எளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாதர்ணின் ‘கல்முகம் ‘)

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

பாவண்ணன்


ஒரு பக்கம் வேப்பந்தோப்பு. மறுபக்கம் முந்திரித்தோப்பு. இடையில் இருந்தது எங்கள் கல்லுாரி வளாகம். உள்ளே புத்தகப்படிப்பு. வெளியே இயற்கைப் படிப்பு. புத்தகத்தைக் கற்பிக்க ஆசிரியர்கள் உண்டு. இயற்கை இயல்பாகவே ஆசானாக இருக்கிறது. இயற்கைப் படைப்புகள் ஒவ்வொன்றும் தணிந்த குரலில் எதையோ முன்வைத்தபடியே இருக்கிறது. அதன் மொழி நமக்கு வசப்பட்டால் போதும். எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும். மொழியே புரியாமல் இயற்கையைத் தொடர்ந்து கவனிக்கிற மனம் அதைப் பற்றி உள்வாங்கிக் கொள்கிற உணர்வுகள் கூட ஒருவகைக் கல்விதான். பாடமற்ற வேளைகளில் அத்தோப்புகளில் நானும் என் ஆசிரியர் தங்கப்பாவும் நடந்தபடி பேசுவது வாடிக்கை.

முந்திரி மரத்தில் உட்கார்ந்து கூவும் குயிலைப் பார்த்தபடி ஒருநாள் ‘ஞானம் என்றால் என்ன ? ‘ என்று கேட்டார் தங்கப்பா. ஒருகணநேரத் தயக்கத்துக்குப் பிறகு ‘தன்னையறிதல் என்பது ஞானமாக இருக்கலாம் ‘ என்றேன். ‘அது என்ன தன்னையறிதல் ? ‘ என்று மறுபடியும் கேட்டார். ‘தன் இருப்பு பற்றியும் செயல்கள் பற்றியும் தன் வலிமை பற்றியும் அறியாமை பற்றியுமான தெளிவை அடைதலே தன்னையறிதல் ‘ என்றேன். ‘அது வலியறிதல் அல்லவா ? அதைத்தான் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் துாக்கிச் செயல் என்று ஏற்கனவே வள்ளுவர் சொல்லி உள்ளாரே. வலியறிதலுக்கும் தன்னையறிதலுக்கும் வேறுபாடு இல்லையா ? ‘ என்றார்.

ஒருகணம் என் எண்ணங்கள் சுழன்றன. மனத்தில் அண்டம் முழுக்கச் சுற்றியலையும் கோள்களின் படிமம் எழுந்தது. உடனே அவரிடம் அதையே சொன்னேன். ‘எண்ணற்ற கோள்களுக்கிடையே சுழலும் ஒரு கோளுக்குத் தன் வேலை என்ன என்று தெரிகிறது, மற்ற கோள்களின் வேலைகள் என்ன என்றும் தெரிகிறது. அது எப்போதும் தன் ஒழுங்கினின்றும் பிறழ்வதில்லை, மற்றவற்றின் ஒழுங்கிலும் தலையிடுவதில்லை. அது போன்ற இயக்கம் தன்னையறிதலாக இருக்கலாம் ‘ என்று மறுபடியும் இழுத்தேன். அப்போதுதான் சாதாரணமாக நாம் கையாளக் கூடிய ஒரு சிறிய சொல்லுக்கான வரையறையை வகுப்பது எவ்வளவு சிரமம் என்று தோன்றியது. ஒவ்வொன்றைப் பற்றியும் உத்தேசமான எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர திட்டவட்டமான முடிவை அறிவிக்க இயல்வதில்லை என்றும் புரிந்தது.

‘குத்துவிளக்கு சுடருடன் எரிவதைப் பார்த்திருக்கிறாய் அல்லவா ? அச்சுடர் ஒளிமயமானது. அழகானது. ஈர்ப்பது. பரவசத்தை உருவாக்குவது. எந்த இடத்தில் இருப்பினும் பேதாபேதமற்று ஒளிர்வது. ஒளிர்வது அதன் இயல்பு. எண்ணெயின் ஊற்று வற்றாத வரைக்கும் ஒளிக்குக் குறைவில்லை. சுடரின் நிழல்பிம்பம் உருவாக்கும் எண்ண அலைகள் கோடிக்கணக்கானவை. மனிதர்களும் அவ் விதம் சுடருடன் ஒளிவிடத்தக்கவர்கள். மனத்துக்குள் ஊற்றெடுக்கும் அன்பும் கரிசனமுமே எண்ணெயாக எண்ணங்களும் செயல்களுமாகச் சுடர் விட அவர்களால் முடியும். சுடரின் வெப்பத்தில் குளிர் காய அவர்கள் விழைவதில்லை. சுடர் ஒருபோதும் ஒளியைச் சேமித்துக் கொள்ளாததைப் போல அவர்களும் தமக்கென எதையும் சேமித்துக் கொள்வதில்லை. அவ்விதம் ஒரு வாழ்வுண்டு. அதுவே ஒளிமிகுந்த வாழ்வு. ஒளிபடைத்த கண்ணினாய் வாவா என்று எதிர்காலப் பாரதத்தை வரவேற்றுப் பாரதியார் பாடியபோது அவருக்குள் இப்படிப்பட்ட வாழ்வின் கனவு மூண்டிருக்கலாம். ஒளிமிகுந்த வாழ்வை அறிதலே தன்னையறிதல். அதுவே ஞானம் ‘ சொல்லி முடிக்கும் போது அவர் முகமே குத்துவிளக்கின் சுடர் போல ஒளிர்வதைக் கண்டேன்.

முந்திரிக்காட்டில் ஞானம் பற்றித் தங்கப்பா சொன்ன வார்த்தைகளைப் பிற்காலத்தில் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு. ஒவ்வொரு முறையும் அக்கருத்தை ஒட்டிப் பல எண்ணங்களின் அடுக்குகள் கூடிக்கொண்டே போவதுண்டு. அவர் சொன்ன ஞானிகளின் வரிசையை மனத்துக்குள் பலமுறை போட்டுப் பார்த்துக் கலைத்திருக்கிறேன். வாழ்ந்த மாந்தர்களின் வரிசையைப் போடுவதற்கு மாற்றாக ஒருநாள் கதைகளில் வடிக்கப்பட்ட மாந்தர்களின் வரிசையை விளையாட்டாகப் போட்டுப் பார்த்த போது என் மனத்தில் சட்டென உதித்த ஒரு பாத்திரத்தின் பெயர் எர்னெஸ்ட். மிகப்பெரிய ஞானி அவன். ஆனால் அப்பெருமையையும் உதறி விடுகிறான் அவன். தன்னையே நிராகரித்துக் கொள்கிறான். அந்த நிராகரிப்பு மற்றொரு வகையில் அவனுக்கு மேலும் பெருமையையே சேர்க்கிறது. மிகச்சிறந்த அந்தப் பாத்திரத்தை உருவாக்கியவர் அமெரிக்க எழுத்தாளரான நதேனியேல் ஹார்த்தண். சிறுகதையின் பெயர்

‘கல்முகம் ‘.

கதையில் ஒரு பள்ளத்தாக்கு இடம்பெறுகிறது. ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து பார்த்தால் மனிதமுகம் போல் தோன்றும் வகையில் அமைந்திருந்தன மலையின் பாறைகள். யாரோ ஒரு ராட்சசன் தன் உருவத்தையே அந்த மலையில் செதுக்கி வைத்திருந்ததைப் போலவும் இருந்தது. அதன் விசாலமான நெற்றியின் உயரம் நுாறு அடி இருக்கும். அதன் நீண்ட மூக்கும் பெரிய உதடுகளும் மனித உருவத்தைப் போலவெ இருந்தன.உண்ாமயில் உயிருள்ள ஒருவனுடைய முகத்தைப் போலவே அது காட்சியளித்தது. அப்பள்ளத்தாக்கில் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்படுகிற கதை ஒன்றுண்டு. பிற்காலத்தில் ஒரு மகான் பிறக்கப் போகிறான். அவன் முகம் அந்தப் பிரம்மாண்டமான கல்முகத்தைப் போலவே இருக்கும் என்பதுதான் அந்தக் கதை. குடிசை வாசலில் உட்கார்ந்து அம்மா சொல்லும் இக்கதையைக் கேட்டு வளராதவர்களே இல்லை.

கதையில் எர்னெஸ்ட் என்னும் சிறுவன் இடம்பெறுகிறான். அவன் தாயும் அக்கதையை அவனுக்குக் கூறுகிறாள். அச்சிறுவனுக்கு அம்முகத்தைப் பார்ப்பதில் அலுப்பே தோன்றுவதில்லை. ஓய்வு கிட்டும் ஒவ்வொரு தருணமும் அம்முகத்தின் முன்வந்து உட்கார்ந்து கொள்வான். அம்முகம் அவனுடன் ஏதோ பேசுவது போலத் தோன்றும். பரவசத்தில் ஒருநாள் தன் அம்மாவிடம் அந்த முகம்கொண்ட மகானைத் தான் பார்ப்பது உறுதி என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு சொல்கிறான். புத்திசாலியான தாயார் குழந்தை யின் நம்பிக்கையைக் குலைக்கக் கூடாதென்று பார்த்தாலும் பார்ப்பாய் என்று பதில் சொல்கிறாள்.

நாளாக நாளாக அம்முகத்துடன் அவனுக்கு நெருக்கம் அதிகரிக்கிறது. அதை மணிக்கணக்கில் பார்த்தபடி உட்கார்ந்திருப்பான். அந்த முகம் அவனை அடையாளம் கண்டுகொண்டு பதிலுக்கு அன்ப,டன் புன்முறுவல் செய்வதைப் போல இருக்கும். அதனிடம் மற்றவர்கள் காணாத உண்மைகளை எல்லாம் அவனுடைய எளிய சுபாவம் கண்டது.

திடுமென அந்தக் கல்முகத்தைப் போன்ற தோற்றம் கொண்ட மகான் வந்துவிட்டதாகச் செய்தி பரவியது. பல வருஷங்களுக்கு முன்னால் அந்தப் பள்ளத்தாக்கிலிருந்து அவளியேறி எங்கோ அலைந்து திரிந்து பணக்காரனாகத் திரும்பி வருகிறான் அவன். அவனைப் பார்த்தவர்கள் அனைவருமே அவன் முகம் கல்முகத்தைப் போலவே இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் எர்னெஸ்ட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெகுகாலத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வரும் ராணுவ வீரனுடைய முகமும் கல்முகத்தைப் போல இருப்பதாக வதந்தி எழுகிறது. அதையும் எர்னெஸ்ட் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறான். தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரசியல்வாதி வருகிறான். அவன் முகம் கல்முகத்தைப் போல இருக்கிறது என்று எழுந்த செய்தியையும் அவன் மனம் நம்ப மறுக்கிறது. ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவருடைய முகத்தைக் கல்முகத்தைப் போல இருப்பதாக நம்பும் மக்கள் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, தம் நம்பிக்கை வறண்டுவிட மாயையில் சிக்கியிருந்ததாக வருத்தம் கொள்வது வாடிக்கையாகி விட்டது.

இடையில் எர்னெஸ்ட் நடுத்தர வயதைக் கடந்துவிட்டான். மனித நலன்கள் பற்றித் தொடர்ந்து சிந்தித்தான். அவன் வாழ்க்கை ஓடையினால் அவனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் செழிப்படைந்தனர். அவனுடைய எளிய வாழ்வினால் மக்கள் பயனடையாத நாளே இல்லை. தன்னையும் அறியாமல் அவன் தர்ம உபதேசம் செய்யும் ஓர் ஆசிரியனாக மாறி விட்டான். உபதேசித்தது போலவே தன் செய்கைகளிலும் வாழ்ந்து காட்டினான்.

பல ஆண்டுகள் உருள்கின்றன. வழக்கம் போல தன் ஊருக்குத் திரும்பி வந்த பணக்காரன் ஒருவனுடைய முகத்தையும் கல்முகத்தையும் ஒப்பிட்டுப் பேசி அவனை மகான் என்று நம்பிப் பலத்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள் மக்கள். இப்போதாவது ஒப்புக்கொள், கல்முகம் போலவே முகம் உள்ள ஒருவன் வந்துவிட்டான் என்பதை என்று வற்புறுத்துகிறான் ஒருவன் வயதாகிக் கிழவனாகி விட்ட எர்னெஸ்ட்டிடம். ஆனால் புன்சிரிப்புடன் தலையசைத்து மறுத்துவிடுகிறான் எர்னெஸ்ட்.

இறுதியாக ஒரு கவிஞன் அந்தப் பள்ளத்தாக்குக்கு வருகிறான். அவனுடைய கவிதைகள் என்று அறியாமலேயே அவனுடைய படைப்புகளில் மனம் பறிகொடுத்தவன் எர்னெஸ்ட். அவனுடைய முகம் அக்கல்முகத்தைப் போல இருப்பதாக ஓர் எண்ணம் அவன் நெஞ்சில் எழுகிறது. சொல்லாமல் மனத்துக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான். அன்று மாலை பிரசங்கத்தை முடித்துக் கொண்டு கீழே இறங்கிய போது கவிஞன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவனுடைய முகம்தான் அக்கல்முகத்தைப் போல இருக்கிறது என்று தழுதழுக்கிறான். உடனே கூட்டத்தில் இருந்த அனைவரும் கவிஞன் சொன்னதை உண்மை என்று உணர்கின்றனர். ஆனால் எர்னெஸ்ட் தன்னைவிட அதிக ஞானமும் சீலமும் படைத்த ஒருவன் வருவான் என்றும் அவன் முகமே கல்முகத்தைப் போலத் தோன்றும் என்றும் நினைத்தபடி கவிஞனின் கையைப் பிடித்தபடி வீட்டை நோக்கி நடக்கிறான்.

*

அமெரிக்க எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க சாதனைப் படைப்பாளிகளுள் ஒருவர் நதேனியேல் ஹாதர்ண். ‘ஸ்கார்லெட் லெட்டர் ‘ என்னும் அவருடைய புதினம் உலகப்புகழ் பெற்றது. இந்த நாவல் ‘அவமானச் சின்னம் ‘ என்னும் பெயரில் ஆறுமுகம் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவர் எழுதி வைத்த பல படைப்புகள் அவரது மறைவுக்குப் பிறகு ஒவ்வொன்றாக வெளிவந்து அவருடைய பெயருக்குப் புகழைச் சேர்த்தன. 1955 ஆம் ஆண்டில் ஜோதி நிலையம் வெளியீடாக வந்த ‘கல்முகம் ‘ என்னும் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இச்சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. மொழிபெயர்த்தவர் வாணீசரணன்

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்