முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம். எனக்கோ இது வேறெதையும்விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. தோல்விகளும் இயலாமை களும் மொழியாக உருவாகும்போது ஏதோ ஒரு நிம்மதி. அது பாவனையாகவும் இருக்கலாம். தமிழில் எழுதும் பெண் படைப்பாளிகள் இன்னும் தொடவேண்டிய பரிமாணங்கள் எவ்வளவோ இருந்தாலும் தம் படைப்பின் எல்லைகளை முன்கூட்டியே திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு அதே இலக்குகளைத் திரும்பத் திரும்ப அடைந்து கொண்டிருப்பது படைப்பின் வீழ்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. அநேகப் பெண் கவிஞர்களின் கவிதைகள், கவிதையை அதன் பழக்கப் பட்டுப்போன சுற்றுப் பாதையிலிருந்து வெளிக் கொண்டுவரக் கூடியதாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு மத்தி யிலேயே எனது இந்தத் தொகுப்பும் வெளிவருகிறது.
தனக்குள்ளேயே வசிக்க நேர்ந்துவிட்ட நீண்ட தனிமையும், எனது மொழியும் கூடி இங்கே கவிதைகளாக உருவாகியிருக் கின்றன. நவீன கவிதை, சொற்களின் வழியே எழுந்து சொல்லுக்கு எதிராகவே போராடி மெளனத்தை அடைவதாக இருக்கிறது. வாசகன் கவிதையின் இடைவெளியில் அந்த மெளனங்களைப் பூர்த்திசெய்து அனுபவம்கொள்ளும்போது கவிதை வெற்றி பெறுகிறது. என்னில் உறைம்திருக்கும் சில உணர்வுகளை இந்த வரிகளின் வழியே உங்களுக்குள் நகர்த்த முயறுலுருக்கிறேன். இக்கவிதைகளை மொத்தமாக வாசிக்கும் போது இவை எழுதப்பட்ட ஒவ்வொரு தருணமும் அதன் சாயலோடு என்னை இன்னொரு முறை கடக்கிறது. அது சஞ்சலமூட்டுவதாக இருப்பினும் இசீருஜ என் தனிமைக்கெதி ரான எதிர்வினைகளாகவே கருதி ஆசுவாசம் கொள்கிறேன்.
எனது பெரும்பாலான கவிதைகளின் பாடுபொருளாகட் தனிமை மட்டுமே இருப்பதும், குறிப்பிட்ட சில புள்ளிகளைச் சுற்றியே கவிதைகள் உருவாகியிருப்பதும் அலுப்பூட்டுவதாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு வருத்தமில்லை. திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் சங்கடத்தி லிருந்தே இக்கவிதைகளை நீங்கள் அடையக் கூடும். ஒருவேளை இவை தனிப்பட்ட ஒருவரின் தன்னுணர்வாக மட்டுமே அர்த்தம் பெறுமெனில் அதை எனது மொழியின் போதாமை யாகவே புரிந்துகொள்வேன்.
என்னுடைய கலாச்சார வாழ்விற்குப் பொருந்தாத இலக்கிய ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தி எனது இந்த வாழ்வோடு பொருந்த முடியாமல்போனதற்குக் காரணமாக ணீ-ஜஸிறூக்ஷி (ஹிஙூதுக்ஷி “ட்ண்கீன்) சொல்ல வேண்டும். நான் எழுத ஆரம்பித்த காலம் தொட்டு என்னைச் சற்று மிகையாகவே பாராட்டி எழுத வைத்தவர்கள் எஸ். வி. ராஜதுரையும் வ.கீதாவும். எனது கவிதைகளை நிகழில் தொடர்ந்து பிரசுரித்து நம்பிக்கையூட்டியவர் ஞானி. நான் எழுதுவதற்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்ததில் சுந்தர ராமசாமியின் ப்ரியத்திற்கு முக்கிய இடமுண்டு. நட்புக்கான எனது பல கதவுகளைத் திறந்துவிட்ட லல்லியை இந்தச் சமயத்தில் நினைத்துக்கொள்கிறேன்.
18. 7. 2000 சல்மா
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை
ஆசிரியர் : சல்மா
பக்கம்: 80. விலை ரூ.40
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி : 91-4652-222525
தொலைநகல் : 91-4652-223159
kalachuvadu@sancharnet.in
- எங்கேயோ கேட்ட லொல்லு
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)
- அறிவியல் துளிகள்-12
- இந்த வார அறிவியல் செய்திகள்
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)
- காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்
- சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்
- தினகப்ஸா
- புதிய தானியம்
- புரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )
- கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)
- பைமடந்தை
- தூக்கம்
- மழை வரும் போது…
- அரபிய நாட்டினிலே..
- முடிந்த தொடக்கம்…
- ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை
- இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003
- சனநாயக நாடென்னும் போதினிலே….
- பதினோராம் அவதாரம்
- இளமை
- கலைமன்றம் வழங்கிய காணிக்கை
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- ஐரோப்பிய குறும்பட விழா
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்
- கடிதங்கள்
- என் தாய் பண்டரிபாய்
- இட்லி
- ‘படைத்தவனைத் தேடுகிறேன் ‘
- அமைதி
- இரண்டு கவிதைகள்
- சின்னவரே! சின்னவரே!
- இன்னொரு உயிர்…
- அவனுக்கென்று ஒரு வானம்…
- காத்திருப்பாயா…