ஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

நரேந்திரன்


The human race has one really effective weapon, and that is laughter – Mark Twain

குறைபாடுகள் பல இருந்தாலும் ஜனநாயகம் ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய, நடைமுறைக்குச் சாத்தியமானதொரு செயல்முறை. அதற்கு மாற்றாக உள்ள செயல்முறைகள் மிகவும் ஆபத்தானவை. எதற்கும் லாயக்கற்றவர் என்று மக்களால் தோற்கடிக்கப் பட்ட ஒரு தலைவர், அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அதே மக்களின் ஆதரவுடன் கோலாகலமாகப் பதவி ஏற்க முடிகிறது என்றால் அது ஜனநாயகத்தின் குறைபாடல்ல. ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணராத அல்லது உணர இயலாத மக்களின் குறைபாடுதான் அது.

வலிமையுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் சண்டையிட்டுப் பெற்ற, சுதந்திர அமெரிக்காவின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கும் பொருட்டு, ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் போன்ற தலைவர்கள் பிலடெல்ஃபியாவிலுள்ள ஒரு கட்டிடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்று அறிய, அக் கட்டிடத்திற்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கூடி இருந்தார்கள். அவர்களைப் போன்ற பல்லாயிரக் கணக்கான சாதாரணர்கள் தீரத்துடன் போராடி, உயிர் நீத்துப் பெற்ற சுதந்திரமல்லவா அது! எதிர்காலம் குறித்த கவலை அவர்களுக்கு இருக்கத்தானே செய்யும் ?

பல மணிநேரங்கள் விவாதித்து முடிந்து, ஒரு தீர்மானத்திற்கு வந்த தலைவர்கள் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட பின், முதலில் வெளியே வந்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளினிடம் ஒரு மூதாட்டி கேட்டாராம், ‘மன்னராட்சியா ? குடியரசா ? என்ன கிடைத்திருக்கிறது நமக்கு ? (What we got ? A Monarchy ? or A Republic ?) ‘. அதற்கு பெஞ்சமின் இப்படி பதில் சொன்னாராம், ‘Democracy! ஆனால், அதைத் தக்கவைத்துக் கொள்வது உன் கையில் இருக்கிறது! ‘ என்று. என்னவொரு பொருத்தமான பதில்!

ஏறக்குறைய இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறும் அமெரிக்க சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் போன்றதுதான். அமெரிக்கர்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்டு பிரிட்டிஷ்காரர்களை விரட்டியடித்தார்கள். நமது முன்னோர்கள் சாத்வீகமான முறையில் போராடி சுதந்திரம் பெற்றார்கள். இருப்பினும், அமெரிக்கர்களைப் போலவே, இந்தியர்கள் சிந்திய இரத்தத்திற்கும் குறைவில்லை. உலகின் பல காலனி ஆதிக்க நாடுகள் விடுதலை அடைந்த பிறகு சர்வாதிகார ஆட்சிகளில் சிக்கித் தடுமாறி வருகையில், இந்தியா ஜனநாயகத்தைத் தனது வழியாகத் தேர்ந்தெடுத்தது. உலக நாடுகள் வியக்கும் வண்ணம் தொடர்ந்து அது ஒரு மக்கள் குடியரசாகவே இன்றும் இருந்து வருகிறது.

சுதந்திர இந்தியாவின் தலைவர்களில் ஜவஹர்லால் நேரு ஒரு visionary. சோவியத் யூனியனின் காதலரன நேருவின் மேற்பார்வையில் மிகப் பெரும் அணைகளும், தொழிற்சாலைகளும், கல்விக் கூடங்களும் துவங்கப்பட்டன. அவருக்குப் பின், அவர் அளவிற்கு விசாலமான அறிவும், தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும் கொண்ட தலைவர்கள் இன்றுவரை இந்திய அரசியலில் வரவில்லை. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் திரு. காமரஜும், இன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் தொலைநோக்குச் சிந்தனைகள் கொண்டவர்கள் எனினும் அவர்களின் இயங்கிய/இயங்கும் எல்லைகள் குறுகியவை.

தமிழ்நாட்டிலும், காமரஜ் அவர்களுக்குப் பிறகு ஒரு நேர்மையான, திறமையான தலைவர் வராமல் போனது நமது துரதிருஷ்டமே. அதையும் விடக் கொடுமை, கோவணத் திருடர்களெல்லாம் கூடத் தமிழ்நாட்டின் தலைவர்களாக ஆக்கப் பட்டிருப்பதுதான்.

ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் இருந்தானாம். வழிப்பறி செய்கையில் ஜனங்களிடம் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு அவர்களைக் கோவணத்துடன் விரட்டி விட்டுவிடுவதுதான் அவனின் பாணி. அவனால் பாதிக்கப் பட்டவர்களெல்லாம், ‘மனிதனா அவன் ? செத்த பிறகு நரகத்துக்குத்தான் போவான் ‘ என்று சபித்தார்களாம். மேற்படிக் கொள்ளைக்காரனுக்கு வயதாகி, மரணப் படுக்கையில் இருக்கையில் அவனுக்கு பயம் வந்து விட்டது. எல்லோரும் சபிப்பது போல தான் நரகத்துக்கே போய்விடுவோமோ ? என்று. தன்னுடைய ஒரே மகனை அருகில் அழைத்து, ‘என்னை எல்லோரும் ‘நல்லவன் ‘ என்று சொல்ல வைப்பது உன் பொறுப்பு ‘ என்று சொல்லி விட்டு இறந்து போனான். தகப்பன் வழியில் மகனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக ஆனான். ஆனால் தந்தையைப் போல கொள்ளையடித்த பின், கோவணத்தைக் கூட விட்டு வைக்காமல், அதையும் உருவிக் கொண்டு விரட்டி அடித்தானாம். உடனே ஜனங்களெல்லாம், ‘ஆஹா! அவன் அப்பன் எவ்வளவோ நல்லவன்! கோவணத்தையாவது நமக்கு விட்டு வைத்தான்! ‘ என்று புகழ்ந்தார்கள் என்பது கதை (இந்தக் கதையை ஏற்கனவே எழுதி விட்டேனோ ?).

இன்றைய தமிழ்நாட்டின் நடைமுறைக்கு அப்படியே இது பொருந்துகிறது என்பதற்காகத்தான் இந்தக் கதை. ஒரு திராவிடக் கட்சி ‘அறிவியல் முறையில் ‘ ஊழல் செய்து, தமிழ்நாட்டு ஜனங்களின் தலையில் மிளகாய் அறைக்கும். அடுத்த தேர்தலில் கோபத்துடன் ஜனங்கள் அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்னொரு திராவிடக் கட்சியைப் பதவியில் அமர்த்துவார்கள். புதிதாக பதவிக்கு வந்த திராவிடக் கட்சியோ, நடந்த எல்லா ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும்படி மஹா ஊழல்கள் செய்து கொள்ளையடிக்கும். வெறுத்துப் போன தமிழ்நாட்டு ஜனங்கள், அடுத்த தேர்தலில் ‘இதுக்கு அது பரவாயில்லே! ‘ என்று முன்பு ஆட்சி செய்த திராவிடக் கட்சிக்கே ஓட்டுப் போடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது கடந்த முப்பத்தைந்து வருடங்களாக. மீண்டும். மீண்டும். முடிவேயில்லாமல். இது யாருடைய தவறு ?

****

இந்தியா போன்ற multi ethnic, multi culture உள்ள நாட்டிற்கு ஜனநாயகம் சரிப்படாது; சர்வாதிகாரம் அல்லது ராணுவ ஆட்சிதான் சரியான தீர்வு; என்பது எனது நண்பரொருவரின் வாதம். ‘பாவம். நண்பர் உலக வரலாற்றைப் படிக்கவில்லை போலிருக்கிறது! ‘ என்று நினைத்துக் கொள்வேன். அவருடன் வாதிடுவது வீண்வேலை என்பதால் பதிலொன்றும் சொல்வதில்லை.

சர்வாதிகாரிகளுக்குப் பல முகங்கள் இருந்தாலும், இரண்டு விதமான சர்வாதிகாரம் உலகில் பரவலாகக் காணப்படுகிறது என்று சொல்லலாம். ‘இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் ‘ என்ற திராவிட ‘வசன ‘த்திற்கு பொருந்தும் சர்வாதிகாரிகள் ஒரு விதம். ‘ஜனநாயகச் சர்வாதிகாரம் ‘ இன்னொரு விதம்.

முதலாவது சர்வாதிகாரத்திற்கு நல்ல உதாரணம், ரஷ்யாவின் சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியாக இருந்த ஜோசப் ஸ்டாலின். அவரின் great purge-ஐ வரலாறு மறக்காது. மறக்கவும் கூடாது. அவரின் காலத்தில், சோவியத் யூனியனில் இரவோடிரவாகக் கைது செய்யப் பட்டுக் காணாமல் போனவர்கள் ஏராளம். ஆட்சிக்கு எதிரானவர்கள் என்று நினைக்கப் பட்டவர்கள் மட்டுமல்லாது, பொதுவுடைமைக் கருத்திற்கு எதிரானவர்கள் என்ற பெயரில், சாதாரண Gulak எனப்படும் ஒன்றிரண்டு ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான சிறு நிலச்சுவான்தார்களையும் கூட அவர் விட்டு வைக்கவில்லை. நாஜி ஜெர்மனியின் ஹிட்லரை விட, ஸ்டாலின் கொன்று குவித்தவர்கள்தான் அதிகம் என்பது வரலாறு. 1940-இலிருந்து அவர் இறக்கும் வரை நடத்திய கண்மூடித்தனமான இந்த great purge-இன் காரணமாகக் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து, ரஷ்யாவின் மக்கள் பெருக்கம் ஏறக்குறைய நின்றே போனது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த சில ‘செசன்யா ‘ (Chechenya) இன ராணுவத்தினர், ஜெர்மனிய நாஜிக்களுடன் இணைந்து ரஷ்யர்களுக்கு எதிராக போர் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, செசன்யாவின் மொத்த குடிமக்களையும் ஒரே ஒரு உத்தரவின் மூலம் இன்றைய ‘கஸாக்கிஸ்தான் ‘ (Kazakistan) நாட்டிற்கு நாடு கடத்தினவர் ஜோசப் ஸ்டாலின். இவ்வளவிற்கும், இரண்டாம் உலகப் போரில், ரஷ்ய ராணுவத்தின் பல முக்கிய பதவிகளில் பணிபுரிந்து ரஷ்யாவிற்காக உண்மையுடன், தீரமாக போரிட்டவர்கள் செசன்யர்கள்.

இது பற்றி, The Oath-இல் Khassan Baiev எழுதியிருப்பது நெஞ்சை உருக்கும்.

‘டாடா (Dada) என்னையும், ஹுசேனையும் மலையுச்சியிலிருந்து கீழே எட்டிப் பாருங்கள் என்றார். எனக்குத் தலை சுற்றியது. மலையின் கீழ் ஆறு ஓடுவது வெகு தூரத்தில் தெரிந்தது. செசன்யாவை விட்டுப் போக மறுத்தவர்களை, ரஷ்யர்கள் இந்த இடத்திலிருந்துதான் கீழே தூக்கி எறிந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற வித்தியாசமில்லாமல்.

1944 ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் தேதியன்று, ஸ்டாலினுக்கு அடுத்தபடியான சோவியத் ஜனாதிபதி மிகாயில் காலினீன்-இன் உத்தரவின் பேரில், NKVD என்றழைக்கப் பட்ட ரஷ்ய ரகசியப் போலிஸ்காரர்கள் இங்கு வந்தனர். எல்லா ஆண்களையும் நகர மையத்திற்கு வரும்படி அழைத்து வரப் பட்டபின், குடித்துச் சிவந்த கண்களையுடைய ஒரு ரஷ்ய அதிகாரி எங்களை நாடு கடத்துவதாக அறிவித்தார். எங்களைச் சுற்றிலும் இயந்திரத் துப்பாக்கியுடன் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ராணுவத்தினர், எதிர்த்தவர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றார்கள். ஹைபாக் என்ற ஊரிலே, ரஷ்யப் படைகள் 600 பேர்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொன்றார்கள். அவர்களில் 104 வயதான முதியவரிலிருந்து, பிறந்து ஒரே நாள் ஆன குழந்தையும் அடக்கம்.

செசன்யாவின் அனைத்து ஊர்கள் மற்றும் கிராமங்களிலிருந்து ஆண்கள், பெணகள், குழந்தைகள் என அனைவரையும் அருகில் இருக்கும் ரயில் நிலையங்களுக்கு, உடலை நடுக்கும் கடுங்குளிரில், ஆட்டு மந்தைகளைப் போல ஓட்டிச் செல்லப் பட்டோம். ஆடு, மாடுகளை அடைத்து அனுப்பும் ரயில் பெட்டிகளில் எங்களை அடைத்தார்கள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிகரெட்டுகளைப் போல, ஆண்களும், பெண்களும் அருகருகே நெருக்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். நெரிசலில் குழந்தைகள் நசுங்கி விடாமிலிருக்க அவர்களைத் தலைக்கு மேல் தூக்கிப்பிடித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. ரயில் பெட்டியினுள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலி கண்டு குழந்தை பிறக்க ஆரம்பித்தது. அத்தனை ஆண்களுக்கு முன்னாலும், பேறுகாலம் நடப்பதை விரும்பாத அப்பெண் ஒரு போர்வையினால் தன்னை மூடிக் கொண்டாள். அடுத்த நிறுத்தத்தில் நாங்கள் போர்வையை விலக்கிய போது பாதி பேறுகாலத்தில் அப்பெண்ணும் குழந்தையும் இறந்து போயிருந்தது தெரியவந்தது. வலியை மறைக்க அவள் தனது கீழுதடுகளைக் கடித்ததில் அது துண்டாகி இருந்தது. வாரக் கணக்காக, நிற்காமல் சென்ற பயணத்தின் போது, ஆண்களின் முன்னால் தங்கள் இயற்கை உபாதையைக் கழிக்கத் தயங்கிய பெண்கள் அதை அடக்கி, அடக்கி அவர்களின் சிறுநீர்ப் பைகள் வெடித்து இறந்தார்கள்.

மலநாற்றமும், வாந்தியின் நாற்றமும் எங்களின் நுரையீரல்களைத் துளைத்தது. எங்களால் சுவாசிக்க இயலவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக என்னைச் சுற்றி இருந்தவர்கள் இறக்க ஆரம்பித்தார்கள். பக்கத்தில் நின்றிருப்பவரிடம் ஏதேனும் சொல்லத் திரும்பும் போது, அவர் ஏற்கனவே இறந்து போயிருப்பது தெரியவரும். இறந்து போனவர்களை வண்டியின் ஒரு மூலையில் மரக் கட்டைகளைப் போல அடுக்கி வைத்தோம். ரயில் எங்காவது ஓரிடத்தில் நின்று, அந்தப் பிணங்களை வெளியே எறியும் வரை அந்தப் பிணங்கள் அழுகி நாறின. வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்ட பிணங்களை நாய்களும், நரிகளும் தின்றன. இறந்த ஒருவரை 24 மணி நேரத்திற்குள் ஒரு சவ அடக்கம் செய்யப் பட வேண்டும் என்ற சாதாரண இஸ்லாமிய சடங்கினைக் கூடச் செய்ய நாங்கள் அனுமதிக்கப் படவில்லை. மரணத்தின் வாசலில் நின்றவர்களின் முனகல்களும், பெண்களின் அழுகையும், பசியால் துடிக்கும் குழந்தைகளின் அழுகுரலும் ரயில் வண்டியின் சத்தத்தையும் மீறி ஒலித்தது. ஒரு வாரம் கழித்து நாங்கள் கஸாக்கிஸ்தானை அடைந்த போது, ஆரம்பத்தில் முழுதும் நிறைந்திருந்த ரயில் பெட்டியில் பாதியளவினரே உயிருடனிருந்தார்கள். ஏறக்குறைய அரை மில்லியன் செசன்யர்கள் இந்த நாடுகடத்தல் பிரயாணங்களின் போது இறந்து போனார்கள். ‘

அதையெல்லாம் விட, ஒரு கடலையே காணாமல் போகச் செய்த பெருமையும் ஸ்டாலினுக்கே உரித்தானது என்றால் நம்புவீர்களா ? இன்றைய உஸ்பெக்கிஸ்தான், கஸாக்கிஸ்தான் எல்லைக்கருகில் இருந்த, ஏறக்குறைய மறைந்து விட்ட ‘Aral Sea ‘ தான் அந்தக் கடல். மனிதர்களால் தோற்றுவிக்கப் பட்ட biggest ecological disaster என்று ஏரல் கடலைப் பற்றிச் சொல்வார்கள். உலகில், சுற்றிலும் நிலம் சூழப் பாலைவனத்தின் நடுவே இருந்த ஒரே கடல் Aral Sea மட்டும்தான். பல்லாயிரக் கணக்கான வருடங்களாக, அமு தார்யா (Amu Dharya) ஆறு அந்தக் கடலை வற்றிப் போகாமல் வைத்திருந்தது. ஸ்டாலின் காலத்தில், உஸ்பெக்கிஸ்தானின் பஞ்சு உற்பத்திக்காக, ஆமு தார்யா ஆறு திசை திருப்பப்பட்டு, ஒரு சொட்டு நீர் கூட ஏரல் கடலை அடையாதபடி பார்த்துக் கொள்ளப் பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக வற்றிக் கொண்டு வரும் ஏரல் கடல், 2010-இல் முழுவதுமாகக் காணாமல் போகும் என்று கணித்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டர், கிரேக்கத்திலிருந்து இந்தியா நோக்கிப் படையெடுத்தபோது, அவரின் படைகள் பிரம்மாண்டமான ‘அமு தார்யா ‘ ஆற்றைக் கடக்க ஐந்து நாட்கள் ஆனதாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. இன்றோ, ‘அமு தார்யா ‘ வெறும் முப்பது அடி அகலம் கூட இல்லாத ஒரு சிற்றாறு.

இப்போது பாலைவனமாகி விட்ட ஏரல் கடலில் இன்றும் மிகப் பெரும் கப்பல்கள் உபயோகமின்றி நின்று கொண்டிருக்கின்றன. வற்றிய கடலில் இருந்து பறந்த உப்பு, சுற்றிலும் உள்ள நாடுகளின் விளை நிலங்களை உவராக்கி, உபயோகமில்லாமல் செய்துவிட்டது. இதே ஏரல் கடலின் நடுவே இருந்த ஒரு தீவில் சோவியத் யூனியனின் anthrax போன்ற biological weapon-கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததாகவும், சோவியத் யூனியன் சிதறுண்ட போது ரஷ்யர்கள் அதை அப்படியே விட்டு விட்டுப் போய்விட்டதனால், தற்போது அமெரிக்கர்கள் வசம் அத்தொழிற்சாலைகள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

ஜனநாயக நாட்டில் இதுபோல நடக்க முடியுமா ? நர்மதை நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து ஒரு சாதாரண மேதா பட்கர், சர்வ வல்லமையுள்ள இந்திய அரசாங்கத்தின் கண்ணில் விரல் விட்டு ஆட்டுகிறார். அவரைத் தவிர்க்க இயலாமல், அணையும் கட்ட இயலாமல் இந்திய அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். சர்வாதிகார நாட்டில் இதெற்கெல்லாம் சாத்தியமே இல்லை.

ஸ்டாலின் அப்படி என்றால், ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட ஹிட்லர் வேறுவிதமான சர்வாதிகாரி. ஜெர்மனியில் இனத்தின் பெயரால் யூதர்களின் மீது நடத்தப் பட்ட, மனிதாபிமானமற்ற ஒவ்வொரு கொடுஞ்செயலும், ஜெர்மனிய மக்கள் பிரதிநிதிகளினால் பாராளுமன்றத்தில் ஒப்புதலிக்கப்பட்டு, அனைத்து அராஜகமும் ‘சட்டப்படி ‘ நடந்தேறியது. ஜனநாயக சர்வாதிகாரத்திற்கு இது ஒரு உதாரணம். தமிழ்நாட்டிலும் இதுபோன்ற செயல்கள் சமீப வருடங்களில் நடந்தேறி இருக்கின்றன. ‘அடி மூடனிடம் இருக்கும் அதிகாரத்தை விட, அரைவேக்காட்டின் கையில் இருக்கும் அதிகாரம் மிகவும் ஆபத்தானது ‘ என்கிறது சாதகப் பட்சி.

****

திண்ணையில் எழுத ஆரம்பித்து ஏறக்குறைய ஒரு வருடம் முடியப் போகிறது என்பது எனக்கே ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. ஆரம்பத்தில், தொடர்ந்து எழுதும்படி என்னை ஊக்குவித்த ‘திண்ணை ‘க்கும், பாராட்டி/விமரிசித்து எழுதிய முகமறியா நண்பர்களுக்கும் நன்றி. இன்னும் உருப்படியாக எதுவும் எழுதி விடவில்லை என்றாலும், என்னாலும் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை வந்திருப்பதே பெரிய விஷயம்தானே ?

புகைப்படம் : The Hindu-விலிருந்து. நன்றி.

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்