ஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின் திட்டமிட்ட மரணம்

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

ஹெச்.ஜி.ரசூல்



பூமியின் முதுகில் மிதிபடாமல்
மிதந்துபழக எத்தனித்த
வெற்றுப்பாதங்களில் முளைத்தன
சிறகற்ற சிறகுகள்
கண்ணீர் திவலைகளில் மூழ்கிஅறுபடா
தொப்பூள் கொடியோடு
மடிசுமந்த
ஆயுள்கால கர்ப்பம் உடைந்து சிதறியது.
கண்ணுக்குத் தெரியாமல்
காற்றை அள்ளிக் குடித்து பறக்கும் உடம்பு.
ஒரு பறவையைப் போலல்ல
துப்பாக்கி ரவைகளால் சுட்டு வீழ்த்த முடியாது
ஒரு செண்பகப் பறவையைப் போல

எந்தக் கண்களும் தொடமுடியாத
மலைச் சிகரமொன்றைத் தேடி
உச்சிமுனையில் உட்கார்ந்து
ஒவ்வொன்றாய் உதிர்க்கிறது
முதுமையின் அடையாளங் கொண்ட
சிறகுகளின் ரூபங்களை.
சிறகுகள் உதிர்த்து
தன்னுடல் பார்த்து
நிர்வாணம் மறந்து பறக்கிறது
மீண்டும் வனாந்திரவெளியில்
ஒரு சிறு பறவை.

தூரங்களில் பறந்து செல்லும்
நரகக் குருவிகளிடம் பேசிப் பழகிய போது
மேகங்களில் மிதந்தது பூமி.
இடைவெளியற்று கூடி நிற்கும்
உயிர்மரங்களின் வழி
எப்போதேனும் ஊடுருவும்
வெளிச்சத்தின் துகள்களுக்கு
வேதனையின் மிச்சம் ஓவியமானது.
நீள்வானம் நிறைந்துவழிய
வரிக் குதிரைகளின் ரூபம்
கண்கள் ஓய்வெடுக்கும் காலம்
காற்றில் விரிந்த்து பறவை.

நேற்றிரவில் நிகழ்ந்தது
விதவிதமாய் பறவைகளின்
கோடுகளையும் வண்ணங்களையும்
ரத்தத்தால் வரைந்துப் பார்த்த
ஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின்
திட்டமிட்ட மரணம்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்