பாவண்ணன்
கீரைக்கட்டுகள் நிறைந்த கூடையுடன் ஒவ்வொரு காலையிலும் எங்கள் விட்டுக்கு வருகை தருவாள் ஒரு பெண். முப்பதுகளையொட்டிய வயதிலிருந்தாள் அவள். படபடவென்று கலகலப்பாகப் பேசுவாள். ஒவ்வொரு கீரைக்கும் இருக்கிற மருத்துவக் குணங்களை அழகாக அடுக்கிச்சொல்வாள். அதிகமாக விற்பனையாகிற கீரைக்கட்டுகள் மட்டுமே அவளிடம் இருக்கும். மணத்தக்காளி இருக்காது. பொன்னாங்கண்ணி இருக்காது. இவை வேண்டுமே என்று எப்போதோ பேச்சுவாக்கில் சொன்னதை நினைவில் வைத்திருந்து கொண்டுவந்து தந்து ஒருமுறை நெகிழச்செய்தாள். பிறகு வாரத்துக்கு ஒரு முறையாவது எங்கிருந்தாவது கொண்டுவந்து தரத்தொடங்கினாள். அவளும் என் மனைவி அமுதாவும் சேர்ந்துவிட்டால் கீரைகளைப்பற்றி பெரிய ஆராய்ச்சியே நிகழும்.
ஒருநாள் இடைவிடாமல் இருமிக்கொண்டிருந்தேன். அதிகாலையில் அது இன்னும் அதிகமாக இருந்தது. அமுதா கீரை வாங்கும்போதும் இருமிக்கொண்டிருந்தேன். ‘என்ன வீட்டையே துாக்கிட்டுப்போறமாதிரி இருமறாரு சாரு. மருந்து எதுவும் சாப்பிடலயா ? ‘ என்று விசாரித்தாள். மறுநாள் காலையில் ஒரு கைநிறைய துாதுவளைக் கீரையைத் தந்து ஊறுகாய் செய்து சாப்பிடுமாறு சொன்னாள். மேலும் ‘சித்தரத்தை, அதிமதுரம் சேத்து கஷாயம் வச்சிக் குடிங்க, சரியா போயிடும் ‘ என்றும் சொன்னாள். தற்செயலாக ஊரிலிருந்து வந்து மஞ்சள்காமாலை நோயால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையான என் மனைவியின் தங்கைக்கா தினந்தோறும் கீழாநெல்லிக்கீரையைக் கொண்டுவந்து அரைத்து சாறெடுத்துப் பருகுமாறு சொன்னாள்.
அவள் தன் கதையை விவரிக்கும் வகையில் ஒருநாள் சூழல் அமைந்துவிட்டது. சின்ன வயதிலேயே அவர்கள் வீட்டில் அவளுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். மண்டியில் மூட்டை துாக்குவது, விறகு பிளப்பது எனப் பலவிதமான தொழில்களைச் செய்பவன் அவள் கணவன். இரண்டு குழந்தைகள். வேலை செய்கிற இடத்தில் பழக்கமான ஒரு பெண்ணையும் மணந்துகொள்கிற ஆசை அவனுக்கு. அவள் அதைக் கடுமையாகத் தடுத்தாள். மாமியாரும் அவளுக்கு உடந்தையாக இருந்தாள். ‘என் புள்ளையா இருந்துட்டு நீ இப்படிச் செய்யறதவிட உயிர உட்டுடலாம் ‘ என்று வயிறெரிந்து திட்டினாள். வாரக்கணக்கில் சண்டை நடந்ததே தவிர அவன் நடத்தையில் மாற்றமெதுவும் உருவாகவில்லை. ஒருநாள் அவன் வாசலிலேயே தக்கப்பட்டான். அவனோ வெகுண்டெழுந்து அவர்கள் உண்பதும் உடுப்பதும் அவனுடைய சம்பாத்தியத்தில்தான் என்பதை நினைவூட்டிப் பேசிவிட்டு ‘முடிந்தால் நீங்களே சம்பாதிச்சி ஒங்களால தனியா பொழைக்க முடியும்னு செஞ்சி காட்டுங்க, அதுக்கப்புறம் இந்த வீட்டு வாசல்படிய மிதிச்சா ஏன்டா நாயேனு கேளுங்க ‘ என்று சவால்விட்டான்.
இரண்டு பெண்களும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்கள். அப்போதுதான் இந்தக் கீரை வியாபாரம் அவர்கள் மனத்தில் உதித்திருக்கிறது. தொடக்க முதலீட்டுக்குத் தேவையான பணத்தைக் காதிலிருந்த கம்மலைக் கழற்றி அடகுவைத்துப் புரட்டியிருக்கிறார்கள். பக்கத்துச் சிறுநகரச் சந்தைக்கு அதிகாலையிலேயே பேருந்தில் சென்று கீரைகளை வாங்கிவரும் வேலையை மாமியார் செய்தார். அவற்றைக் கட்டுகளாக்கிக் கூடையில் நிரப்பி விற்றுவருவது அவளுடைய கடமையானது. பிள்ளைகள் இருவரும் பள்ளிக்குத் தொடர்ந்து சென்றார்கள். இரண்டு மூன்று வாரங்கள் கழித்துப் பார்க்கவந்த கணவன் அதிர்ச்சியில் உறைந்துபோனான். ‘இப்படி எங்கள அனாதயா விட்டுட்டுப் போயிட்டியேடா ‘ என்று அழுது புலம்புவார்கள் என்ற எதிர்பார்த்து வந்தவன் ஏமாற்றமுற்றான். ஏற்றுக்கொண்ட சவாலில் அவர்கள் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருப்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் உறுதியைக் குலைக்க எண்ணி ‘இதெல்லாம் சும்மா ரெண்டு மூணு வாரந்தான் நடக்கும். இப்படியே காலத்த தள்ளிடலாம்ன்னு கனவு காணாதீங்க. ஆம்பள நான் சம்பாதிக்கலன்னா ஒரு கதயும் நடக்காது. பேசாமா தோத்துட்டம்ன்னு ஒத்துக்குங்க. நா பாத்துக்கறேன் ‘ என்றான். பெண்கள் இருவரும் அப்படி ஒரு நிலையை அவன் தன் கனவில் கூட நினைத்துப்பார்த்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டனர். தம் உறுதியில் சற்றும் குலையாத பெண்கள் திடமான மனத்துடன் தொடர்ந்து தம் தொழிலை நடத்துவதில் உறுதியைக் காட்டினர். அதுவே அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. சவாலில் தோற்ற கணவன் தன் மற்றொரு மனைவியுடன் நகரின் மற்றொரு பகுதியில் வாழத் தொடங்கினான். அடிக்கடி வந்து சத்தம்போட்டுவிட்டுச் சென்றாலும் அவனால் பெரிய அளவில் தொல்லைகள் இல்லை.
‘பொம்பளைங்களால முடியாதுன்னு நெனைச்சி பந்தயம் கட்டனாரு. ஒனக்கு கையையும் காலயும் படைச்ச கடவுள்தான் எனக்கும் கையையும் காலயும் படச்சிருக்கான். பொம்ளைன்னா அவ்வளவு எளக்காரமா ? மனசு வச்சா எதயும் செய்ய முடியுன்னு காட்டறதுக்குத்தான் வைராக்கியமா இந்தத் தொழில செய்றம். ‘
கபடில்லாமல் சிரித்தபடி கூடையைத் தலையில் சுமந்தபடி அவள் சென்றுவிட்டாள். அன்று முழுக்க எங்கள் பேச்சில் அவள் இடம்பெற்றாள். அவள் வைராக்கியத்தில் நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருப்பதாகத் தோன்றியது. ஒருசில ஆண்டுகள் வரை தொடர்ந்து வந்தவள் பிறகு காணாமல் போனாள். அவள் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். வரவேயில்லை. வேறு ஏதாவது தெருக்களிலோ அல்லது ஊரிலோ இடம்மாறிப் போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டோம். அவள் வைராக்கியம் அவளை எங்கிருந்தாலும் நல்லபடி வாழ வைக்கவேண்டும் என்று மனசார நினைத்துக்கொண்டேன். சவாலை எதிர்கொண்டு போராடி வென்று தன் சுயத்தை நிறுவுகிற பெண்கள் பலரை எங்கள் கிராமத்தில் நான் பார்த்தவன்தான் நான். நகரத்திலும் அவர்களின் தொடர்ச்சியைக் காண நேர்ந்தது ஆறுதலாக இருந்தது. இத்தகு பெண்கள் வரிசையில் இடம்பெறத்தக்கவள்தான் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘ சிறுகதையின் பாத்திரமான லட்சுமி.
கொழுந்து பறிக்கும் இடத்துக்குச் சற்றே தாமதமாக வந்து சேர்கிற லட்சுமியிடம் தோழிப்பெண்கள் பேச மறுக்கிற தருணத்திலிருந்து கதை தொடங்குகிறது. அவள் கேட்கிற கேள்விக்குக்கூட யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அவளுடைய சுவாரஸ்யமான பேச்சுக்கு மனம் பறிகொடுத்து அருகிலேயே நெறை பிடித்துத்தருகிற பெண்கள் ஏஎனக்கு எது நெறை அக்கா ?ஏ என்று அவள் கேட்ட பிறகும் எந்தப் பதிலையும் சொல்லாமல் மெளனமாக இருக்கிறார்கள். இதனால் தனக்கு எது நெறை என்று தெரிந்துகொள்ள கங்காணிக்கிழவனிடம் செல்கிறாள் லட்சுமி. வழக்கமாக அவளைக் கண்டதும் குழையக் குழையப் பேசுகிற அவனும் அன்று எரிச்சலுடன் பேசுகிறான். தாமதமாக வந்ததற்காகக் குத்திக்காட்டுகிறான். வேண்டாவெறுப்பாக கடைசித்தொங்கலுக்குப் போய் கொழுந்து பறிக்குமாறு உத்தரவிடுகிறான்.
வழக்கமாக கூடுதலாகக் கொழுந்து பறிக்க விரும்புகிறவர்கள் முதல் தொங்கலுக்கும் கடைசித் தொங்கலுக்கும் போக மாட்டார்கள். முதல் தொங்கலென்றால் ஒழுங்காக நிறை கிடைக்காது. ஆயிரம் தடவை ஏறி இறங்க வேண்டும். கடைசித் தொங்கலென்றால் பிள்ளைக்காரிகளோடு மாரடிக்க முடியாது. அன்று வேறு வழியில்லாமல் கிடைத்த கடைசித் தொங்கலில் கொழுந்து பறிக்கத் தொடங்குகிறாள் லட்சுமி. முதல் பிடிக் கொழுந்தை கூடைக்குள் போடும் முன்னர் அருகிலிருந்த கிழவியிடம் பொலி சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறாள். அப்பனே சண்முகா என்று அவள் பொலி போட்டதும் பிடிக்கொழுந்து கூடைக்குள் விழுகிறது. பிறகு கைகள் வேகவேகமாக இயங்கத் தொடங்குகின்றன.
சாயங்காலமாக கொழுந்துகள் நிறைந்த கூடைகளோடு எல்லாப் பெண்களும் எடைபோடும் இடத்தில் கூடுகிறார்கள். கணக்குப்பிள்ளை வந்து சேரத் தாமதமாகிறது. கங்காணி போய் அழைத்து வருகிறான். கணக்குப்பிள்ளையின் பார்வையில் லட்சுமி விழுகிறாள். உடனே அவள் அழைக்கப்படுகிறாள். உடனே நாலைந்து நாள்கள் முன்பு இருபத்தைந்தாம் நம்பர் மலையில் கொழுந்து எடுத்தபோது அவள் எடுத்த ஐம்பத்தியேழு ராத்தல் கொழுந்தைப்பற்றி விசாரிக்கப்படுகிறாள். உண்மையிலேயே அக்கொழுந்துகளைப் பறித்தது அவள்தானா என்கிற சந்தேகத்தை முன்வைத்துக் கேள்விகள் கேட்கிறான். அந்த வட்டாரத்தில் அதுவரை யாருமே அவ்வளவு கொழுந்து பறித்ததில்லை என்பதால் அச்சம்பவம் எல்லாருடைய மனத்திலும் சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாகச் சொல்கிறான். பல ஆண்டுகள் பழக்கமுள்ள பெண்கள் கூட அந்த அளவு எடுத்ததில்லை என்பதால் மேலிடத்தில் அப்படிச் சந்தேகம் உருவாகியிருக்கிறது. அதைப் போக்குவதற்கு ஒரே வழி மீண்டும் ஒருமுறை ஐம்பத்தியேழு ராத்தல் கொழுந்தை அவள் பறித்துக்காட்டவேண்டும் என்று சொல்லப்படுகிறது. லட்சுமி துாரத்துச் சொந்தக்காரப் பெண் என்பதால் வேண்டுமென்றே கணக்கை மாற்றி எழுதியிருப்பதாக மற்றவர்கள் தன் மீது கொண்டிருக்கும் சந்தேகத்தை நீக்குவதற்கும் இதைத்தவிர வேறு வழியே இல்லை என்றும் சொல்கிறான் கணக்குப்பிள்ளை.
லட்சுமியின் புருவங்கள் கேள்விக்குறியாக வளைகின்றன. காலையிலிருந்து பெண்களும் கங்காணியும் காட்டிய பாராமுகத்துக்கான காரணத்தைப் புரிந்துகொள்கிறாள் அவள். பொங்கிவந்த வேகத்துடன் மீண்டும் அதேபோல கொழுந்துகளைப் பறித்துக்காட்டுவதாகச் சொல்கிறாள். அந்த விஷயத்தில் அவள் தோல்வியுற்றால் தான் பொல்லாதவனாக மாறவேண்டியிருக்கும் என்று அச்சுறுத்துகிறான் கணக்குப்பிள்ளை.
அன்று இரவு வீட்டுக்குள்ளும் அந்த விவாதம் நடக்கிறது. தன் மகள் தேவையில்லாமல் சவாலை ஏற்றுக்கொண்டு வந்திருப்பதாக நினைக்கிறாள் தாய்க்காரி. அவளுடைய வருங்காலக் கணவனான ஆறுமுகத்துக்கும் அந்த எண்ணமே நிறைந்திருக்கிறது. ஐம்பத்தியேழு ராத்தல் கொழுந்தைக் கிள்ளிய அன்று தற்செயலாக உணவு இடைவேளைக்கு வந்த தானும் துணைக்கு நின்று கிள்ளிப்போட்டதால்தான் அந்த அளவு எடை வந்ததென்பது அவன் வாதம். கணக்குப் பிள்ளையிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்குகிறான். அதை ஏற்றுக்கொள்ள முன்வராத லட்சுமி தன்னால் பந்தயத்தில் வெற்றிபெற முடியும் என்று விடாப்பிடியாகச் சொல்கிறாள். அன்று போல யாருக்கும் தெரியாமல் வந்து பறித்துத் தருவதாகச் சொல்கிற அவனுடைய திட்டத்தையும் அவள் ஏற்க மறுக்கிறாள். ‘முடிஞ்சமட்டும் எடுப்பேன். முடியலைன்னா மத்த மலையில போயி பொழைச்சிக்கறேன், அதுவும் இல்லன்னா ஸ்டோருக்கு எல பொறுக்கப்போறேன் ‘ என்கிறாள்.
அடுத்தநாள் காலை கொழுந்து பறிக்கச் செல்கிறாள் லட்சுமி. பந்தயப்படி பறித்துக்காட்ட வேண்டிய நாள். தலை நிமிராமல் ஒருமணிவரை எடுக்கிறாள். கணக்குப்பிள்ளையின் முன்னிலையில் நிறுவை நடக்கிறது. லட்சுமியின் கூடையைப் பார்த்ததும் கொழுந்துகளோடு நார்பிடித்த முற்றல் இலைகளையும் பறித்திருப்பதாகக் குற்றம் சுமத்துகிறான் கணக்குப்பிள்ளை. துப்புரவு பண்ணித் தரச்சொல்வதாகவும் எடைபார்த்து விடுவதாகவும் சொல்கிறான் கங்காணி.
கூடைக்கொழுந்து இலைகள் தராசில் கொட்டப்படுகின்றன. அறுபத்தியோரு ராத்தல் இருக்கிறது. ஒப்புக்கொண்டதை விட நான்கு ராத்தல் கூடுதலாகவே பறிக்கப்பட்டிருக்கிறது. தன் உழைக்கும் ஆற்றல் நிரூபிக்கப்பட் டிருப்பதை நினைத்து அவள் மகிழ்சசியடைகிறாள். ஆனால் கணக்குப்பிள்ளையின் மனம் அந்த வெற்றியை ஏற்க மறுக்கிறது. ‘கொழுந்துல நெறய பழுது இருக்கு. இருபது ராத்தல வெட்டப்போறேன் ‘ என்று சொல்கிறான். அதைக்கேட்டு கங்காணியே வெலவெலத்துப் போகிறான். கணக்குப்பிள்ளையின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து நான்குபேர்களைச் சாட்சியாக நிற்க வைத்துப் பறித்தவன் அவன். அவளுடைய உழைப்பை உதாசீனப்படுத்துவதைக் காண அவனாலேயே சகித்துக்கொள்ள முடியவில்லை. விடுவிடென்று லட்சுமியின் அருகில் சென்று அவளது வலதுகையைப் பிடித்து கணக்குப்பிள்ளையின் முன் நீட்டுகிறான். ஆள்காட்டி விரலின் ஓரப்பகுதிகள் தோல்கிழிந்து ரத்தம் கசிந்து உறைந்திருக்கிறது. ‘இதைப் பார்த்துவிட்டுப் பேசுங்க ஐயா, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி. இந்த ராத்தலையா தரமாட்டேன்னு சொல்றீங்க ‘ என்று கேட்கிறான். லட்சுமியின் கையைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் கணக்குப்பிள்ளை. அவன் கை தானாகவே துண்டை வாங்கி அறுபத்தியோரு ராத்தலைப் பதிவு செய்துகொள்கிறது.
சபதம் நிறைவேறாவிட்டால் மற்ற மலைக்குப்போய் பிழைத்துக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தவள் சபதம் நிறைவேறிய பின்னரும் நிற்க விரும்பாமல் வேறிடம் தேடிப் போய்விடுகிறாள்.
சக்திக்கும் சிவனுக்கும் நடந்த போட்டியைப்பற்றிய புராணக்கதையை நாம் எல்லாரும் அறிவோம். காலம் காலமாகப் பெண்களைச் சாதாரணமாக எடைபோட்டுச் சவாலுக்கு இழுக்கும் ஆண்மனத்தின் நவீன வடிவம்தான் கணக்குப்பிள்ளை. ஆற்றல் என்பதை உடலிலிருந்து வெளிப்படும் ஒன்று என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பேசுகிறான் அவன். கட்டான உடலமைப்பு மட்டுமே ஆற்றலை வெளிப்படுத்திவிடாது. அதை வழங்குவது மனம். அங்கிருந்து சுரப்பதே ஆற்றல். பார்வைக்கு நளினமாக இருந்தாலும் மன ஆற்றலின் வலிமையால் குறிப்பிட்ட நேரத்தில் அறுபத்தியோரு ராத்தல் கொழுந்தைப் பறித்துக்காட்டுகிறது லட்சுமியின் கை. சவாலில் வென்றபிறகு மலையைவிட்டு அவள் வெளியேறுவது கதைக்கு உள்ளார்ந்த ஒரு அழகைக் கொடுக்கிறது. இதற்குப் பிறகுதான் கணக்குப்பிள்ளைக்கு அவள்மீது காதல் பிறந்தது என்று எழுதப்பட்டிருக்கிற கடைசிவரி கதைக்கு எந்த வகையிலும் அழகு சேர்க்கவில்லை. காரணம் கதையின் முரண் அவன் காதல் அல்ல. வலிமை இருக்குமா என்று எழுகிற ஆண் மனத்தின் ஐயமும் வலிமையை நிறுவிக்காட்ட முனையும் இளம்பெண்ணின் ஆவேசமும் சந்திக்கும் புள்ளியில்தான் முரண் அடங்கியுள்ளது.
*
ஈழத்து மலையகப் பகுதியின் சிறுகதையாசிரியர்களுள் முன்னோடியாகக் கருதப்படுபவர் என்.எஸ்.எம்.ராமையா. தொடக்க காலத்தில் தம் வானொலி நாடகங்கள் வழியாக இலங்கை முழுதும் அறியப்பட்டவர். பிறகு கைலாசபதியின் துாண்டுதலால் சிறுகதைத்துறையில் அடியெடுத்து வைத்தார். ஏறத்தாழ இருபது சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தாலும் மலையக இலக்கியத்தின் உந்துசக்தியாக அவை கருதப்படுகின்றன. இவரது எல்லாக் கதைகளும் தோட்டப் பின்னணியைக் கொண்டவை. தோட்டத்து மனிதர்கள் வழியாக உலகைக் காண்பவை. ஒரு கூடைக் கொழுந்து என்னும் சிறுகதை 1961 ஆம் ஆண்டில் தினகரன் இதழில் வெளிவந்தது. 1980 ஆம் ஆண்டில் இதே தலைப்பில் இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வெளியானது.
- சென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)
- ஒழுங்கின்மையிலிருந்து உயிருக்கு -இலியா ப்ரிகோகைன் – (1917-2003)
- இணையத் தமிழ்
- அம்மா வந்தாள் பற்றி
- எனக்குப் பிடித்த கதைகள் – 85-ஐயமும் ஆவேசமும்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘
- பத்துகேள்விகளும் சில பதில்களும்
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – அல்போஃன்ஸ் தெ லமர்த்தின் (Alphonse de LAMARTINE (1790 – 1869)
- சிந்தி நகைச்சுவை
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் 13,2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3
- கருணாநிதியின் இந்நாள் பணியாளர்களும், முன்னாள் பணியாளர்களும்
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம் – 1 ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் மற்றும் ஆதியின் பகடையாட்டம்
- இது சீனா அல்ல – இந்தியா
- உன் குற்றம்
- கறுப்பு நிலா
- பாரதி பாடாத பாட்டு
- காதலாவது, கத்திரிக்காயாவது!
- பட்டாசுக் கடையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு
- மழையினால் காலம் ஆன போது
- எனையாரென்று அறியாமல்..!!!
- வைரமுத்துக்களின் வானம்-8
- மல மேல இருக்கும் சாத்தா.
- Bobby Jindal – ஒரு அறிமுகம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு
- ஆழ்வார்
- அமானுதம்
- பழி(சி)க்குப் பழி(சி)
- கடிதங்கள் – நவம்பர் 13,2003
- எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1
- ஆரம்பிக்க முதலில் தேவை ஒரு முற்றுப் புள்ளி…!!!
- நிலைப்பாடுகளும், நியாயங்களும்
- கல்லூரிக் காலம் – 7 -செங்கல்
- விடியும்- நாவல் – (22)
- குறிப்புகள் சில- நவம்பர் 13 2003
- தேவையென்ன ?
- ஏழையா நான் ?
- ஒரு இலை உதிரும் காலையில் முளைவிட்ட நட்பு
- இரைக்கு அலையும் நிகழ்
- மனிதனையும் கடவுளையும் பற்றி : மஆரியின் ‘தியானங்கள் ‘ கவிதைத் தொகுப்பிலிருந்து (கி.பி.973-1057)
- கவிதைகள்
- தேர்.
- வித்தியாசமானவன்
- அது