ஒரு திரைமீன் வாய் திறக்கிறது !

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

சி. ஜெயபாரதன், கனடா


வானில் ஓளி வாலுடன்
தோன்றி மறைந்த
வால்மீன் நான் !
நடிப்பு வராது, சிரிப்பு வரும் !
படிப்பு மிகுதி !
கூச்சம் கிடையாது எனக்கு !
பேச்சுத் தமிழ் வராது !
நடப்பதே நடனம் !
நர்த்தனம் எதற்கு ?
பாட்டும் வராது !
உதடுக்குள் ஓட்டுவார்
லதா மங்கேஷ்கர் குரலை !
குலுக்கினால்
கொட்டும் பொற்காசுகள்,
தேனுடம்பு
திரை எழுப்பும்
நெஞ்சக் கடலில் !
காந்த
மேனி எனக்கு !
நானொரு திரைமீன் !

தாய்மொழி தமிழ் படிக்க
வாய்ப்பிருந்தும்
வழி அடைத்தது தங்கக் கரண்டி !
பாடத் தெரியாத
சங்கீதப் பாடகி நான் !
ஆடத் தெரியாத
நாட்டியப் பேரொளி நான் !
கணவனாய் நடிக்கும் அவன் எனது
காதல னில்லை !
காதலனாய் நடிக்கும் இவன் மெய்க்
கணவன் என்பேன் !
என் கணவரும் ஒரு நடிகர்
வீட்டில் !
என் தாயும் ஒரு நடிகை
வெண்திரையில் !
தந்தைக்கு நடிக்கத் தெரியாது
நாட்டில் !
வானில் மின்னாத
நானொரு திரைமீன் !

எனக்குப் பிறந்த வாரிசு
இந்த மான் குட்டி !
தாலாட்ட நேரம் ஏது ?
பாலூட்டத் தந்தை ஏது ?
வேலைக்காரியின்
விளையாட்டுப் பொம்மை அது !
பொய்முடிக் காதல் மன்மதன் மேல்
மெய்யாசை எனக்கு !
நிஜமுடிக் கண்ணாலனின்
புஜத்தை முறுக்கிக்
கதவைத்
தாழிட்டி ருக்கிறேன் !
மேனகா ஏங்கும்
நானொரு திரைமீன் !

மூவேந்தர் சுலோ மோஷனில் பூக்கும்
பூவே நான் !
பாரதி ராஜா கை ஏந்திய
பாவை விளக்கு !
இளைய ராஜா
வீணையில் முறுக்கிய
நாண்களில் ஒன்று !
பாக்கிய ராஜா கனவில் வரும்
பூமகள் நான் !
காமக்கனல் பட்டு
மன்மதனும்
எரிந்து போவான் மெழுகாய் !
வெண்திரையில்
கண்சிமிட்டிக் கண்சிமிட்டிக்
காமக்கண் ஒளிமங்கி
கரிமீனாய்
மின்மினியான
நானொரு திரைமீன் !

*************
jayabarat@tnt21.com [S. Jayabarathan December 26, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா