என்றும் பதினாறு! – குறுங்கதை

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

கே.எஸ்.சுதாகர்


– –

நேரம் இரவு பத்து மணியைத் தாண்டி விட்டது. மழை தூறிக் கொண்டிருந்தது.

கார் அந்த பஸ் ஸ்ராண்டைத் தாண்டிய போது – யாரோ ஒரு பெண் வெளியே வந்து கை காட்டியது போல இருந்தது. ‘ஸ்றீற் லாம்’பின் வெளிச்சத்தில் அவள் ஒரு பள்ளி மாணவி போலத் தெரிந்தாள்.

“ஏய் மோகன், பள்ளிக்கூடப் பிள்ளை போல கிடக்கு. பஸ் இனி இந்தப் பக்கம் வருமோ தெரியாது. என்னெண்டு கேட்டுக் கூட்டிக் கொண்டு போய் விடுவோமா?” காரின் வேகத்தைக் குறைத்தபடியே நண்பனைக் கேட்டேன். மோகன் சற்றுத் தயங்கிய படியே தலையை ஆட்டினான்.

வீதியில் வாகனங்கள் ஒன்றும் வரவில்லை. காரை றிவேர்ஷில் திருப்பினேன். அவள் காரிற்குக் கிட்ட வந்தாள். ‘போந்து பொலிந்த’ அந்த வெள்ளைக்காரப்பெண் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள். அவள் உடல் அச்சில் வார்த்தது போல அங்கமெல்லாம் குலுங்கின.

“எங்கே போக வேண்டும்?” நண்பன் அவளைக் கேட்டான்.
“மில்பாங் றைவ்”

“எங்கடை இடத்திலை இருந்து ஒரு ஐந்து நிமிஷம்தானே! சரி கூட்டிக் கொண்டு போவம்.”
“சரி ஏறிக் கொள்.”

தானே கதவைத் திறந்து பின்புறம் ஏறினாள் அவள். ‘சென்ற்’ வாசனையும் கேட்பாரற்று ஏறிக் கொண்டது. கார் வாசனையில் குளித்தது.

‘மில்பாங் றைவ்’ – நான் அவுஸ்திரேலியா வந்து, முதன் முதலாகக் கார் ஓடக் கற்றுக் கொண்ட வீதி. வீதியின் ஒருபுறம் வீடுகளும் மறுபுறம் ‘றிசேவ்’ ஆகவும் இருக்கும். அறுபது அல்லது எழுபது வீடுகள் கொண்ட அமைதியான ‘நோ எக்ஷிற்’ வீதி. கார் ஓடிப் பழக நல்ல இடம். வாகன ஒட்டமும் குறைவு. பிரதான வீதியான ‘ஸ்ரேசன் றோட்டி’லிருந்து திரும்பி, உள்வீதியில் நுழையும் போது மழை பலக்கத் தொடங்கியது.

காரை ஒரு ஓரமாக நிற்பாட்டினேன். மோகன் காரிலிருந்து இறங்கி பின்புறம் போய் அவளுடன் இருந்தான். அவளுடன் கதைத்துக் கொண்டே அவளை நெருங்கினான்..

“இவன் இனி கிறுக்குத்தனம் பண்ணப் போறான். என்ன நடந்தாலும் கார் என்னுடையது. பிடிபடப்போவது எப்படியும் நான்தான்.”

மழை நின்ற பின்னர் மோகன் திரும்பவும் வந்து முன்னாலே காரில் ஏறிக் கொண்டான்.

“எடு காரை. அவள் குடித்திருக்கிறாளா எண்டு நான் அவளை முகர்ந்து பார்த்தேன். ஆனால் அவள் குடிக்கவில்லை.”

“கடைசி வீடு” என்று அமைதியாகச் சொல்லிவிட்டு எந்தவித பயமுமில்லாமல் குனிந்தபடி இருந்தாள் அவள்.

வீதியில் இரண்டொரு வீடுகளில் மாத்திரம் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கடைசி வீடு ‘வெதர் போர்ட் ஹவுஸ்’. வீடு வெளிச்சமின்றி இருண்டு கிடந்தது. இறங்கி ‘நன்றி’ தெரிவித்துவிட்டு – கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். நாங்கள் இருவரும் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் வீடு வெளிச்சம் போட்டது.

நாங்கள் இருவரும் மிகப் பெரிய சாதனை புரிந்தவர்கள் போல வெற்றிப் பேருவகையுடன் வீடு திரும்பினோம். பின்புறம் திரும்பிப் பார்த்த மோகன் காரை நிறுத்தும்படி சத்தமிட்டான். காரின் பின்புறம் அந்தப் பெண் இருந்த இடத்தில் ஒரு ‘ஸ்காவ்’ (scarf) இருந்தது. அந்தக் கழுத்துக்குட்டையை கொடுத்துவிட்டுப் போகலாம் என்ற நினைப்பில் காரைத் திருப்பினோம்.

நல்லகாலம். அவர்கள் வீட்டு ‘லைற்’ எரிந்து கொண்டிருந்தது. ‘கேற்’ திறந்திருந்தது. உள்ளே சென்று கதவைத் தட்டினோம். வீட்டினுள் இருந்து குரல் ஒலித்தது. சற்று நேரத்தில் ஒரு வயது முதிர்ந்தவர் கதவைத் திறந்தார். எழுபது எழுபத்தைந்து வயதிருக்கும்.

“கொஞ்ச நேரத்திற்கு முன்னர் – ஒரு பெண்ணை காரில் கொண்டு வந்து இங்கே இறக்கி விட்டோம். அவள் இந்த ‘ஸ்கா’வை, மறந்துபோய் எங்களுடைய காரிற்குள் விட்டு விட்டாள்.”

அந்த ஸ்காவை அவரிடம் நீட்டினோம்.

“அவள் என்னுடைய மகள்தான். உள்ளே வாருங்கள்” அந்த வெள்ளை இனத்து மனிதர் எங்களை உள்ளே கூட்டிச் சென்றார்.

எழுபது வயது மனிதருக்கு பள்ளிமாணவி வயதில் ஒரு பிள்ளையா? ஹோலிற்குள் சென்றோம்.

“இந்தப் படத்தில் இருப்பவள்தானே!” சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைக் காட்டிக் கேட்டார். நாங்கள் இருவரும் வாயை அகலத்திறந்து “ஆம்!” என்றோம்.

“அவள் என்னுடைய மகள். தனது பதினாறு வயதில் கார் அக்ஷிடென்ற் ஒன்றில் இறந்து போனாள். முப்பது வருஷங்களுக்கு முன்னர் அவள் பள்ளிக்கூடம் போகும்போது அது நடந்தது. அப்பொழுது அவள் ஸ்காவ் பின்னிக் கொண்டிருந்தாள்.

நாங்கள் இருவரும் பயந்தபடியே பின்புறமாக அடியெடுத்து வைத்தோம்.

“இப்படித்தான் இடைக்கிடை காரில் ஏறி இங்கே வந்துவிட்டுப் போவாள்.”

நான் அந்த சுவரினில் இருந்த ‘போட்டோ’வை மீண்டும் பார்த்தேன். அது ஒருதடவை கண் சிமிட்டியது போல இருந்தது. நண்பனைத் திரும்பிப் பார்த்தேன். மோகன் முன்னதாகவே கேற்றைத் திறந்து கார் அருகில் போய் நின்றான். “போய் வருகின்றேன்” சொல்லிவிட்டு விரைவாக வெளியேறினேன்.

அதன் பிறகு எந்தவொரு சிக்னலிலும் கார் நின்றதாக ஞாபகம் இல்லை. இரண்டு பேரும் ஒரு கிழமையாகக் காய்ச்சல் வந்து படுத்திருந்தோம்.


Series Navigation

கே.எஸ்.சுதாகர்

கே.எஸ்.சுதாகர்