ஒரு புல்லாங்குழலின் புதுப்பயணம்…

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

ஆ. மணவழகன்


எங்கெங்கோ
சுற்றித் திரிந்து,
வறண்டு வாடிக் கிடந்த – என்
வானத்து மேகம் – உன்
பூமியில் மட்டும்,
மந்தாரமாய்… மழையாய்…

சூழ்நிலையே அறியாது
சுழன்று, சூறாவளியான – என்
கானகத்துக் காற்று – உன்
சோலையில் மட்டும்,
தேடலாய்… தென்றலாய்…

உயிர்ப்பிற்கும்,
உறக்கத்திற்கும் இடையில் – உன்
நினைவு மட்டும் – என்னுள்
நிர்மலமாய் … என்றும்
நிரந்தரமாய்..

ஒரே ஒரு
ஒற்றைச் சொல்
உறுதிபடுத்திவிட முடியும்,
என் இதயத்தில் – உனக்கான
இருப்பிடத்தை…

அதோ,
மர்மமாய், மடித்து
மறைக்கப்பட்ட – எனக்கான
மற்றுமோர் ஆகாயம்…

அங்கே,

என் நிம்மதிக்கும்,
நிழலிற்கும்;
என் அழுதலுக்கும்,
ஆறுதலுக்கும்;
என் அன்பிற்கும்,
அரவணைப்பிற்கும்;
என்னோடு உடன் வர – உன்
நினைவு மட்டுமே…

எதற்கும் விழித்திரு,

அந்திவானத்து மஞ்சளோ!
ஆற்றங்கரை மரமோ!
சாலையோர மலரோ – உன்
சன்னலோர நிலவோ..
எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்…
உனக்கான – என்
பிறப்பு…!

*****
a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்