எனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

பாவண்ணன்


சக்குபாய் என்னும் பாண்டுரங்கபக்தையைப்பற்றிய வாய்மொழிக்கதைகள் கன்னடத்தில் ஏராளமாக உண்டு. புகுந்தவீட்டில் அவளுக்கு நேர்ந்த துன்பங்கள் அனைத்திலிருந்தும் மீட்சியைத் தருகிறது அவளது பக்தி. பாண்டுரங்கனுக்காக நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடக்கவிருப்பதையொட்டி மற்ற பக்தர்களுடன் தானும் செல்ல விரும்புகிறாள் அவள். அவளை அனுப்பி வைப்பதில் சற்றும் விருப்பமில்லாத அவள் மாமியார், இரண்டு மூட்டை சோளத்தைக் கொண்டுவந்து அவள்முன் போட்டு மறுநாள் காலை விடிவதற்குள் அதை மாவாக்கி வைக்கவேண்டும் என்றும் அதன்பிறகு ஆலயத்துக்குச் செல்லலாம் என்றும் சொல்கிறார். மலைபோலக் குவியலாகக் கிடக்கிற சோளத்தைப் பார்த்ததும் அவள் அதிர்ந்து போகிறாள். ஆனாலும் மனம் தளராமல் கல் எந்திரத்தில் சோளத்தைக் கொட்டி வேகவேகமாக அரைக்கத் தொடங்குகிறாள். அவள் மனம் பாண்டுரங்கனையே தியானித்தபடி உள்ளது. சோர்வில் உட்கார்ந்த கோலத்திலேயே துாணில் சாய்ந்து அவள் கண்களை மூடிக் கொள்ள, இறைவனான பாண்டுரங்கனே அங்கே தோன்றி எல்லாச் சோளத்தையும் அரைத்து மாவாக்கி வைத்துவிட்டுச் செல்கிறார். சக்குபாய்க்குத் திருவிழாவைக் காண அனுமதி கிட்டுகிறது. தமிழ்நாட்டில் வழங்கப்படும் நந்தனார் புராணத்துக்கு இணையானது இக்கதை. இரண்டிலும் உள்ள பக்தியம்சத்தை விலக்கிவைத்துவிட்டுப் பார்க்கும்போது உழைப்பால் தன்னை நிறுவிக்காட்டும் அம்சம் என்னும் ஒரு விஷயம் பொதுவாக இருப்பதைக் காணலாம். வாழ நேர்ந்த சூழலில் பலவீனர்களாக இருந்தாலும் தம் ஆற்றல் வழியாகத் தம் முக்கியத்துவத்தை அச்சூழலுக்கு உணர்த்தியவர்களாக இவர்களைக் கொள்ளலாம்.

கர்நாடகத்துக்கு நான் வேலைக்காக வந்த எண்பதுகளின் தொடக்கத்தில் எங்கள் துறையில் ஒரு தமிழர் வேலை செய்து வந்தார். புதைக்கப்பட்ட தொலைபேசிக் கேபிள்களில் சந்தர்ப்பவசத்தால் நேர்கிற ஓட்டைகளைக் கண்டறிந்து அடைப்பதில் அபார திறமை படைத்தவர் அவர். ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை செய்து வந்தார். பதவி உயர்வின்போது எல்லாருக்கும் நேருகிற இடமாற்றம் அவருக்கு நேரவில்லை. நிர்வாகம் அவரை அதே இடத்தில் தக்கவைத்துக்கொள்ள எல்லா வகைகளிலும் உதவி செய்தது. வேலைக்காலத்தில் அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே எஞ்சியிருக்கின்றன என்கிற நிலையில் அவரிடம் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்திரா காந்தி சுடப்பட்டு மரணமடைந்த நாளன்று அந்த ஊரே வெறிச்சிட்டுவிட்டது. உணவுக்காக நாங்கள் நகர்முழுக்க அலையாக அலைந்தோம். எங்கும் எதுவும் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் ஏதோ ஒரு தெருவில் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இட்லி சுட்டு விற்கிறார் என்று கேள்விப்பட்டுச் சென்று அவசரம் அவசரமாக வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் நிர்வாகம் அவருக்கு உதவி செய்யும் ரகசியத்தின் காரணம் கேட்டேன்.

‘இதுல ரகசியம் எதுவும் இல்ல. அவுங்களுடைய தேவை என்னன்னு எனக்குத் தெரியுது. அதைச் செய்யற நம்பகமான ஆளா என்னை நெனைக்கறாங்க. அந்த நம்பிக்கையை காப்பாத்த எவ்வளவு கூடுதலாக இருந்தாலும் உழைக்கவேண்டியது என்னுடைய கடமை. எனக்குக் கிடைக்கிற மரியாதையும் நம்பிக்கையும் மறைமுகமாக அந்த உழைப்புக்கு கிடைக்கிற மரியாதைன்னும் நம்பிக்கைன்னும்தான் எடுத்துக்கணும். ‘

‘யார் உழைச்சாலும் இந்த மரியாதை கிடைக்குமா ? ‘

‘நிச்சயம் கிடைக்கும். ஆனால் இந்த வேலையைக் கூட இருந்து கத்துக்க யாருமே தயாரா இல்லைங்கறதுதான் கசப்பான உண்மை. இந்த பதினஞ்சி வருஷத்துல பலபேர பாத்துட்டேன். ஏமாற்றம்தான் மிச்சம். ‘

‘அதுக்காகத்தான் நீங்க ஊர்ப்பக்கமே போகாம இங்கயே தங்கிட்டாங்களா ? ‘

‘ஒருவகையில அதுவும் உண்மைதான். இந்தக் கர்நாடகத்துல நம்ம அமைப்புல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. கஷ்டப்பட்டு வேலை செய்ய நான் தயார். என்னை மரியாதையோட நடத்த நிர்வாகமும் தயார். என்னுடைய தேவை அவுங்களுக்கும் அவுங்க ஆதரவு எனக்கும் தேவைப்படுவதால எந்தக் குழப்பமும் இல்ல. இந்தச் சமநிலையை யாரும் இங்க குலைக்க விரும்பறதில்லை. ஏதோ வேலை செய்யறான், செஞ்சிட்டு போறான் விடுன்னு விட்டுட்டு போயிடுவாங்க. தமிழ்நாட்டுக்குள்ள இது சாத்தியமான்னு தெரியலை. அங்க வேலை செய்யறதுக்கு முன்னால நான் யாரு, எந்த சாதி, எந்த மதம், எந்தக் கட்சி, என்ன பின்னணின்னு எல்லா விஷயங்களும் தெரியணும். வேலையெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். அங்க வேலை செய்யற பல நண்பர்கள் என்னிடம் சொல்லியிருக்காங்க. அந்தத் தயக்கமும் இங்க எனக்கு கிடைக்கிற திருப்தியும் என்ன நிரந்தரமா இங்கயே தங்க வச்சிடுச்சி ‘

அன்று அவர் மனம்திறந்து பேசும் மனநிலையில் இருந்தார். ஓய்வான சூழலும் அதற்குத் தோதாக இருந்தது. வேறொரு சூழலில் வாழ நேர்ந்து தம் கடுமையான உழைப்பின் வழியாக மட்டுமே தம்மை நிறுவிக்கொண்டவராகவே அவரை நான் பார்த்தேன். குருவாக இருந்து பல நுணுக்கமான விஷயங்களை அவர் எனக்குச் சொல்லித்தந்தார். கற்றுக்கொள்வதில் நானும் ஊக்கம் காட்டினேன். அவருக்குக் கிடைத்த அதே மரியாதையும் கெளரவமும் என்னை நாடிவந்தபோது ஒரு தந்தையைப்போல அவர் ஆனந்தத்துடன் மகிழ்ந்து வாழ்த்தினார்.

தமிழகத்திலிருந்து உழைப்பின் நிமித்தம் நேற்று அயல் மாநிலங்களுக்கும் அயல்நாடுகளுக்கும் சென்றவர்கள் அனைவருமே தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான பொருளைத் தம் சிரத்தையான உழைப்பின் வழியாகப் பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கையில் இடம்பெயர்ந்தவர்களே. இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் உழைக்கச் சென்றவர்கள் முதல் பர்மாவுக்குச் சென்றவர்கள் வரை பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அவர்கள் கதைகளெல்லாம் பல சமயங்களில் நெஞ்சில் மிதந்துவரும். மனத்துக்குள் எழும் பல உருவங்களில் அறுபத்தியோரு ராத்தல் தேயிலைக்கொழுந்து பறித்துக் காட்டித் தன்னை நிறுவிக்காட்டிய லட்சுமியின் உருவமும் ஒன்று. என்.எஸ்.எம்.ராமையா எழுதிய ‘ஒரு கூடைக்கொழுந்து ‘ சிறுகதையில் இடம்பெறும் பாத்திரம்தான் இந்த லட்சுமி.

கொழுந்து பறிக்கும் இடத்துக்குச் சற்றே தாமதமாக வந்து சேர்கிற லட்சுமியிடம் தோழிப்பெண்கள் பேச மறுக்கிற தருணத்திலிருந்து கதை தொடங்குகிறது. அவள் கேட்கிற கேள்விக்குக்கூட யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அவளுடைய சுவாரஸ்யமான பேச்சுக்கு மனம் பறிகொடுத்து அருகிலேயே நெறை பிடித்துத்தருகிற பெண்கள் ‘எனக்கு எது நெறை அக்கா ? ‘ என்று அவள் கேட்ட பிறகும் எந்தப் பதிலையும் சொல்லாமல் மெளனமாக இருக்கிறார்கள். இதனால் தனக்கு எது நெறை என்று தெரிந்துகொள்ள கங்காணிக்கிழவனிடம் செல்கிறாள் லட்சுமி. வழக்கமாக அவளைக் கண்டதும் குழையக் குழையப் பேசுகிற அவனும் அன்று எரிச்சலுடன் பேசுகிறான். தாமதமாக வந்ததற்காகக் குத்திக்காட்டுகிறான். வேண்டாவெறுப்பாக கடைசித்தொங்கலுக்குப் போய் கொழுந்து பறிக்குமாறு உத்தரவிடுகிறான்.

வழக்கமாக கூடுதலாகக் கொழுந்து பறிக்க விரும்புகிறவர்கள் முதல் தொங்கலுக்கும் கடைசித் தொங்கலுக்கும் போக மாட்டார்கள். முதல் தொங்கலென்றால் ஒழுங்காக நிறை கிடைக்காது. ஆயிரம் தடவை ஏறி இறங்க வேண்டும். கடைசித் தொங்கலென்றால் பிள்ளைக்காரிகளோடு மாரடிக்க முடியாது. அன்று வேறு வழியில்லாமல் கிடைத்த கடைசித் தொங்கலில் கொழுந்து பறிக்கத் தொடங்குகிறாள் லட்சுமி. முதல் பிடிக் கொழுந்தை கூடைக்குள் போடும் முன்னர் அருகிலிருந்த கிழவியிடம் பொலி சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறாள். அப்பனே சண்முகா என்று அவள் பொலி போட்டதும் பிடிக்கொழுந்து கூடைக்குள் விழுகிறது. பிறகு கைகள் வேகவேகமாக இயங்கத் தொடங்குகின்றன.

சாயங்காலமாக கொழுந்துகள் நிறைந்த கூடைகளோடு எல்லாப் பெண்களும் எடைபோடும் இடத்தில் கூடுகிறார்கள். கணக்குப்பிள்ளை வந்து சேரத் தாமதமாகிறது. கங்காணி போய் அழைத்து வருகிறான். கணக்குப்பிள்ளையின் பார்வையில் லட்சுமி விழுகிறாள். உடனே அவள் அழைக்கப்படுகிறாள். உடனே நாலைந்து நாள்கள் முன்பு இருபத்தைந்தாம் நம்பர் மலையில் கொழுந்து எடுத்தபோது அவள் எடுத்த ஐம்பத்தியேழு ராத்தல் கொழுந்தைப்பற்றி விசாரிக்கப்படுகிறாள். உண்மையிலேயே அக்கொழுந்துகளைப் பறித்தது அவள்தானா என்கிற சந்தேகத்தை முன்வைத்துக் கேள்விகள் கேட்கிறான். அந்த வட்டாரத்தில் அதுவரை யாருமே அவ்வளவு கொழுந்து பறித்ததில்லை என்பதால் அச்சம்பவம் எல்லாருடைய மனத்திலும் சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாகச் சொல்கிறான். பல ஆண்டுகள் பழக்கமுள்ள பெண்கள் கூட அந்த அளவு எடுத்ததில்லை என்பதால் மேலிடத்தில் அப்படிச் சந்தேகம் உருவாகியிருக்கிறது. அதைப் போக்குவதற்கு ஒரே வழி மீண்டும் ஒருமுறை ஐம்பத்தியேழு ராத்தல் கொழுந்தை அவள் பறித்துக்காட்டவேண்டும் என்று சொல்லப்படுகிறது. லட்சுமி துாரத்துச் சொந்தக்காரப் பெண் என்பதால் வேண்டுமென்றே கணக்கை மாற்றி எழுதியிருப்பதாக மற்றவர்கள் தன் மீது கொண்டிருக்கும் சந்தேகத்தை நீக்குவதற்கும் இதைத்தவிர வேறு வழியே இல்லை என்றும் சொல்கிறான் கணக்குப்பிள்ளை.

லட்சுமியின் புருவங்கள் கேள்விக்குறியாக வளைகின்றன. காலையிலிருந்து பெண்களும் கங்காணியும் காட்டிய பாராமுகத்துக்கான காரணத்தைப் புரிந்துகொள்கிறாள் அவள். பொங்கிவந்த வேகத்துடன் மீண்டும் அதேபோல கொழுந்துகளைப் பறித்துக்காட்டுவதாகச் சொல்கிறாள். அந்த விஷயத்தில் அவள் தோல்வியுற்றால் தான் பொல்லாதவனாக மாறவேண்டியிருக்கும் என்று அச்சுறுத்துகிறான் கணக்குப்பிள்ளை.

அன்று இரவு வீட்டுக்குள்ளும் அந்த விவாதம் நடக்கிறது. தன் மகள் தேவையில்லாமல் சவாலை ஏற்றுக்கொண்டு வந்திருப்பதாக நினைக்கிறாள் தாய்க்காரி. அவளுடைய வருங்காலக் கணவனான ஆறுமுகத்துக்கும் அந்த எண்ணமே நிறைந்திருக்கிறது. ஐம்பத்தியேழு ராத்தல் கொழுந்தைக் கிள்ளிய அன்று தற்செயலாக உணவு இடைவேளைக்கு வந்த தானும் துணைக்கு நின்று கிள்ளிப்போட்டதால்தான் அந்த அளவு எடை வந்ததென்பது அவன் வாதம். கணக்குப் பிள்ளையிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்குகிறான். அதை ஏற்றுக்கொள்ள முன்வராத லட்சுமி தன்னால் பந்தயத்தில் வெற்றிபெற முடியும் என்று விடாப்பிடியாகச் சொல்கிறாள். அன்று போல யாருக்கும் தெரியாமல் வந்து பறித்துத் தருவதாகச் சொல்கிற அவனுடைய திட்டத்தையும் அவள் ஏற்க மறுக்கிறாள். ‘முடிஞ்சமட்டும் எடுப்பேன். முடியலைன்னா மத்த மலையில போயி பொழைச்சிக்கறேன், அதுவும் இல்லன்னா ஸ்டோருக்கு எல பொறுக்கப்போறேன் ‘ என்கிறாள்.

அடுத்தநாள் காலை கொழுந்து பறிக்கச் செல்கிறாள் லட்சுமி. பந்தயப்படி பறித்துக்காட்ட வேண்டிய நாள். தலை நிமிராமல் ஒருமணிவரை எடுக்கிறாள். கணக்குப்பிள்ளையின் முன்னிலையில் நிறுவை நடக்கிறது. லட்சுமியின் கூடையைப் பார்த்ததும் கொழுந்துகளோடு நார்பிடித்த முற்றல் இலைகளையும் பறித்திருப்பதாகக் குற்றம் சுமத்துகிறான் கணக்குப்பிள்ளை. துப்புரவு பண்ணித் தரச்சொல்வதாகவும் எடைபார்த்து விடுவதாகவும் சொல்கிறான் கங்காணி.

கூடைக்கொழுந்து இலைகள் தராசில் கொட்டப்படுகின்றன. அறுபத்தியோரு ராத்தல் இருக்கிறது. ஒப்புக்கொண்டதை விட நான்கு ராத்தல் கூடுதலாகவே பறிக்கப்பட்டிருக்கிறது. தன் உழைக்கும் ஆற்றல் நேருபிக்கப்பட் டிருப்பதை நினைத்து அவள் மகிழ்சசியடைகிறாள். ஆனால் கணக்குப்பிள்ளையின் மனம் அந்த வெற்றியை ஏற்க மறுக்கிறது. ‘கொழுந்துல நெறய பழுது இருக்கு. இருபது ராத்தல வெட்டப்போறேன் ‘ என்று சொல்கிறான். அதைக்கேட்டு கங்காணியே வெலவெலத்துப் போகிறான். கணக்குப்பிள்ளையின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து நான்குபேர்களைச் சாட்சியாக நிற்க வைத்துப் பறிக்க வைத்தவன் அவன். அவளுடைய உழைப்பு உதாசீனப்படுத்துவதைக் காண அவனாலேயே சகித்துக்கொள்ள முடியவில்லை. விடுவிடென்று லட்சுமியின் அருகில் சென்று அவளது வலதுகையைப் பிடித்து கணக்குப்பிள்ளையின் முன் நீட்டுகிறான். ஆள்காட்டி விரலின் ஓரப்பகுதிகள் தோல்கிழிந்து ரத்தம் கசிந்து உறைந்திருக்கிறது. ‘இதைப் பார்த்துவிட்டுப் பேசுங்க ஐயா, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி. இந்த ராத்தலையா தரமாட்டேன்னு சொல்றீங்க ‘ என்று கேட்கிறான். லட்சுமியின் கையைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் கணக்குப்பிள்ளை. அவன் கை தானாகவே துண்டை வாங்கி அறுபத்தியோரு ராத்தலைப் பதிவு செய்துகொள்கிறது.

சபதம் நிறைவேறாவிட்டால் மற்ற மலைக்குப்போய் பிழைத்துக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தவள் சபதம் நிறைவேறிய பின்னரும் நிற்க விரும்பாமல் வேறிடம் தேடிப் போய்விடுகிறாள்.

முதல் வாசிப்பில் கணக்குப்பிள்ளையின்மீது கோபம் வருவதைப்போல இருந்தாலும் பிறகு அது தணிந்துவிடுகிறது. லட்சுமியும் தேயிலை பறிக்கும் மற்ற பெண்களும் கங்காணிக்குக் கட்டுப்பட்டவர்கள். கங்காணியோ கணக்குப் பிள்ளைக்குக் கட்டுப்பட்டவன். கணக்குப் பிள்ளையோ தோட்ட முதலாளிக்குக் கட்டுப்பட்டவன். அறுபத்தியோரு ராத்தல் கொழுந்து பறித்துத் தன் திறமையை நேருபிக்கிறாள் லட்சுமி. அவளை அவ்விதம் நேருபித்துக்காட்ட நிர்ப்பந்திக்கும் கணக்குப்பிள்ளைக்கும் ஒரு மறைமுக நெருக்கடி உண்டு. ஒரு பெண் என்பதால் சலுகை காட்டிக் கணக் கெழுதியதாக தன்மீது எந்தப் பழியும் வந்துவிடக்கூடாது என்பதிலும் முதலாளியின் நம்பிக்கைக்கு ஏதாவது நடந்து தன் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்பதிலும் இருக்கிற கூடுதல் எச்சரிக்கையுணர்வே அந்த நெருக்கடியைக் கணக்குப்பிள்ளைக்கு உருவாக்குகிறது. ஒருவகையில் அவரும் கூடுதல் உழைப்பை வெளிப்படுத்தியே தன் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியவராக இருக்கிறார். தேயிலைத் தோட்ட வாழ்வில் கொழுந்து பறிப்பவர்கள் முதல் கணக்குப்பிள்ளைகள் வரை ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் கூடுதலாக உழைத்துத் தம் நிலையைத் தக்க வைத்துக்கொள்கிறவர்களே. ஒவ்வொரு தோள்மீதும் நெருக்கடிகள் என்னும் கலப்பை அழுத்தியபடியே உள்ளன. எதார்த்தத்தில் இவர்களிடையே உறவுச் சிக்கல்கள் பல இருந்தாலும் மோதல்கள் உருவானாலும் இந்த நிலையில் மாற்றம் எதுவுமில்லை.

*

ஈழத்து மலையகப் பகுதியின் சிறுகதையாசிரியர்களுள் முன்னோடியாகக் கருதப்படுபவர் என்.எஸ்.எம்.ராமையா. தொடக்க காலத்தில் தம் வானொலி நாடகங்கள் வழியாக இலங்கை முழுதும் அறியப்பட்டவர். பிறகு கைலாசபதியின் துாண்டுதலால் சிறுகதைத்துறையில் அடியெடுத்து வைத்தார். ஏறத்தாழ இருபது சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தாலும் மலையக இலக்கியத்தின் உந்துசக்தியாக அவை கருதப்படுகின்றன. இவரது எல்லாக் கதைகளும் தோட்டப் பின்னணியைக் கொண்டவை. தோட்டத்து மனிதர்கள் வழியாக உலகைக் காண்பவை. ‘ஒரு கூடைக் கொழுந்து ‘ என்னும் சிறுகதை 1961 ஆம் ஆண்டில் தினகரன் இதழில் வெளிவந்தது. 1980 ஆம் ஆண்டில் இதே தலைப்பில் இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வெளியானது.

———————————————-

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்