சந்திரன்
மார்ச் 10ம் தேதி!
எழுத்தாளர் சுஜாதா காலமானதையொட்டி நடந்த நீத்தார் வழிபாட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நெருங்கிய உறவினர்கள், மிகச் சில நண்பர்கள் மட்டுமே பங்கேற்க, அமைதியாக நடந்த இது – அந்த வீட்டில் நான் கலந்து கொள்ளும் இரண்டாவது நிகழ்ச்சி. இடையில் பலமுறை அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தமுறைதான் மாறுபட்டு உணர்ந்தேன்.
முதல்முறை அந்த வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது, எழுத்தாளர் சுஜாதா! அது, அந்த வீட்டின் கிரஹப் பிரவேசம். அலுவலக காரணங்கள் அல்லாமல் – நட்பு ரீதியாக, நான் அவரை வீட்டுக்குச் சென்று சந்தித்த முதல் நிகழ்வு அதுதான். அப்போது அவ்வீட்டின் கார் பார்க்கிங்கில் இருந்தபடி அவர் எங்களை வரவேற்ற… – அதே இடத்தில்தான், மரணத்துக்குப் பிறகு அவரது உடல் அன்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
‘முதலும்… முடிவும்… இங்குதானா?’ என்று அப்போது எனக்கு தோன்றியது உண்மை. நல்லவேளையாக, அந்த குடும்பத்துடனான எனது தொடர்பு அப்படியே முடிந்துவிடவில்லை. அந்த வீட்டில் மேலும் பல சுபநிகழ்வுகள் நடக்க விரும்புகிறேன்.
* * *
சுஜாதா அவரது – இந்த மைலாப்பூர் வீட்டுக்குக் குடியேறுவதற்கு முன், ஆழ்வார்பேட்டையில் சரவணா அப்பார்ட்மெண்டில் வசித்தபோது – நான் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, ஓரிருமுறை அலுவலக காரணங்களுக்காக, அந்த வீட்டுக்குச் சென்றதாக நினைவு. ஆனால், அந்த சந்திப்புகளில் காரண காரியம் மட்டும்தான் இருந்தது.
எழுத்தாளர் சுஜாதாவுடன் நான் நெருங்கிப் பழகியது – அவர் மைலாப்பூர் வீட்டுக்குச் சென்றபிறகுதான். ஆனால், ‘அதன் பிறகே உடல் அவரை மிகவும் படுத்தியது. பலமுறை அப்போலோவுக்குப் போக வைத்தது’ என்று பேசப்படுவதை கேட்டிருக்கிறேன். சுஜாதா கண்மூடித்தனமான செண்டிமெண்ட்களை நம்புகிறவர் இல்லை என்பதால் – அவரும், அவரது மனைவியும் கூட ‘இப்படி’ நினைக்கவில்லை.
புதிய வீடு சுஜாதாவுக்கு எப்படியோ! ஆனால், அவருடன் அம்பலத்தில் பணியாற்றிய பலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்ததாக நம்பினார்கள். பல ஆண்டுகளாக அவர் தேர்ந்தெடுத்து படித்து… சேகரித்து வைத்திருந்த நூலகத்தைத் திறந்துவிட்டு… விருப்பமான, தேவையான புத்தங்களை எடுத்துக் கொள்ளும்படி சுஜாதா சொன்னது – அந்த புது வீட்டுக்கு இடம் பெயர்ந்தபோதுதான். இன்று, என் வீட்டில் இருக்கும் சின்ன லைப்ரரியின் பெரும்பாலான தமிழ் கிளாஸிக்ஸ் – அவரிடமிருந்து, அந்த நூலகத்திலிருந்து பெற்றவைதான்.
அவர் எனக்குத் தந்தது, அந்த புத்தகங்களை மட்டுமல்ல; இன்றைக்கு நான் பெற்றிருக்கும் இலக்கிய பரிச்சயம், தொடர்பு, அறிவு எல்லாம் அவர் தந்த பயிற்சிதான். அம்பலத்துக்கு நான் வந்து சேருமுன், நான் ஒரு ‘செய்தியாளன்’ என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், இன்று என்னைக் குறித்த பலரது மதிப்பீடுகள் வேறாக இருப்பதை உணர்கிறேன். எனக்கே கூட, – ‘நான் அவனில்லை’ என்றுதான் இப்போது தோன்றுகிறது.
அப்போது விகடன் குழுமத்தில் இருந்து வெளியான மாலை நாளிதழ் – ‘விகடன் பேப்பரி’ல், ‘சுஜாதாட்ஸ்’ என்ற பெயரில் புதிய கட்டுரைத் தொடர் ஆரம்பமானது. நிர்வாகப் பொறுப்பில் இருந்த திரு.ராவ் என்னை அழைத்து, ”நீயும் என்ஜினியர்; அவரும் என்ஜினியர். உங்களுக்குள் புரிதல் எளிதாக இருக்கும்” என்று சொல்லி, அந்த பகுதி அச்சேறும் வரையான அனைத்து பணிகளுக்குமான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அப்படித்தான் எங்களது முதல் அறிமுகம்.
பின்னர், சுஜாதாவின் பொறுப்பில்… கண்காணிப்பில் அம்பலம் இணைய தளம் தொடங்கியபோது (ஆரம்ப நாட்களில் இது ‘மின்னம்பலம்’ என்றே குறிப்பிடப்பட்டு வந்தது), ‘எனக்கு அதில் ஒரு வாய்ப்பு கிடைக்குமா சார்?’ என்று நான் கேட்டபோது, ‘பயோடேட்டாவுடன் இன்றே வந்து சேர்!’ என்று பணித்தார். அதன்பிறகு அவர் எனக்கு திறந்துவிட்ட கதவுகள் எத்தனையோ! நான் அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் எத்தனையோ!
இவை எதுவும் பள்ளிக்கூட ஆசிரியர் வகுப்பெடுப்பது போலவோ, மகனுக்கு தந்தை கற்பிப்பது போலவோ நடக்கவில்லை. மாறாக, நீச்சல் கற்பிக்க தண்ணீரில் தள்ளிவிடுவதைப் போல, செய்முறை பாடமாகவே நடந்தது. நீரில் இருப்பவன் ‘பயில்பவன்’ என்பதால், லைஃப் ஜாக்கெட்டை கையில் வைத்தபடி கண்டும், காணாமலும், கண்காணித்து கற்க வைத்தவர் சுஜாதா!
கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள் அம்பலம் இணைய தளத்தில் நான் பணியாற்றியபோது, குறைந்தது 4 ஆண்டுகளாவது அவருடன் மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் சில மணி நேரங்களாவது அவருடன் இருக்க நேர்ந்துள்ளது. அத்துடன், 2002ல் ஒருமுறை அவர் ‘அப்போலோ’வில் சிகிச்சை பெற்றபோது, அவரது மகன் அமெரிக்காவில் இருந்து நாடு… வீடு திரும்பும் வரை, சில நாட்கள் அவருடன் இருந்து உதவி செய்ததில் எனக்கும் பங்குண்டு. அந்தவகையிலும், இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் அவருடன் நெருக்கமாக இருந்தவன் என்ற வகையில், என் புரிதலிலான ‘சுஜாதா’ வேறு!
ஒருமுறை அம்பலம் இணைய இதழில் – அம்மாவைப் பற்றி, ‘என்.டி.ராஜ்குமாரின் கவிதை ஒன்றைப் பிரசுரிக்க நான் முயன்றபோது, சகலரும் அச்சுறுத்தினர். அந்த கவிதையின் ஊடே, சில வரிகள் – பொதுச் சபைக்கு ஏற்பில்லாத… ஆபாசம் தொனிக்கும் வகையில் இருப்பதாகக் கருதினர். அதனால், அதை ஏற்கக்கூடாது என்பதுதான் வாதம்! ஆனால், நான் அந்த கவிதையை துணிந்து பிரசுரித்தேன். பலரது எதிர்பார்ப்புக்கு மாறாக, அந்த கவிதை தேர்வுக்காக என்னை அழைத்து முதன்முறையாக சுஜாதா என்னை வாய்விட்டு பாராட்டினார். அதன்பிறகு பல சந்தர்ப்பங்களில் இதுபோல நடந்திருக்கிறது. பின்னர் எனது Blogல் (http://naalavathukann.blogspot.com) ‘அம்மாவுக்கு விஷம் வைப்பவன்’ என்ற பெயரில் இந்த கவிதை குறித்து நான் எழுதியிருந்தபோது, அந்த கவிதை குறித்த எனது அணுகுமுறை, பார்வை வரவேற்பைப் பெற்றது.
ஒருகட்டத்தில் என் கவிதை ரசனை பற்றி அவருக்கு நம்பிக்கை வந்தபோது, நல்ல கவிதைகள்… கவிதைத் தொகுப்புகள் பற்றி நிறைய பேசத் தொடங்கினார். நான் படித்ததில் ரசித்தவை குறித்து நானும் மனந்திறக்க தொடங்கினேன். சில புத்தங்களை அவருக்கு பரிந்துரைத்தபோது, அவற்றைப் படித்து அங்கிகரிக்கவும் செய்தார். சிலவற்றை விகடனின் ‘கற்றதும் பெற்றதுமி’ல் ‘ஆண்டின் சிறந்த படைப்பு’ என பட்டியலிட்டதிலும் சேர்த்துக் கொண்டார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் அனுபவமாக வடிவெடுத்த, ‘கரும்பலகையில் எழுதாதவை’ என்ற கவிதை நூல் அந்தவகைதான்.
* * *
எழுத்தாளர் சுஜாதா மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானவை – அவர், தான் ஒரு தீவிர மத நம்பிக்கை கொண்ட வைணவர்; பிராமணர் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டார் என்பது. அடுத்து எந்த மாதிரியான விமர்சனங்களையும் எதிர்கொள்ள… சந்திக்க, ஏற்க மறுக்கிறார் என்பது.
முதலில் இரண்டாவது விஷயத்தைப் பார்ப்போம்… ‘விமர்சனத்தை ஏற்க மறுக்கிறார்’ என்பது, எனக்கென்னவோ மிக பெரிய ஜோக்காக தோன்றுகிறது. தன்னைப் பற்றிய… தனது படைப்புகள் குறித்த விமர்சனத்தை வெளிப்படையாக வரவேற்கும்… முக நகையுடன் ஏற்றுக் கொள்ளும் எத்தனை மனிதர்கள் இப்போது இருக்கிறார்கள்? எனக்கு எண்ணிக்கை தெரியவில்லை. நேற்றுதான், தன் முதல் கவிதையை பிரசவித்த நபர்களேகூட, அது குறித்த விமர்சனங்களை எதிர்கொள்ள மறுக்கும் ஒரு சிக்கலான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எனது கருத்து. இங்கு மட்டுமல்ல; இன்று உலக அளவிலும் அப்படித்தான். இதில் சுஜாதா மட்டும் மாறுபட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் நியாயம் எனக்கு புரியவில்லை.
அடுத்தது, நான் அறிந்த வரையில் சுஜாதா தன் மீதான விமர்சனங்களை முடிந்தவரை கேட்காமல் இருக்க… பார்க்காமல் இருக்க… அல்லது தவிர்க்க விரும்பினார் என்பது ஓரளவு நிஜமே! பெரும்பாலும் பதில் சொல்ல மாட்டார். அதற்கு காரணம், அவரைப் பொறுத்தவரை என்னவோ! நான் புரிந்து கொண்ட வரையில், அவரை விமர்சிப்பவர்களில் இருதரப்பினர் இருந்ததாக நம்புகிறேன்.
ஒருதரப்பு, நிஜமாகவே சுஜாதாவின் அணுகுமுறை குறித்து அதிருப்தியடைந்து, அந்த காரணத்துக்காக அம்புகளை நாணேற்றியவர்கள். இன்னொரு தரப்பு – எழுத்தாளர் சுஜாதாவின் பிரபலம் குறித்த வயிற்றெரிச்சல் கேஸ்கள். இவர்கள் – சுஜாதாவைப் போலவே… அல்லது அவருக்கு இணையான திறமையை தானும் பெற்றிருப்பதாக நம்பும் ‘புண்ணியாத்மா’க்கள்! சுஜாதாவின் சாயலில் ‘பிரதி எடுக்கும்’ திறமையை வளர்த்துக் கொண்டவர்களும் இந்த பஜனை கோஷ்டியில் உண்டு. இவர்களுக்கெல்லாம் ‘சுஜாதாவுக்கு இணையான தாமும் வெளிச்சம் பெற வேண்டும்’ என்ற ஆவல்… எதிர்பார்ப்பு… ஆசை! அவருக்கு கிடைக்கும் அளவு இல்லாவிட்டாலும், அதில் சில சதவீதமாவது தங்களுக்கும் பெற்றுவிட ஏங்குபவர்கள். அது கிடைக்காதபோது… ‘என்ன செய்வது?’ என அறியாமல், ‘போட்டுதாக்கு…!’ என, எதிர்மறையாக இந்த காரியத்தில் இறங்கி விடுபவர்கள். ஆனால், இவர்கள் பூனைக்கு மணி கட்ட இறங்கிவரும் தைரியம் இல்லாதவர்கள். யாராவது முதலில் திரிக்கு தீ வைக்க வேண்டும். அதில் கொஞ்சம் சத்தம் கேட்டால் போதும்… பின்னாலேயே, பல ‘பத்தாயிரம் வாலா’களால் சாலையை நிறைத்து விடுவார்கள்.
இந்த பஜனை கோஷ்டியில் ஒரு சிலரை எனக்குத் தெரியும். 60களில்… 50களில்… ஏன் இன்னும் வயது 40களில் உள்ள சிலருக்கே… பெரிதாக எதையும் சாதிக்காதபோதே, இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதுதான் ஆச்சரியத்திலும் அதிசயம். இதில் வினோதம் என்னவென்றால் இவர்களில் சிலரை, எழுத்தாளர் சுஜாதாவே பெயர் குறிப்பிட்டு தனது எழுத்துகளில் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த மாதிரி ஆட்கள், வேறு சிலருக்கு ‘பெத்தட்டின் ஊசி போட்டு’ தூண்டிவிடுவதும், அரிதாரம் பூசி மேடையேற்றுவதும் தொடர்ந்து நடந்தது. இத்தகைய சிலரும், தங்கள் அடையாளங்களை மறைக்க சுஜாதாவுக்கு ‘பிராமண வேடம்’ போட துணிந்து களமிறங்கினர். இப்படி ஒரு அரசியல் நடந்ததை, நடப்பதை எழுத்தாளர் சுஜாதா அறிந்திருந்தார் என்றுதான் நம்புகிறேன். நான் ஓரிரு முறை Hint செய்திருக்கிறேன். ஆனால், ஒரு அளவுக்கு மேல், அவர் இதுபோன்ற விஷயங்கள் குறித்து பேச விரும்புவதில்லை; செவி சாய்க்கவும் மாட்டார்.
* * *
சுஜாதாவுக்கு வைணவத்தின் மீதும்… அதன் இலக்கியங்கள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதை எந்த நேரத்திலும் அவர் மறைக்க முயல்வதில்லை. அவரது எழுத்துகளில் – அம்பலம்… விகடன்… குமுதம்… குங்குமம்… கல்கி… போன்றவற்றில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய Blogகளில் (Columns இப்போது, இந்த புதிய பெயருக்கு மாறிக் கொண்டிருக்கிறது) இது வெளிப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவர் ஆரியக் கூத்தாடுவதாகவும், பிராமணர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை.
நான் அறிந்தவரையில் – கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக… கூடுதலாகப் போனால் 4 ஆண்டுகளாக, தொடர்ந்து ஒரு கருத்து அவரது மனதில் வலுப்பட்டு வந்திருக்கிறது என்றே உணர்கிறேன். அவர் விமர்சிக்கப்படுவதன் பின்னணி… நோக்கம் எல்லாம் – மற்ற பல காரணங்களைவிட ‘அவர் ஒரு பிராமணர் என்பதால்தான்’ என்று அவர் நம்பத்தொடங்கியிருந்தார்! ஒருவேளை, தான் ஒரு பிராமணராக இல்லாத பட்சத்தில் – தனக்கு இன்னும் அதிக அங்கிகாரம் கிடைத்திருக்குமோ… இந்த அளவு விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்திருக்காதோ என்று அவர் நம்பியதாகவே நான் கருதுகிறேன்.
பன்முக தன்மையுடன் செயல்பட்ட அவருக்கு, இந்த ஒரு காரணத்தாலேயே – பல இடங்களில், திசைகளில், துறைகளில் இருந்தும் புகழ்… பாராட்டுகள் குவிவதை ஜீரணிக்க முடியாதவர்களின் கைங்கரியம் அவருக்கு தொடர்ந்து எரிச்சலூட்டி வந்தது.
நோக்கம்… திட்டம் பற்றியெல்லாம் பெரிய அளவில் யோசிக்காமல் ‘புறநானூறு – ஓர் எளிய அறிமுகம்’ நூலின் முதல் பாகம் வெளியான நேரத்தில் ‘சுஜாதா, ஆரிய கூத்தாடுகிறார்’ என்றெல்லாம் விமர்சனங்கள் வரத் தொடங்கியபோது, தீவிர Self defence யுக்தியாகவும் அவர் பிராமண இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நேர்ந்தது என்றுதான் நான் நினைக்கிறேன். கடைசி சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவரிடம் அந்த கருத்து இருந்ததா?… பெங்களூரில் வாழ்ந்தபோதும்… குமுதம் ஆசிரியராக இருந்தபோதும் இப்படியான சிந்தனை அவருக்கு இருந்ததா என தெரியவில்லை. ஒருவேளை அண்மையில்தான் இது உருவானதா என்பது குறித்தும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் நான் அவரை நெருங்கத் தொடங்கிய நாட்களில் இருந்ததைவிட… பின்னாளில் இந்த எண்ணம் மெள்ள மெள்ள உறுதிப்பட்டது என்பதை உணர முடிந்தது.
ஆனால், அந்த நேரத்திலும் தனது பழைய நண்பர்கள்… நெருக்கமானவர்களிடம் அவரது போக்கு மாறவில்லை. நான் அறிந்த சுஜாதா – ஜாதி, மத வரம்புகளைக் கடந்தவர். அவரது எழுத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமான ‘மார்க்கண்டேய’ தன்மையை அவர் பெற்றது – பெரும்பாலான நேரங்களில், அவரைச் சுற்றி இருந்த இளைஞர் பட்டாளத்தால்தான் என்பது எனது நம்பிக்கை. அந்த பட்டாளத்தில், நான் அறிந்தவரை மிகச் சிலரே பிராமணர்கள். மற்ற எல்லாரும், வேறு வகுப்பினர். செட்டியார், நாடார், முதலியார், வன்னியர், தலித் போன்ற பல இனத்தைச் சேர்ந்தவர்களும், கிருஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பலரும்தான் அவருக்கு நெருக்கமாக இருந்து வந்தனர் என்பது எனக்கு தெரியும். இந்த தரப்பினர்தான் அவரிடம் முன் அனுமதி பெறாமல்… அதிரடியாக வந்து சந்திக்கும் சலுகையைப் பெற்றிருந்தனர். அவர்களை விரும்பி வரவேற்று பேசி… அவர்களுடன் தனது நேரத்தைப் பகிர்ந்து கொண்ட, பகிர்ந்து கொள்ள அவர் விரும்பிய தருணங்கள் பல! எழுத்தாளர் சுஜாதா மட்டுமல்ல; அவரது மனைவியும் கூட – இந்த நண்பர்களது குடும்ப நிகழ்ச்சிகள் உட்பட பலவற்றையும் விசாரித்து அறிந்து, ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொண்டார். அது மட்டுமல்லால் தொடர்ந்து விசாரணை, உபசரிப்பு, அவர்களுடன் உணவு உண்பது வரை வேறுபாடு காட்டாமல் நடந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன். இதில் எங்கும் நான் பிராமண சார்பு… பிராமணரல்லாதவர் எதிர்ப்பைப் பார்க்கவில்லை.
அம்பலம் இணைய தளத்தில் நடந்த ஒரு சம்பவம். ஒருகட்டத்தில் அங்கு பணியாற்றிய, மூத்த பொறுப்பில் இருந்த பிராமணர் ஒருவரால், பிராமணரல்லாத வேறொருவர் பணியில் இருந்து, நியாயமான காரணம் இன்றி கழட்டிவிடப்படும் முயற்சி நடந்தது. அப்போது, ‘அநீதிக்கு இடம் தரக்கூடாது’ என்பதில் சுஜாதா தனிப்பட்ட முறையில் காட்டிய அக்கறை, ஆர்வத்தால் மட்டுமே அந்த Non Brahmin மீண்டும் அங்கு பணியில் தொடர முடிந்தது. அத்துடன், அநீதி இழைக்க முயன்றவர் – சுஜாதாவின் இந்த நடவடிக்கையால்… போக்கால் சங்கடப்பட்டு, மன உளைச்சல் கண்டு, மாற்று ஏற்பாடு செய்துகொண்டு பதவி விலகிச் செல்ல நேர்ந்தபோதும் சுஜாதா தனது முடிவில் உறுதியாக இருந்தார். அதாவது சுஜாதா மத, இனப் பாகுபாடுகளைக் கடந்து, அவரது மனசாட்சிப்படித்தான் முடிவுகள் எடுத்தார் என்பதை நேரில் கண்டவன் நான். இதுபோல நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகள்… சம்பவங்கள் இன்னும் எத்தனையோ!
* * *
தற்போது சுஜாதா மீது வைக்கப்படும் பல விமர்சனங்களைப் பார்க்கும்போது – அவர் சரியாக புரிந்து கொள்ளப்படாத மனிதர் என்பதுதான் எனது கருத்து. ஒருவகையில் பார்த்தால், இதற்கு அவரும் ஒரு காரணம். அவர் ஒரு Man of moods! எந்த சூழலில், அவரிடமிருந்து எந்த வகையான எதிர்வினை இருக்கும் என்பதை கணிப்பது சிரமம். அவரது எழுத்துகளில் காணும் ‘வசந்த்’-ஐ எதிர்பார்த்து, நாம் செல்லும்போது, சில நேரங்களில் – அந்த சுற்றுவட்டாரம் முழுக்க கணேஷ் வந்து சென்றதற்கும்கூட அடையாளமே இருக்காது. அவ்வளவு அந்நியப்பட்டிருக்கும். மாறாக, ரொம்ப சீரியஸாக… ‘Nano Technology பற்றி பேசலாம்’ என்று செல்லும்போது – சிவாஜி பட விழாவுக்கு வந்த அரைகுறை உடை ஸ்ரேயா அருகில் உட்கார நேர்ந்த அனுபவம் பற்றி கலகலப்பார்.
அவர் பங்களித்த தளம் மிகப் பரவலானது என்பதால், அவர் மனதில் ஒன்றை அடுத்து மற்றது என பல விஷயங்கள் ஆக்ரமித்து வரிசைகட்டி நின்று, அவரது அனுபவம், கற்பனை, படைப்புருவாக்கம் போன்றவற்றோடு நடத்திக் கொண்டிருக்கும் வேதிவினையில் நீங்களும் சிக்கி செம்பழுப்பு நிற வாயுவாகவும், செம்மண் நிற வீழ்படிவாகவும் சின்னாபின்னமாக வேண்டி வரலாம்.
அப்படித்தான் ஒருமுறை! எனக்கு நெருக்கமான நண்பர்; இன்றைக்கு பிரபலமான எழுத்தாளர்! அவர் எழுதத் தொடங்கியிருந்த நாட்களில் இந்த சம்பவம் நடந்தது என்று சொன்னதாக ஞாபகம். ஆழ்வார்பேட்டையில் இருந்த சரவணா அப்பார்மெண்ட்டில் எழுத்தாளர் சுஜாதா வசித்து வந்த நாட்களில்! ‘நம் ஆதர்ஷன எழுத்தாளர் சுஜாதாதானே! சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசிக்காமல் செல்வதாவது’ என… வீட்டை விசாரித்துக் கொண்டு கதவைத் தட்டிவிட்டார்களாம். கதவு திறக்கப்பட்டபோது எதிரில் நின்றவர் – சுஜாதா! ‘உங்கள் எழுத்தின் ரசிகர்கள்’ என அறிமுகம் செய்து கொண்டு, உள்ளே நுழைந்தவர்களிடம் ‘சரி சொல்லுங்க! என்ன விஷயமாக பார்க்க வந்தீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார் சுஜாதா.
‘விஷயம் ஒன்னுமில்லைங்க சார்! இந்தபக்கம் வந்தோம். உங்க வீடு இங்கதான்னு ஞாபகம் வந்தது. உங்களை பார்க்கணும்னு தோணுச்சு! அதான் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தோம்’ என்று சொல்லியிருக்கிறார் நண்பர்.
‘சரி… பார்த்திட்டீங்க இல்லை! அப்ப கிளம்புங்க….’ என்று சுஜாதா சொன்னதாகக் கூறி, அந்த நண்பர் என்னிடம் அதிர்ந்தார்.
இதற்கு யார் பொறுப்பு? ‘ஒரு எழுத்தாளரிடம் இப்படியான அணுகுமுறை சரியா?’ என்று கேட்டால், இதற்கு யார், என்ன பதில் சொல்ல முடியும்? இதில் எழுத்தாளர் சுஜாதாவின் தீர்க்கமான கருத்து – ‘எழுத்தில் ரசித்த நபர்களை அப்படியே பாதுகாப்பது நல்லது. நேரில் சந்திக்க செல்லும் விபத்தில் சிக்காதிருக்க வேண்டும். பல நேரங்களில் ஏமாற்றம்தான் ஏற்படும்’ .
தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டு, பல்வேறு விஷயங்களோடு டூயட் பாடி… சண்டை போட்டு… வாதம் செய்து கொண்டோ இருந்ததால்தான், இன்றைக்கு அவர் நாம் காணும் ‘சுஜாதா’வாக இருக்கிறார். இல்லாவிட்டால் எங்கோ… எத்தனையோ ரங்கராஜன்களில் ஒருவராக வாழ்ந்து… அரசின் மரண பதிவேடுகளில் மட்டும் என்ட்ரியாகியிருப்பார்.
* * *
ஒத்த கருத்துடையவர்கள்தான் எழுத்தாளர் சுஜாதாவுடன் தொடர்ந்து நெருக்கமாக இருக்க முடியும் என்றும் ஒரு கருத்துண்டு. இதனாலேயே, சிலர் தங்களது சொந்த கருத்துகளை அவரிடம் வெளிப்படுத்தாமல் இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு Man of Moods என்பதால், நேரடியான விமர்சனங்களை அவரிடம் எடுத்துச் செல்ல சரியான தருணங்கள் தேவைப்பட்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை, சுஜாதா மாற்றுக்கருத்துகளுக்கு அளவாக இடம் தந்து அதை அங்கிகரித்ததோடு, நியாயமான… நாகரீகமான விமர்சனங்களுக்கு கதவு திறக்க பல நேரங்களிலும் தயாராகவே இருந்தார் என்பதுதான் எனது அனுபவம்.
தமிழின் பல்வேறுவிதமான எழுத்து வடிவங்களையும் தொட்டுப் பார்த்த…. குறைந்த பட்சம் பரிசோதித்தாவது பார்த்துவிட்ட சுஜாதா சற்றே தள்ளி நின்றது – சுய முன்னேற்ற கட்டுரைகள் எழுதுவதில்தான் என்று நினைக்கிறேன். அவருக்கு ‘இது’ குறித்து ஒருவகையான விமர்சனம்கூட இருந்ததாக நம்புகிறேன். பல நேரங்களில் அவரது உடல்மொழியுடன் வாய்மொழியும் இந்த கருத்தை எதிரொலித்தன. ஆனால், இதற்கு நேர் எதிரான கருத்து கொண்டவன் நான்! டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி எழுத்துகளுக்கு நான் மாபெரும் ரசிகன் என்பதை மட்டுமின்றி, அவரது எழுத்துகளால்தான் என் வாழ்க்கை பாதை திசை மாறி வந்தது என்ற நம்பிக்கையையும் நான் மறைத்ததில்லை. இது போதாதென்று வாய்ப்பு இருந்த நேரத்தில் எல்லாம், உதயமூர்த்தியின் கட்டுரைகளில் சிலவற்றை அம்பலத்தில் நன்றியுடன் நான் அரங்கேற்றியபோது, ‘அந்த தமிழ் எழுத்து நடை உள்ளிட்ட சிலவற்றைப் பற்றி ஆராய்ச்சிப் பூர்வமாக கருத்து சொல்லி, ‘அது உதயமூர்த்தியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்’ என்றும் சுஜாதா சொல்லியிருக்கிறார்.
‘விசில்’ படம் வெளியானபோது, அம்பலத்தில் விமர்சனம் எழுதியிருந்தேன் – நிறைய குறைகளைச் சொல்லித்தான். அதைப் படித்தவர், என்னை அழைத்து பாராட்டினார். ‘மற்ற பலரும் கவனிக்காத நிறைய விஷயங்களை கவனித்திருக்கிறாய்! தொடர்ந்து அம்பலத்தில் சினிமா விமர்சனம் எழுதேன்’ என்றார். அதன்பிறகு அவர் தொடர்புள்ள திரைப்படங்களின் ப்ரிவியூ காட்சிகளுக்கு டிக்கெட் கொடுத்து விமர்சனம் எழுதச் சொல்வார்.
‘எப்போது வாய்ப்பு கிடைக்கும்?’ என காத்திருந்தது போல – ஊர், உலகமேகூடி தர்ம அடி கொடுப்பதில் ஈடுபட்ட ‘பாய்ஸ்’ படம் பற்றி… அதில் அவரது வசனம் பற்றி நானும் பாதகமான விமர்சனமாகத்தான் எழுதியிருந்தேன். ஆனால், மற்ற பல மீடியாக்களில் போல அல்ல!
அந்த படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இணையம் பற்றி அம்பலம் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். ‘இணைய தளத்தில் இப்போது ஏராளமான விஷயங்கள் கிடைக்கின்றன. ஆனாலும், அதற்கு ஈடாக குப்பையும் கொட்டிக் கிடக்கிறது. இதில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான்…’ என விவாதம் நீண்டது. அம்பலம் இணைய தளத்தில் நான் எழுதிய ‘பாய்ஸ்’ பட விமர்சனத்தில், ‘சுஜாதாவின் வயது, வாழ்நிலை போன்றவற்றோடு சிறிதும் சம்மந்தமில்லாத விடலைகள் பேசும் வார்த்தைகள் நிறையவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் வீட்டின் எந்த இண்டர்நெட் கனைக்ஷன் இந்த மாதிரி ‘சமாச்சாரங்களை’ எல்லாம் எடுத்து வந்து கொட்டுகிறதோ?’ என்று எழுதியிருந்தேன். அதை அவர் படித்தபோது ஒரு நொடி மவுனம்; பின்னர் சலனம்! அடுத்து மெல்லிய புன்முறுவல். ஒருமுறை நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு, மீண்டும் அதைப் படிப்பதில் மூழ்கிவிட்டார்.
அடுத்த இரண்டாவது நாள் விகடனில் ஒற்றை எழுத்து விமர்சனம் வெளியானது. அதன்பிறகுதான், அம்மன் அருள் பாலித்தது போல, ஆளாளுக்கு களமிறங்கி சாமியாடினர்; வாய்க்கு வந்த வார்த்தைகளைப் போட்டு படத்தை துவம்சம் செய்தனர். ‘மூவர் கூட்டணி’யின் தொடர் வெற்றிகள் குறித்து மனக் குமைச்சல் இருந்த பலருக்கும் ‘களமிறங்க’ தைரியம் கொடுத்தது அந்த ஓரெழுத்து விமர்சனம்தான். என் கருத்தில் சுஜாதாவும் கூட அப்படித்தான் நம்பினார். ஆனால், அந்த நேரத்தில்தான் முதன்முறையாக சுஜாதாவின் அளவற்ற அக்கறை, அதீத பொறுப்புணர்ச்சி, கூட்டுப் பொறுப்பு, தலைமைப் பண்பு போன்ற குணங்களின் செயல்வடிவத்தைக் கண்டேன். பல திசைகளில் இருந்தும் வந்து பாயும் பருந்து கூட்டத்திடம் சிக்கிய கோழிக்குஞ்சை காப்பது போல – இயக்குனர் ஷங்கரை விமர்சகர்களிடமிருந்து காப்பாற்ற முயன்றார். ஒருகட்டத்தில், ‘கொஞ்ச நாட்களுக்கு இங்கே இருப்பதை தவிர்த்துவிடு!’ என்று சொல்லி, அவரை குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததில் சுஜாதாவுக்கும் பங்குண்டு! முழு ஈடுபாடு என்பார்களே…. அது! அதை, அப்போது சுஜாதாவிடம் கண்டேன். அவர் அந்த படத்தின் வசனகர்த்தா மட்டுமல்ல!
துரதிருஷ்டவசமாக, அந்த நேரத்தில்தான் சென்னையைச் சேர்ந்த கலாச்சார அமைப்பு சுஜாதாவை விருது ஒன்றுக்கு பரிந்துரைத்திருந்தது. ‘பாய்ஸ்’ பட வசனங்களுக்காக சுஜாதா விமர்சனத்துக்கு உள்ளானபோது, அந்த அமைப்புக்கு நெருக்கமான சிலர் சுஜாதாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, “You just disown the portion of the dialouge, which is under criticism” என்று ஆலோசனை சொன்னார்கள். தொலைப்பேசியில் உரையாடிய அந்த நேரத்தில் அவர் என்ன நினைத்தாரோ! சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு, “பாருப்பா… இவங்க என்னைப் பத்தி என்னதான் நினைக்கிறாங்கன்னே தெரியல! அது எப்படி நான் disown பண்ண முடியும்? என் பேருல வந்த வசனத்துல ‘இதை மட்டும் நான் எழுதலை! அவங்களே என் பேருல எழுதிக்கிட்டாங்க’ன்னு நான் சொல்லணுமாம்! அது எப்படி முடியும்? என்னையும், என் பேரையும் மட்டும் நான் காப்பாத்திகவா?” என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியானார்.
சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் பேசத் தொடங்கியவர் “நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதெல்லாம்….” என்று ‘முடியாது’ என கையசைத்தபடி மூடு மாறி… அல்லது மாற்றிக் கொண்டு வேறு புத்தகத்தை கையில் எடுத்து அதில் மூழ்கிப் போனார்.
மிக மிக அரிதாகவே அவரது உணர்வுகளை, உணர்ச்சிகளை வெளிக்காட்டும் சுஜாதா, இந்த சம்பவத்தின்போதுதான் கோபம் மேலோங்க சற்று பதட்ட மடைந்ததை நான் கண்டேன். இங்கு மட்டுமல்ல; எப்போதுமே சுஜாதா அவரது சொந்த கருத்து, முடிவுகளின்படியான நபராகத்தான் இருந்தார். இதையெல்லாம் தாண்டி அவரை Influence பண்ணியது – அவர் நம்பிய ‘ஸ்ரீரங்கன்’ மட்டும்தான் என்றே நினைக்கிறேன்.
அத்துடன், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். சுஜாதா குறித்த விமர்சனத்துக்கு நான் பதில் சொல்ல முனைவதால் – அவரது எழுத்துகள் அனைத்தையும் கரைத்து குடித்து… அதில் எம்ஃபில்., பிஎச்டி பட்டம் பெற்றவன்… அதற்கு நான் தகுதியானவன் என்று அர்த்தமல்ல; எனது கருத்துகள் எதுவும் அவரது எழுத்து சார்ந்த புரிதலால் விளைந்ததல்ல. அவருடன் பணியாற்றிய காலங்களில் எனது நேரடி அனுபவத்தால் விளைந்தவை. மற்றபடி, அவர் எழுத்தில் நான் படித்தது குறைவே! எனவே, அவரது எழுத்துகளை கட்டுடைப்பதாகச் சொல்லும் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. சுஜாதா என்ற மனிதரைக் கட்டுடைக்கும் முயற்சிக்கான பதில் மட்டுமே இது!
அவரது நினைவுக்கு எனது நிஜ அஞ்சலி, சுஜாதாவின் பாணியிலேயே அவரது விமர்சகர்களை அணுகுவதாகத்தான் இருக்கும் என்றே நினைத்தேன். என்றாலும், நான் அறிந்த சுஜாதாவைப் பற்றி… அவர் குறித்த எனது புரிதலை இங்கே பகிர்ந்து கொள்வது அவசியம் என கருதியதால்தான் இந்த பதிவு. இங்கே இடம் பெறுவது, எழுத்தாளர் சுஜாதா குறித்த எனது கருத்து, அனுபவம், பார்வை! ஜாதிய ரீதியில் மட்டுமே, அவரை அணுகும் நபர்களுக்கு இதற்கு மேல நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
rachandran@gmail.com
- பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)
- நம்ப முடியாத விசித்திரம்
- எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்
- சுஜாதா என்கிற ஆளுமை
- சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!
- எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.
- சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்
- மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? (கட்டுரை: 24)
- கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?
- இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
- புத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்
- சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை
- “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி
- மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்
- கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை
- சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.
- கவிதா நிகழ்வு
- நேற்றிருந்தோம்
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்
- மாதா வெளியேற மறுத்தாள்
- புரியவில்லையே…?
- யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்
- தரிசனம்
- சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா?!!
- வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்
- அடுப்பிலே போடப்பட்ட அமைதி
- எனது மூன்று வயது மகள்
- ஏழு கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- தாரா கணேசன் கவிதைகள்
- வலி உணரும் தோல்கள்
- கவிதைகள்
- மனக்குப்பை
- ஆகு பெயர்
- காட்டாற்றங்கரை – 2
- புவியீர்ப்பு கட்டணம்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6
- அக்கக்காக் குஞ்சு !
- கருப்பாயி மகனுடைய பெட்டி