எ(பெ)ருமை முயற்சிதரும்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


சிங்காரச் சென்னையில் இராயயபுரம் என்கிற திவ்ய ஷேத்திரத்தில், ராசரத்தினம் லேன் மூன்றாவது குறுக்குத் தெரு பழைய இலக்கம் 232 புதிய இலக்கம் 25 என்ற வீட்டுக்குரியவரை நீங்கள் அவதானித்திருந்தால் தமிழ் வாத்தியார் புலவர் சிகாமணியைப் பற்றிய தலபுராணம் அவசியமற்றது.

‘ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி, அவனுக்கும் இளைச்சவர்கள் வாத்தியார்கள் ‘ னு எங்கேயோ படிச்ச வசனம். நம்ம சிகாமணியைக் கேட்டால், ‘வாத்தியார்கள்ல இளைச்சவன் தமிழ் வத்தியார் என்பார் ‘. அவரோட அனுபவம் அப்படி.. அரசாங்க உத்தியோகங்கள்ல சம்பாத்தியம் தர்ர உத்தியோகம் எவ்வளவோ இருக்குது. ட்யூஷன் சொல்லிக்கொடுத்தே நங்கநல்லூர்ல மனை வாங்கி வீடு கட்டினவாத்திமார் இருக்காங்க. இவருக்கும் ட்யூஷன் உண்டு. சாமி பண்டாரம் தெருவுல இருக்கிற அரை நிஜார் போட்ட வாண்டுகளுக்குத் தமிழ் கத்துக் கொடுக்கிறது. அங்க ‘வணக்கம் சாரை ‘ விட பெருசா வரும்படியில்லை. மிஞ்சிப்போனா நாயர் கடையில ஒரு கிளாஸ் ‘மலாய் டா ‘ கிடைக்கும். ஓய்ஞ்ச நேரங்கள்ல எழுத்தாளர் உத்தியோகம். அவரோட எழுத்துக்கு வரும்படி இதுவரைக்கும் இல்லை, செலவுதான். இப்படி இவர் இருந்தா நம்ம மஹாவிஷ்ணு பாரியாள் லெச்சுமி எப்படி பொறுப்பா ‘ ? ‘போய்யா சிகாமணி ‘ ண்னு போயிட்டா.

அவ போகலாம். நம்ம சிகாமணி வாத்தியாரோட சம்சாரம் அலமேலுவால அப்படி ‘உன் சங்காத்தம் வேணாம்னு ‘ சொல்ல முடியுமோ ?. அவளால மூக்கைச் சிந்தத்தான் முடிஞ்சுது. அந்தமாதரி நேரங்கள்ல அதுவும் அவர் எழுதற கதைகள் சுவற்றில் அடிச்ச பந்தா திரும்பிவரும்போது, அலமேலுவின் முகம் போற போக்கைப் பார்த்துச் சிகாமணி சொல்ற குறள்:

‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும் ‘

இந்தக் குறளைக் கேட்டு அதிகமா விசாரம் அடைஞ்சது, அலமேலுவைவிட அவரது ஏகபுத்ரி அல்லி. விதியையும், திருக்குறைளையும் அநியாயத்துக்கு நம்பி ஜீவித்து வந்த சிகாமணி தம்பதிகளின் ஷேத்திராடானப் பலன். பரணி நட்சத்திரத்தில் ஜனித்து, அல்லி ‘ என்ற நாமகரணம் சூடி ஆணுக்கு ஆணாகவும் பெண்ணுக்குப் பெண்ணாகவும்தானே வாத்தயார் இல்லத்திலே வளர்ந்து வருகிறாள்.

நடுத்தர வர்க்கத்திற்கும், அழகுக்கும் என்ன சம்பந்தமோ ‘ ? பால்யவயதில் பரஸ்பர சேஷ்டைகள் செய்துகொ ‘ண்டு மூக்கொழுக அப்படி இப்படின்னு இருந்தாலும், வாலைப் பருவத்தில் அதிரூப சுந்தரியாய், யெளவனம் பொங்கிய கட்டழகியாக சகல செளபாக்கிய குணநலன்களோடத்தானே அல்லி ஜொலித்தாள். சென்னையின் அவனி ஐம்பத்தாறு பேட்டைகளிலும், ‘இதுபோல ஒரு கன்னிகையைக் கண்டதில்லையென்றும், மணந்தால் இவளையே மணப்பது, இல்லையேல் பீச்-டூ-த ‘ம்பரம் இரயிவே ட்ராக்கில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வது ‘ எனச் சங்கல்பம் செய்துகொள்ளும் வாலிபப் பிராயத்தினர் அனேகம்.

யோஜஸுக்கும் தேஜசுக்கும் ஏதேனும் ஸ்னானப் பிராப்தி இருக்குமோ ? வாத்தியார் பிள்ளை மக்குன்னு யார் சொன்னது ? சாட்சாத் ஸரஸ்வதிதேவி நம்ம அல்லியின் நா, சிரசு என்பவற்றில் உட்கார்ந்துகொண்டு இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள். இந்தச் சூட்சுமத்தை எப்படி புரிஞ்சுக்கிறது. லோகத்திலே பந்துக்களும், இதர குடிகளும் அல்லியைப் புத்ரியாக அடைஞ்சதுக்கு வாத்திய ‘ர் சிகாமணியின் பூஜாபலனென்றே சிலாகித்திருந்தார்கள்.

இப்படி நானாவிதத்திலும் பிரசித்திபெற்ற அல்லி, தக்கபிராயத்திலே கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்தாள். அல்லி என்ற நாமகரணத்திற்கு ஏற்றாற்போல, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் படியான குணங்களை ஒதுக்கி, பாரதியின் புதுமைப் பெண்ணாகத்தானே கல்லூரிக்குச் சென்று வருகிறாள்.

அல்லி என்று சொன்னால் ஒர் அர்ச்சுனன் வரவேண்டாமோ. வந்தான். இந்தக் கலியுக அர்ச்சுனன், நம் அல்லிக்கு ஏத்த சுந்தர புருஷனாகவே இருந்ததான். கிரிக்கெட் முதல் கில்லித்தண்டுவரை, ஆயகலைகள் அறுபத்துநான்கிலும் அப்பியாசம் செய்து, ‘ஓ போடுதல் ‘ கடலை போடுதல் ‘ முதலான கல்யாண குணங்களில் தேர்ந்திருந்தான்.

அல்லியின் செளந்தர்யலாகிரியில் மோகித்து, காதல்லிகிதங்களில், எல்லா வயசுப் பிள்ளையாண்டான்களையும் போல தத்துபித்தென்று தன் மனசை அர்ச்சுனன் புதுக்கவிதைகளில் தெரிவிக்க, அல்லியாகப்பட்டவளும், தன்மனசுக்கிசைந்த மணாளனாய் ஈசன் அனுப்பிவைத்த அர்ச்சுனரையன்றி வேறொருவரைக் கனவிலும் வரித்தலாகுமோ என்று சதா சர்வகாலமும் தனது ஹ்ருத்ய கமலத்திலே அவனை நிறுத்திப் பூஜி ‘த்து வரலானாள். நமது ஹீரோவும் ஹீரோயினியும் நாளொரு ஓட்டல், பொழுதொரு சினிமா எனச் சந்தித்துத்தானே தங்கள் காதலையும் வளர்த்து வந்தனர்.

அல்லியும் அருச்சுனனும் ரதியும் மன்மதன்போலவும், அம்பிகாபதி அமராவதி போலவும், அஜீத்-ஷாலினி போலவும் மற்றும் நான் இங்கே சொல்லாமல் விடுத்த காதலர்களைப் போலவும் காதலைக் கல்லூரியில் வாசித்துவர, சுபத்திராவென்கின்ற ‘படையப்பா ‘ நீலாம்பரி ‘ இடையிலே குறுக்கிடலா ‘ச்சுது. இந்த சுபத்ராவின் பூர்வீகம் பற்றி நேயர்களுக்குச் சுருக்கமாகவாவது சொல்லணும். இல்லையெனில், இந்தக் கதையின் பிரசுரகர்த்தரின் சினத்திற்கு நான் ஆளாகநேரும்.

சென்னை சிட்டியிலே சூளை கார்மேகத்தோட கீர்த்தி மிகவும் பிரசித்தம். ‘சூளைக் கார்மேகம் ‘னு சொன்னா ‘ தொப்பை வச்சிருக்கிற போலீஸ்காரர்கூட ஓடி ஒளிவார். அப்பேர்ப்பட்ட கார்மேகத்தோட வேப்பிலைக் கொத்துதான் சுபத்திரா. அவளுக்காகவே கார்மேகம் தி.நகர்ல ஒரு பெரிய ஜவுளிக் கடையை திறந்து வைச்சுள்ளதா தேசத்தில் பேச்சு. இப்படித்தான் போன வருஷம் வகுப்பறையில் காற்று ஒழுங்காக வரவில்லையெனச் சுபத்திரா தனது நைனாவிடம்ன் பிரஸ்தாபிக்க, அடுத்த சில மாதங்களில கல்லூரி வளாகம் கடற்கரைப்பக்கம் வந்துடிச்சி. இதுக்கு மேல சுபத்திராவோட பிரக்யாதிபற்றி நேயர்களுக்குச் சொல்லி வார்த்தைகளை வீண்விரயம் செய்ய வேண்டாம்னு நினைக்கிறேன்.

அப்பேர்பட்ட சுபத்திரா அருச்சுனனை துரத்தித் துரத்திக் காதலிக்கிறாள். அர்ச்சுனனும் அல்லிமீது தனக்குள்ள பிரேமையை ஆதியோடந்தமாக எடுத்துச் சொன்னாலும், அவள் நிஷ்டூரமாய் அர்ச்சுனன் தனக்கே தனக்கு என்கிறாள். அதிலும் நேற்று சக ஸ்நேகிதர் ஸ்நேகிதிகள் முன்னாலே அவ நம்மை அல்லியை மட்டம் தட்டிய பேச்சுக்கு நாக்கைப் பிடுங்கிக்கலாம்.

‘அல்லி ‘ மாதரியான தமிழ் வாத்தியார் பெண்ணுக்கு அர்ச்சுனன் சரிப்படாதாம், எங்காவது துரியோதனன் துச்சாதனன் கிடைச்சா ‘ காதலிங்கறா அவளது மெர்சடஸ் 500 CDI வாகனத்தைக் காட்டி, ‘இது எங்க நைனா கொடுத்த பிறந்தநாட் பரிசு, நாளைக்கு இதுபோல ஒண்ணுல வந்துகாட்டு, அர்ச்சுனன உனக்கு விட்டுக் கொடுக்கிறேன் ‘ அப்படின்னிட்டு சவால் விடறாள்.

நம்ம அல்லிக்கு மனசிலே கிலேசம் ஏற்படலாச்சு. ‘இன்னார்க்கு இன்னாரென்று இட்டமுடன் எழுதிவச்ச ஈசன் செத்துவிட்டானோ ? எனப்பரமனை பலவாறாக நிந்தித்து அன்றைக்கு முழுதும் அழுதகண்ணும் சிந்தியமூக்குமாகத்தானே துக்கித்தாள். ‘இந்த சுபத்ராவை ஜெயிப்பதற்கான குயுக்திகள் பலவற்றை யோசித்துச் சோர்ந்து நித்திரை கொள்ளும் நேரம் அவளது தகப்பனார் சிகாமணி அடிக்கடி சொல்லும் குறளின் இரண்டாது அடி ‘பெருமை முயற்சி தரும் ‘ என்பது இறைவன் கிருபையால் ஞாபகத்தில் உதித்தது. இரண்டு முறை உச்சரித்துப் பார்த்தாள். அவளது காதில் வேறுவிதமாக ஒலிக்க, பரமன் திருவுள்ளத்தையெண்ணி ஆனந்தப்பட்டாள்.

மறுநாட்காலை வீட்டிலிருந்து, எமனை தியானித்து, தகப்பனார் சிகாமணி ஆசீர்வதிக்க அம்மா அலமேலு ஆரத்தியெடுக்க, பால்காரன் ஏழுமலையிடம் கேட்டு வாங்கிய எருமை வாகனத்தில் கல்லூரிக்கு அல்லி தைரியமாகப் புறப்பட்ட ‘ள். பாதசாரிகள் நாலாதிசைகளிலும் அலறி அடித்துக்கொ ‘ண்டு ஓடவும், இதர வாகனாதிபதிகள் பயத்தில் தங்கட் தங்கள் வாகனத்தை ஓரங்கட்டவும், ட்ராபிக் கான்ஸ்டபிள்கள், எருமைவாகனத்தில் பயணிப்பதை அனுமதிப்பதா ‘ ? கூடாதா ? எனக் குழம்பிப்போய் நிற்க எப்படியோ கல்லூரிக்கு எருமைவா ‘கனத்தில் வந்தாயிற்று.

அல்லியை எருமை வாகனத்தில் பார்க்கவும், கல்லூரி வாசலில் வழக்கம்போல நின்றிருந்த, சுபத்ரா அர்ச்சுனன் உட்பட்ட நண்பர்கள் பட்டாளம் ஆச்சரியத்தில் மூர்ச்சையாகாத குறை..

‘ வாவ்! இதான் உன்னோட மெர்சிடஸா ‘ ? ரியலி பண்ட்டாஸ்டிக்யா ‘! எங்க.. எமலோ ‘கத்திலேருந்து இம்போர்ட்டடா ‘ ‘ ? சொல்லிவிட்டுச் சுபத்திரா சப்தம் போட்டு சிரிக்கிறாள்.

அல்லி எருமையிலிருந்து இறங்கினாள். ‘என்ன கேட்ட ?.. எமலோகத்திலிருந்து இம்போர்ட் பண்ணதான்னா கேட்ட. ? ஆமாண்டி அப்படித்தான். நீ அப்படி கேப்பன்னு எதிர்பா ‘ர்த்தேன். உன்னோட அபிப்ராயபடி நான் எமன் இந்த எருமை என்னோட வாகனம். அப்படித்தானே ? நீ நேற்று என்ன சொன்ன என்னோட வாலனம் மாதரி ஒண்ணுல வந்துகாட்டுன்னுதான சேலஞ் பண்ன. நானும் அப்படித்தான் வந்திருக்கன். இதுவரைக்கும் உன்னோட கார்ல அடிபட்டவங்களை நெனைச்சுப் பார்த்தா, நீயும் எமன்தான் உன்னோட காரும் ஒரு எருமை மாடுதான். ஆக என்னோட எருமை வாகனம் உன்னோட மெர்சிடசுக்கு எந்த விதத்திலேயும் குறைஞ்சதில்லை ‘ என்றுரைத்த நம்ம ஹீரோயின் அல்லி, கொஞ்சம் நின்று சுவாசத்தை சீராக்கிக் கொள்கிறாள்.

சினேகிதர் கூட்டம் ஏகோபித்து ஓர் ‘ஓ ‘ போட்டு அவள் கருத்தை ஆமோதிக்கும் விதமாகத்தானே அவளைத் தூக்கிவைத்து கொண்டாடு ‘டுகிறது. ஹீரோ அர்ச்சுனனும் அல்லியின் சாதுர்யத்தை மெச்சி பரவசப்படலானான்.

‘நீலாம்பரி சுபத்ரா ‘ இப்படி மூக்குடைபடுவோமென கனவிலும் எண்ணியதில்லை. அல்லி மீது ஏற்பட்ட கோபத்தில் காரைக் கிளப்பிக்கொண்டு போனவள்தான் அதற்குப் பிறகு கல்லூரிக்கு ஒழுங்காக வருவதில்லையாம். அப்படியே வந்தாலும் நம்ம அல்லி அர்ச்சுனன் காதல் எல்லைக்குள் பிரவேசிப்பதில்லையாம்.

ஆக நேயர்களே! இந்தக் கதையால் அறியப்படும் நீதி யாதெனில் லோகத்திலே மேலோர் கீழோரில்லை இல்லையென்பதும், காதலுக்குக் குறுக்கே ஓரு மெர்சிடஸ் கார் வரினும், ஓர் எருமையிருந்தால் காதலை ஜெயிக்க வைக்கமுடியும் என்பதுமாகும்.

சுபம்

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா