பாவண்ணன்
நெருக்கமான உறவுக்காரர் ஒருவருடைய மகளுக்கு மஞ்சள் நீராட்டுவிழா. அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அவசியமாக வரவேண்டுமென்று தொலைபேசியிலும் அழைத்துச் சொன்னார். பயணத்துக்குத் தேவையான சீட்டுகளையும் முன்பதிவு செய்துவிட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக பயணத்துக்கு முந்தைய தினம் அலுவலக வேலைகள் ஒரு தடையாக முளைத்துவிட்டன. வடக்கிலிருந்து வந்து சேர்ந்த அதிகாரிகளுடன் சில வேலைகளில் ஒத்துழைக்க வேண்டியிருந்ததால் நினைத்ததைப்போல கிளம்ப முடியவில்லை. நான் தொலைபேசியில் தகவலைச் சொன்னபோது உறவுக்காரர் மிகவும் மனவருத்தமுற்றார்.
முன்று மாதங்களுக்குப் பிறகு விடுப்பில் ஊருக்குப் போயிருந்தபோது மறக்காமல் அந்த உறவுக்காரர் வீட்டுக்கு முதலில் சென்று சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டுத் திரும்பினேன்.
அன்று இரவு உணவுண்டபிறகு பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சிக்கு நான் வராமல் இருந்ததே நல்லது என்றார். காரணம் புரியாமல் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன் நான். ‘நீ பார்த்தால் தாங்கிக்கொள்ள முடியாத சம்பவமொன்று அன்று நடந்தது ‘ என்றார் அம்மா. பிறகு மெதுவான குரலில் விரிவாகச் சொன்னார்.
திருமணமண்டபத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அளவில் ஊராரும் உறவினரும் திரண்டிருந்தார்கள். உறவுக்காரரும் அவரது சகோதரரும் எல்லா வேலைகளும் ஒழுங்காக நடக்கவேண்டுமென்ற கவலையில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்ன வேலைகளை உடனுக்குடன் செய்ய அருகிலேயே இருக்குமாறு சிலருக்குக் கட்டளையிட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் கணேசன். ஏழைச் சிறுவன். சுறுசுறுப்பானவன். நல்ல உழைப்பாளி. கலகலப்பாக வேலை செய்யக்கூடியவன். திரைப்படப் பாடல்களைப் பாடியபடியே நாலுஆள் வேலையை ஒரே ஆளாக நின்று செய்து முடிப்பவன். சகோதரர்களுடைய கட்டளைகளை அன்று அவன்தான் சிட்டுப்போலப் பறந்துபறந்து செய்தான்.
நிகழ்ச்சி முடிந்து முதல்பந்தி தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது மூத்த சகோதரருடைய மனைவி பதற்றத்துடன் ஓடிவந்து தன் மகள் போட்டிருந்த கழுத்துச் சங்கிலியைக் காணவில்லை என்று முணுமுணுத்தார். மனைவியின் பொறப்பில்லாத்தனத்தைக் கண்டு அவருக்குக் கோபமேறியது. அதைச் சட்டென்று மடைமாற்ற அவர் பறந்துபறந்து வேலைசெய்தபடியிருந்த அந்த ஏழைச்சிறுவன்மீது பழியைச் சுமத்திவிட்டாள்.
‘அவன்தான் உள்ளயும் வெளியயுமா காக்கா மாதிரி அலஞ்சிட்டிருந்தான் ‘.
அவருடைய மொத்தக் கோபமும் அச்சிறுவன்மேல் குவிய பந்தியில் பரிமாறும் கும்பலுக்கு ஒத்தாசை செய்தபடியிருந்த அவனது தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து வெளியே இழுத்துவந்து விருந்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பார்க்க எந்த விசாரணையும் இல்லாமல் அடிஅடியென்று அடிக்கத் தொடங்கினார். தான் எதற்காக அடிவாங்குகிறோம் என்கிற காரணம் தெரியாமலேயே அந்தப் பிஞ்சு அடிவாங்கியது. கன்னமும் உதடும் கிழிந்து பல் உடைந்து ரத்தம் சிந்த கோழிக்குஞ்சுபோல துவண்டுபோனான் அவன். பிறகுதான் அடிப்பதற்கான காரணத்தையே அவன் தெரிந்துகொண்டான். ‘நான் எடுக்கலைண்ணே ‘ என்று ஆயிரம் முறை சத்தியம் செய்தான். அவரோ ‘நீயெல்லாம் வாயால கேட்டா சொல்லமாட்டடா, போலீஸ்ல புடிச்சிக் குடுத்தா தானா எல்லாத்தயும் கக்கிடுவே ‘ என்றபடி அவனைத் தரதரவென்று இழுத்துச்சென்று ஸ்டேஷனில் விட்டுவிட்டார். அவனுக்காகப் பரிந்துபேச அந்தப் பெருங்கூட்டத்தில் ஒரு உயிர்கூட இல்லை.
அன்று இரவு மண்டபத்தைக் காலிசெய்யும்போது அறைக்குள் ஒரு மூலையாகக் கழற்றிப்போட்டிருந்த சட்டையின் அடியில் காணாமல்போன அந்தச் சங்கிலி பளபளத்துத் தனது இருப்பைப் புலப்படுத்தியது. மறுநாள் காலையில்தான் அந்தத் தகவலை ஸ்டேஷனுக்குத் தெரியப்படுத்தி அச்சிறுவனை விடச்சொன்னார்கள். அதற்குள் அவர்களுடைய கைவரிசையும் நடந்து முடிந்துவிட்டது. விறகுவெட்டியும் களையெடுத்தும் கஞ்சி குடிக்கிற ஆதரவில்லாத அவன் தாய் ஒருமாதத்துக்கும் மேல் அவனுக்கு மருத்துவம் பார்த்துச் சரிப்படுத்தினாள். சகோதரர்களுக்கோ அதைப்பற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லை.
அம்மா சொல்லச்சொல்ல என் மனம் அமைதியை இழந்தது. தான்தோன்றித்தனமாக இப்படி நடந்துகொள்ள அவரால் எப்படி முடிந்தது ? அவரிடம் இருக்கிற பணமும் அதிகாரிகளிடம் பழகக்கூடிய செல்வாக்கும் கொடுத்த தைரியம்தானே அது ? பணமுள்ளவன் அடித்தால் வயிற்றுக்கு வழியில்லாத கூட்டத்துக்காப் பரிந்துகொண்டு தட்டிக்கேட்க யாரும் வரமாட்டார்கள் என்கிற அசட்டுத் தைரியம்தானே அப்படித் துாண்டிவிட்டது ? சந்தர்ப்பச் சூழ்நிலை தனக்குச் சாதகமாக இருக்கும்போது தான் எடுக்கும் முடிவுக்கு எதிர்க்குரல் வராது என்பதுவும் ஒருவகையில் தைரியம்தான். மூத்த சகோதரர்களை இயக்கியதும் அத்தகு தைரியம்தான். எந்தச் செயலையும் தீர ஆலோசித்து எடுக்கவேண்டும் என்று பார்க்கிறவர்களுக்கெல்லாம் சொல்கிற நாமே அவசரத்தில் மதியிழந்து விடுகிறோம். அன்று முழுக்க இவ்விதமாகப் பல யோசனைகள் குறுக்கும் நெடுக்குமாக மனத்தில் அலைபாய்ந்தபடி இருந்தன. அந்தச் சகோதரர்களை மீண்டும் பார்த்துப்பேச எனக்குப் பிடிக்கவில்லை. ஊரில் இருந்த நாலைந்து நாள்களும் தவிர்த்தேன். பிறகு ஊருக்குத் திரும்பிவிட்டேன்.
இந்தச் சம்பவத்துக்கு முன்னும் பின்னும் இப்படி நடந்த பல நிகழ்ச்சிகளைக் கண்டிருக்கிறேன். அவசரத்தில் கைகளை ஓங்கி அடிப்பவர்கள் உண்மை உணர்ந்ததும் ஒருவரும் அடிபட்டவரிடம் வருத்தம் தெரிவிப்பதில்லை. மன்னிப்பும் கேட்பதில்லை. தன் கோபத்துக்கு இரையாக வேண்டியவர்கள் என்கிற எண்ணத்தையே மற்றவர்கள்மீது கூச்சமின்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். பலிகடாவாகப் பரிதாபத் தோற்றத்துடன் கும்பலிலிருந்து விலகிச் செல்கிற அத்தகு மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் அமைதியிழக்கும் என் மனத்தில் வேதனை பெருகும். அத்தருணத்துக்கு முந்தைய தருணம்வரை அக்கோலத்தில் பார்த்தவர்கள் அனைவரையும் வரிசையாகப் பட்டியலிட்டு நினைத்துக் கொள்வேன். ஜெயகாந்தன் படைத்த ‘யாருக்காக அழுதான் ஜோசப் ‘ ஒருகணம் தலைநீட்டிவிட்டுப் போவான். தொடர்ந்து மேலுமொரு பாத்திரமும் தலைநீட்டும். அது ‘பட்டாளக்காரன் ‘ என்னும் சிறுகதையில் தி.சா.ராஜூ படைத்த பென்ஷன் வாங்கும் பட்டாளத்துக்காரத் தாத்தாவின் பாத்திரம்.
பட்டாளத்து அதிகாரிகள் மட்டுமே வசிக்கக்கூடிய தெலுங்கானா பிதேசத்தின் பகுதியொன்றில் வேர்க்கடலை விற்றபடி வருகிற அப்பழைய முதிய பட்டாளத்துக்காரருடைய அறிமுகத்தோடு தொடங்குகிறது அக்கதை. மலையாளம், தமிழ், இந்தி என எல்லா மொழிப் பிரதேசத்துக்காரர்களும் சேர்ந்து குடியிருக்கும் பகுதி அது. மலையாளம் பேசும் ராபர்ட் குரியன் தம்பதியினருக்கு டெய்ஸி ஒரே மகள். தமிழ் பேசும் தம்பதியினருக்கு ரோஸி, ஜேம்ஸ் என இரு பிள்ளைகள். குழந்தைகள் அவன் விற்கும் கடலையை ஆசையுடன் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். பிறகு தினமும் இதுவே வழக்கமாகிவிடுகிறது. அவருடைய இசைபொருந்திய ஒலியைக் கேட்காவிட்டால் என்னவோ போல இருப்பதாக உணர்கிறார்கள். குழந்தைகள் அக்கிழவருடன் கபடமில்லாமல் பேசியும் விளையாடியும் பொழுதைக் கழிக்கிறார்கள்.
ஒருநாள் அவர் வரவில்லை. குழந்தை ரோஸி அவருக்காக வீட்டு வாசலில் வெகுநேரம் காத்திருக்கிறாள். கிழவர் வராதது அவளைப் பெரும் துக்கத்தில் ஆழ்த்துகிறது. தன் தாயிடம் வந்து வருத்தத்துடன் முறையிடுகிறாள். சின்னக் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலை மும்முரத்தில் ‘உடம்பு சரியில்லையோ என்னமோ, இல்லாவிட்டால் வராமல் இருப்பாரா ? ‘ என்று அசிரத்தையாகப் பதில் சொல்கிறாள். அப்பதில் அவளுக்கு மனநிறைவைத் தரவில்லை. வாசல் வராந்தாவிலேயே உட்கார்ந்திருக்கிறாள். பகல் உணவுக்கு வந்துசென்ற கணவருக்கு உணவைப் பரிமாறியபின்னர் சற்றே கண்ணயர்ந்த பின்னர் எழுந்து பார்க்கும்போது பிள்ளைகளைக் காணவில்லை. குழப்பத்துடன் விடுதியில் அங்குமிங்கும் தேடிப் பார்க்கிறாள்.
சுற்றுச்சுவர் அருகில் சிறுவன் ஜேம்ஸ் ஒரு மிட்டாயைச் சுவைத்தபடி அமர்ந்திருக்கிறான். ரோஸி ஒரு பொம்மை¢யை அணைத்தவாறு அந்தத் தாத்தாவின் மடியில் படுத்திருக்கிறாள். கிழவர் அவளுக்கு ஏதோ கதையொன்றைச் சொன்னவாறு இருக்கிறார். ரோஸியின் தாயைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்திருக்கிறான் கிழவர். ‘இதெல்லாம் என்ன தாத்தா ? ‘ என்று கோபமுடன் கேட்கிறாள் தாய். ‘ஒன்னுமில்லம்மா, இன்னிக்கு முதல் தேதி. பிஞ்சின் வாங்கினேன். குழந்தைங்களுக்கு வேர்க்கடல கூட நான் கொண்டுவரவில்லை ‘ என்று பதில்சொல்கிறார். பென்ஷன் வாங்கும் நாள் என்பதால் அன்று அவன் பழைய ராணுவ உடைகளில் இருக்கிறார். மார்பில் பல வண்ண விருதுகளும் பதக்கங்களும் தொங்குகின்றன. அவர் தோற்றத்தைக் கண்டு தாயின் மனத்திலும் ஒரு மரியாதை பிறக்கிறது. வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
கிழவருடைய மார்பில் தொங்கிய பதக்கங்களைச் சுட்டிக்காட்டி ‘இதெல்லாம் என்ன தாத்தா ? ‘ என்று கேட்கிறாள் ரோஸி. அவற்றின் பெயரையும் அவை தரப்பட்ட சந்தர்ப்பங்களையும் கதையாகச் சொல்கிறான் கிழவன். பதுங்குகுழியில் மறைந்திருந்தபோது தம் மீது எறியப்பட்ட ஒரு கைக்குண்டைத் தாவியெடுத்து வந்த திசையிலேயே திருப்பி எறிந்ததாகவும் குழியில் இருந்த இருபது வீரர்களுடைய உயிரைக் காப்பாற்றியதாகவும் கணநேர இடைவேளையில் குண்டு வெடித்துவிட இடது கையில் இரண்டு விரல்களை இழக்கவேண்டியிருந்தது என்றும் சொல்கிறார்.
கிழவனுடைய குடும்பத்தைப்பற்றி விசாரிக்கிறாள் ரோஸியின் தாய். எல்லாரும் இறந்துவிட்டதாகச் சொல்கிறார் கிழவர். ரஜாக்கர் கலகம் நடைபெற்ற சமயத்தில் அவருடைய வீட்டுக்கு நெருப்பு வைக்கப்பட்டதாகவும் எல்லாரும் உயிருடன் எரிக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்கிறார். வீட்டில் வெள்ளிப்பணமாக வைத்திருந்த இரண்டாயிரம் பிரிட்டிஷ் ரூபாய்களும் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டதாகச் சொல்கிறார். ‘உனக்கு ரொம்ப வயசாகியிருக்குமே ‘ என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக தன் அடையாள அட்டையை நீட்டுகிறார். அதில் அவர் பிறந்த தேதி ஆகஸ்டு ஏழு, 1872 என்றும் பிறந்த ஊர் திருச்சியை அடுத்த முனையனுார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பதினேழு ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாகக் கிடைக்கிறதென்றும் கூடுதல் செலவுக்காகவே வேர்க்கடலை விற்பதாகவும் சொல்கிறார். உடம்பில் தெம்பிருக்கிற வரைக்கும் உழைத்துச் சாப்பிடுவதே நல்லதென்றும் சொல்கிறார். சொந்தக் கதையைப் பேசியதில் கிழவர் தன் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஊருக்கு வந்ததாகவும் ஓய்வு பெற்ற பிறகு அங்கேயே தங்கிவிட்டதாகவும் சொல்கிறார். அருகிலிருந்த ஓரிடத்தின் பெயரைச் சொல்லி அங்கே சர்ச்சில் துரை தங்கியிருந்ததாகவும் அவருக்குத் தான் ஆர்டர்லியாக வேலை செய்ததாகவும் சொல்கிறார். இப்போது கூட ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அவரிடமிருந்து வாழ்த்துக்கடிதம் வருமென்று சொல்கிறார்.
மறுநாளும் கடலை விற்றபடி கிழவர் வருகிறார். கணவனுடைய கால் பட்டிகளிலும் இடுப்புப் பட்டையிலும் பளபளப்பை ஏற்றுவதில் மும்முரமாக இருக்கிறாள் ரோஸியின் தாய். அவ்வேலையை அவள் சரியாகச் செய்ய முடியாமல் திகைப்பதைக்கண்டு கிழவர் உதவி செய்கிறார். வடித்த கஞ்சியின் உதவியோடும் பச்சை மண்ணின் உதவியோடும் எல்லாவற்றையும் பளபளப்பாக்குகிறார். அவர் கைவேகமும் துல்லியமும் அவளைக் கவர்கிறது. அவருக்கு எப்படியாவது உதவவேண்டும் என்கிற எண்ணத்தில் தினமும் வீட்டுக்கு வந்து பூட்ஸ், பட்டைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்து கொடுக்கும் வேலையைச் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறாள். தாத்தா சம்மதிக்கிறார். நாளடைவில் அடுத்தடுத்த வீடுகளிலும் அவருக்கு வேலை கிடைக்கிறது. போதிய அளவுக்கு வருமானம் அமைந்துவிடுகிறது. வேலைகளை எல்லாம் முடித்த பிறகு தாத்தா குழந்தைகளுடன் ஆலமரத்தடியில் உட்கார்ந்து விடுகிறார். அவர்களுக்குத் தாத்தா ஒரு விளையாட்டுச் சாதனம். தாத்தா அவர்களுக்கெல்லாம் கதைகள் சொல்கிறார். மிருகங்களைப்போல வாயினால் ஓசையெழுப்பி வேடிக்கை காட்டுகிறார். பாடல்கள் பாடுகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது. குழந்தை டெய்ஸியினுடைய வீட்டுக்கு அவளுடைய சித்தப்பாவும் சின்னம்மையும் வருகிறார்கள். கிறிஸ்துமஸ்க்காக ஏராளமான பரிசுப்பொருள்களை வாங்கி வந்திருக்கிறார்கள். பொன் விளிம்புடைய எனாமல் தகட்டில் இயேசுநாதருடைய உருவம் பொறிக்கப்பட்ட பதக்கமொன்று டெய்ஸிக்குப் பரிசாகக் கிடைக்கிறது. தனக்குக் கிடைத்த பரிசை எல்லாருக் கும் காட்டி மகிழ்கிறாள் டெய்ஸி. ரோஸியின் வீட்டில் பூட்ஸ்களைத் துடைத்துக் கொண்டிருந்த கிழவர் அதை தாத்தாவுக்கு தரியா ? என்று வேடிக்கைக்காக கேட்கிறார். அதைக் கொடுத்தால் சின்னம்மாவுக்குக் கோபம் வருமென்ற சொன்னபடி ஓடிவிடுகிறாள் டெய்ஸி.
நான்கு நாள்கள் நகர்ந்துவிடுகின்றன. விடிந்தால் கிறிஸ்துமஸ். டெய்ஸி வீட்டில் கிழவர் வேலை செய்துகொண் டிருக்கிறார். டெய்ஸி தன் சித்தப்பாவுடன் தேவாலயத்துக்குச் செல்கிறாள். ஒன்றிரண்டு மணிநேரத்துக்குப் பிறகு விட்டில் திடுமென இரைச்சல் எழுகிறது. தங்க புருச்சென்றைக் காணவில்லை என்று எல்லாரும் தேடுகிறார்கள். ரோஸியின் குடும்ப உறுப்பினர்களும் தேடுதல் வேட்டையில் உதவி செய்கிறார்கள். வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு புறப்படும் நிலையில் இருக்கிறார் கிழவர். அப்போது கோபமுடன் குரியன் அவரைக் கூப்பிட்டு புருச்சைப்பற்றி விசாரிக்கிறார். கிழவர் நாலுநாள் முன்னால் பார்த்ததாகவும் அன்று பார்க்கவில்லை என்றும் சொல்கிறார். கிழவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாத குரியன் அவருடைய கைப்பையைப் பிடுங்கி ஆராய்கிறார். ஒரு கந்தைத் துணி, தின்பண்டங்கள், இரண்டு பாலிஷ் டப்பாக்கள், பித்தளை விளக்கி டின், இரு பிரஷ்கள் ஆகியவற்றுடன் அந்தத் தங்க புருச்சும் கிடந்தது. அதைப் பார்த்து கிழவரும் அதிர்ச்சியும் அவமானமும் அடைகிறார். ‘கள்ள நாயே ‘ என்றபடி குரியன் அவரை அடிக்க வரும்பொழுதும் அது தன் பைக்குள் எப்படி வந்ததென்று தெரியாது என்று குழப்பத்துடன் பதில்சொல்கிறார் கிழவர். ஆனால் அவர் வார்த்தைகளை நம்புகிறவர் யாருமே அங்கு இல்லை. கோபமுடன் வெளியேற்றப்படுகிறார். அவமானத்துடன் தள்ளாடித் தள்ளாடி வெளியே நடக்கிறார் கிழவர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு தேவாலயத்திலிருந்து சித்தப்பாவுடன் திரும்பிய டெய்ஸி தானே புருச்சைத் தாத்தாவுக்கு அன்பளிப்பாக அவருடைய பையில் யாருமறியாமல் போட்டதாகச் சொல்கிறாள். ஆனால் அவள் குரலையும் அவர் நிரபராதி என்கிற வாக்கியத்தையும் கேட்க அவர் உயிருடன் இல்லை. வெளியேறி நடந்து போனவர் அருகில் இருந்த மதில் சுவரில் சரிந்த நிலையில் மாரடைப்பில் இறந்துபோய்விடுகிறார்.
பண்டிகைக்காக ரோஸியின் தாயார் தாத்தாவுக்காக வாங்கி வைத்திருந்த புதுத்துணிகள் அவருக்கு ஈமக்கோடியானது. கல்லறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது அவர்களுடைய தபால்பெட்டி நிறைந்து வழிந்திருக்கிறது. அவற்றில் ஒன்று அவர்களுடைய மேற்பார்வையிட்டு அக்கிழவருக்கு வந்திருந்தது. இங்கிலாந்து தேசத்து முத்திரையுடன் வந்திருந்தது அக்கடிதம். அது ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதம். அதன் முகப்பில் எழுதப்பட்டிருந்த ‘யாருக்காக நீ முள்முடி தரித்து வசைகள் எய்தினாயோ ‘ என்று தொடங்கியிருந்த வாசகம் அனைவருடைய உள்ளத்தையும் உருக்குகிறது. அனுப்பியவர் பெயரைக் கவனிக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் என்று கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
இக்கதையை மிகச்சிறந்த சிறுகதையாக மாற்றுவது இதன் கடைசிப் பகுதி. சர்ச்சிலுடைய வாழ்த்துக் கடித வாசகம் தாத்தாவுக்காகவே எழுதியதாக இருக்கிறது. கிறிஸ்துவுக்கு இணையான ஒரு வேதனையை அனுபவித்தராகி விடுகிறார் அத்தாத்தா. கிறிஸ்துவின் உண்மை அன்பைப் புரிந்துகொள்ளாத மக்ளைப்போலவே தாத்தாவின் உண்மை அன்பையும் குடியிருப்புப் பகுதியின் மக்கள் புரிந்துகொள்வதில்லை. கிறிஸ்துவின் எளிமையை ஏளனமாகப் பார்த்ததைப்போலவே தாத்தாவின் எளிமையும் ஏளனத்துக்கு ஆளாகிறது. செய்யாத தவற்றுக்குத் தண்டனையை ஏற்கிற கிறிஸ்துவைப்போலவே தாத்தாவும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். இது கதைக்கு மிகப்பெரிய வலிமையைக் கூட்டுகிறது.
*
ராணுவ வாழ்க்கையைப்பற்றி ஏராளமான கதைகளைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியவர் தி.சா.ராஜூ. மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். அமுத நிலையம் 1964 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘பட்டாளக்காரன் ‘ என்னும் தலைப்பிலேயே ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது.
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3
- மனித வெடி
- வெளிநடப்பு!
- புனிதமாகிப்போனது!
- அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!
- Recipe: Fried Rice With Peas and Chicken
- எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘
- மாயக்கவிதை
- பிதாமகனும் .. தமிழ் மக்களும்
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)
- ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்
- திறவி.
- வேண்டாமா இந்தியா ?
- இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை
- ‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்
- கொடி — மரம்
- கவிதைகளே ஆசான்கள்
- அயர்ன்பாக்ஸ் எறும்புகள்
- ஊர்க்குருவி
- வைரமுத்துக்களின் வானம்- 7
- எழுதாதக் கவிதை
- பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.
- விடியும்! (நாவல்) – (20)
- வெளிச்சம்
- நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)
- மொரீஷியஸ் கண்ணகி
- கலர்க் கண்ணாடி
- தழும்புகள்
- கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003
- தண்டனை போதும்!
- மொழிவன சில
- கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது
- இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?
- அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்
- குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1
- தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- சூரியக்கனல்
- மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்
- ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா