ஜான் பீ. பெனடிக்ட்
ஆயுள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது 1981-ம் வருடத்துக்கு. நான் புதுகை மாவட்டம், மெக்கேல்பட்டியில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஸ்டீபன், கென்னடி, ஜோசப், பவுல் ஆகியோர் எனது வகுப்புத் தோழர்கள். ஊரில் உள்ள பெரியவர்கள் எல்லாம் புகை பிடிப்பதைப் பார்க்கும்போது, ஏதோ பல மாதங்களாகப் பட்டினி கிடந்த பட்டணத்து யானை, சோளப் பொரியைக் கண்டு ஜொள்ளு விட்டதுபோல ஒருவித உணர்வு எங்களின் அடிவயிற்றில் முகாமிடுவதை நாங்கள் உணர ஆரம்பித்த அற்புதமான காலம் அது. மார்கழிப் பனியின் குளிரில், கிழிந்து கந்தலாகிப்போன துப்பட்டிக்குள் சுற்றப்பட்ட பார்சல் பிணங்களாக, கிராமத்து வீட்டுத் திண்ணைகளின் மூலைகளில் இரவைக் கழிக்கும் நாங்கள், விடிந்தும் விடியாமலும், ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து, வைக்கோலை தீயிட்டுக் கொழுத்தி குளிர் காய்வது வழக்கம். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த நேரத்தினை வீணடிக்காத விரும்பாதவர்களாய், ‘வரகு’ வைக்கோலின் இரு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியை உடைத்து, அதன் ஒரு முனையை நெருப்பில் பற்றவைத்து மறு நுனியை வாயில் வைத்து உறிஞ்சி புகை பிடிப்பதுண்டு. இந்த இரகசியம் எங்களது மற்ற நண்பர்களுக்கும் தெரியவந்ததால், நாளுக்கு நாள் குளிர் காயக் கூடும் கூட்டம் அதிகரித்து, ஒரு கட்டத்தில் இந்தியக் குடியரசின் ரேசன் கடை வாசல் ரேஞ்சுக்கு நிலைமை மோசமடையத் தொடங்கியது. இந்தக் கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்று விழி பிதுங்க ஆரம்பித்த வேளையில், குளிராடையைக் கழற்றி எறிந்துவிட்டு வெயிலால் எங்களைச் சுட்டெரிக்க ஆரம்பித்தாள் இயற்கை அன்னை. குளிர்காய்வது முற்றிலும் நின்றுபோனது.
ஆனால் புகை பிடிக்கும் பழக்கத்தினை எப்படியாவது தொடரவேண்டும் என்பதில் மட்டும் நாங்கள் கம்யூனிசத்தையே மிஞ்சும் அளவுக்குக் கொள்கை மாறாத உறுதியோடு இருந்தோம். ஒரு நாள் பள்ளி மதிய இடைவேளையில், பவுல் எங்கள் எல்லோரையும் தனியாக அழைத்தான். முக்கிய உறுப்பைக் கூட முக்கால்வாசி மட்டுமே மூடியிருந்த தனது அழுக்கு ட்ரவுசருக்குள், ஒட்டுப்போட்ட நிலையில் ஓராயிரம் ஓட்டைகளுடன் தொங்கிய பாக்கெட்டிலிருந்து ஒரு சில “ஒட்டுப் பீடி”களை எடுத்துக்காட்டினான். மலையாளப்பட போஸ்டரின் மேல்பகுதியில் குறுக்காக மறைத்து ஒட்டப்பட்டிருக்கும் பிட் நோட்டிசை நீக்கிவிட்டு முழுமையாக அதனைப் பார்த்தது போன்ற ஒரு உணர்வும், சுறுசுறுப்பும் எங்களுக்குள் உண்டானது. “டேய், சீக்கிரம்… யாராவது தீப்பெட்டி எடுத்து வாங்கடா…” என்று உத்தரவு போடாத குறையாகச் சொன்னான் பவுல். வீடு பக்கத்தில் இருந்ததால் ஓடிச் சென்று தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு நிமிடத்தில் குதிரைப் பாய்ச்சலில் திரும்பி வந்தான் ஜோசப். பள்ளிச் சுற்றுச் சுவரின் பின்புறம் ஒளிந்துகொண்டு மாறி மாறி முயற்சி செய்தோம், ஆனால் ஒருவனாலும் ஒட்டுப் பீடிகளைப் பற்ற வைக்க முடியவில்லை. நீண்ட நேரம் வரிசையில் நின்று நமது முறை வரும்போது டிக்கெட் கவுண்டரை மூடுவதைப்போல, கடைசியாக ஒரு ஒட்டுப் பீடியைப் பற்றவைத்தபோது பள்ளிக்கூட மணி அதிரடியாய் ஒலித்தது. எவன்டா அவன்…
ஒட்டுப் பீடித் தொழில் நுட்பத்தினை தற்போது மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டதால், நாங்கள் எல்லோரும் ஒட்டுப் பீடி பொறுக்குவதை ஒரு முழு நேரத் தொழிலாகவே மேற்கொண்டோம். அந்த வட்டார ஆண்களெல்லாம் வந்து செல்லும் காசிச் செட்டியார் கடைதான் எங்களுக்கெல்லாம் பொன்னு விளைகிற பூமி. பொறுக்கிய ஒட்டுப் பீடிகளில் நல்லவற்றை மட்டும் பில்ட்டர் பண்ணிக்கொண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் ஊரின் கிழக்குப் புறத்தில் உள்ள மூங்கிக் குளத்தின் கரை இறக்கத்தில் நாங்கள் சங்கமித்தோம். கென்னடியை மட்டும் இன்னும் காணவில்லை. ஊரார்கள் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் குளத்துக் கரையின் இறக்கத்தில் பதுங்கியிருப்பது தெரியாமல் தேடுகிறானோ என எண்ணி நாங்கள் குளத்துக் கரைமீது ஏறிப் பார்த்தோம். தத்தெடுத்த தாயும் தன்னைத் தள்ளிவிட்டுப் போய்விட்டதாக எண்ணி வேதனைப்படும் பச்சைக் குழந்தையைப் போல, எங்களைக் காணமுடியாமல் குளத்தின் நடுவே பரிதாபமாக நின்று கொண்டு, கண்கள் இரண்டையும் கடல் அளவுக்கு விரிவுபடுத்திக் கொண்டு கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டிருந்தான் கென்னடி. “டேய்” என்று நாங்கள் அழைத்தவுடன், ஜெட்டாகப் பறந்துவந்து எங்கள் பக்கம் விழுந்தான். ஏண்டா இவ்வளவு லேட்டு என்று கேட்டதற்கு, சுந்தன் செட்டியார் கடைக்குச் சென்று பீடி வாங்கி வந்ததாகச் சொன்னான். ஊர் ஆண்களெல்லாம் ஒன்று கூடும் காசிச் செட்டியார் கடைக்குப் போனால் மாட்டிக்கொள்வோம் எனப் பயந்து, ஆட்கள் அவ்வளவாக கூடாத சுந்தன் செட்டியார் கடைக்குச் சென்று பீடி வாங்கிவந்த கென்னடியின் உசிதத்தைப் பாராட்டும் தாராளமான மனப்பக்குவம் அப்போதே எங்களுக்கெல்லாம் இருந்தது. ஒட்டுப் பீடியிலிருந்து “முழு பீடி” அளவிற்கு உயர்ந்த இந்த நிகழ்ச்சிதான் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு நாங்கள் வாழ்க்கையில் அடைந்த முதலாவது முன்னேற்றம்!
ஐந்து காசுக்கு இரண்டு காஜா பீடி விற்ற காலம் அது. பத்து காசுக்கு நான்கு காஜா பீடி வாங்கி வந்திருந்தான் கென்னடி. ஆனால் நாங்கள் மொத்தம் ஐந்து பேர் இருந்தோம். பாகப் பிரிவினையின் போது பங்காளிகளுக்குள் உண்டான பிரச்சினையைப் போல, நான்கு பீடிகளை ஐந்து பங்குகளாக்க முடியாமல் திணறிப்போய் நின்றோம். நான்கு பீடிகளையும் ஆளுக்கு ஒன்றாக எங்களிடம் பிரித்துக்கொடுத்துவிட்டு, தன்னிடம் ஒன்றுமே இல்லாமல் வெறுமனே நின்றான் கென்னடி. நண்பன் என்றால், இவனன்றோ நண்பன் என்று வியப்பு மேலிட்டு நாங்கள் நால்வரும் திகைத்து நின்றோம். இவன் உண்மையிலேயே நண்பனா அல்லது வள்ளலா என்று ஒரு வழக்காடு மன்றத்தை நடத்தி, இறுதியாக, இவன் நண்பனாக வாழும் வள்ளல் என்று சாலமோன் பாப்பையா ஸ்டைலில் நான் தீர்ப்புச் சொல்ல முற்படும்போது, தனது கால்சட்டைப் பைக்குள் இருந்து ஒரு முழு சிகரெட்டை வெளியில் எடுத்தான் கென்னடி. உடனே, டேய்… டேய்… அதை எனக்குக் கொடுடா என நாங்கள் நால்வரும் கெஞ்ச, போங்கடா… நானே எங்க அப்பாவுடைய சிகரெட் பாக்கெட்டிலிருந்து தெரியாமல் எடுத்து வந்தேன் என்று கென்னடி சொன்னபோது, போலீஸ் வேலைக்குப் பொருத்தமான ஆள் கென்னடி எனப் புரிந்துகொண்டோம்.
பாகப்பிரிவினை ஒரு வழியாக முடிவுக்கு வர, அவற்றைப் பற்ற வைக்கும் படலம் ஆரம்பமானது. இலேசாக தூரல் போட்டு நின்றிருந்தது. இலைகளிலிருந்து மழைத்துளிகள் கொட்டிக் கொண்டிருந்தன. கரையின் ஓரத்தில் இருந்த யூகளிப்ட்டஸ் (ஆர்.எஸ்.பதி) காட்டின் உள்ளே நின்றுகொண்டு ஒருவன் மாறி ஒருவனாக பீடியையும், சிகரெட்டையும் பற்றவைக்க முயற்சித்து கடைசியில் தோல்வியைத் தான் தழுவினோம். நீளமான அந்தக் குளத்தின் மறுபக்கத்தில் உள்ள சவுக்குக் காட்டிற்குள் சென்றால் அங்கு கிடக்கிற சவுக்குச் செத்தையை அள்ளிப் போட்டு கொழுத்தி எளிதில் பீடியைப் பற்றவைக்கலாம் என்று ஒரு அற்புதமான ஐடியா கொடுத்தான் ஸ்டீபன். இப்படிப்பட்ட ஐடியாக்களை அள்ளி விடுவதில் ஸ்டீபனை மிஞ்சுவதற்கு இன்றுவரை எவனும் எங்கள் ஊரில் பிறந்துவரவில்லை. குளத்தைக் கடக்க முடியாத அளவுக்கு தண்ணீர் அதிகம் இருந்தது. கரை மீது நடந்தால், பலரின் கண்களில் பட்டுவிடுவோம் என்பதற்காக, கரையின் இறக்கத்திலேயே, தெற்கு நோக்கி நடந்து, பேய்களின் புகழிடமாகக் கருதப்பட்ட அந்த ஒற்றைப் பனை மரத்தைச் சுற்றி, சவுக்குத் தோப்பை அடைந்தோம்.
ஸ்டீபன் சொன்னபடியே சவுக்குச் செத்தைகளை அள்ளிப்போட்டு முதலில் அந்தச் செத்தையைக் கொளுத்திவிட்டோம். அதில் எறிந்த நெருப்பில் பீடியையும், சிகரெட்டையும் காட்டி எளிதில் பற்றவைத்துக்கொண்டோம். நெருப்பிலேயே பாதி பீடியும், சிகரெட்டும் எரிந்துவிட்டது. மீதியிருந்ததை வேகமாக இழுக்க ஆரம்பித்தோம். ஜோசப் மட்டும் அலறினான். என்னாடா என்று கேட்பதற்குள் அவனே சொன்னான்… “டேய் நாம் கொளுத்திய சவுக்குச் செத்தையிலிருந்து நெருப்பு பத்திக்கிட்டு சவுக்குக் காடே எறியுதுடா…”. அதைக் கேட்டு சற்றும் கவலைப்படாதவனாய், உறிஞ்சி முடியும் நிலையிலிருந்த பீடியில் மீதமிருந்த நெருப்பைக் கொண்டு, தான் ஏற்கனவே பொறுக்கி வைத்திருந்த ஒட்டுப் பீடியைப் பற்றவைத்துக் கொண்டிருந்தான் பவுல். இதுக்கு மேல் இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த நாங்கள் எட்டுத் திசையிலும் பறந்து ஓடுகையில், மெக்கேல்பட்டி புனித சூசையப்பர் தேவாலயத்தின் ஒலிபெருக்கியில் அறிவிப்பு சத்தம் கேட்டது. “சவுக்குத் தோப்பில் நெருப்புப் பிடித்து எரிகிறது; ஊரார்கள் எல்லோரும் ஓடிச்சென்று நெருப்பை அணைக்க உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்…”
இன்று…
திறமைக்கேற்றபடியே கென்னடி சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறான்;
ஸ்டீபன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறான்;
ஜோசப் அங்கும் இங்குமாக தொழில் செய்கிறான்;
நான் வாசிங்டனில் வசிக்கிறேன்;
பவுல் 1999-ல் இறந்துவிட்டான்… விஜயகாந்தின் தீவிர ரசிகனான அவன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், கட்டுமஸ்தான உடம்பு கொண்ட அவன், இன்று தேமுதிக-வில் வட்டச் செயலாளர் பதவியிலாவது இருந்திருப்பான். அதற்கு என்னாலும் உதவியிருக்க முடியும். அவன் இறந்த ஒருசில மாதங்களில் அவனது தந்தை ‘குடிகார’ சூசையும் இறந்துவிட்டார். என்னுடைய வளர்ச்சியைப் பலமுறை மனதாரப் பாராட்டிய அருமை நண்பன் பவுலுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பனம்.
jpbenedict@hotmail.com
- மும்பைத் தமிழர்களின் அரசியல்…
- படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த
- வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)
- உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு
- பாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”
- வாஸந்தி கட்டுரைகள்
- மொழி
- அவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று
- கனவு வெளியேறும் தருணம்
- தைவான் நாடோடிக் கதைகள் (3)
- பெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்
- கணையாழி விழா 2007 (18.11.2007)
- இன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்
- கதை சொல்லுதல் என்னும் உத்தி
- அடையாளங்களை விட்டுச்செல்லுதல்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்
- ஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு
- பூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு
- நேற்றிருந்தோம்
- தமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:
- ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது
- ஒட்டுப் பீடியில் எரியும் உலகம்
- பஞ்ச் டயலாக்
- கடிதம்
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்
- லா.ச.ரா.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)
- பாரதி
- அக்கினிப் பூக்கள் … !-3
- தாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை !
- தாய் மண்
- அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்
- மிஸ்கா, என்னைத்தொடர்ந்து வரும்
- ஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்
- ரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…?
- விசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை!
- கடமை
- அது ஒரு விழாக்காலம்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1
- மாத்தா ஹரி அத்தியாயம் -39