எழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

கெளசல்யா அந்தோனிப்பிள்ளை


கலையும் இலக்கியமும் என் இனத்தின் கண்கள் என்ற தாரக மந்திரத்தை மனதில் நிறுத்திச் செயற்பட்டுவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தனது பத்தாவது எழுத்தாளர் விழாவை மிகவும் சிறப்பாக அண்மையில் நடாத்தி முடித்திருந்தது. அவுஸ்திரேலியா எழுத்தாளர் விழாவைப் பற்றியும், இந்தப் பத்தாவது ஆண்டு எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற சிறப்பம்சங்கள் பற்றியும், எழுத்தாளர் விழா வருடா வருடம் நடைபெறுவதன் நோக்கம் பற்றியும் இந்த நேரத்தில் இங்கு எழுதுவது வாசகர்களாகிய உங்களின் சிந்தனையைத் தூண்டும் என்பதில் ஐயம் இல்லை.

தாயகத்திலே தமிழ் எழுத்துத் துறையிலே ஆர்வமுடன் ஈடுபட்டு வந்த பல எழுத்தாளர்கள் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் பல நாடுகளுக்கும் சிதறுண்டுபோய் பல்வேறுவிதமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை ஊன்றி வாசித்து வரும் வாசகர்களும் அவ்விதமே. எழுத்தாளர்களின் எழுதும் ஆற்றலை மீண்டும் புதிப்பித்து ஊக்குவிப்பதற்காகவும், வாசகர்களின் மறந்து போய்விடப்பட்ட ஆர்வத்தை நினைப்பூட்டுவதற்காகவும் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் திரு. முருகபூபதி போன்ற ஒரு சில ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒருநாள் கலந்துரையாடல்தான் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவாகும். ஒரு சில நல்லுள்ளங்களின் விடா முயற்சியினால், பல்வேறு இடங்களிலும், பல்வேறு துறைகளிலுமாகச் சிதறுண்டிருந்த எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களைத் திரட்டி, இலக்கியம் – கவிதை – சிறுகதை – நாடகம் என்று பல துறைகளில் கலந்துரையாடல் போன்ற கருத்தரங்கு 2001ஆம் ஆண்டு மெல்பர்ணில் உள்ள பிறஸ்ரன் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

வருடாவருடம் தொடர்ந்து இந்த எழுத்தாளர்விழா, அவுஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களிலும் நடைபெற்று வந்து இன்று பத்தாவது வருடத்தைப் பூர்த்தி செய்து நிற்கின்றது.

பத்தாவது எழுத்தாளர்விழா இம்முறை மெல்பர்ன் மாநகரிலே, பிறஸ்ரன் நகர மண்டபத்தில் காலை பத்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை எந்தவித தடையூறோ, தடங்கலோ இன்றி மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நடைபெற்றது.

விழாவை சிறப்பிக்கும் முகமாக தமிழகத்திலிருந்து மூத்த தலைமுறைப் படைப்பாளி திரு. வைதீஸ்வரன் அவர்களும், ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் ஓவியர் எழுத்தாளர் சிவகுமாரன் அவர்களும், இலங்கையிலிருந்து சிறுகதை எழுத்தாளர் திரு. ரஞ்சகுமார் அவர்களும், சிட்னியிலிருந்து தமிழ் மாணவர்களின் கல்வித்துறைக்கு அளப்பரிய சேவையாற்றி வரும் – சிட்னி கம்பன்கழக ஸ்தாபகர் திரு. திருநந்தகுமாரும் வந்திருந்தமை மிகவும் சிறப்பான ஒரு விடயமாகும். இவர்களின் வருகை இந்தச் சங்கத்தைப் பெருமைப்பட வைத்ததுடன், இங்கு வாழும் எழுத்தாளர்களின் ஆற்றலை ஏதோ ஒரு வகையில் வளர்த்துவிட உதவிபுரிந்திருக்கும் என்பதில் நம்பிக்கையுண்டு.

ஓவியர் எழுத்தாளர் சிவகுமாரன்

திரு. திருநந்தகுமார்

மாணவர்களின் தமிழ் ஆற்றலை வளர்ப்பதற்காக அளப்பரிய சேவையாற்றிவரும் திரு. திருநந்தகுமார் அவர்களினால் சிட்னி, மெல்பர்ன் ஆகிய இரு மாநகரங்களிலும் வாழும் மாணவர்களை ஒன்றுகூட்டி மிகப்பிரமாதமாக, சபையே வியக்குமளவிற்கு புலம்பெயர் மாணவர்களினால் மாணவர் அரங்கு முதல் நிகழ்ச்சியாக நடைபெற்றது. இளம் மாணவர்களின் கணீர் என்ற குரல் வளம், தமிழை பிழையின்றி உச்சரிக்கும் முறை – அவர்களின் மொழியாற்றல், சொற்பிரயோகம் அனைத்துமே பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு துறையில் பேசி வியப்பளித்தனர். பெண்ணியம் பற்றி ஒருவரும், கணனியில் தமிழ் மயமாக்கம் பற்றி இன்னொருவரும், சிறுகதைத்துறை என்று மற்றொருவருமாக வளர்த்து வரும் மாணவர்கள் எழுதி பேசியமை பார்வையாளர்களின் செவிக்கு விருந்தாக அமைந்ததுடன், இம்மாணவர் செல்வங்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ஆயிரம் உண்டு என்பதனை உணர்த்தி நின்றது. பழம்பெரும் எழுத்தாளர்களுடன் போட்டி போடும் அளவுக்கு இன்று எம் தமிழ் மாணவர்கள் வளர்ந்துள்ளார்கள் என்பதனைப் பார்க்கும் பொழுது வியக்காமல் இருக்க முடியவில்லை. அறிந்ததைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அறியாததை அறிந்து கொள்வதற்காகவும் என்று ஒன்றுகூடியிருந்த பார்வையாளர்கள் மாணவர் அரங்கின் மூலம் அன்று அறிந்தவையோ ஆயிரம்.

அக்காமாருக்கும், அண்ணன்மாருக்கும் முன்னால் நாம் என்ன சளைத்தவர்களா என்ற வினா தொனிக்கும் முகமாக மாணவர் அரங்கை விஞ்சும் அளவிற்கு அமைந்திருந்தது அடுத்து நடைபெற்ற சிறுவர் அரங்கு. பெரியவர்கள் பங்குபற்றும் எழுத்தாளர்விழாவில் சிறுவர்களாகிய எம்மாலும் விறுவிறுப்புக் குறையாத வகையில் ஈடுபட முடியும் என்பதை அன்று அந்த இடத்தில் மெல்பர்ன் சிறுவர்கள் நிரூபித்திருந்தார்கள். சிறுவர் அரங்கைத் தலைமை தாங்கி நடாத்தி முடித்தவரும் ஒரு சிறுமியே என்பதனைப் பார்த்தவர்களின் வியப்பு அதன் பின்பு நடைபெற்ற மதிய போசன் விருந்தின் சுவையை மீற்யிருந்தமை, அன்று இடைவேளையின் போது கூடிக் கூடிக் கதைத்துக் கொண்டிருந்த பார்வையாளர்களின் கூட்டத்துக்குள் இருந்து ஒலித்துக் கொண்டிருந்த ஒலியிலிருந்து அறிய முடிந்தது. இலங்கை சென்று வந்த அனுபவம் பற்றி இரு சிறுவர்கள் உரையாட, மற்றவர்களோ சுவாமி விவேகானந்தர் பற்றியும் பாரதியாரின் கவிதை பற்றியும், ஏன் தமிழில் கதைக்க வேண்டும் என்பது பற்றியும் மழலைத் தமிழில் அழகாகக் கூறினார்கள்.

திரு.வைதீஸ்வரன், தலைவர் திருமதி அருண் விஜயராணி, செயலாளர் சண்முகம் சந்திரன்

திரு. முருகபூபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் பிரதம விருந்தினர்களாக இந்தியா, இலங்கை, ஜெர்மனியிலிருந்து வருகை தந்திருந்த திரு.வைதீஸ்வரன், திரு. ரஞ்சகுமார், திரு. சிவகுமாரன் ஆகிய மூவரும் முறையேகவிதை எழுதும் நுட்பங்கள், ஒரு எழுத்தாளன் இடையில் எழுதாமற் போவதற்கான காரணங்கள், தமிழ் ஓவியக்கலையின் நுட்பங்கள் பற்றி மிகத்திறமையாக மக்களுடன் மனம் திறந்து கலந்துரையாடினார்கள். பார்வையாளர்களிடமிருந்து எழுந்த கேள்விகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு தமது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.

பாடும்மீன் ஸ்ரீகந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற வித்தியாசமான கவியரங்கில் நான் பெண்ணாயிருந்தால் என்று ஆண் ஒருவரும், நான் ஆணாயிருந்தால் என்று பெண் ஒருவரும், பாட்டி வீட்டில் நாய்க்குட்டியாய் இருந்திருந்தால் என்று இன்னொருவரும், நான் இலங்கையில் இருந்திருந்தால் என்று மற்றொருவரும், மெல்லத் திரும்பும் இளமை என்று ஒருவருமாக பல்வேறு தலையங்கங்களில் தங்களின் நிறைவேறாத ஆசைகளை, ஏக்கங்களை நகைச்சுவை நிறைந்த கவி வடிவில் கூறி சபையோரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்கள்.

இரவு நிகழ்வாக ஓவியர் சிவகுமாரனின் நுணுக்கங்கள் நிறைந்த ஓவிய ஒளிப்படக்காட்சியும், அவுஸ்திரேலியாவில் இருந்து எடுக்கப்பட்ட ‘நான் ஒருவன்’ என்ற குறும்படமும், இலங்கையில் எடுக்கப்பட்ட ‘பள்ளிக்கூடம்’ என்ற குறும்படமும் காண்பிக்கப்பட்டன.

இவை மட்டுமா அன்று பத்தாவது எழுத்தாளர்விழாவில் நடைபெற்றன? இல்லை இவை யாவற்றையும் தாண்டி இருவேறு முக்கிய நிகழ்வுகளும் அன்று நடைபெற்றன. முதலாவது ‘பூமராங்’ சிறப்புமலர் வெளியீடு. 10வது ஆண்டுவிழாவை முன்னிட்டு புலம்பெயர்ந்து இங்கு வாழும் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட பல்வேறுவிதமான, மக்களுக்குப் பயன்படும் திறமையான ஆக்கங்கள் அடங்கிய சிறப்புமிக்க நூல், விழா அமைப்புக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறப்பம்சம் சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் அறிவிப்பு. பத்தாவது ஆண்டுவிழாவைச் சிறப்பிக்கும் முகமாக உலகளாவிய சிறுகதைப்போட்டியும், கவிதைப்போட்டியும் நடைபெற்றன. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும், குறிப்பாக இந்தோனேசியா ஜெயில், வவனியா தடுப்புமுகாமில் இருந்தும் மிகத்திறமையான ஆக்கங்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தன. தெரிவு செய்யப்பட்ட நடுவர்களினால் பல நூற்றுக்கணக்கான ஆக்கங்களிலிருந்து முதல் 12 ஆக்கங்கள் பரிசு வழங்குவதற்காகத் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் முடிவுகளும் அன்று அறிவிக்கப்பட்டன.

வழமையைவிட இந்த வருடம் எழுத்தாளர்விழா ஒன்றுகூடல் மிகவும் திறமையாக நடைபெற்றிருந்ததை அன்று வந்திருந்த பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் உறுதி செய்திருந்தார்கள்.

வருடாவருடம் பல்வேறு துறைகளிலும் சிதறுண்டுள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்றுகூடி இக்கலந்துரையாடல் விழா அமைப்பதன் நோக்கம் புலம்பெயர் நாட்டிலும் எம் தமிழ் அழியாமல் வளரவேண்டும் என்பதும் எழுத்தாளர்களின் எழுத்தாற்றல் மழுங்காமல் என்றும் எங்கிருப்பினும் வளர வேண்டும் என்பதுமாகும். ஆனால் இன்றைய நிலையில் இந்நோக்கம் இன்னும் ஒரு படி மேலே போய் புதிய எழுத்தாளர்களை, மாணவ சமுதாயத்திலிருந்தும் சிறார்களின் கூட்டத்திலிருந்தும் உருவாக்க முயற்சி செய்வதைக் கண்கூடாகக் காண முடிந்தது. தன்னலமற்ற இந்த சமுதாய நோக்கம் புலம்பெயர் மண்ணில் வெற்றி பெறும் என்று நம்புவோமாக.

Series Navigation

கெளசல்யா அந்தோனிப்பிள்ளை

கெளசல்யா அந்தோனிப்பிள்ளை