தமிழநம்பி.
*
2002ஆம் ஆண்டு செப்தம்பர் 12ஆம்நாள் சென்னையில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தனர்.
தமிழ் கற்பதை எளிமைப்படுத்தும் வகையில் உயிர்மெய் உகரம் ஊகாரம் ஆகிய 36 எழுத்துக்களுக்கு மாற்றாகக் குறியீட்டு எழுத்துக்களைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்துள்ளதாகத் தீர்மானம் கூறியது.
எதிர்ப்பு :
இதை அறிந்ததும் தமிழகமெங்குமுள்ள தமிழறிஞர்களும் மொழியாய்வாளர்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். புதுவை இலக்கண இலக்கியத் திங்களிதழான ‘நற்றமிழ்’ இதழின் நிறுவுநரும் ஆசிரியருமான செந்தமிழ்த்திரு. இறைவிழியனார் தலைமையில், புதுவைப் பேருந்து நிலையத்தின் திருவள்ளுவர் சிலையருகில் பலரும் கலந்து கொண்ட ‘எழுத்து மாற்றத்தை எதிர்த்த’ கண்டன ஆர்ப்பாட்டம் அதே செப்தம்பர் திங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடெங்கும் எழுந்த கடுமையான எதிர்ப்பை அறிந்ததும் மாற்றம் செய்ய வந்தவர்கள் பின்வாங்கிச் சென்று விட்டனர்.
எட்டாண்டுகளுக்குப் பிறகு, இப்போது 72 எழுத்துக்களை மாற்ற அரசை இணங்க வைத்து, அரசே மாற்றத்தை அறிவிக்கச் செய்துவிட வேண்டுமென அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்ற பெயர் கேட்டாலே எழுத்து மாற்றம் பற்றிப் பேச அஞ்சிப் பதுங்கியவர், இன்று எழுத்து மாற்றம் செய்தவராக வரலாற்றில் பெயர் பதிந்து கொள்ள முன் நிற்கிறார்.
மீண்டும் எழும் ‘எழுத்து மாற்றம்’ என்னும் குரல் :
7-1-2010 மாலைமலர் நாளிதழில், வருகின்ற சூன் மாதம் கோவையில் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் எழுத்து மாற்றத்திற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என்று செய்தி வந்திருக்கிறது.
இந்த எழுத்து மாற்ற விரும்பிகள், இப்போது இகர, ஈகார, உகர, ஊகார வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் (18 x 4 = 72) எழுபத்து இரண்டிற்கும் புதிய குறியீடுகள் கொண்ட மாற்று எழுத்துக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு எழுத்துக்களை மாற்றுவதால் ஏற்படும் தீங்குகள் யாவை? இப்போதைய நிலையில் மிகச் சிறுபான்மை யினரான இவர்களின் அழுத்தத்திற்கு அரசு இணங்கக்கூடிய வாயப்பு உள்ளதா? எழுத்து மாற்றம் வேண்டும் என்போர் கூறும் காரணங்கள் யாவை? அவற்றில் எந்த ஒரு காரணமாயினும் பொருத்தமாமாக உள்ளதா? என்று பார்ப்போம்.
இந்த மாற்றம் செய்தால் விளையக்கூடிய தீங்குகள் :
1. இவர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி அரசு ஆணை யிடுமானால், இப்போதுள்ள நூல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் உட்படப் பல்லாயிரக் கணக்கான தமிழ்நூல்கள் பயன்றறுப் போகும்.
2. இணையத்தில் எழுதப்பட்டுள்ள அறிவியல் கலை இலக்கியம் சார்ந்த அரிய செய்திகள் உட்பட பல நூறாயிரப் பக்கங்கள் பயன்றறுப் போகும்.
3. தமிழ்ப் பயன்பாட்டில் குழப்பமான நிலையேற்படும்; தமிழ்ப் பயன்பாட்டு வளர்ச்சி அறவே தேங்கிப் போகும்.
4. குறண (நானோ) புரட்சிக் காலத்தில், விரல் நீள நினைவுக் குச்சியில் நூலகமே அடங்குகின்ற காலத்தில் இந்த எழுத்து மாற்றம் மாட்டுவண்டிப் புரட்சியாகி வளர்ச்சியில் தொய்வு ஏற்படுத்திப் பின்தங்க வைக்கும்.
5. சீர்மை செய்தல் என்ற பேரால் செய்யப்படும் தேவையற்ற மாற்றங்களால் மொழிவளர்ச்சியில் சீர்குலைவு ஏற்பட்டுவிடும்.
6. புதிய குறியீடுகள் பயன்படுத்தல் வரலாற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தும். இவர்கள் கூறும் குறியீடுகள் மலையாள மொழியில் பயன்படுத்தும் குறியீடுகளை ஒத்தவை. இதை வைத்து, எதிர்காலத்தில் தமிழ் மலையாளத்திற்குப் பிந்தியது என்று கூறிக் குழப்ப வாய்ப்பு நேருமென்பதை மறுப்பதற்கில்லை.
7. தமிழ்நாட்டில் புகுத்தப்படும் இம் மாற்றத்தால், தமிழ்நாட்டுத் தமிழும், பிறநாட்டுத் தமிழும் வேறுபட்டுவிடும். இதனால், உலகத் தமிழர் ஒன்றுபடுதலை – தமிழர் ஒற்றைமையை இம் மாற்றம் கெடுத்து விடும்.
8. மொழிசார்ந்த எழுத்து மாற்றம் எச்சரிக்கையோடு பெருந் தாக்கமின்றிப் படிப்படியே நிகழ்வதாகும்.
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் ஏ, ஓ மாற்றம் கொண்டு வந்தார். இதனால், ஏற்பட்ட மாற்றம் 6.25% (விழுக்காட்டு) அளவே. அதன்பின், கி.பி. 20ஆம் நூற்றாண்டில், பெரியார் முன்வைத்த சீர்மை முயற்சியால் நிகழ்ந்த மாற்றம் 4% அளவாகும். ஆனால் இப்போது இவர்கள் கொண்டுவரத் துடிக்கும் மாற்றம் 59% அளவினதாகும். 59% மாற்றம் மொழியையே வேறாக்கிக் காட்டக்கூடிய குழப்பத்தை ஏற்படுத்தும் மாற்றமாகும்.
9. பெரியாரின் சீர்மையாக்கத்தில் புதிய குறியீடுகள் ஏதும் புகுத்தப்படவில்லை. மக்களுக்குப் பழக்கமான எழுத்துருவையே அச்சுவில்லை வசதிக்காக முன்வைத்தார். ஆனால் இப்போது கொண்டுவரத் துடிக்கும் எழுத்து மாற்றம் மொழியையே உருமாற்றி விடக்கூடியதாகும்.
10. தமிழ் மொழியில் இகர ஈகார உகர ஊகார வரிசைச் சொற்கள் மிக மிகுதியாக உள்ளன. இம் மாற்றம் தமிழ்மொழியைப் பழைய தமிழ் புதிய தமிழ் என இரண்டாகப் பிரிக்கக் கூடியதாகும்.
11. இப்போதுள்ள அரசு இந்த மாற்றத்தை ஒரு சட்டம் மூலம் நடைமுறைப் படுத்தினால், நாளை மற்றோர் அரசு வேறு பல மாற்றத்தை வேறு சட்டத்தின் மூலம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
12. 72 எழுத்துக்களை மாற்றுவது படிப்பறிவைச் சிதைக்கும்; குறைவான கல்வியறிவு உள்ளவர்களைக் கல்லாதவராக்கும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் முதலிலிருந்து தமிழ் படிக்கத் தள்ளும் கொடுமை நேரும்.
13. இம் மாற்றத்தால் திரிபுகளும் தொடரறுப்பும் ஏற்படும்; தொடரறுகை நஞ்சூட்டுவதைப் போன்றதாகும்; தமிழையும் தமிழரையும் முன்னேற விடாமல் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.
14. தமிழ்நாட்டில் மட்டும் தமிழர் இல்லை. ஈழம், சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளிலும் உள்ளனர்; இன்னும் சொன்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகெங்கணும் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் செய்யப்படும் மாற்றம் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு வகையான தமிழை உருவாக்கிக் குழப்பும்.
15. தமிழர் நலம் சார்ந்த பல பணிகள் செய்யப்படாமலே கிடப்பில் இருக்கையில், இப்போது அரசியல் காரணங்களுக்காக, முறையாக ஆராயாது இந்த மாற்றம் தன்னல நோக்கில் செய்யப் படுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாகத் தமிழை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. அதற்கு எழுத்துக் குறைபாடு எவ்வகையிலும் காரணமாக இல்லை. இந்நிலையில், தமிழைச் சீர்குலைக்கும் இந்த எழுத்து மாற்றம் கொண்டு வருவது மக்களை ஏமாற்றும் முயற்சி மட்டுமன்றித் தமிழுக்கும் தமிழருக்கும் கேடு விளைப்பதுமாகும்.
16. சீனம், சப்பான், ஆங்கிலம், கொரிய மொழிகளிலும் இன்னும் பிற மொழிகளிலு மில்லாத சீர்மைக்கேடு எதுவும் தமிழில் இல்லை. பெரியாருக்குப் பின், நானே எழுத்துச் ‘சீர்திருத்தம்’ செய்தேன் என்று மார்தட்டிக் கொள்ள விரும்பும் ஓரிருவருக்காகச் தமிழின் சீர்குலைவுக்கு அடிகோலக் கூடாது.
17. கணிப்பொறி எளிமை, விரைவு என்பதற்கு இப்போதைய தமிழ் எழுத்து தடையாக இல்லை என்று கணிப்பொறி வல்லுநர் கூறியும், போலிக் காரணங்களைக் கூறுவது ஏமாற்றாக உள்ளது.
18. இப்போதுள்ள இகர ஈகார உகர ஊகார வரிசை எழுத்துக்கள்
எளிதாக எழுதக்கூடியவை; அழகிய வடிவம் உடையவை; அவற்றை மாற்றும் கருத்து ஏற்கத்தக்கதன்று.
19. ஆகார ஐகார சீர்மையை ஏற்ற முன்னாள் அரசும் ஐ-அய், ஒள-அவ் மாற்றத்தை ஏற்கவில்லை என்பதை எண்ணிப் பார்க்கத் தவறுதல் கேட்டிற்கே வழிகாட்டும்.
20. இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயின்று பட்டறிவு
பெறாதவர்களும், உருப்படியான கணிப்பொறிப் பயன்பாட்டு இயக்க அறிவைப் பெறாதவர்களுமே இம் மாற்றத்தைத் தன்னலம் காரணமாக ஏற்படுத்த முனைவதால், இம்மாற்றம் தமிழுக்கும் தமிழருக்கும் எவ்வகையிலும் நன்மை தருதற்கு மாறாக, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் தீங்கையே விளைவிப்பதாகிவிடும்.
எழுத்து மாற்றம் வலியறுத்துவார் கூற்றும் அவற்றின் உண்மையின்மையும் :
1. தமிழ் எழுத்தை மூன்று தட்டுகளில் எழுத வேண்டியுள்ளதால் எழுத்தின் உயரம் அதிகமாக உள்ளதாம்.
உலகமொழியாகப் பலராலும் கருதப்படும் ஆங்கில மொழியே மூன்று தட்டு முறைகளில் எழுதப்படுவதே. இன்னும் சீன, சப்பானிய, கொரிய எழுத்துக்கள் பட எழுத்துக்களாகவே உள்ளதை மறந்து இதை ஒரு காரணமாக்க முனைகின்றனர்.
2. இ, ஈ, உ, ஊ எழுத்தில் சீர்மை இல்லை என்கின்றனர்.
சீர்மை என்பது வலுவான காரணமே இல்லை. பிற மொழிகளிலும் பல வேறுபாடுகள் உண்டு. செருப்புக்கு ஏற்ப காலை வெட்டிக் கொள்ளுதல் போல் அவர்கள் எழுத்து மாற்றம் செய்து கொள்ளவில்லை.
ஆங்கிலத்தில், ‘ch’ ஒலிப்பு, chess, chemistry, character, chagrin போன்ற சொற்களில் வேறுபடுகிறது. இன்னும் tion, sion, shun , knife, know, put, but, psychology, right போன்று பல வேறுபாடுகள் உள்ளனவே.
அவர்கள் வேறு எழுத்தைப் பயன்படுத்த வேண்டுமென மாநாடு போட்டுத் தன்முனைப்பாக அறிவிக்க முனைய வில்லையே!
3. இம் மாற்றத்தைச் செய்ததும் உலகிலுள்ள தமிழ்க் குழந்தைகள் உடனே எளிமையாக தமிழைக் கற்றுக் கொள்வார்கள் என்கிறார்கள்.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா தமிழ்க்கழகம் இப்போதுள்ள எழுத்து முறையில் தமிழ் கற்பதில் குழந்தைகளுக்குச் சிக்கலேதும் இல்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளது. அயல்நாட்டிலுள்ள தமிழ்க் குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளோடு தமிழில் பேசுவதில்லை; தமிழ் கற்பிப்பதில்லை என்பதே இரங்கத்தக்க நிலையாகும்.
அமெரிக்காவிலுள்ள சொர்ணம் சங்கர் தம் கட்டுரையில், எழுத்து மாற்றம் வேண்டுமென்பாரின் பேரக் குழந்தைகள் தமிழைப் படிப்பதில்லை; தமிழில் பேசுவதில்லை என்று எழுதுகிறார். இதுவே உண்மை நிலையாக உள்ளது.
4. பெரியார் ‘சீர்திருத்தம்’ முழுமை பெறும் என்கின்றனர்.
பெரியார் எந்தக் குறியிட்டையும் புதிதாகப் புகுத்தவில்லை. எழுத்தமைப்பை ஒருபோகாக ஆக்கி, அச்சுவில்லை அமைப்பிற்கு உதவுமாறு அமைத்துக் கொள்ள தமிழறிஞர் ஏற்புக்கியையப் பரிந்துரைத்தார்.
மக்கள் முன்பே அறிந்திருந்த அமைப்பில் அச் சிறு மாற்றம் 4% அளவில் நடந்தது. இவர்களின் தன்முனைப்பான 72 எழுத்துக்களின் தடாலடி மாற்றம் 59% அளவைக் கொண்டது. மொழியைச் சிதைத்து வேறோரு மொழியாக ஆக்கிவிடக் கூடியது எனபதே உண்மை.
5. கணிநிரல் எளிமை, விரைவு என்கின்றனர்.
பல்வேறு நாடுகளிலும் உள்ள, கணிப்பொறி இயக்க அறிவில் வல்லமை பெற்றோராக வளர்ந்துள்ள தமிழர் பலர், , இப்போதுள்ள எழுத்தமைப்பால் தமிழை இணையத்தில் பயன்படுத்துவதில் சிக்கலேதும் இல்லை என்றே கூறுகின்றனர்.
பதின்முறை இலக்கமான(அல்காரிதம்)த் தீர்வுகளின் வழி உழைப்பைக் குறைக்கவும் விரைவு மிகுக்கவும் முடியும் என்று விளக்குகின்றனர்.
இப்போது இம் மாற்றம் செய்யத் தேவை என்ன?
ஈழத்தில் இலக்கக் கணக்கான ஏதுமறியா மக்களும், அடக்கு முறைக் கெதிராக எழுந்த போராளிகளும் கொல்லப்பட்டனர். தன்னலம் காரணமாக, இரண்டகம் செய்து அதற்குத் துணைபோன தமிழ்நாட்டரசு, மக்கள் மனத்தில் உள்ள அந் நினைவுகளை மறக்கடிக்கத் துடிக்கிறது. அதற்காகவே, பேரலம்பலுடன் வரும் சூன் திங்களில் செம்மொழி மாநாட்டை நடத்தவிருக்கிறது.
இந்தச் சூழலில், ‘எழுத்துச் சீதிருத்தம்’ செய்ததாகப் பெயர் பெறத் துடிக்கும் கல்வியாளர், இந்த எழுத்து மாற்றம் பற்றி அரசு அறிவிப்புச் செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறார். மற்ற தமிழறிஞர்களும் கல்வியாளரும் அரசு அழைப்பைப் புறக்கணித்த நிலையில் அரசோடு ஒட்டிக் கொண்டிருந்த அந்தக் கல்வியாளரை நிறைவு செய்யவும், மக்களின் கவனம் திசை திரும்புதற்குத் தக்க வழி என்ற எண்ணத்திலும், அரசு எழுத்து மாற்ற அறிவிப்பு செய்யக்கூடும் என்றே எண்ணும்படியாக ‘மாலைமலர்’ 2010 சனவரி 7ஆம் நாள் செய்தி வந்திருக்கிறது.
எழுத்து மாற்றத்தை அடியோடு எதிர்க்கிறோமா?
தமிழ் தமிழர் நலன் காக்கச் செய்ய வேண்டிய இன்றியமையா வினைப்பாடுகளை இந்த அரசு செய்யவில்லை.
தமிழ் ஆட்சி மொழியாக அலுவல் மொழியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. தமிழ் கல்விமொழி ஆகவில்லை; அறமன்ற மொழி ஆகவில்லை; வழிபாட்டு மொழியாகவில்லை; நாடாளுமன்ற மொழியாகவில்லை. இவற்றில் அரசு கவனம் செலுத்தாமைக்கு எழுத்து மாற்றம் செய்யாத நிலை காரணமாக இருக்கவில்லை.
இந் நிலையில், தடாலடியாகவம் தன்முனைப்பாகவும் தமிழில் எழுத்துமாற்ற அறிவிப்புச் செய்வது பெருங்கேட்டிற்கு அடிகோலும் என்பதே உண்மையாகும்.
ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியது இன்றியமையாத தேவையாக இருப்பின், உலகின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தக்க தமிழறிஞர்கள், கணிப்பொறி வல்லுநர்கள், மொழியியலறிஞர்கள் போன்றோர் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து, மாற்றம் தேவையா என்பதை உறுதிசெய்து, தவிர்க்க முடியாது மாற்றம் செய்யப்பட வேண்டி இருப்பின், சிறுசிறு அளவிலான மாற்றம் செய்வதே முறையானதாக இருக்கும்.
ஆட்சி அதிகாரம் மொழியைச் சிதைக்க அளிக்கப்பட்ட இசைவன்று. கையூட்டு கொடுத்து ஒப்போலை பெற்று ஆட்சிக்கட்டில் அமர்வோர் மொழியைத் தம் விருப்பத்திற்கு மாற்றுதற்கு உரிமை பெற்றோர் ஆகார்.
“நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!”
———————————————————————————————
நன்றியுரைப்பு :
தமிழ்மாமணி இறைவிழியனார், பாவலர் ம.இலெ. தங்கப்பா ஐயா, பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான தமிழறிஞர்கள் கருத்துக்களும், இணையத்தில், குறிப்பாகத் ‘தமிழ்மணம்’ திரட்டியில் எழுதியிருந்த பல அறிஞர்களின் கருத்துக்களும் இக்கட்டுரை எழுதப் பயன்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
————————————————————————————————
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)
- தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்
- வேத வனம்- விருட்சம் 83
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1
- ஆதலினால்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று
- மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
- அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
- ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12
- வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு
- எப்போதும் நம் வசமே
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)
- மின்னல் விழுதுகள்!
- முள்பாதை 27
- தூக்கம் …
- இரவுகளின் சாவித்துவாரம்
- குறத்தியின் முத்தம்
- எழுத்தின் வன்மம் .
- 108எண் வண்டி
- 27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு
- எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!
- நினைவுகளின் தடத்தில் – (46)
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15
- பேசாதவன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது
- சுஜாதா 2010 விருது வழங்கும் விழா
- அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு