சோ.சுப்புராஜ்
வேடிக்கையாய் ஆரம்பித்த விவாதம் விபரீத முடிவுகளுக்கு இட்டுச் சென்று விட்டதாய் உணர்ந்தாள் நிர்மலா. இத்தனை தாமதமாய் அவள் ஒருநாளும் வீடு திரும்பிய தில்லை. பெரும்பாலும் மூர்த்தி வேலை முடித்து வீடு திரும்பும் போது அவள் வீட்டில் இருப்பாள். இன்றைக்கு அவன் வீட்டிற்கு வந்து இன்னேரம் நெடுநேரங் கடந்திருக்கும். அவள் இப்போது தான் வீட்டிற்கே போய்க் கொண்டிருக்கிறாள்.என்ன நடக்கப் போகிறதோ? எல்லாம் இந்த சுமித்ரா சனியனால் வந்த வினை.
அன்றைக்கு பணி முடிந்து பள்ளியிலிருந்து கிளம்பி நிர்மலாவும் சுமித்ராவும் இரயில் நிலையத்தை நெருங்கிய சமயத்தில், ஜெகன் தன்னுடைய ஸ்கூட்டரில் வேகமாய் வந்து, அவர்களை வழிமறித்து வாகனத்தை நிறுத்தி, மூச்சு வாங்கி, கர்சீப்பால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
”என்ன ஜெகன், வண்டியியில தான வந்தீங்க? ஏதோ வண்டிய முன்னால விட்டு அதுக்குப் பின்னால ஓடி வந்தது மாதிரி இப்படி மூச்சு வாங்குறீங்க…” என்று சிரித்தாள் நிர்மலா.
”போங்க மிஸ். எவ்வளவு நேரமாக் கத்திக்கிட்டே வர்றேன்; காதுலயே வாங்காம ரெண்டு பேரும் வேகமா நடந்து வந்துட்டீங்க…” என்றான் ஜெகன்.
”இரைச்சல்ல ஒண்ணும் கேக்கலையே! சரி என்ன விஷயமின்னு சீக்கிரம் சொல்லுங்க…. இப்ப ட்ரெயின் வந்துடும்…” அவசரப்படுத்தினாள் நிர்மலா.
”ஒண்ணுமில்ல மிஸ்; (சுமித்ராவைக் காட்டி) இவங்கள பிரின்சிப்பால் உடனே கூட்டிகிட்டு வரச் சொன்னார். அதான்…” என்றான் அவன்.
”அந்தக் கெழடுக்கு வேற வேலையே இல்ல; ரிட்டயர்டு ஆயிட்டா அக்கடான்னு வீட்ல கெடக்காம, ஸ்கூலுக்கு பிர்ன்சிபால்னு வந்து நம்ம உயிர வாங்கிக்கிட்டு இருக்கு; சரியான மறதி கேஸ். நெனச்சு நெனச்சுக் கூப்புடும். கெளம்புறப்ப கூடப் பார்த்துட்டுத்தான வந்தேன்; இப்ப எதுக்காம் கூப்டுது….” சுமித்ராவின் முகத்தில் களைப்பும் அலுப்பும் அதீத எரிச்சலும் பொங்கியது.
” என்ன விஷயம்னு எதுவும் என்கிட்ட சொல்லல மிஸ்; வெரசாப் போயி கூட்டிட்டு வாடான்னு மட்டும் என்னை வெரட்டுனார்… ரொம்ப அவசராமான வெசயமாத் தான் இருக்கும்; அவர் ரொம்ப பதட்டமா இருந்தார். வண்டியில ஏறிக்குங்க மிஸ்.. வேகமா ஒரே மிதியில ஸ்கூல்ல கொண்டு போயி உட்டுர்றேன்…”என்றான் ஜெகன்.
அம்பத்தூரில் இருக்கிற ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்மலாவும் சுமித்ராவும் முறையே இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் ஆசிரியைகள். ஜெகன் அந்தப் பள்ளியின் அலுவலக உதவியாளன். வேலை முடிந்து நிர்மலா அரக்கோணத்திற்கும் சுமித்ரா அதையும் தாண்டி திருத்தணிக்கும் இரயிலில் திரும்பிப் போகவேண்டும்.
”நீங்க போங்க ஜெகன்; நான் வர்றேன்…” என்றாள் சுமித்ரா.
”அய்ய; ஒன்றரைக் கிலோ மீட்டருக்கும் மேல திரும்பி நடக்கனும் மிஸ். நீங்க நடந்து வந்தீங்கன்னா திரும்ப வர இருட்டீடும் மிஸ்; உங்க வேலை முடிஞ்சதும் நானே உங்கள திரும்ப இரயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து விடுறேன்….”
” பரவாயில்ல; உங்களுக்கெதுக்கு வீண் சிரமம். நான் ஒரு ஆட்டோ பிடிச்சாவது சீக்கிரம் வரப் பாக்குறேன்; நீங்க போயி நான் வந்துக்கிட்டு இருக்கேன்னு மட்டும் அந்த பிரின்சுபால் கெழடு கிட்ட சொல்லுங்க; அப்புறம் என்ன வரச் சொன்னதையே மறந்துட்டு அது பாட்டுக்கு வீட்டுக்குக் கிளம்பிடப் போகுது….” என்றாள் சுமித்ரா.
”வண்டியிலயே போயிட்டு வந்துடு சுமித்ரா… அப்பத்தான் ஆறரை மணி ட்ரெயினையாவது பிடிப்ப; இல்லையின்னா ஏழரை மணி ட்ரெயின் தான் உனக்கு….” நிர்மலாவும் சொன்னாள். “ வேண்டாம்ப்பா… அவரு போகட்டும்; நீங்க கெளம்புங்க ஜெகன்” என்று சுமித்ரா சொல்லவும், அவன் முகம் அவமானத்தால் தொங்கிப் போனது. விருட்டென்று வண்டியைக் கிளப்பிய வேகத்தில் அவனுடைய கோபம் அப்பட்டமாய் வெளிப்பட்டது. சுமித்ரா அதையெல்லாம் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
”ப்ளீஸ் நிர்மலா… நீயும் என் கூட வாயேன்; கெழடு கொஞ்சம் சபலக் கேஸு. எதுக்குக் கூப்புடுதுன்னே தெரியல; ஒரு ஆட்டோ புடிச்சு போயிட்டு அதே ஆட்டோவுல திரும்பிடலாம்…..” கெஞ்சினாள் சுமித்ரா.
”நீ ஜெகன் கூட வண்டியிலயே போயிட்டு வந்துருக்கலாம் சுமித்ரா… ஆட்டோ சார்ஜாவது மிச்சமாயிருக்கும்; இந்த 21ம் நூற்றாண்டுலயும் ஏன் தான் இப்படி இருக்கியோ! அவன் கூட வண்டியில போனா உன் கற்பு போயிடுமா என்ன? ஜெகன் எவ்வளவு நல்ல மனுஷன்; அவன் மனச நோகடிச்சுட்டயே, இது உனக்கே நல்லா இருக்கா…. “ என்று அலுத்துக் கொண்டபடி ஆட்டோ விசாரிக்க்கப் போனாள் நிர்மலா. ஸ்டேண்டில் ஆட்டோ ஏதுமில்லை. ஆட்டோவிற்காகக் காத்திருக்கும் நேரத்தில் கொஞ்சம் நடக்கலாம் என்று இருவரும் பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
”என் வீட்டுக்காரர் பத்தித் தான் உன்கிட்ட ஏற்கெனவே சொல்லி இருக்கேன்ல; அடுத்த ஆம்பளைகிட்ட நான் பேசுறதயே சகிச்சுக்க முடியாம சத்தம் போடுற ஆளு. நானு ஒரு ஆம்பளையோட வண்டியில பின்னால உக்கார்ந்து போனது தெரிஞ்சா அவ்வளவு தான்…. வீட்டுல பூகம்பமே வெடிக்கும்; என்னைக் கொன்னே போட்டாலும் ஆச்சர்ய படுறதுக்கில்ல…..” நடந்தபடி வருத்தமாய்ச் சொன்னாள் சுமித்ரா.
”அப்படின்னா பொண்டாட்டிய வீட்லயே பூட்டி வச்சுக்க வேண்டியது தான; எதுக்கு வேலைக்கெல்லாம் அனுப்பனும்…?” வெடித்தாள் நிர்மலா. “பணம் வேணுமே….! உனக்குத்தான் ரொம்பக் கஷ்டம் கொடுக்குறேன் நிர்மலா; மன்னிச்சுக்கோ….” என்றபடி இலேசாய் விசும்பத் தொடங்கினாள் சுமித்ரா.
”சரி சரி; அழுது தொலைக்காத… எதுக்கெடுத்தாலும் அழுகுறத விட்டுட்டு ஆம்பளைங்களத் தட்டிக் கேட்கத் தொடங்கனும். அப்பத்தான் பொம்பளைங்களுக்கு விமோசனம் பொறக்கும்… அதுசரி, நீ ஜெகன் கூட வண்டியில போனா, அதெப்படி உன் புருஷனுக்குத் தெரியும்?” என்று கேட்டாள் நிர்மலா.
”நானே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உளறித் தொலச்சுடுவேன்; எனக்குத் தான் ஓட்டை வாயாச்சே! அதுவும் அவர்கிட்டருந்து நான் எதையும் எப்பவும் மறைக்கிறதே இல்ல…. அது அப்படியே பழகிருச்சு…..” என்றாள் பெருமை பொங்க.
”பெரிய பத்தினி தெய்வமின்னு மனசுக்குள்ள நெனப்பு….” என்று எரிச்சலடைந்த படி, “சரி சரி வேகமா எட்டி நட …..” சுமித்ராவை விரட்டினாள் நிர்மலா.
இருவரும் பள்ளிக்குப் போனபோது, பிரின்சிபால் கிளம்பத் தயாராக இருந்தார். அவரும் “எவ்வளவு நேரம்மா; நடந்தேவா வர்ற? ஜெகன் கூடவே வண்டியிலயே வந்துருக்கலாமில்லம்மா…” என்று கடிந்து கொண்டார்.
சுமித்ரா அதை சட்டை செய்யாமல் “என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்க ஸார்…” என்று அவசரப்படுத்தினாள். “பிராக்டிக்கல் எக்ஸாமுக்கு கெமிக்கல்ஸ் வேணுமின்னு சொல்லீட்டு இருந்தீல்லம்மா; அதுக்கு கம்பெனிலருந்து ஆள் வந்துருக்கார்; லிஸ்ட் எழுதிக் குடுத்துட்டுப் போம்மா….” என்றார் பிரின்சிபால்.
”ஸார் நம்ம லேப் அட்டெண்டர் கிட்ட மத்தியானமே லிஸ்ட் எழுதிக் குடுத்து உங்ககிட்ட கொடுக்கச் சொல்லி இருந்தேனே, அவரு குடுக்கலியா…?”
”ஆமா, ஏதோ குடுத்தானே! அது கெமிக்கல்ஸ் லிஸ்ட் தானா? அதை எங்க வச்சேன்னு இப்ப ஞாபகமில்லேம்மா; நீ எதுக்கும் இன்னொரு லிஸ்ட் எழுதிக் குடுத்துடும்மா….” என்றார் கூலாக. சாவித்திரி தலையில் அடித்துக் கொண்டு ஜெகனிடம் ஒரு பேப்பர் கொண்டுவரச் சொல்லி பரபரவென்று எழுதிக் கொடுத்துவிட்டு இருவரும் இரயில் நிலையம் நோக்கித் திரும்பி நடந்தார்கள்.
மறுநாள் மதிய உணவின் போது நிர்மலா, நேற்று நடந்த சம்பவத்தை விவரித்து, சுமித்ரா ஜெகனின் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து போக மறுத்ததைச் சொல்லி,”இந்த நூற்றாண்டின் கற்புக்கரசி இவள் தான் …” என்று கலாய்க்கவும், சக ஆசிரியைகள் எல்லோரும் கேலியும் கிண்டலுமாய் அவளைச் சீண்டத் தொடங்கினார்கள்.
”பழைய கற்புக்கரசியவே படாதபாடு படுத்திக்கிட்டு இருக்குறாங்க நம்ம நாட்டுல…. இதுல இன்னொரு கண்ணகியா? தாங்காதும்மா தமிழ்நாடு…” என்றாள் சாருலதா.
”ஜெகன் ரொம்ப சாதுடி. அவன் கூட இராத்திரி தனி ரூம்ல கூடத் தங்கலாம்; உன் கற்புக்கு ஒரு பங்கமும் நேராது… அதுக்கு நான் கேரண்டி; அத்தனை நல்லவன் அவன்; அவன் கூட வண்டியில போக மாட்டேன்னுட்டியா! நெசமாவே நீ வெவஸ்தை கெட்டவள் தான்…” என்றாள் சாவித்திரி.
”உன் புருஷன் அத்தனை சந்தேகப் பிராணியா சுமி! பொண்டாட்டியோட சம்பாத்யம் மட்டும் வேணும்; ஆனா ஆம்பிளையோட நிழல் கூட படாம அப்படியே பதிவிரதையா வீட்டுக்கு வரணுமாக்கும்; சரியான ஹிப்போகிராட்ஸ் தான்…” கடுமையாகச் சொன்னாள் ப்யூலாராணி.
பெண்கள் ஆளாளுக்கு தன் புருஷனைப் பற்றி கொடூரமாய்ச் சித்தரித்துப் பேசவும் சுமித்ராவிற்குக் கோபம் வரத் தொடங்கியது. “என் புருஷன் மட்டும் தான் சந்தேகப்பிராணியா? உலகத்துல இருக்குற எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான்; கொஞ்சம் கூடக் கொறைச்சலா இருக்கலாம்; ஆனால் பொஸஸிவ்னஸ் இல்லாத ஆம்பளை ஒருத்தராவது உண்டா?” என்று வெடித்தாள்.
”பொண்டாட்டிமேல உள்ள அதீத பிரியத்துல கொஞ்சூண்டு பொஸஸிவ்னஸ் இருக்கலாம்; அதுல ஒண்ணும் தப்புல்ல….” என்று பொதுவாய்ச் சொன்னாள் சாவித்திரி. ”இவங்களுக்கெல்லாம் உறைக்கிற மாதிரி நல்லா சத்தமா சொல்லுங்க மாமி…” என்று உற்சாகமாகச் சொன்னாள் சுமித்ரா.
”அப்படி எல்லாம் எல்லா ஆம்பளைங்களையும் உன் புருஷனுக்குச் சம்மா ஒரே தட்டுல வச்சு சந்தோஷப்படாத சுமி. காலம் எவ்வளவோ மாறிடுச்சு; எவ்வளவோ ஆம்பளைங்க பெண்கள மதிச்சு, கரிசனத்தோட நடந்துக்கிறாங்கன்னு தெரியுமா உனக்கு!” என்றாள் நிர்மலா.
“அதெல்லாம் சும்மா பம்மாத்து வேலை. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு…. எதையும் கண்டுக்காத மாதிரி வெளியில நடிச்சுட்டு மனசுக்குள்ள புழுங்கிக் கிட்டு இருப்பாங்க… சமயம் பார்த்து கோரமா வெளிப்படுத்துவாங்க; புரிஞ்சுக்க…” தீர்மானமாய்ச் சொன்னாள் சுமித்ரா.
”ஆம்பளைங்க சைக்காலஜிய அப்படியே கரைச்சுக் குடிச்சமாதிரி பெனாத்தத சுமி; நீ சொல்ற லிமிட்டுக்கும் மேலயே பெண்கள அனுமதிக்குற எத்தனையோ ஆம்பளைங்க இருக்குறாங்க; அதனால சந்தேகங்குற தீராத வியாதி உள்ள உன் புருஷனுக்காக ஒட்டு மொத்த ஆண்கள் சமூகத்தையும் குறைச்சுப் பேசாத….” நிர்மலாவும் கொஞ்சம் கோபமாய்ச் சொல்லவும் சுமித்ராவிற்கு ஆங்காரம் பொங்கி விட்டது.
”சரி, உன் புருஷன் உன்னை எதுவரைக்கும் அனுமதிப்பார்னு பரீட்சை பண்ணிப் பார்த்துடலாமா? இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சதும் நீ வீட்டுக்குப் போகாத… உன்புருஷன் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் நீ வேறொருத்தர் கூட ஊர் சுத்தப் போயிருக்கிறதா பொய் சொல்றேன்; அதுக்கு உன்னவரோட ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்த்துடலாமா?” என்றாள் சுமித்ரா.
”இதென்ன தப்பாட்டம் சுமி; உனக்கு பைத்தியம் தான் புடிச்சிருச்சு…. எந்தப் புருஷனால தான் தன் பொண்டாட்டி வேறொருத்தனோட ஊர் சுத்துறத சகிச்சுக்க முடியும்! விஷப் பரீட்சை எல்லாம் பண்ணாம போயி அவங்கவங்க வேலையப் பாருங்க…” என்றாள் சாவித்திரி.” அப்படின்னா ஒத்துக்கச் சொல்லுங்க; எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான்னு ஆனானப்பட்ட இராமபிரானே தன் மனைவியத் தீக்குளிக்கச் சொன்னப்ப, நிர்மலாவோட புருஷன் எம்மாத்திரம்?” ஜெயித்துவிட்ட திமிரோடு சுமித்ரா பேசியது நிர்மலாவை உசுப்பி விட்டது.
”உன் பரீட்சைக்கு நான் ரெடி. நீ என்ன வேணுமின்னாலும் என்னைப் பத்தி என் புருஷன்கிட்ட சொல்லிக்க; அவர் தப்பா எடுத்துக்க மாட்டார்; நம்பவும் மாட்டார்… ஏன்னா ஹி இஸ் எ ஜெம் ஆப் எ பெர்ஸன்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக. எல்லோரும் ”வேண்டாம்; இது விபரீதமாகப் போய் விடலாம் …” என்று எச்சரித்தார்கள்.
”சம்பள நாளும் அதுவுமா இதென்ன விளையாட்டு! இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு போயிட்டு இன்னொரு நாளைக்கு வச்சுக்குங்கப்பா உங்க விளையாட்ட…..” என்று கொஞ்சம் தள்ளிப் போட முயன்றாள் சாவித்திரி. நடுவில் இடைவெளி விட்டால் அதற்குள் நிர்மலா அவளின் புருஷனிடம் இது பற்றிப் பேசி, அவனைத் தயார்ப் படுத்தி இதை நாடகமாக்கி விட சாத்திய மிருப்பதாகச் சொல்லி சுமித்ரா இதை தள்ளிப் போட ஒத்துக்கொள்ளவில்லை. இன்றைக்கே பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்றாள் பிடிவாதமாக. நிர்மலாவும் ஆட்டத்திற்கு தயாரென்றாள்.
வீம்புக்காகச் சொல்லி விட்டாலும் நிர்மலாவின் மனசுக்குள் இலேசான கலக்கம் எட்டிப் பார்க்கவே செய்தது. மூர்த்தியின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோமோ? இரண்டு வருஷ தாம்பத்யத்தில் சின்ன நெருடல் கூட நேர்ந்ததில்லை தான்; சந்தேகத்தின் சிறு இழை கூட அவனிடம் தலை காட்டியதில்லை தான்… ஆனாலும் இன்னொரு ஆணுடன் ஊர்சுற்றி விட்டு வருவதாய்ச் சொல்லப்படுவதை எப்படி எடுத்துக் கொள்வானோ? எல்லோரும் பயப்படும்படி விபரீதமாய் ஏதாவது நேர்ந்து விடுமோ?
மூர்த்தி நிர்மலாவைப் பெண் பார்க்க வந்தபோது, அவளுக்கு அவனை எங்கேயோ பார்த்த ஞாபகமிருந்தது. எவ்வளவு யோசித்தும் எங்கே என்று சட்டென்று ஞாபகம் வரவில்லை. திருமணத்திற்கான பூர்வாங்க பேச்சுக்கள் முடிந்து, இருவரும் கொஞ்ச நேரம் தனியாகப் பேசிக்கொள்ளட்டுமென்று பெரியவர்கள் அனுமதித்த போது, அவன் கேட்டான். “நீங்க வேலை பார்க்குறீங்களா?”
”ஆமா…. ஆனா உங்களுக்கு வேண்டாமின்னா வேலைய விட்டுர்றேன்…” என்றாள் தரையைப் பார்த்துக் கொண்டு.
”அய்யோ; தப்பித் தவறிக் கூட அந்தத் தப்பப் பண்ணீடாதீங்க; இப்ப இருக்கிற பொருளாதார சூழ்நிலைல, தேவைகள் பெருகி விட்ட தினப்படி வாழ்க்கையில ஒருத்தர் வருமானத்துல காலந்தள்ளுறது ரொம்பக் கஷ்டம்…” என்றான் வெளிப்படையாக. அவனுடைய குரலைக் கேட்டதும் அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. உள்ளூர் டீ.வி.யில் பட்டிமன்ற பேச்சாளராக அவனைப் பார்த்திருக்கிறாள். “நீங்க பட்டிமன்றத்துல பேசுறதக் கேட்டுருகேன்; உங்க பேச்சும் தமிழ் உச்சரிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்….”என்றாள்.
அவர்களுக்குத் திருமணம் முடிந்து ஓரிரு மாதங்கள் கடந்து விட்டிருந்த ஒரு மாலை நேரத்தில் “நிம்மி, உனக்கு மகேந்திரன்னு யாரையாவது தெரியுமா?” என்று கேட்டான். அவளுக்கு சிலீரென்றிருந்தது. சில வருஷங்களுக்கு முன்பு அவள் வேலை பார்த்த பள்ளி நிர்வாகியின் மகன் தான் மகேந்திரன். இருவரும் காதலித்தார்கள். நிறைய கடிதங்கள் எழுதி, பள்ளியின் உல்லாச சுற்றுலாக்களில் நெருக்கமாய் நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்கள். அப்புறம் தான் அவனின் சுயரூபம் வெளிப்பட்டது. பெண்களை காதலெனும் மாய வலையில் சிக்க வைத்து, தன்னுடைய வெறியைத் தீர்த்துக் கொண்டு விலகி விடுகிற கயவன் அவன் என்ற உண்மை புரிந்த அடுத்த நிமிஷமே அவனின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு அந்தப் பள்ளியிலிருந்தும் வெளியேறி விட்டாள்.
”நமக்குக் கல்யாணம் நிச்சயமாகிக் கொஞ்சநாள்ல இந்த மகேந்திரன் என்னை வந்து பார்த்தான்; நீ அவனுக்கு எழுதிய கடிதங்கள், எடுத்துக்கிட்ட போட்டோக்கள் எல்லாம் காட்டி உன்னோட கேரக்டர் மோசமின்னும், கல்யாணத்த நிறுத்திடனுமின்னும் சொன்னான். வேலையப் பார்த்துட்டுப் போடான்னு திட்டி அனுப்பீட்டேன்; இதை ஏன் இப்ப உன்கிட்ட சொல்றேன்னா, பருவ வயசுல காதலிக்குறதுங்குறது ரொம்ப இயல்பான விஷயந்தான்; அதுக்காக உனக்கு குற்ற உணர்வு எதுவும் தேவையில்லைன்னு சொல்றதுக்குத்தான்…” என்றான். இப்படி ஒரு ஆண்மகனா என்று நிர்மலாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது.
ஒருமுறை ஒரு இரயில்வே விபத்தின் காரணமாக திடீரென்று இரயில்களை எல்லாம் நிறுத்தி விட்டார்கள். போக்குவரத்தே ஸ்தம்பித்து, பஸ்களிலும் நெரிசல் பொங்கி வழிந்தது. ஆட்டோக்களும் கிடைக்காத சூழலில் இவள் முன்பின் தெரியாத ஆடவன் ஒருவனின் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு, அவன் பெண்ணையே பார்த்திராத மாதிரி வழிந்து, இவளை இவள் வீட்டிற்கே கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனான். வாசலில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி, “உதவி செய்தவனை அப்படியேவா அனுப்பறது? வீட்டுக்குள்ள கூப்புட்டு ஒரு காஃபியாவது குடுத்து அனுப்பியிருக்கலாமே…!” என்று கடிந்து கொண்டான்.
”மணி ஏழரைக்கு மேல ஆயிருச்சு; இந்நேரம் உன் ஹஸ்பண்டு வீட்டிற்கு வந்துருப்பாருல்ல….” என்று நிர்மலாவிடம் கேட்டு உறுதி படுத்திக் கொண்டு போனில் நம்பரைச் சுழற்றினாள் சுமித்ரா. கைத்தொலைபேசிகளோ, பேசரோ எல்லாம் புழக்கத்திற்கு வராத காலகட்டம் அது. தொடர்பு கொள்ள ஒரே சாத்தியம் லேண்ட் லைன் மட்டுமே!
”ஹலோ, இது நிர்மலா வீடா; நான் அவளோட தோழி சுமித்ரா – கூட வேலை பார்க்குற கொலிக் பேசுறேன்….” என்று ஆரம்பித்தாள்.
“நிர்மலா, இன்னும் ஸ்கூல்லருந்து வீட்டுக்கு வரலையே…!” என்றது எதிர்முனை. “அவள் இன்னைக்கு ஸ்கூலுக்கே வரல; அது சம்பந்தமா உங்ககிட்டப் பேசுறதுக்குத் தான் போன் பண்ணினேன்…” என்றாள் சுமித்ரா.
”என்கிட்ட என்ன பேசணும்….?”
”கொஞ்ச நாளா உங்க வொய்ஃப்போட போக்கே சரியில்ல; ஸ்கூலே அசிங்கப் பட்டுப் போச்சு…. ஸ்கூல்ல சுந்தரராமன்ங்குறவர்கிட்ட ரொம்ப இழையுறாங்க… அதான் உங்க காதுல் போட்டு வைக்கலாமின்னு….”
”ஆணும் பொண்ணும் சேர்ந்து வேலை பார்க்குற எடத்துல, ஒருத்தருக் கொருத்தர் பேசிச் சிரிக்காம எப்படிங்க இருக்க முடியும்! இதைச் சொல்றதுக்கா வேலை மெனக்கிட்டு எனக்கு போன் பண்ணுனீங்க…”
“நான் சொல்றத முழுசா கேளுங்க மிஸ்டர் மூர்த்தி…. அவங்க உறவு நீங்க நெனைக்குற லிமிட்டெல்லாம் தாண்டி ரொம்ப தூரம் போயாச்சு; இன்னைக்குக் கூட ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு மகாபலிபுரம் போயிருக்குறாங்க ஜாலியா இருக்குறதுக்காக…..” நிர்மலா சுமித்ராவைக் கிள்ளினாள். “நீ எல்லை மீறிப்போற….” என்று மெல்லிய குரலில் கண்டித்தாள். சுமித்ரா ரிசீவரின் வாயை மூடிக் கொண்டு, “சும்மா வெளையாட்டுக்குத் தான…. உன் லட்சிய புருஷர் எப்படித்தான் ரியாக்ட் பண்றாருன்னு தான் பார்ப்பமே….” என்றாள் கிண்டலுடன்.
”இங்க பாருங்க மிஸஸ்….உங்க பேரு என்ன சொன்னீங்க; ம்….சுமித்ரா; நிர்மலாவ உங்களோட தோழிங்குறீங்க… அப்புறம் அவங்களப் பத்தி இப்படி அபாண்டமா பழி சொல்றீங்களே! உங்களப் பத்தி நான் என்ன நெனைக்குறது! உங்களூக்கும் நிர்மலாவுக்கும் ஏதாவது பிரச்னையா?” என்றான் மூர்த்தி.
”அய்யோ, நான் சொல்றதெல்லாம் நூறுசதம் உண்மைங்க; உங்களுக்கு இந்த உண்மை பின்னாடி தெரிய வரும்போது பெரிய விளைவுகள ஏற்படுத்திடுமோன்னு பயந்து தான் இப்பவே உங்க காதுல போட்டா, இதை நீங்க முளையிலேயே கிள்ளிடலாமேன்னு தான்…. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையின்னா, நீங்க ஸ்கூலுக்கு வந்து கூட விசாரிச்சுப் பார்க்கலாம்…..” அவள் பேசி முடிப்பதற்குள் மூர்த்தி சீறினான்.
”இங்க பாருங்க; நீங்க நிர்மலாவோட தோழின்னு சொன்னதுனால தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்தேன்… உங்களோட பேச்சு சரியில்ல; என் மனைவிய அவள் வேலை பார்க்குற எடத்துல போயி வேவு பார்க்குற கேவலமான காரியத்தச் செய்யச் சொல்றீங்களா! அந்த அளவுக்கு மட்டமான ஆளு நான் இல்ல….போனை வச்சுட்டு உங்க வேலையப் பார்த்துக்கிட்டுப் போங்க” என்று சிடுசிடுத்து பட்டென்று போனைத் துண்டித்தான்.
சுமித்ரா கொஞ்ச நேரத்திற்கு ஒன்றுமே பேசவில்லை. ஆழமாய் நிர்மலாவை ஏறிட்டாள். “ரியலி, நீ ரொம்பக் குடுத்து வச்சவ நிர்மலா… உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு! இப்படி ஒரு ஆம்பளையா, என்னால இன்னும் கூட நம்பவே முடியல… உண்மையிலேயே உன் புருஷன் கிரேட் பெர்ஸன் தான்; நான் என்னோட தோல்விய ஒத்துக்கிறேன்….” என்றாள்.
நிர்மலாவிற்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது. இருந்தாலும் ஒரு மூன்றாம் மனுஷியிடம் பெருந்தன்மையாய்க் காட்டிக் கொண்டிருந்து விட்டு தான் வீட்டிற்குப் போனதும் வெடிப்பானோ என்று மனதின் மூலையில் ஒரு பயப் பந்தும் உருண்ட்து. வீட்டிற்குப் போனதும் முதல் வேலையாக அவன் ஆரம்பிப்பதற்குள் எல்லாவற்றையும் கொட்டி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.
நிர்மலா வீட்டிற்குப் போனபோது மூர்த்தி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ”வா நிர்மலா, இப்பத்தான் வர்றியா? முகங்கால் கழுவிட்டு சீக்கிரம் வா; நானே உனக்குப் பிடிச்ச அயிட்டங்கள சூப்பரா சமைச்சு வச்சுருக்கேன்; சாப்பிடலாம்….” என்றான்.
அவள் முகங்கால் கழுவி நைட்டிக்கு மாறி, டைனிங் டேபிளுக்கு வந்ததும் அதற்காகவே காத்திருந்த்து போல் ஆரம்பித்தான். “நிர்மலா, உனக்கு இன்னைக்கு சம்பள நாளாச்சே! எங்க சம்பளக் கவர்?” என்றான். நிர்மலா எழுந்து போய் சம்பளக் கவரை எடுத்து வந்து அவனிடம் கொடுக்கவும் எந்த சிந்தனையு மில்லாமல் அவளின் சம்பளப் பணத்தை சிரத்தையாய் எண்ணத் தொடங்கினான்.
நிர்மலாவிற்கு ”ச்சீ…” என்றிருந்த்து. என்ன மாதிரியான மனுஷன் இவன்! இவன் தன் மீது வைத்திருப்பது அதீத நம்பிக்கையா? அல்லது நீ எக்கேடும் கெட்டுப்போ; எனக்கு முதல் தேதி நீ கொண்டு வருகிற சம்பளப்பணம் தான் முக்கியம் என்கிற அக்கறையின்மையா? அவள் வெடித்து அழத் தொடங்கினாள்.
முற்றும்
- யமுனா தீரத்து நந்தக்குமாரன்….
- அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்
- 2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது
- கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள்.
- பெண்ணிய நோக்கில் அறநெறிச்சாரம் காட்டும் கற்பு
- புதுக்கவிதைகளில் தாய்மை
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -17
- நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் ! (கட்டுரை -1) (The Superfast Fusion Power Plasma Rocket
- மங்களூரு விபத்து மே 22, 2010
- ரிஷி கவிதைகள்
- கண்ணாடி வார்த்தைகள்
- தள்ளாட்டம்
- களம் ஒன்று கதை பத்து வரிசை – 3 – அவன்பாடு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி -போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் -கவிதை -29 பாகம் -2
- இது வெற்றுக் காகிதமல்ல…
- வேத வனம் விருட்சம் 88
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று – கவிதை -11 – பாகம் -2
- உயர்சாதிமயநீக்கம்
- முள்பாதை 32
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு
- ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு…..
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -20
- என்ன தவம் செய்தனை