ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

எஸ் பாபு



எஸ் பாபு

ரெம்ப காலத்திற்குப் பிறகு ஒரு தலை ராகம் படம் பார்க்க நேர்ந்தது. ஏறக்குறைய பால்ய காலத்தில் பார்த்த படம். எத்தனை எளிமையான படம்! காதலனோ காதலியோ பரஸ்பரம் காதலிக்கச்சொல்லி காதல் வன்முறை செய்யும் காட்சிகள் இல்லை. தீப்பிடிக்க தீப்பிடிக்க அரை குறை உடையுடன் ஆடும் ஆட்டங்கள் இல்லை. அம்மா தங்கை அழுகை காட்சிகள் இல்லை. சர் புர் என்று டாட்டா சுமோக்கள் சீறிப் பறக்கும் காட்சிகள் இல்லை. கதாநாயகன் வானில் பறந்து சில நொடிகள் அப்படியே உறைய, காமிரா மட்டும் சுற்றி வந்த பின், அதுவரை உறைந்திருந்த கதாநாயகன் பல்டி அடித்து வில்லன் ஆட்களை நொறுக்குகிற காட்சிகள் இல்லை. கதாநாயகன் சுவற்றில் ஏறி அடிக்கும் காட்சிகள் இல்லை. கதாநாயகனும் வில்லனும் காதைக் கிழிக்கும் விதமாக சவால் விட்டுக் கொள்ளும் ”ஏஏஏய்ய்ய்ய்ய்……”கள் இல்லை.
இப்படி எத்தனையோ ‘இல்லைகள்’.

ஒரு கல்லூரி. ரயிலில் சென்று வரும் மாணவர்கள். ஒரு காதல். ஆனால் அது ஒரு தலைக் காதல். இதனால் உருகும் கதாநாயகன் நோய்வாய்ப்படுகிறான். அவள் துணிந்து தன் காதலைச் சொலும் போது கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை. படம் முடிகிறது. கதாநாயகனும் கதாநாயகியும் தொட்டுக் கொள்ளாமல் மட்டுமல்ல பேசிக்கொள்ளாமலும் எடுக்கப் பட்ட முதல் படம் என்று நினைக்கிறேன். கருப்பு வெள்ளைப் படங்களில் யாரும் இப்படி எடுத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. பாடல்கள் அத்தனையும் இனிமையானவை. படம் வந்த புதிதில் இயக்கம் உட்பட அனைத்தும் டி.ராஜேந்தர் என்றும் இப்ராகிம் என்பவர் ராஜேந்தரை ஏமாற்றி தன் பெயரை இயக்குனராகப் போட்டுக் கொண்டார் என்றும் பேச்சு இருந்தது.

எனக்கு ஒரு தலை ராகம் பாடல்கள் எல்லாம் அத்துப்படி. இப்போதும் கூட. அது மட்டுமல்ல. ஏராளமான தமிழ் சினிமா பாடல்கள் எனக்கு முழுமையாகத் தெரியும். அதற்குக் காரணம் சிலோன் ரேடியோ மற்றும் எங்கள் வீட்டில் இருந்த பாட்டு புஸ்தகங்கள். அப்போதெல்லாம் பத்து பைசா என்று நினைக்கிறேன். எந்த படம் பார்த்தாலும் உடனே பாட்டு புஸ்தகம் வாங்கி அந்த படத்தின் பாடல்களை எல்லாம் மனப்பாடம் செய்து விடுகிற பழக்கம் இருந்தது. இவற்றில் பழைய கருப்பு வெள்ளை படங்களும் அடக்கம். இப்படியாக வீட்டில் கத்தை கத்தையாக பாட்டு புஸ்தங்கள் இருந்தன. வீட்டில் உள்ள சின்ன சின்ன பொருட்களைக் கொண்டு இசையமைத்து நண்பர்களை பார்வையாளர்களாக அழைத்து ஆர்கெஸ்ட்ராவெல்லாம் போடுவோம். இந்த பழக்கம் தான் பிற்காலத்தில் நான் கல்லூரியில் படிக்கையில் பாட்டுக்கு பாட்டு போட்டிகளில் (மாவட்ட அளவில், மாநில அளவில்) முதல் பரிசு பெற உதவியாய் இருந்தது. அது போகட்டும்.

ஒரு தலை ராகம் படம் பார்த்த போது மீனா மிஸ் ஞாபகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை. ஒரு தலை ராகம் வந்த போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். எல்கேஜி முதல் ஐந்து வகுப்பு வரை இருந்த எங்கள் பள்ளியில் இருந்த டீச்சர்களுள் எனக்கு மிகவும் பிடித்தவர் மீனா மிஸ் தான். அவருக்கும் என்னைத் தான் மிகவும் பிடிக்கும். படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை நிகழ்ச்சி என்று பள்ளியில் எல்லா விஷயங்களிலும் தலைமைப் பொறுப்பு எடுத்து நான் செய்வதால் அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்தது. பள்ளிக்கூடம் முடிந்து அனைவரும் போன பிறகும் மீனா மிஸ் எங்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு தான் போவார்கள். அப்படியான ஒரு நாளில் மீனா மிஸ்ஸ¤ம் வகுப்புத் தோழர்களும் வகுப்பறை படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தோம். நான் நன்றாகப் பாடுவேன் என்றும் நிறைய பாட்டு புஸ்தகம் வைத்திருப்பதாகவும் நண்பர்கள் மிஸ்ஸிடம் ‘போட்டுக்’ கொடுத்தார்கள். மீனா மிஸ் என்னைப் பாடச் சொன்னார்கள். ‘வாசமில்லா மலரிது’ பாடிக் காட்டினேன். நல்லா பாடுகிறாயே என்று சொல்லி ஒரு தலை ராகம் படத்தில் மற்ற பாடல்களை பாடச் சொன்னார்கள். எல்லா பாடல்களையும் பாடிக் காட்டினேன். வார்த்தைகள் தவறாமல் நினைவு வைத்திருப்பதற்காக பாராட்டினார்கள். மீனா மிஸ்ஸிடம் பாராட்டு வாங்கியதில் மிகவும் புளகாகிதம் அடைந்தேன்.

அம்மா, சித்தி, அத்தை என்று உறவில் உள்ள பெண்கள் தவிர மற்றவர்களில் என்னை முதலில் கவர்ந்தவர் மீனா மிஸ் தான். அது என்னவோ அத்தனை டீச்சர்களிலும் அவர்களிடம் மட்டும் ஒரு ஈர்ப்பு. அவர்களுக்கும் என்னை மிகவும் பிடித்திருந்தது. என்னை வீட்டுக்கு அழைத்துப் போவார்கள். அவர்கள் வீட்டில் கேட்காமலேயே உள் அறை வரை சென்று வரும் சுதந்திரம் எனக்கு இருந்தது. மீனா மிஸ் வீட்டில் இல்லாமல் வெளியில் சென்றிருந்தால் அவர்கள் வரும் வரை டேப் ரெக்கார்டர் கேட்டுக் கொண்டிருப்பேன். மீனா மிஸ் ஒரு மலையாளி. பெரும்பாலும் மலையாள கேசட்டுகளாகவே இருக்கும். ஒரு சில தமிழ் பாடல் கேசட்டுகளும் உண்டு. மீனா மிஸ்ஸின் வீடு ஒரு சொர்க்கம். அரை மணிக்கு ஒரு முறை சாப்பிட ஏதாவது வந்து கொண்டே இருக்கும். மீனா மிஸ்ஸின் அம்மாவும் மிகவும் கனிவானவர்கள். அவர்களைப் பார்க்கும் போதுதான் அவர்கள் மலையாளி என்பதே தெரியும். ஏனெனில் மீனா மிஸ்ஸின் அம்மா மட்டும் தான் மலையாள பாரம்பரிய உடை உடுத்தியிருப்பார்கள். மீனா மிஸ் எனக்கு நெயில் பாலீஷ் போட்டு விடுவார்கள். நான் மறுப்பேன். பெண் பிள்ளைகள் மட்டும் தான் நெயில் பாலீஷ் எல்லாம் போட்டுக் கொள்வார்கள் என்று எண்ணியிருந்தேன். வகுப்பில் பசங்கள் கிண்டல் பண்ணுவார்கள் என்று சொல்வேன். ஆனால் மீனா மிஸ்ஸ¤க்கு எல்லாம் தெரியும் போல. எனது கையில் இருந்த நெயில் பாலீஷ் பார்த்து பள்ளியில் யாரும் கேலி செய்யவில்லை.

********
ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்கு, மேல் நிலைப் பள்ளிக்கு இடம் மாறினேன். மீனா மிஸ் வீட்டுக்கு எப்போதாவது தான் போக முடிந்தது. சிறிது காலத்தில் அவர்களின் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆனதால் மீனா மிஸ்ஸ¤ம் இடம் மாறிப் போனார்கள். அவர்கள் கோயமுத்தூர் போனதாக அறிந்தேன். ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின் ஒரு நாள் பஸ்ஸில் மீனா மிஸ்ஸைப் பார்த்தேன். கை நிறைய ஜாமான்கள். கூடவே ஒரு ஆள். என்னைப் பார்த்ததும் ‘டே… கண்ணா…’ என்றார்கள். மீனா மிஸ் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். அவசர அவசரமாக ஒரு பைக்குள்ளிருந்து நேந்திரம் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை என் கையில் திணித்துவிட்டு அருகிலிருந்த நபரை தன் கணவர் என்றும் அறிமுகம் செய்துவிட்டு கூட்டத்தில் முன்னே போய் விட்டார்கள். எனக்கு அந்த ஆளைப் பார்த்த மாத்திரத்திலேயே பிடிக்கவில்லை. மீனா மிஸ்ஸை மறுபடி பார்த்துவிடவும் பேசவும் துடித்தேன். வழியில் ஏதோ ஒரு ஸ்டாப்பில் கூட்டத்தோடு கூட்டமாக இறங்கிப் போய்விட்டார்கள். நான் அவர்கள் கொடுத்த நேந்திரன் சிப்ஸ் பாக்கெட்டோடு வீடு திரும்பினேன். அன்றைய தினம் அந்த நேந்திரன் சிப்ஸ் சுவைக்காமல் போனதற்கும், மீனா மிஸ்ஸின் கணவர் என்று அறியப்பட்ட நபரை பிடிக்காமல் போனதற்கும் காரணம் புரியவில்லை இன்று வரை.

அன்புடன்
எஸ். பாபு
agribabu@rediffmail.com

Series Navigation

எஸ். பாபு

எஸ். பாபு