எல்லாம் ஆன இசை

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

ஜடாயு


வண்டுகள் ரீங்காரம்
ஆடிக்காற்றின் ஆங்காரம்
உள்ளுக்குள் ஓயாமல் ஒலிக்கும்
ஓங்காரம்
குயிலின் கூவல்
ரயிலின் ஊதல்
குழந்தைகள் கும்மாளம்
சாவுப் பறைமோளம்

எத்தனை எத்தனை சத்தங்கள்
சத்தங்களினின்று
சங்கீதம் ஜனிப்பது
சமத்காரம்

எத்தனை எத்தனை ஓசைகள்
ஓசைகளின் ஒத்திசைவில்
இசை இருப்பது
இந்திரஜாலம்

தொப்புள் குழியில் பிறந்து
இதயக் குமிழில் மலர்ந்து
தொண்டைக் குழியில் துலங்கி
வாய் வழி வரும்
ஜீவ நாதம்
உணர்வில் கலந்து
உயிரில் இணைகிறது

குழலும் வீணையும் மத்தளமும்
கூட்டும் உயிரொலிகள்
செவிவழி சிந்தை புகுந்து
அடிமனதின் ஆயிரமாயிரம்
கதவுகளைத் திறக்கின்றன

வக்ரங்கள் கூட
வசீகரம் பெற்று விடும் இசையில்
நடுத்தர மத்யமங்களும்
கடைக்கோடி பஞ்சமங்களும்
சிம்மாசனம் இட்டமரும்
ஏழு ஸ்வரங்களின்
ஏற்ற இறக்கங்கள்
சமச்சீர் கொண்டு
சாகசம் படைக்கும்

கல்யாணியின் கனிவு
காம்போதியின் கம்பீரம்
கரஹரப்ரியாவின் கலகலப்பு
தோடியின் மோடிவித்தை
அடாணாவின் அதட்டல்
சுபபந்துவராளியின் சோகம் –
ஒட்டுமொத்த உணர்ச்சிகளின்
ஊற்றுமுகம்
இசையில் தெரிகிறது

சொல்லில் அடங்காததோர்
காவியத்தை
ஸ்வரங்களால் எழுதிக் காட்ட முயலும்
ஓவியம் இசை

எல்லாம் இசையும் இசையில் – அதன்
ஈர்ப்புக்கு மயங்காததது
இல்லை இப் புவியில்
(c) ஜடாயு (jataayu@hotmail.com)

Series Navigation

ஜடாயு

ஜடாயு